அத்தியாயம் 1
மெல்லிய வெய்யில் மின்னத்தொடங்கிய அழகிய காலைப்பொழுது. மகள் யாழினியோடு யாழ்ப்பாணம் வரணியில் குடிகொண்டிருக்கும் சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார் செல்வராணி.
சற்றே அதிகமாகத் தெரிந்த வெள்ளைச் சீருடை மாணவ மாணவியரைக் கண்டு, அவர் முகத்தில் இளமுறுவல் அரும்பிற்று. அன்றுதான் விடுமுறை முடிந்து மூன்றாவது தவணை ஆரம்பிக்கிறது. பள்ளிக்கூடத்தின் முதல் நாளினை மிகுந்த பரபரப்புடனும் துள்ளலுடனும் ஆரம்பிக்கக் கோயிலுக்கு வந்திருந்தனர் பிள்ளைகள்.
அவரின் காலத்திலும் இப்படித்தானே. நினைவுகள் அதுபாட்டுக்கு மனவெளியினில் நடைபயில, பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டில் பயிலும் மகள் யாழினிக்குப் பிறந்தநாள் என்பதில் அவளின் பெயரில் அர்ச்சனைக்குக் கொடுத்தார்.
கண்மூடி வேண்டியவரின் உள்ளமோ மகளுக்காக மட்டுமன்றி தன் குடும்பத்துக்காக, முக்கியமாகத் தன் இரு மூத்த மகன்களுக்காக இன்னுமே பிரத்தியோகமாக வேண்டிக்கொண்டது.
குறையென்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் நிறைவாக வாழ்கிறாரா என்று வினவினாலே அமைதியிழந்து போவார். அந்தளவில் மனத்தில் காரணமற்ற குழப்பங்களும் கலக்கங்களும். இப்போதும் கலக்கமுண்டாக அதைவிரும்பாமல் விழிகளைத் திறந்தவரின் பார்வையில் பட்டாள் அவள்.
இரு கைகளையும் கூப்பி அம்மாளாச்சியை வணங்கிவிட்டு, ஐயா தந்த திருநீறு சந்தனத்தை வாங்கி நெற்றியில் தீட்டிக்கொண்டிருந்தாள்.
அவளிடம் தெரிந்த ஏதோ ஒன்று, ‘என்ர மூத்தவனுக்குப் பொருத்தமா இருப்பாள்.’ என்று எண்ணவைத்தது. அவரின் மனத்தை அமைதிப்படுத்தும் வலிமை அவளுக்கிருந்தது.
நடு உச்சி பிரித்து இருபக்கமும் கிளிப் செய்து தளரப் பின்னியிருந்த பின்னல் இடை தாண்டி நிற்க, அமைதியான முகத்தில் அலைப்புறுதல் அற்ற விழிகளால் கருவறையை நோக்கிவிட்டு, கோயிலை விட்டு வெளியேறியவளையே தொடர்ந்தது அவர் பார்வை.
“அந்த அக்காவத் தெரியுமா அம்மா? அவவையே பாக்கிறீங்க?” ஐயா கொண்டுவந்து கொடுத்த அர்ச்சனைத் தட்டினைக்கூட முழுக்கவனமும் இல்லாமல் பெற்றுக்கொண்டவரைக் கவனித்துவிட்டு மெதுவாக விசாரித்தாள் யாழினி
“ஆர் எண்டு தெரியாம்மா. ஆனா உன்ர பெரிய அண்ணாக்கு இப்பிடி ஒரு பிள்ளையைத்தான் பாக்கோணும். எனக்கு என்னவோ கையோடயே வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகோணும் மாதிரிக் கிடக்கு.” மனக்கண்ணில் மகனுடன் பொருத்திப் பார்த்து, தெரிந்த ஜோடிப்பொருத்தத்தில் முகம் மலரச் சொன்னார் அன்னை.
“ம்க்கும்! முதல் உங்கட மகனைக் கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லச் சொல்லுங்கோ. பிறகு அந்த அக்காவ மாதிரி என்ன அந்த அக்காவையே பாக்கலாம்.” நொடித்துக்கொண்டாள் யாழினி.
மகளின் பேச்சில் இருந்த உண்மையில் அவரின் முகம் வாடிப் போயிற்று. இருபத்தியொன்பது வயதாகிறது. இன்னும் திருமணத்துக்குச் சம்மதிக்கிறான் இல்லை. எப்படியாவது இந்தப் பெண்ணைப் பேசிக் கட்டிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
மனம் ஏங்கிவிட, அம்மனிடம் அவசரமாக அதற்கான மனுவைப் போட்டுவிட்டு, விடைபெற்று அந்தப் பெண்ணையே பின்தொடர்ந்தார் செல்வராணி. அங்கிருந்த ஸ்கூட்டியில் அவள் புறப்பட்டுச் செல்வது தெரிந்தது.
அவள் போனபிறகும் பார்த்துக்கொண்டு நின்றவரை, “எனக்குக் கம்பஸுக்கு நேரமாகுது. வாங்கம்மா!” என்று யாழினிதான் இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.
அங்கே, ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தவளோ உற்சாகமாக வீட்டுக்கு விரைந்துகொண்டிருந்தாள்.
அன்னை சரிதாவுக்கு முதுகுவலிப் பிரச்சனையால் காலையில் வேலைகளைப் பார்ப்பது மிகவுமே சிரமம் என்பதில், யாழ் மத்திய பெண்கள் கல்லூரியின் அதிபரான அப்பாவுக்குச் சகலதையும் செய்து அவரை அனுப்பிவிட்டு, கோயிலுக்கு ஓடிவந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள்.
அவள் வீட்டுக்குள் வரும்போதே, “அம்மாச்சி, தேத்தண்ணி போட்டுட்டன். புட்டும் அவிச்சிட்டன். சம்பலோட சாப்பிட்டுத்தான் போகோணும்.” என்று அவள் மறுப்பதற்கே இடம் கொடாமல் அழைத்தார் அன்னை சரிதா.
சாப்பிடுகிறாயா என்று கேட்டால் மறுப்பாள் என்று தெரிந்து சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்ற அவரின் கெட்டித்தனத்தில் முறுவல் அரும்பிற்று அவளுக்கு.
“நேரம் இருக்கம்மா. அதால சாப்பிட்டுத்தான் போவன். ஆனா கொஞ்சமா போடுங்கோ. ஓடி வாறன்.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பிரமிளா. இருபத்தியைந்து வயதேயான இளம் பெண். யாழ் மத்திய பெண்கள் கல்லூரியிலேயே கற்று, அதே கல்லூரியில் சாதாரணத் தர, உயர்தர மாணவியருக்கு ஆசிரியையாகப் பணிபுரிகிறாள்.
சரிதாவும் அதே கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர்தான். அடிக்கடி உண்டாகும் உடல்நலக்குறைவினால் விருப்ப ஓய்வினைப் பெற்றுக்கொண்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.
அவளுக்கு இந்த விடுமுறை நாட்களில் கல்லூரிக்குச் செல்லாமல், மாணவியரைச் சந்திக்காமல், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் பொழுது நகரவே மாட்டேன் என்றுவிட்டது. ஒருவாரம் தங்கையோடு சேர்ந்து கிளிநொச்சியில் இருக்கும் அத்தை வீட்டுக்குப் போய்க் கொட்டமடித்துவிட்டு வந்திருந்தாள். ஆனாலும், எப்போதடா கல்லூரி திறக்கும் என்று காத்திருந்தவள், அன்று காலையிலேயே எழுந்துவிட்டாள்.
விடுமுறையின்போது சும்மா வீதி உலாச் சென்று எடுத்திருந்த புதுச் சேலைகளில் ஒன்றைதான் அன்றைக்கு அணிந்திருந்தாள். தளரப் பின்னியிருந்த நீண்ட கூந்தலை அவிழ்த்து, எப்போதும்போலப் பிடரியில் கொண்டையாக இட்டுக்கொண்டு, நெற்றியில் ஒற்றைப் பொட்டை ஒட்டிவிட்டாள்.
கழுத்தை அலங்கரிக்கும் மெல்லிய செயின், கறுப்புபார் மணிக்கூடு, நகச்சாயம் பூசப்படாத சீராக வெட்டப்பட்ட நகங்கள். அவ்வளவுதான் அவளின் அலங்காரங்கள். தன்னுடைய கைப்பை சகிதம் ஆயத்தமானவளைக் கைப்பேசி இசைபாடி அழைத்தது.
யார் என்று எடுத்துப்பார்க்க, “பிரின்சி” என்று விழுந்தது. இதழ்களில் புன்னகை நெளிய, ‘எதையோ மறந்து விட்டுட்டுப் போய்ட்டார் போல. கிழவருக்கு வரவர மறதி கூடுது!’ என்று எண்ணியபடி, “சொல்லுங்கப்பா.” என்றாள் அழைப்பை ஏற்று.
அந்தப் புறத்திலிருந்து பதற்றத்தோடு பேசினார் அவர். “பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே போக விடுறாங்கள் இல்லையம்மா. புது அதிபர் பதவியேற்றாச்சாம், நான் ரிட்டையர் ஆகியாச்சாம். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. மேனேஜ்மெண்ட்க்கு ஃபோனைப்போட்டால் எடுக்கிறாங்களே இல்லை. நான் வெளில நிக்கிறதைப் பார்த்து வந்த பிள்ளைகளும் என்னோடயே நிக்கீனம்.” என்றார் அவர்.
வேற்று மொழி காதில் விழுந்தாற் போன்று இருந்தது அவளுக்கு. “என்னப்பா சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.” என்றாள்.
“அம்மாச்சி! பள்ளிக்கூடத்துக்கு இப்ப நான் பிரின்சிப்பல் இல்லையாம், இன்றில இருந்து புது அதிபர் பதவியேற்கிறாராம் எண்டு சொல்லீனம் அம்மா! ஆனா, எனக்கு ஒரு அறிவித்தலும் வரேல்லையே!” என்றுவிட்டு, “இதைப் பற்றி உனக்கேதும் தெரியுமா?” என்று வினவினார்.
பள்ளிக்கூட அதிபர் அவருக்கே தெரியாத ஒன்று அவளுக்கு மட்டும் எப்படித் தெரியவரும்?
இருபது வருடங்களுக்கு மேலாக அதிபராகப் பதவியாற்றிய ஒரு கல்லூரியிலிருந்து எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் அப்படி எப்படி வெளியேற்ற முடியும்?
அதைவிட இத்தனை நாட்களாக அதிபராக வலம் வந்த மனிதரைக் கல்லூரிக்குள் காலடி கூட எடுத்துவைக்க விடாமல் தடுத்து வெளியே நிறுத்துவது என்பது என்னவிதமான செயல்?
“அப்படி என்னெண்டு அப்பா, அவே நினைச்சதும் தூக்கி எறிவீனமா? சட்டத்திட்டம் எங்களுக்கும் தெரியும். நீங்க உள்ளுக்குப்போய் இருங்கோ. நான் உடன வாறன்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் பிரமிளா.
“விட்டாத்தானேம்மா போக. உள்ளுக்கு விடுறாங்கள் இல்லையம்மா.”
“ஆரு? குமரனா?”
“ஓம் அம்மா.” மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். வீட்டுப் பிள்ளையைப் போல அவர் அன்புகாட்டிய காவலாளி, எதிராளியைப் போன்று அவரின் முன்னே கைநீட்டித் தடுத்த காட்சி மனதை விட்டு அகலமாட்டேன் என்றது.
பிரமிளாவுக்கு உள்ளம் கொதித்தது. போகும்போதும் வரும்போதும் மிகுந்த பணிவோடு வணக்கம் சொல்லுகிற அவனுக்கு, அப்பாவைத் தடுக்கிற அளவுக்குத் துணிச்சல் எங்கிருந்து வந்தது?
“வேற ஆரெல்லாம் நீக்கீனம் அப்பா?”
“நிறையப் புது முகங்கள் நிக்குதம்மா. ஆரையும் எனக்குத் தெரியேல்ல. நிர்வாகச் சபை உறுப்பினர்களும் மாறியிருக்கிற மாதிரி இருக்கு. அரசியல்வாதிகளும் நிக்கிறமாதிரிக் கிடக்கு.”
“அங்கேயே நில்லுங்கப்பா, இப்ப வாறன்!” என்றவள், என்ன என்று கேட்ட தாயிடம் சுருக்கமாக விவரத்தைச் சொல்லிவிட்டு வெகுவேகமாகக் கல்லூரியை நோக்கி விரைந்தாள்.