“யோசிச்சு பாருங்கோ அம்மா. பிள்ளைகள் இப்படி வரக் காரணம் ஒவ்வொரு தாய் தகப்பனும் விடுற பிழைதான். அவன் கெட்டவன், இவன் கேடு கெட்டவன் எண்டு கதைக்கிறதுல அர்த்தமே இல்ல. பொம்பிளைப் பிள்ளைகளைக் கழுத்துக்குக் கீழ பாக்கக் கூடாது; கண்ண மட்டும் பாத்துக் கதைக்கோணும், கேவலமாக் கதைக்கக் கூடாது; கண்ட இடத்திலையும் தொடக் கூடாது எண்டு சின்ன வயசுல இருந்தே ஆம்பிளைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுக்க வேணும்.
ஒரு பெண்ணுக்கு என்ன செய்யக் கூடாது, என்ன செய்தா வலிக்கும், என்ன நடந்தா அவள் கூனிக் குறுகிப்போவாள் எண்டு அம்மாவா இருக்கிற ஒவ்வொரு பொம்பிளைக்கும் தெரியுமா இல்லையா? அதைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுக்க வேணுமா இல்லையா? பல்லுத் தீட்டாம சாப்பிடாத, கைய கழுவு, குளி, உடுப்பை ஊத்தை(அழுக்கு) ஆக்காத, படி, வீட்டுப்பாடம் செய் எண்டு எல்லாம் சொல்லுற அம்மா அப்பா இதைச் சொல்லிக் குடுக்கிறேல்ல. அதனாலதான் இப்படியான ஆம்பிளைகள் வளந்து வந்து இன்னொரு வீட்டுப் பொம்பிளைப் பிள்ளைகளைச் சீரழிக்கிறாங்கள். அப்ப யார்ல பிழை? அப்படியிருக்க அவனால பாதிக்கப்பட்ட நான் ஏன் அம்மா கவலைப்படோணும்? கூனிக்குறுகோணும்? அவன்ர அம்மா வெக்கப்படட்டும்! அப்பா கூனிக்குறுகட்டும்!” ஆக்ரோசம் கொண்டவளைப் போன்று கொட்டி முடித்தவளுக்குமே அப்போதுதான் நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு நின்ற ஏதோ ஒன்று வெளியேறிய உணர்வு!
அவளின் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும் பெற்றமனம் அமைதியடையாமல் அரற்றியது. கணவரைக் கவலையோடு பார்த்தார்.
‘போதும்! இனி ஒன்றும் கதைக்காத!’ என்பதாக மகளறியாமல் கண்ணால் சைகை செய்தார் அவர்.
கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டு, “புட்டுக்கு என்ன கறி வைக்க?” என்றபடி எழுந்தார் சரிதா.
“நிறைய மரக்கறி போட்டுப் பிரட்டுங்கோ அம்மா. நல்ல சுவையா இருக்கும்.”
“சரியம்மா. பிள்ளைக்குப் பிடிச்ச மாதிரியே செய்து தாறன். அதுக்கு முதல் ஒருக்கா கோயிலுக்குப் போயிட்டு ஓடிவரட்டோ?”
எப்போதுமே கோயிலடியில்தான் தன் மனக்கவலைகளைக் கொட்டிவிட்டு வருவார் சரிதா. அவளுக்கே தெரியும். இரக்கத்துடன் அன்னையை நோக்கிச் சரி என்று தலையசைத்தாள்.
அவர் தயாராகச் செல்ல, “நீங்களும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுங்கோவன் அப்பா. உடம்புக்கு நல்லாருக்கும்.” என்று அக்கறையோடு அவரையும் கவனித்தாள்.
“ஓம் அம்மாச்சி! ஒரு கொஞ்சத்துக்குச் சரிஞ்சு எழும்பினா நல்லாத்தான் இருக்கும்.” என்றவரை உறங்குவதற்கு விட்டுவிட்டு, வீட்டின் வெளியே வந்து அமர்ந்துகொண்டாள்.
அவளின் ஸ்கூட்டி, அப்பாவின் மோட்டார் வண்டி நிறுத்தும் வகையில் போதுமான இடம் விட்டு அமைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் போர்ட்டிக்கோவில் காலுக்கும் ஒரு பிளாஸ்ட்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.
பொழுது மாலையைத் தொட்டுக்கொண்டிருந்தது. வெப்பம் அடங்கி இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. தென்னைகள் அசைந்தாடின. அம்மாவின் குரோட்டன்கள் சிரித்துக்கொண்டு நின்றன. அந்த இதமான பொழுது மனத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த மறுத்தது.
புது நிர்வாகக் குழு அமைவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. அங்கும் அவர்களின் ஆட்கள்தான் இருக்கப்போகிறார்கள். இனி வரும் கல்லூரி நாட்களும் நிம்மதியற்ற நாட்களாகத்தான் அமையப்போகின்றன. எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்?
காலை விடிந்ததும் இன்றைக்குப் பிள்ளைகளுக்கு இது இது செய்ய வேண்டும், இந்தப் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்று மனதுக்குள்ளேயே பட்டியல் இட்டபடி ஆசையும் ஆர்வமுமாக ஓடுவாள். அப்படிப் போய்வந்த கல்லூரிக்குச் செல்வதையே இன்று கசப்பாக உணர்கிறோம் என்பதே அவளுக்குள் மிகுந்த வேதனையை உண்டாக்கிற்று! உயிராய் நேசித்த ஒரு இடத்தினை இப்படி நினைக்க வைத்துவிட்டானே!
அவனுக்குத் தண்டனையே இல்லையா? அவளால் எதுவுமே செய்ய இயலாதா? இயலாமல் போயிற்றே! அடங்கித்தானே வந்துவிட்டாள். சரிதா கோயிலுக்குச் செல்லப் புறப்பட்டு வரவும் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவரை நோக்கி முறுவலித்தாள்.
“இரம்மா. ஓடிவாறன்.” என்றுவிட்டு அவர் சென்றுவிட, இதைப் பற்றி எதுவுமே சிந்திக்கக் கூடாது என்று எண்ணியபடி காதோரமாக மென்மையான இசையை ஒலிக்கவிட்டுவிட்டு அதில் லயிக்க முனைந்தாள் பிரமிளா.
கணவரின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு மகளிடம் எதையும் காட்டாமல், பல்லைக் கடித்துக்கொண்டு கோயிலுக்கு ஓடி வந்துவிட்டவருக்கு அன்னையின் சன்னிதானத்தில் ‘ஓ’ என்று கதறி அழுதுவிட வேண்டும் போல் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
“தெய்வமே! நாங்க ஆருக்கு என்ன பாவம் செய்தோம் எண்டு எங்களுக்கு இவ்வளவு பெரிய அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறாய்? உனக்குக் கண்ணில்லையா? அவங்களுக்குத் தண்டனையே இல்லையா? நீ குடுக்க மாட்டியா?” அழுகையும் ஆத்திரமுமாய் அன்னையிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவரின் தோளைப் பற்றியது ஒரு கரம்.
திரும்பிப் பார்க்க அவரின் தோழி லதா நின்றிருந்தார்.
“என்னடி நடக்குது?” அவரின் அந்தக் கேள்வியிலேயே உடைந்தார் சரிதா.
“என்னட்ட எதையும் கேக்காத லதா. நெஞ்சே வெடிச்சிடும் மாதிரி இருக்கடி. பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் எண்டு அவளுக்கு அந்தப் பள்ளிக்கூடத்தை விட்டா வேற ஒண்டும் தெரியாது. அப்படியானவளுக்கு என்ன செய்திருக்கிறாங்கள் எண்டு பார்!” கட்டுப்பாட்டை இழந்து அழுகையில் குலுங்கியவரைக் கண்டு லதாவின் கண்களும் பனித்துப்போயிற்று.
அங்கிருந்த மற்றவர்களும் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “அழாத! முதல் வா ஒரு கரையா(ஓரமா) போய் இருப்பம்.” என்று அவரின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வந்தார் லதா.
அவரையும் அமர்த்தித் தானும் அமர்ந்து, “கண்ணைத் துடை சரிதா. அழாத. நீ இப்பிடி அழுதா பிரமிளா இன்னும் உடைஞ்சு போவாள். அவளுக்கு நீ தைரியம் சொல்ல வேண்டாமா?” என்று, தானே அவரின் கண்களைத் துடைத்துவிட்டார்.
ஓரளவு நிதானத்துக்குச் சரிதா திரும்பியதும், “எனக்கு ஒண்டும் தெரியாது. மகன்தானடி பேப்பரைக் கொண்டு வந்து காட்டினவன். பாத்த நிமிசம் திகைச்சே போனன்.” என்றார் அவர்.
“உனக்கே அப்பிடி இருந்தா எனக்கு எப்பிடி இருக்கும் சொல்லு? பிள்ளைக்கு முன்னால அழ முடியாமத்தான் கோயிலுக்கு ஓடிவந்தனான். கண்கெட்ட தெய்வம் கூட இதையெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருக்கு!”
“நீ திரும்பவும் அழாத! ஒரு பாவமும் செய்யாத எங்களுக்கே இவ்வளவு சோதனை எண்டால், பாவத்தை மட்டுமே தொழிலா செய்றதுகளுக்கு எவ்வளவு நடக்கும் சொல்லு. கொஞ்சம் பொறுத்திரு! பொறுத்திருக்கப் பாக்கலாம்!” யார் வீட்டின் பெண்பிள்ளையாக இருந்தால் என்ன? ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடுகிறவன் மீதான சினம் லதாவின் பேச்சிலும் இருந்தது.
“அவன்… அந்தக் கௌசிகன் அழிஞ்சுதான்டி போகோணும்! கடவுள் இருக்கிறது உண்மை எண்டால் அவன் அழியிறத நான் கண்ணால பாக்கோணும்! தரித்திரம் பிடிச்ச குடும்பம். நல்லாவே இருக்காதுகள்! நாசமாத்தான் போகோணும்!” அழுகை நின்றுவிட்டதில் ஆத்திரமாக அவரின் கோபம் வெளிப்பட்டது.
“நான் அந்தப் பேப்பரை பாக்கவே இல்ல. கேட்டதுக்கே இந்தப்பாடு. பாத்திருக்க என்ர உயிரே போயிருக்கும். அறுவது வயசு எண்டு சொன்னா ஆருமே நம்பாயினம். அவ்வளவு சுறுசுறுப்பா ஓடித்திரிஞ்ச என்ர மனுசன இப்ப பாக்க எண்பது வயசுக்காரன் மாதிரி இருக்கிறார். அந்தளவுக்கு உடைஞ்சுபோய்ட்டார். எவ்வளவு சந்தோசமாவும் நிம்மதியாவும் இருந்த குடும்பம். ஒரு நிமிசத்தில எங்கட சந்தோசத்தைக் குலைச்சே போட்டான்; நாசமா போனவன்! ரோட்டுல போற வாகனம் ஒன்றுகூட அவனை இடிக்காதா?கடவுளே!”
சரிதாவின் கையை மெல்லத் தட்டிக்கொடுத்தார் லதா. “எங்கட சந்தோசம் எங்கட கைலதான் இருக்கு சரிதா. உனக்கு நான் சொல்ல வேணுமே? உன்ர மனப்பாரத்தை எல்லாம் அந்த அம்மனிட்டக் கொட்டிப்போட்டுப் போ! வீட்டுல போய் ஒண்டும் கதைக்கிறேல்ல.” லதாவின் ஆறுதல் மிகுந்த வார்த்தைகளில் சற்றே தெளிந்தார் சரிதா.
அதே கோயிலுக்கு வந்திருந்த செல்வராணி அனைத்தையும் கேட்டுவிட்டு, அங்கேயே உறைந்துபோய் அமர்ந்திருந்ததை அவர்கள் இருவருமே அறியவில்லை.
இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற தாயினால் தன் குடும்பத்தின் மீது வீசப்பட்ட சாபங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து அவரின் உயிர் நடுங்கிற்று!
அவராலேயே அவரின் மகன் செய்த செயலை ஏற்கவோ மன்னிக்கவோ முடியவில்லை. அப்படியிருக்க அந்தப் பெண்மணியின் கோபத்தில் நியாயம் உண்டுதானே. அவரும் ஒரு பெண்ணைப் பெற்றவர்தானே! உண்மையிலேயே தான்தான் எங்கோ தவறிப்போனோமோ என்று எண்ணி அதற்கும் கண்ணீர் உகுத்தார் செல்வராணி.
அந்தத் தாயின் சாபங்கள் பலித்துவிட்டால் தன் குடும்பம் என்னாகும் என்று எண்ணியவரின் தேகத்தில் மீண்டும் நடுக்கம். இல்லை கூடாது! அப்படி எதுவும் நடக்க விட்டுவிடாதே! எதையாவது செய்து நேராக்க முடிந்தால் நேராக்கு! மனம் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல, ஒரு முடிவோடு எழுந்தவர் வீட்டை நோக்கி வேகநடை போட்டார்.
போகிறபோதே அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தவர், அப்படியே நின்றுவிட்டார். ‘கடவுளே! இந்தப் பெண்ணா?’ என்று மனம் அரற்றியது!
அவர் பார்த்து ரசித்த பெண். அவளின் நிமிர்வில், அணிந்திருந்த சேலையின் நேர்த்தியில், நடையில் தெரிந்த கம்பீரத்தில் மனம் லயித்தாரே!
மூத்தவனுக்கு அவளை மனைவியாக்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனையிலேயே கோட்டை கட்டி மகிழ்ந்தாரே! அவளுக்கா இவ்வளவும் நேர்ந்தது? அவனுக்குச் சோடி சேர்க்க அவர் ஆசைப்பட அவனோ ஊருக்கு முன்னால் அவளின் மானத்தை வாங்கிவிட்டானே!
அதைவிட அவளை எப்படி ஒரு கோலத்தில் போட்டிருக்கிறார்கள். வாழ்ந்து, பிள்ளைகள் பெற்ற வயதான பெண்மணி அவர். அவருக்கே தேகம் முழுவதும் கூசுகிறது. இளம் பெண் அவள் என்ன பாடு பட்டிருப்பாள்? அந்தப் பெண்மணி சொன்னதுபோல அவரின் வளர்ப்புத்தான் பிழைத்துப்போயிருக்கிறது! அவர் திட்டியதிலோ சாபம் இட்டத்திலோ தவறேயில்லை.
‘சீச்சீ! இவனெல்லாம் என்ன மனிதன்?’ ஆத்திரத்துடன் வேகநடை போட்டு வீட்டுக்குச் சென்றவர், சின்னவனோடு நின்ற பெரிய மகனின் கன்னத்தில் தன்னால் இயன்றவரை ஓங்கி பளார் என்று அறைந்தார்!