அதன்பிறகு நடக்கவேண்டியவை அனைத்தும் மிக வேகமாய் நடந்தன.
மாணவிகள் அனைவருமே பள்ளிக்கூட முன்றலில் ஒன்று கூட்டப்பட்டனர். ஆசிரியர்களும் தனபாலசிங்கத்தின் உரையைக் கேட்பதற்குத் தயாராக இருந்தனர். எல்லோரின் முகத்திலும் கவலையும் என்னவோ என்று அறிந்துகொள்கிற தீவிரமும்.
மனத்தில் பாரத்தோடு மகளை ஒருமுறை பார்த்துவிட்டு அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்தார் தனபாலசிங்கம். “வாங்கோப்பா!” என்று, மெல்ல நடத்திச் சென்று அவரை மைக்கின் அருகில் விட்டுவிட்டு, அருகிலேயே நின்றுகொண்டாள் பிரமிளா.
தன் உரையை ஆரம்பிக்க முதல் அங்கேயே சற்றுத் தள்ளி நின்றவனைத் திரும்பிப் பார்த்தார் தனபாலசிங்கம்.
கைகளைக் கட்டிக்கொண்டு, எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல், அசையாத சிலையென நடந்துகொண்டிருக்கும் நிகழ்வின் மீதே கவனமாக நின்றிருந்தான் அவன்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கூட முன்றலில் கூடி நின்ற மாணவியர் புறம் தன் கவனத்தைக் குவித்தார்.
“என் அன்புக்கினிய மாணவச் செல்வங்களுக்கு வணக்கம்!” என்றவருக்கு மேலே பேச வார்த்தைகளே வரவில்லை.
“இத்தனை வருடத்து அனுபவங்கள் இருந்தும் என் அன்பை உங்களிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு நிற்கிறேன். நான் செய்தது என்னுடைய கடமையைத்தான். அதுவும் சம்பளம் வாங்கிக்கொண்டுதான் செய்திருக்கிறேன். ஆனால், அதுக்கு என் பிள்ளைச் செல்வங்கள் நீங்கள் காட்டிய அன்பு இருக்கிறதுதானே அது அளப்பரியது. என் வாழ் நாளின் சாதனையாக இதைத்தான் கருதுகிறேன். நான் சேமித்த மிகப்பெரிய சொத்து எது என்று கேட்டால் கண் முன்னால் நிற்கும் என் கண்மணிகள் என்றுதான் சொல்லுவேன். இந்த இரண்டு நாட்களாக எனக்காக, எனக்கு இழைக்கப்பட இருந்த அநீதிக்காக நீங்கள் போராடியது மாத்திரமல்லாமல், என்னை வெற்றியடையவும் செய்து இருக்கிறீர்கள். நீதியை நிலைநாட்டி இருக்கிறீர்கள்!” என்றதுமே மாணவியரின் சந்தோசப் பெருக்கில் உண்டான கரகோசம் அந்த இடத்தையே நிறைத்தது.
தன்னலமற்ற இந்த அன்பு அவருக்கான வெற்றியை எப்படிக் கொண்டாடுகிறது? தனபாலசிங்கத்துக்கு மனம் பெருமிதத்தால் நிறைந்து தளும்பியது.
“நியாயமான போராட்டம் நிச்சயம் வெற்றியை மட்டுமே ஈட்டித்தரும். சில நேரங்களில் அதற்குக் காலங்கள் தேவைப்படலாம்; ஆனால் தோற்காது என்கிற மிகப்பெரிய பாடத்தை இந்த இரண்டு நாட்கள் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. ஏட்டில் கூடக் கிடைக்காத அனுபவப்பாடம் இது! அதே நேரம், உங்களின் கோரிக்கையை நேர்மையாக, நேர்த்தியாக ஒழுங்கு செய்து வழிநடத்தி வெற்றி கண்ட உங்கள் எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.”
அதற்கும் கரகோசம் அவர் கழுத்துக்கு மாலையாயிற்று. நெஞ்சம் நிறைந்து தளும்பத் தளும்பப் பார்த்து மகிழ்ந்தார் அந்த அதிபர்.
தனக்காகக் குரல் கொடுத்த சக ஆசிரிய நண்பர்களுக்கும் நன்றியைச் சொன்னவரின் விழிகள் மிகுந்த பிரியத்துடன் அவர்களை வலம் வந்தன.
அப்படியே, இந்தக் கல்லூரிக்குத் தான் ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று வந்ததை, படிப்படியாக உயர்ந்து அதிபரானதை எல்லாம் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். தன்னால் இயன்றவரை திறம்படவே இக்கல்லூரியை வழி நடத்தியதாக நம்புவதாகத் தெரிவித்தார்.
இதை எல்லாவற்றையும் மனத்தில் நிறைவும் மகிழ்வும் பொங்கச் சொல்லிக்கொண்டே வந்தவர், கடைசியாக வார்த்தைகள் அற்றுப்போய்ச் சற்று நேரம் நின்றார்.
கௌசிகனின் பார்வை கூர்மை பெற்றது. பிரமிளாவுக்குத் தொண்டைக்குள் அடைத்துக்கொண்டது. ஆசிரியர்கள் எல்லோருமே கனத்துப்போன இதயத்துடன் அவரின் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர். மாணவியருக்கும் அதே நிலைதான். என்னவோ விரும்பத்தகாத ஒன்றைப் பகிரப்போகிறார் என்று அவர்களின் உள்மனம் உணர்த்திற்று!
மெல்ல மெல்ல வார்த்தைகளைக் கோர்த்தார் தனபாலசிங்கம். “இப்போது நான் சொல்லப்போவது உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். வேதனையைத் தரலாம். ஆனால், நிதர்சனத்தையும் மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டியவர்கள். அப்படித்தான் இந்தப் பள்ளிக்கூடமும் ஒரு மாற்றத்துக்குத் தயாராகியிருக்கிறது. என் உடல்நிலை எனக்கு ஒத்துழைக்க மறுப்பதால் ஓய்வில் இருக்கவே விரும்புகிறேன். அதனால் எனக்கு நீங்கள் வாங்கித்தந்த இந்த வெற்றியைச் சுமந்தபடி புது அதிபருக்கு வழிவிட்டு, என் சேவையிலிருந்து விருப்ப ஓய்வினை நானே பெற்றுக்கொண்டேன்.” என்று அவர் முறையாக அறிவித்தபோது, அப்படியே சமைந்து நின்றனர் அவரின் மாணவச் செல்வங்கள்.
அவருக்கு அது புரியாமல் இல்லை. ஆனாலும் பேசிமுடித்துவிட எண்ணித் தொடர்ந்தார்.
“இதை நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அதிபருக்கும் எனக்களித்த அதே ஆதரவையும் அன்பையும் கொடுக்க வேண்டும். நன்றாகக் கல்வி கற்று இச்சமூகத்தில் நல்ல மனிதர்களாக நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும். வெளியே இருந்தாலும் இக்கல்லூரியினதும் உங்களினதும் வளர்ச்சியைக் கவனித்துக்கொண்டே இருப்பேன். எப்போதும் என்ன தேவை என்றாலும் என் வீட்டில் என்னை நீங்கள் சந்திக்கலாம்!” என்றவர் முடிவுரையோடு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.
மாணவியர் அத்தனைபேரும் கண்களில் நீர் கோர்க்க அவரின் பிரிவை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், தடுக்கவும் தெரியாமல் தடுமாறிக்கொண்டும் தவித்துக்கொண்டும் நின்றனர்.
உயர்தரம் கற்கும் மாணவியர் சில ஆசிரியர்களை நெருங்கி, இதை மாற்ற முடியாதா என்று உண்மை அன்புடன் கேட்டனர். அதுவரை எதையுமே காட்டிக்கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் நின்ற பிரமிளாவே உடைந்துவிடுவோமோ என்று பயந்துபோனாள்.
‘இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்!’ அவளின் விழிகள் அவனைப் பொசுக்கின. புரியாத பாவம் ஒன்றுடன் அவளின் பார்வையைத் தாங்கி நின்றான் அவன்.
ஆசிரியர்கள் அனைவரும் ஆரத்தழுவி மனத்தில் பாரத்துடன் அவருக்கு விடைகொடுத்தனர். அவருக்கு எதிராக நின்ற ஆசிரியர்களுக்கும் இன்முகமாய் விடைபெற்றவரை நேரில் எதிர்கொள்வது சிரமமாகத்தான் போயிற்று.
மெல்ல அவரை நெருங்கிய மாணவியரின், “ஏன் சேர், ஏன் போறீங்கள்?” என்ற கண்ணீருக்கும் கேள்விகளுக்கும் பொறுமையாகவே பதில் சொல்லிவிட்டு அவர் விடைபெற்றபோது, பள்ளிக்கூட நேரமே முடிந்து போயிருந்தது.
அநியாயத்துக்கு அடங்கிப்போனோமே, மிரட்டலுக்குப் பணிந்துவிட்டோமே என்று மனத்தோரமாக ஒரு வேதனை நமநமத்துக்கொண்டே இருந்தாலும், அப்பா, மகள் இருவரும் மற்றவரிடம் காட்டிக்கொள்ளவில்லை.
வீடு வந்து, களைப்புப் போக நன்றாகக் குளித்து, இலகுவான உடைக்கு மாறி, உணவையும் முடித்துக்கொண்டு வராண்டாவில் அமர்ந்திருந்தனர்.
என்னதான் துணிச்சல் இருந்தாலும் நேர்மை இருந்தாலும் நியாயம் அவர்கள் பக்கமே இருந்தபோதும் மானம் என்று வருகையில் பின்வாங்கவேண்டித்தானே வந்துவிடுகிறது?
முடிந்தால் செய்து பார் என்று திருப்பி அடிக்க முடிவதில்லையே.
அவளுக்கு இழைக்கப்பட்டது மன்னிக்கவே இயலாத குற்றம்! இழைக்கப்பட்ட பிறகேனும் அவனின் நெஞ்சு குறுகுறுத்திருந்தால் மாணவிகளின் மானத்தையும் ஆயுதமாக ஏந்தியிருக்க மாட்டான்!
அவனுடைய செயல், பார்வை, பேச்சு அத்தனையிலும் முரட்டுத்தனம். இப்படியான ஒருவனின் கையில் அவர்களின் பள்ளிக்கூடம் என்ன பாடுபடப்போகிறதோ?
அன்னை சரிதாவுக்கு அவர்கள் வந்து சொல்லித்தான் அவளின் புகைப்படம் பேப்பரில் வந்த விடயமே தெரியவந்தது.
அதிர்ந்து, துடித்து, வேதனைப்பட்டுக் கண்ணீர் வடித்தவரைத் தேற்ற முயன்றுகொண்டு இருந்தாள் பிரமிளா.
ஃபேஸ்டைமில் பேசிக்கொண்டிருந்த பிரதீபாவும், “நீங்க ஏன் அம்மா அழுறீங்க? அந்தப் பரதேசிதான் அழவேணும், கவலைப்பட வேணும். வெக்கப்பட வேணும்! நாசமா போவாங்கள்! நல்லாவே இருக்க மாட்டாங்கள்!” என்று ஆத்திரமிகுதியில் திட்டித் தீர்த்தாள்.
அதைக்கேட்ட தனபாலசிங்கம் மகளைக் கண்டித்தார். “திருகோணமலைக்குப் போய் உப்பிடி(இப்படி) கதைக்கவோம்மா படிச்சனி? கேக்க நல்லாருக்கு!” என்றார்.
“கேவலமான வேலை செய்தவேய ஒண்டும் சொல்லாதீங்கோ அப்பா. ஆனா நான் சின்னதா ஒண்டு சொன்னாலும் உங்களுக்குப் பிடிக்காது!” என்று மல்லுக்கட்டிக்கொண்டு நின்றாள் அவள்.
“அவே மாதிரி நீயும் நடந்தால் அவேக்கும் உனக்கும் என்னம்மா வித்தியாசம்?”
“அந்த அவனோட என்னை ஒப்பிட வேண்டாம் சொல்லிப்போட்டன்!” பட்டென்று படபடத்தாள் அவள். “நான் ஒண்டும் அவே மாதிரி இல்ல! நான் நல்ல பிள்ளை!” சலுகையோடு சிணுங்கியவளை, “காணும் நிப்பாட்டு தீபா! முடிஞ்சதை இனிக் கதைக்க வேண்டாம். இங்க எல்லாரும் சுகமா இருக்கிறோம். நீ ஃபோனை வச்சிட்டுப் போய்ப் படி!” என்று அடக்கினாள் தமக்கை.
அவளிடமும் முகத்தைச் சுருக்கித் தனக்கு அதில் உடன்பாடில்லை என்று காட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள் அவள்.
தாயைத் திரும்பிப் பார்த்தாள் பிரமிளா. அப்போதும் தாளாத வேதனையில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தார் அவர்.
“அம்மா திரும்பவும் பசிக்குதம்மா. இரவுக்குப் புட்டு அவிப்பமா?” அவரைத் திசை திருப்புவதற்காக வயிற்றைப் பிடித்துக்கொண்டு கேட்டாள் அவள்.
பெற்ற நெஞ்சு இன்னுமே பற்றி எரிந்துகொண்டுதான் இருந்தது. அந்த வலியில் கண்ணோரம் கரிக்க மகளைப் பார்த்து, “உனக்கு வேதனையா இல்லையாம்மா?” என்று வினவினார் சரிதா.
அந்தப் பத்திரிகையை அவர் இன்னும் பார்க்கவில்லை. அதாவது காட்டப்படவில்லை. மகள் சொன்னதைக் கேட்டதற்கே அவரின் உள்ளம் இந்தப்பாடு படுகிறது. அவளானால் பார்த்துவிட்டு இப்படி இருக்கிறாளே?
“அதைப் பாத்த நிமிசம் அழுகை, ஆத்திரம், கோவம் எல்லாம் வந்ததுதான் அம்மா. ஆனா யோசிச்சுப் பாருங்கோ. நான் விழுந்தது எதிர்பாராம நடந்தது. அதை ஒருத்தன் கூச்சமே இல்லாம ஃபோட்டோ எடுத்திருக்கிறான். அதை இன்னொருத்தன் வெக்கமே இல்லாம பேப்பருக்குக் குடுத்திருக்கிறான். பேப்பர்காரன் காசு பாத்தா காணும் எண்டு போட்டிருக்கிறான். இதைச் செய்யேக்க இவங்களுக்கு எல்லாம் மனம் குத்தவே இல்லையா? ஒரு நிமிசம், ஒரு கணம், ‘ஒரு பொம்பிளைக்கு நான் இதைச் செய்யலாமா?’ எண்டு யோசிச்சு இருந்தாலே செய்திருக்க மாட்டினம். அப்பிடி யோசிக்காத அவேதான் வெட்கப்பட வேணும்! தலைகுனிய வேணும்! நாங்க இல்ல.” என்றாள், மனதின் கொதிப்பை வெளிப்படுத்துகிறவளாக.