ஆம் என்று தலையசைத்தவனின் பார்வை இப்போது அவளிடம் தாவியது. ஒரு டெனிம் ஜீன், கையில்லாத டொப், விரித்துவிட்ட கூந்தல், இன்னுமே மறையாத உதட்டுச்சாயம் என்று அலங்காரம் குறையாமல் இருந்தாள். முகத்தில் அன்றைய நாளின் வேலைக்கான களைப்புத் தெரிந்தாலும், அவனைக் கண்டதில் பிரத்தியேகமாக மின்னிய விழிகள் அவனை வெகுவாகவே ஈர்த்தன.
அவன் பார்வையை உணர்ந்து அவளிடம் மெல்லிய தடுமாற்றம். அதைச் சமாளித்து என்ன என்றாள் புருவம் உயர்த்தி. அவன் அப்போதும் சிரிப்புடன் அவளையேதான் பார்த்திருந்தான். வசீகரம் மிகுந்த அந்தச் சிரிப்பில் ஓடிப்போய் அவனை அணைத்துக்கொள்ள ஆசை எழுந்தது. இப்போது, அவர்கள் சமாதானமாக இருக்கிறார்களா, இல்லை, சண்டையாக இருக்கிறார்களா என்று தெரியாத குழப்பத்தில் தன்னை அடக்கிக்கொண்டாள். “குளிக்கிறது எண்டா குளிச்சிட்டு வாங்கோ. பாத்ரூம் அங்க இருக்கு. அதுக்கிடையில சாப்பிட ஏதாவது செய்றன்.” என்று உபசரித்தாள்.
அவன் குளித்து, ஒரு ஷோர்ட்ஸ் அணிந்து வெளியே வந்தபோது, பசுமதி அரிசி போட்டு கோழி இறைச்சிக்கறியும், கத்தரிக்காய் பால் கறியும் அடுப்பில் இருந்தது. இதில் முட்டை வேறு அவிய விட்டிருந்தாள்.
வேகம்தான். வியப்பில் புருவங்களை உயர்த்தினான் அவன்.
“எப்பவும் டைம் இருக்கேக்க கோழி வெட்டி பிரிட்ஜுக்க வச்சிடுவன். அதால எல்லாத்தையும் தூக்கி சட்டிக்கப் போடுறது மட்டும் தான் வேல.” என்று புன்னகைத்தாள் அவள்.
அவனுக்காகச் சமைத்திருக்கிறாள் என்பது மனத்துக்குச் சுகம் சேர்த்தது. இருவருமாக வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றுதான் அவன் நினைத்திருந்தான். அவள் சமைக்கிறேன் என்றதும், அவளின் கைப்பக்குவத்தை அறிந்துகொள்ளும் ஆசை வந்திருந்தது.
“எல்லாம் முடிஞ்சுது. ஒரு மூண்டு நிமிசம் கழிச்சு மறக்காம கறி அடுப்பை நிப்பாட்டி விடுறீங்களா? நானும் குளிச்சிட்டு ஓடிவாறன்.” என்றுவிட்டு வேகமாக உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூம் நோக்கி ஓடினாள் அவள்.
கதவடைக்கும் முன் எட்டிப்பார்த்து, “அடுப்பு நிப்பாட்டத் தெரியும் தானே?” என்று வினவியவளின் குரலில் சிரிப்பிருந்தது.
ஃபோனில் கவனமாக இருந்தவன் நிமிர்ந்து பார்த்து முறைக்க, “இல்ல, தெரியுமா எண்டு கேட்டன். தெரியும் போல!” என்றுவிட்டுக் கதவடைத்துக்கொண்டாள்.
இவள் நிமிர்வானவள், தெளிவானவள் மாத்திரமல்ல சேட்டைக்காரியும் தான் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
மின்னலாக வெளியே வந்தவள், முக்கால் லெக்கின்ஸ் டாப்பில் இருந்தாள். ஈர முடியை துவாலையைக் கொண்டு உச்சியில் முடித்திருந்தாள்.
“வாங்கோ சாப்பிட!” என்று அழைத்து அவனுக்கும் பரிமாறித் தனக்கும் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.
அவன் இரண்டு வாய் உண்டதும், எப்பிடி இருக்கு?” என்று வினவினாள்.
“உண்மையா இவ்வளவு டேஸ்ட்டா சமைப்பாய் எண்டு நானும் எதிர்பாக்கேல்ல.” என்றான் அவன். அந்தளவில் உணவின் சுவை மிகவும் நன்றாகவே இருக்க விரும்பி உண்டான்.
பாத்திரங்களை அவள் ஒதுக்க, அவளுக்கு உதவிவிட்டு அவன் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டான். வேலைகளை முடித்துவிட்டு அவளாக அவனருகில் வந்து இருக்கிறாளா பார்ப்போம் என்கிற குறுகுறுப்பு அவனுக்குள் உண்டாகியிருந்தது.
அவளும் கிட்சனை ஒதுக்கிவிட்டு வந்து, கண்ணாடியின் முன்னே நின்று உச்சியில் முடிந்திருந்த துவாயை எடுத்துவிட்டு, தலையைத் துவட்டினாள். அவன் பார்வை அவளிடமேதான் இருந்தது. முடியை விரித்து விட்டுவிட்டு வந்து தயங்கி அவனருகில் அமர்ந்தாள்.
அவளின் அந்தத் தயக்கம் அவனுக்குள் ஒரு சிரிப்பைக் கொடுக்க அவளையே பார்த்தான்.
“என்ன?” அவனின் சிரிப்புக்கான காரணம் புரியாது வினவினாள்.
“என்ன என்ன?” என்றான் அவனும் விடாது.
“படம் பாப்பமா?” அவனுடைய பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கேட்டாள் அவள்.
“அதுக்குத்தான் அங்க இருந்து மெனக்கெட்டு வந்திருக்கிறன், பார்!” என்றவன் அவளைத் தன்னிடம் கொண்டுவந்தான்.
அவள் மனம் இனிமையாகப் படபடத்தது. “வேற என்னத்துக்கு வந்தீங்களாம்.” என்று குழைந்தாள். “உனக்குத் தெரியாதா?” என்றவனின் உதடுகள் அவளின் கன்னக் கதுப்பில் பதிந்தது.
பிரியந்தினியின் பேச்சு நின்று போனது. அவனை மிகவுமே தேடி வாடிப்போய் இருந்தவளுக்கு, அவனுடைய அருகண்மையில் அழுகை வரப்பார்த்தது. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தோள் வளைவில் முகத்தைப் புதைத்தாள். அவனுடைய தேடலுக்கெல்லாம் வழிவிட்டவள் தானும் சேர்ந்தே தொலைந்துபோனாள்.

