அத்தியாயம் 2 – 2
“அதிபர் போகமாட்டார் சேர். இவ்வளவு அவசரமா அவர் ஏன் பதவி நீக்கப்பட்டவர் எண்டுற கேள்விக்கான பதில் கிடைக்காம அவர் மட்டுமில்ல ஆருமே போகமாட்டோம்! எங்களுக்கு எங்கட அதிபர்தான் வேணும்!” நிதானமாகவே அறிவித்தாள் அவள்.
அதுவரை இராமச்சந்திரனின் அருகிலேயே நின்றவன் நக்கலாகச் சிரித்தான். “மிஸ்ஸின்ர அப்பாவுக்குப் பதவி ஆசை இன்னும் போகேல்லையாம் இராமச்சந்திரன் சேர். அதுதான் மிஸ்ஸுக்கு இவ்வளவு கோவம் வருது. அப்பா போய்ட்டா அதிகாரம் செய்யேலாது. பள்ளிக்கூடத்தையே ஆட்டிவைக்க ஏலாது. பாருங்க, இப்பவும் பள்ளிக்கூடம் அவவுக்குக் கீழதான் நிக்குது. அப்பாக்குப் பிறகு மகளும் அதிபர் ஆகிறது எப்பிடிச் சொல்லுங்கோ? அதுதான் மிஸ் துள்ளுறா.” இராமச்சந்திரனிடம் சொல்வதுபோல் அவளைக் குத்தினான் அவன்.
அவனுடைய ‘துள்ளுறா’ என்ற வார்த்தை சீற்றத்ததைக் கொடுக்க, இராமச்சந்திரனிடம், “சம்மந்தமே இல்லாம மூக்க நுழைகிற இது ஆர்?” என்றாள் அவளும் அவனுடைய பாணியிலேயே.
இதுவாமே? அவன் என்ன ஆடா மாடா? “இண்டுல(இன்றையில) இருந்து என்ர அப்பாதான் இந்தப் பள்ளிக்கூடத்தின்ர நிர்வாக சபைக்குப் புது நிர்வாகி!” என்றான் கர்வத்துடன்.
அவளுக்குக் குழப்பமாயிற்று. அதிபரைத்தான் மாற்றுகிறார்கள் என்றால் நிர்வாகியையும் மாற்றவேண்டிய அவசியம் என்ன? முதலில் இதெல்லாம் எப்போது நடந்தது?
அவளைப்போலவே அங்கிருந்த எல்லோரின் முகத்திலும் குழப்பங்களும் ஓராயிரம் கேள்விகளும். அது சலசலப்பாக மாறிற்று.
“அப்பிடி நிர்வாகி மாறியிருந்தா உம்மட அப்பாதான் இங்க வந்திருக்கோணும். நீர் இல்ல! இப்பவும் இந்த இடத்துக்கு நீர் சம்மந்தமில்லாத ஆள்தான்.” என்று அவனுக்குத் திருப்பிக்கொடுத்துவிட்டு,
“என்ன இராமச்சந்திரன் சேர் இதெல்லாம்? தான் செய்யவேண்டிய வேலையக்கூட மகனை அனுப்பிச் செய்விக்கிறவர் எல்லாம் என்ன மாதிரியான நிர்வாகி? இப்படியான ஆட்களை வச்சு ஒரு நிர்வாகம் எப்பிடி நடக்கும்?” என்று அவரையும் அவள் விட்டுவைக்கவில்லை.
ஆனால், தன் தகப்பனையும் அவள் குறைத்துப் பேசவும் அந்த அவனால் பொறுக்க முடியவில்லை. “ஹல்லோ மிஸ் போதும் நிப்பாட்டுங்க! தேவையில்லாத வாக்குவாதம் இஞ்ச நடத்த வேண்டாம். உங்கட அப்பாவை ஓய்வு எடுக்கச் சொல்லி எப்பவோ அறிவிச்சாச்சு. அதன்படி இண்டைல(இன்றையில) இருந்து அவருக்கு ஓய்வும் கொடுத்தாச்சு. அவ்வளவுதான் விசயம். இப்ப நடையைக் காட்டுங்க!” அலட்சியமாகச் சொன்னான் அவன்.
அவன் தனக்குக் கோபமேற்றி வார்த்தைகளை விட வைத்து இதை ஒரு கலகமாகவே மாற்ற முயல்வது பிரமிளாவுக்குப் பிடிபட்டுப் போயிற்று. அதில் தன் ஆத்திரத்தை அடக்கி, விரலை வாயில் வைத்து, வாயை மூடு என்றாள் சைகையாக.
நொடியில் கொதித்துப்போனான் அவன். வேகமாகப் பார்வையைச் சுழற்றினான். மொத்த மாணவியரும் வீதியில் கூடியிருக்க, மக்களும் அவனைப் பார்த்து இகழ்வாகச் சிரிப்பது போலிருந்தது. இவளுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும். அவன் மனம் சினந்தது.
அதற்குள் ஆசிரியர்கள் இராமச்சந்திரனை மொய்த்துக்கொண்டு கேள்விகளால் திணறடித்தனர். இவ்வளவு காலம் சேவையாற்றிய மனிதரைக் கௌரவிக்காமல், பாராட்டு விழா நடத்தாமல், அவமரியாதை செய்து வெளியேற்றுவது நியாயமில்லை என்று எடுத்துரைத்தனர்.
இன்றைக்குப் பள்ளிக்கூடம் புது அதிபரைக்கொண்டு ஆரம்பித்தபிறகு அனைத்தும் முறையாக நடக்கும் என்று அவர் சொன்னதை அவர்கள் கேட்பதாக இல்லை.
அவமானப்படுத்தித் துரத்தி அடித்துவிட்டுக் கூப்பிட்டு வைத்துப் பாராட்டுவது என்ன விதமான அணுகுமுறை?
அவர்களின் எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. அதைவிட, தனபாலசிங்கத்தைப் பற்றித் தெரியும். வீண் சண்டை சச்சரவுகளை விரும்பாத மனிதர். கேள்வி எழுப்புவார், இது இப்படித்தான் என்றுவிட்டால் கேட்டுக்கொள்வார் என்றுதான் எண்ணினார்கள்.
அப்படி அவர்கள் நினைத்ததற்கு மாறாக, “சரி, நீங்க சொல்லுற மாதிரிப் பாத்தாலும் உபதிபராக இருக்கிறவர்தான் அடுத்த அதிபரா நியமனம் ஆவார். அப்பிடியும் இல்லாம ஆருக்குமே முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் அதிபரா வரவேண்டிய கட்டாயம் என்ன?” என்று அவரின் மகள் கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.
“உங்கட கேள்விகளை எல்லாம் நிர்வாக சபைக் கூட்டத்தில வந்து கேளுங்கோ எண்டு ஏற்கனவே சொல்லியாச்சு மிஸ். இப்ப நேரத்தை வீணாக்காம வேலைகளைப் பாருங்கோ!” இராமச்சந்திரனும் நிதானத்தை இழக்கத் தொடங்கியிருந்தார்.
அந்தளவுக்கு அவருக்கும் கைப்பேசியில் அந்தப்பக்கத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒரு வயதான அதிபரைப் பேசி அனுப்ப முடியாத அளவுக்குப் பேச்சுச் சாதுர்யம் இல்லாமல் இவ்வளவு காலமும் எப்படி நிர்வாகச் சபைத் தலைவராக இருந்தாய் என்று வறுத்தெடுக்கப்பட்டது.
“எந்தக் கேள்வியையும் நிர்வாக சபைக் கூட்டத்திலதான் கேக்கோணும் எண்டால் முடிவுகளும் அந்தக் கூட்டத்தில வச்சுத்தான் எடுத்திருக்கோணும். இஞ்ச வச்சு இல்ல!” என்று அவரின் பதிலைக் கொண்டே மடக்கினாள் பிரமிளா.
இராமச்சந்திரன் தடுமாற அவன் இடையிட்டான். “டீச்சர்தானே நீங்க. அதுதான் கேள்வியா கேட்டுத் தள்ளுறீங்க. ஆனா, தேவையில்லாம நிண்டு கத்தி சீன போடாதீங்க! மரியாதையா உங்கட அப்பாவை அனுப்பிப்போட்டுப் பிள்ளைகளை வகுப்புகளுக்குப் போகச் சொல்லுங்கோ!”
அவன் சொன்னதை ஆமோமதிப்பது போன்று நின்ற நிர்வாக உறுப்பினர்களிடம் இனிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்று புரிந்துபோயிற்று பிரமிளாவுக்கு. இவர்களுக்குப் பாடம் கற்பிக்கவில்லையென்றால் அவள் என்ன ஆசிரியை?
முடிவு செய்தவளாக, “அவர் போக மாட்டார். எங்கட கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்காம நாங்களும் போகமாட்டோம்! உங்களால முடிஞ்சதைச் செய்ங்க!” என்றுவிட்டு, விறுவிறு என்று பள்ளிக்கூடக் கேட்டினை நோக்கி நடந்தாள்.
“பிரமி விடம்மா. நான் வீட்டை போறன். பிள்ளைகளின்ர படிப்புத்தான் முக்கியம். மூண்டாவது தவணை வேற. ஆர் இருந்தா என்னம்மா?” அவர்களின் அளவுக்கெல்லாம் தரம் இறங்கிப் பழக்கமற்ற மனிதருக்கு இதற்குமேல் முடியவில்லை.
“அப்படியெல்லாம் போகேலாது அப்பா. கேட்டை திறக்கப்போறன். ஆர் தடுக்கினம் எண்டு பாப்பம்!” என்றவள் குமரனை ஒரு பார்வை பார்த்தபடி கேட்டை திறந்தாள்.
“ஏய்! நீ என்ன பெரிய இவளா? சொல்ல சொல்லக் கேக்காமத் திறக்கிறாய்.” என்றபடி அவளின் கையைத் தட்டிவிட்டவனின் கண்களில் அடுத்த நொடியே பூச்சி பறந்தது.
பளார் என்று அறைந்துவிட்டிருந்தாள் பிரமிளா. “பேச்சும் செயலும் மரியாதையா இருக்கோணும். இல்லையோ உன்ர மரியாதை போயிடும்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
ஒரு நொடி அந்த இடமே நிசப்தமாய்ச் சமைந்துபோயிற்று! அத்தனை பேரின் முகத்திலும் அதிர்ச்சி!
அவமானத்தில் முகம் சிவக்க, “ஏய்! என்னையா அடிச்சனி?” என்று பாயப்போனவனைப் பாய்ந்து வந்து தடுத்திருந்தனர் நிர்வாகச் சபையினரும் அங்கிருந்த ஆசிரியர்களும்.
அதுவரை வாக்குவாதமாக மட்டுமே நடந்துகொண்டிருந்த பிரச்சனை அப்படியே தலைகீழாக மாறி, போராட்டமாக உருவெடுத்தது.
நிர்வாகச் சபையினர் அவன் பக்கம் சேர்ந்துவிட மாணவியர் ஆசிரியர்கள் எல்லோரும் அவள் பக்கம் வந்தனர். குமரனைப் பார்வையாலேயே ஓடவைத்துவிட்டுக் கேட்டினைத் திறந்துகொண்டு அப்பாவையும் மாணவியரையும் அழைத்துக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்திருந்தாள் பிரமிளா.
எவ்வளவோ முயன்றும் நிர்வாகச் சபையினால் அவளைத் தடுக்க முடியாமல் போயிற்று. அவர்களும் உள்ளே நுழைய முயல மாணவியர் வேகமாகக் கேட்டை சாற்றி, தங்களைக்கொண்டே அரண் அமைத்து, அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
அதிகாரம் இருந்தும் ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்ட உணர்வு அவமானத்தையும் கோபத்தையும் உண்டாக்கிற்று. அனைத்தும் தங்களின் கைமீறிப்போன சினத்துடன், “தனபாலசிங்கம் சேர்!” என்று உரக்க அழைத்தார் இராமச்சந்திரன்.
“இந்தப் பள்ளிக்கூடத்துக்கு நீங்க அதிபர் இல்லை. இந்த நொடியில உங்களுக்கும் இந்தப் பள்ளிக்கூடத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல! இது நிர்வாகசபை எடுத்த முடிவு! அதிபர் இல்லாமல் பள்ளிக்கூடம் இயங்கக் கூடாது. தயவுசெய்து வெளில வாங்க!” என்று சத்தமாய் அறிவித்தார்.
அதைக் கேட்டு மொத்தமாக உடைந்துபோனார் தனபாலசிங்கம். ஆலமரத்தைச் சுற்றி வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த சீமெந்துக் குந்தில் அப்படியே அமர்ந்தவர், மனத்தின் கனம் தாங்கமாட்டாமல் விழிகளை இறுக்கி மூடினார்.
அதுவரை நேரமும் அரசல் புரசலாகக் காதில் கேட்ட செய்திகளை யாரைக்கொண்டு உறுதிசெய்வது என்று தெரியாமல் திணறிய மாணவிகளுக்கு அவரின் அறிவிப்பு மிகத் தெளிவாய் விடயத்தைச் சொல்லிவிட, எங்கிருந்து முளைத்தது என்று தெரியாமல் நொடியில் கோஷங்களும் முழக்கங்களும் ஆரம்பித்தன. ஒவ்வொரு பதாகைகளாக முளைத்தன.
“நீதி வேண்டும் நீதி வேண்டும்! மாணவருக்கு நீதி வேண்டும்!”
“வீ வோண்ட் மிஸ்டர் தனபாலசிங்கம்!”
“இருளில் நீதியைப் புதைக்காதே!”
“மாணவர் எதிர்காலத்தைச் சிதைக்காதே!”
“அரசியலைப் பள்ளிக்கூடத்துக்குள் கொண்டுவராதே!” என்று போராட்டம் ஆரம்பமானது.
அதில் பிரமிளா தலையிடவில்லையே தவிரத் தடுக்கவில்லை. அவர்களின் போராட்டத்தில் நியாயமிருப்பதாகவே அவளும் எண்ணினாள். அதிபர் ஆசிரியர்கள் கோஷமிடாதபோதும் அங்கேயே மரநிழலின் கீழேயே குழுமிக்கொண்டனர்.