இதில், மீண்டும் அவளைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்று புரிந்தாலும், சமாதானம் செய்யமுடியாமல், மனதில் என்னவோ முரண்டிக் கொண்டிருந்தது.
அவள் வரச் சொல்லியிருக்கலாம். அவனே யோசித்து அது சரியாக வராது என்று சொல்லியிருப்பான். அவள் வராதே என்றது அவனைப் பாதித்தது.
முதல் முறை வருவதாகச் சொல்லிவிட்டு மறந்துபோனது, பிறகும் அவனோடு தொடர்ந்து பேசி சமாதானம் செய்யாமல் விட்டது, நிற்கச் சொல்லிக் கேட்டும் நிற்காமல் சென்றது, இப்போது வராதே என்றது என்று, என்னவோ அவள் அவனைத் தூரத் தள்ளி வைத்திருக்கிறாள் என்று ஒரு உருவகம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. அப்படியில்லை என்று அவளுக்காக அவனே அவனிடம் வாதாடினாலும் ஒருவித ஏமாற்றம் மனதைக் கவ்விப் பிடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் தன்னை இந்தளவுக்குப் பாதிப்பது போல் அவளை அவன் பாதிக்கவில்லையா? அவன்தான் வெட்கமற்று அலைகிறானோ என்றுகூடத் தோன்றியது.
ஏன் இப்படி என்று அவனுக்கே புரியவில்லை. பிரயோசனம் இல்லாதவற்றுக்கெல்லாம் கோபப்பட்டு, மணவாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளப் போகிறோமோ என்கிற பயம் வேறு வந்தது.
அடுத்த நாளையும் எப்படியோ ஓட்டிவிட்டுக் காலிக்குப் புறப்பட்டான்.
“வெளிக்கிட்டீங்களா?” என்று அவள் அனுப்பிய மெசேஜுக்கு, “ம்ம்.” என்று மட்டுமே அனுப்பினான்.
வித்தியாசத்தை உணர்ந்துகொண்டவள் உடனேயே ரெஸ்ட் ரூமுக்கு சென்று அவனுக்கு அழைத்தாள்.
“ஒரு பிரச்சினையும் இல்லையே?”
“என்ன பிரச்சினை வர இருக்கு?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
ஒட்டாத அந்தக் குரல் ஏதோ கோபத்தில் இருக்கிறான் என்று சொல்லிற்று. விடுத்துக் கேட்க அவளுக்கு அவகாசம் இல்லை. அதோடு, அவள் காரணம் கேட்கப் போக ஒற்றை வரியில் அவன் எதையாவது குதர்க்கமாகச் சொல்ல, அவளின் மனநிலைதான் மொத்தமாகக் கெட்டுப்போகும். அந்தப் பயத்தில், “கவனமா போங்கோ. போனதும் எனக்கு மெசேஜ் செய்ங்கோ. வீட்டை வந்தபிறகு எடுக்கிறன், சரியா?” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
‘இவள…’ என்றுதான் வந்தது அவனுக்கு. கோபமாக இருக்கிறான் என்று தெரிந்து சமாதானப்படுத்துகிறாளா? அவள் எப்போதுமே அப்படித்தானே. கடுத்துப்போன முகத்துடன் அவனைத் தாண்டி ஓடிய மரங்களை வெறித்துக்கொண்டிருந்தான், கோகுலன்.
பிரியந்தினிக்குப் புதிதாகத் திருமணமான உணர்வே மரத்துப் போன நிலை. சகபாடிகளின் கேலிகளும் கிண்டல்களும் கூட எரிச்சலைத்தான் தோற்றுவித்தது. இந்தக் குழப்பங்களும் மனக்குறைகளும் குமுறல்களும் போராட்டமும் தான் மணவாழ்வா என்ன? ஒருவித சலிப்பும் தவிப்பும் என்று பெரும் கொடுமையாய்க் கழிந்தது நாட்கள்.
தினமும் பேசிக்கொண்டார்கள் தான். அவை என்னவோ சம்பிரதாயமாக மட்டுமே கடந்து கசப்பைத்தான் இன்னும் விதைத்தது.
அவனிடம் அவள் செல்லவோ அவளிடம் அவன் வரவோ முடியாமல் இருவருக்கும் நடுவில் இருவரின் வேலையும் நின்றது. வார இறுதிக்காகக் காத்திருந்தாள் பிரியந்தினி.
அன்று வியாழக்கிழமை. நாளை வேலை முடிந்ததும் ஊருக்கு ஓடிவிட வேண்டும். அவனும் வருவானே. அப்போதே மனம் பரபரக்க ஆரம்பித்திருந்தது. கொழும்புக்கு வாருங்களேன், இருவருமாகச் சேர்ந்தே ஊருக்குப் போகலாம் என்று கேட்க ஆசைதான். அதற்கும் எதையாவது சொல்லிவிடுவானோ என்கிற பயத்தில் வாயைத் திறக்கவே இல்லை. எப்படியும் சனிக்கிழமை அவனைப் பார்த்துவிடுவாளே. இன்றைக்கே அறையைத் துடைத்து வைத்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தவள், அங்கே அறைவாசலில் நின்றவனைக் கண்டதும் ஆனந்தமாக அதிர்ந்துபோனாள்.
“கோகுல்! எப்ப வந்தனீங்க?” சந்தோசக் கூவலுடன் அவனிடம் ஓடி வந்தாள்.
அதுவரை, தன்னைக் கண்டதும் அவளின் முகம் எப்படி மாறுமோ என்று எண்ணிக்கொண்டு இருந்தவன், சற்றே தெளிந்து, “இப்பதான்.” என்றான் சிறு புன்னகையை முகத்தில் காட்டி.
“சொல்லி இருக்கலாமே. நானும் நேரத்துக்கு வந்திருப்பன்.” அறையின் கதவைத் திறந்து, “வாங்கோ” என்று அழைத்துச் சென்றாள்.
உள்ளே வந்தவன் அறையை விழிகளால் அலசினான். இரண்டு கதவுகள் கொண்ட சிறிய கப்போர்ட். அதன் அருகிலேயே ஒற்றைக் கட்டில். பக்கத்தில் சிறிய மேசை. அதன் மேலே சுவரில் ஒரு செல்ப். அந்த அறையின் பக்கத்தில் நெருப்பட்டி அளவில் குட்டிச் சமையலறை. அதனருகில் பாத்ரூம். ஒரு மூலையாக டீவி இருக்க அதன் முன்னே இருவர் அமரக்கூடியது போன்ற குஷன் சோபா. பொருட்கள் அத்தனையும் அந்த அறையை நிறைத்து இருந்தாலும் அவளைப்போலவே அமைதியாகவும் சீராகவும் இருந்தது.
அவன் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “வாடகை கொஞ்சம் கூடத்தான். ஆனா எல்லா வசதியும் அறைக்கயே இருக்கு. பாதுகாப்பான இடமும். நல்லாருக்கா?” என்று கேட்டாள்.

