அன்று, வழமை போன்று காலையிலேயே முழிப்பு வந்தது பிரமிளாவுக்கு. எழுந்து தயாராகிப் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று நினைத்தாலே பெரும் கசப்பு மருந்தை அருந்துவது போன்று மனதில் பாரம் ஏறிற்று!
போகாமல் இருந்துவிடுவோமா?
‘என்ன இது? அது பள்ளிக்கூடம். அங்கே நான் ஆசிரியை. அது என் தொழில். கற்பிக்க வேண்டியது என் கடமை!’ என்று எண்ணிக்கொண்டு வலுக்கட்டாயமாக எழுந்தபோது, ‘உயிராக நேசித்துக் கற்பிப்பதைக் கடமையாக நினைக்க வைத்துவிட்டானே’ என்று அந்த அவனின் மீது சினம் பொங்கிக்கொண்டு வந்தது.
அந்த எண்ணங்களை விரட்ட முயன்றுகொண்டே தயாராகி, அன்னை கொடுத்த உணவைக் கொரித்துவிட்டு எழுந்தவளிடம், “கவனமா போயிட்டு வாம்மா. ஆர் என்ன கதைச்சாலும் கொஞ்சம் அமைதியா போ செல்லம்.” என்று, கெஞ்சல் குரலில் புத்தி சொன்னார் சரிதா.
‘அப்ப என்ன நடந்தாலும் நான் ஒண்டையும் பாக்கேல்ல, கேக்கேல்ல எண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கோணுமா?’ என்கிற கேள்வி அதுபாட்டுக்கு எழுந்தது. ஆனாலும் என்றும் இல்லாமல் இன்று சொல்கிறார் என்றால், தனக்கு இன்னுமே ஏதாவது நடக்கக்கூடாதவை நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறார் என்று விளங்கிற்று.
வேறு பேசாமல், “சரியம்மா. நான் கவனமா இருக்கிறன்.” என்று இரக்கம் சுமந்த குரலில் சொல்லிவிட்டு, விடைபெற்று வாசலுக்கு வந்தாள்.
அங்கே, தளர்வாய் அமர்ந்திருந்த தந்தையைக் கண்டவளுக்குத் தொண்டைக்குள் அடைத்துக்கொண்டது. இப்படியான காலை வேளைகளில் அவளை விடவும் அவர்தான் மிகுந்த பரபரப்புடன் தயாராகிக்கொண்டிருப்பார். இன்றைக்குச் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது போன்று தொய்ந்து அமர்ந்திருக்கிறார்.
மகளைப் பார்த்தவரின் விழிகளிலும் மறைக்கமுடியாத இயலாமையும் வலியும். ஆனாலும் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சந்தோசமா போயிட்டு வாம்மா. அது நீ படிச்சு, இப்ப படிப்பிக்கிற உன்ர பள்ளிக்கூடம்!” என்றார், அவளுக்குத் தைரியமூட்டும் குரலில்.
ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்துவிட்டு, அவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். அவர்களின் தெரு தாண்டியதும் ஸ்கூட்டியை நிறுத்தித் தங்கைக்கு அழைத்தாள்.
“எங்க நிக்கிறாய் தீபா?”
“வீட்டிலதான் அக்கா. இண்டைக்கு மத்தியானம்தான் கம்பஸ் போகோணும்.”
“அம்மா அப்பாக்கு எடுத்துக் கொஞ்ச நேரம் கதை. ரெண்டு பேரும் வீட்டுல தனியா இருந்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பீனம்.” பெற்றவர்களைப் பற்றி அறிந்தவளாகச் சொல்லிவிட்டு மீண்டும் ஸ்கூட்டியைக் கிளப்ப முனைந்த வேளையில், மிகுந்த வேகத்தில் வந்த ரஜீவன் அவளருகில் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவந்தான்.
“உங்களைக் கேவலப்படுத்தினவங்கள் இருக்கிறாங்களே. அவங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறாள். அவளை நான் வீடியோ எடுத்துட்டன்.” அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனாள் பிரமிளா.
“அறிவில்ல உனக்கு? அண்ணன் செய்த பிழைக்கும் அவளுக்கு என்ன சம்மந்தம்?” என்றவளுக்கு கண்மண் தெரியாத அளவில் அவன்மீது கோபம் பொங்கிற்று!
“ஒரு பொம்பிளைப் பிள்ளைக்குக் கேடுகெட்ட வேலை பாத்ததும் இல்லாம அத வந்து என்னட்டச் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கோணும்? அவள் என்ன பிழை செய்தவள்? எனக்கு வாற ஆத்திரத்துக்கு உனக்கு வெளுக்க வேணும் மாதிரி இருக்கு.” மிகுந்த சினத்துடன் சீறியவளைக் கண்டு திகைத்து நின்றுவிட்டான் அவன்.
“அக்கா அது உங்களை…”
“போதும் நிப்பாட்டு! நீ செய்த அறிவுகெட்ட வேலைக்கு என்னைக் காரணமாக்காத!” என்று எரிந்து விழுந்தாள் பிரமிளா.
“ஃபோனை கொண்டுவா!” என்று அவன் கையிலிருந்ததைக் கிட்டத்தட்டப் பறித்து உள்ளே நுழைந்து பார்த்தாள்.
பார்க்கும்போதே, “எடுத்த வீடியோவை வேற ஆருக்கும் அனுப்பினியா?” என்றவளின் வினாவில் பதறி, “ஐயோ இல்லை அக்கா. உங்களிட்ட காட்டத்தான் கொண்டுவந்தனான். அந்தப் பிள்ளை நடந்துவாறதைத்தான் எடுத்தனான். என்னை அவே ஒருத்தருக்கும் தெரியாது. சும்மா வீடியோதான். ஆனா என்ன எடுத்தானோ, இனி என்ன செய்வானோ என்று பயந்து நடுங்குவினம்தானே. உங்களைக் கேவலப்படுத்தி அழ வச்சவே எல்லா…” என்றவனைச் சரக்கென்று நிமிர்ந்து முறைத்தவளின் விழிகளில் அனல் பறந்தது.
கப்பென்று வாயை மூடிக்கொண்டான் அவன்.
“அந்தப் பிள்ளையைப் பற்றி யோசிக்க இல்லையா நீ? ஒண்டும் அறியாத ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் குடுத்திருக்கிறாய். உன்னையெல்லாம்…” என்றவளின் விழிகள் இப்போது எடுத்திருந்த வீடியோவில் குவிந்தது.
வீதியில் ஒரு பெண் தன் தோழிகளுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள். அதில் இவன் அவசரமாக எடுத்ததில் தோழிகள் விழுந்தும் விழாமலும் இருக்க அந்தப் பெண் மட்டும் தெரிந்தாள். அதுவும் முதலில் இவன் என்ன செய்கிறான் என்று கவனித்துப் பின் திகைத்து, பயந்து, ‘ஏய் என்ன செய்றாய்?’ என்று அவள் கேட்பது வரை பதிவாகியிருந்தது.
பயப்படுகிறபடியாக அதில் எதுவுமில்லை என்றாலும் அந்தப் பெண் நன்றாகப் பயந்திருக்கிறாள் என்று கலங்கிச் சிவந்த முகத்திலேயே தெரிய, “உனக்கும் ஒரு தங்கச்சி இருக்குத்தானே? இப்ப நீ செய்த பிழைக்கு அவே யாராவது அவளை வீடியோ எடுத்தா சரியா?” என்று அதட்டினாள் அவள்.
ஒருகணம் திகைத்துப் பின் தன் தவறு விளங்கத் தலை குனிந்தவன், “எண்டாலும் அவே செய்ததும் பிழைதானே?” என்றான் முணுமுணுப்பாக.
“பிழைதான். அது முடிஞ்ச விசயம். இப்ப நீ புதுசா ஒண்டை ஆரம்பிச்சு வச்சிருக்கிறாய். இதுக்காக அவன் என்னவெல்லாம் செய்யப்போறானோ?” என்றவளுக்குத் தலைவலி காலை வேளையிலேயே வந்துவிட்டிருந்தது.
சும்மாவே ஆடுவான் அந்தக் கௌசிகன். இது தெரிந்தால் இவன் என்ன ஆவான்? “அவே தராதரம் இல்லாம நடந்தா நாங்களும் நடக்கோணும் எண்டுறது இல்லை ரஜீவன். நீ படிச்ச பிள்ளை எல்லா. யோசிச்சு நடக்கமாட்டியா?” என்றவளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தைவிட அவனுடைய பாதுகாப்பு சம்மந்தமாகவே சிந்தனை ஓடியது.
“இந்த ஃபோன்ல டிலீட் பண்ணினா திரும்ப எடுக்க ஏலுமா(இயலுமா)?” என்றபடி அதை ஆராய்ந்தாள். பெரிய நல்ல கைப்பேசி அல்ல. அழித்ததைத் திரும்ப எடுக்கும் வசதி அதில் இருக்கவே போவதில்லை என்று பார்க்கவே தெரிந்தது.
“அந்த வசதியெல்லாம் இதுல இல்லை அக்கா. சிலநேரம் எடுத்ததே கிடைக்காது.”
விறுவிறு என்று அந்த வீடியோவை டிலீட் செய்தாள். குப்பை வாளியையும் கிளீன் செய்துவிட்டாள். அவனில் நம்பிக்கை இல்லாமல் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாகத் தட்டிப் பார்த்தாள்.
“இவ்வளவு நாளும் உன்ன நல்லபிள்ளை எண்டு நினைச்சிட்டன். ஆனா நீயும் அவனை மாதிரித்தான் எண்டு காட்டிப்போட்டாய்! இனிமேலாவது ஒழுங்கா இருக்கப் பழகு! எந்தப் பொம்பிளைப் பிள்ளைக்கும் எதையாவது செய்ய முதல் உன்ர தங்கச்சிக்கு நீ அதைச் செய்வியா எண்டு ஒருமுறை யோசிச்சிட்டு செய்!” வெறுப்புடன் அவன் முகம் பாராமல் அவள் ஃபோனைக் கொடுக்கவும் அவன் கண்கள் கலங்கிப் போயிற்று!
அதுநாள் வரை அவனின் நல்லது கெட்டதுகளில் அக்கறை காட்டி, கூடப் பிறக்காத சகோதரியாக வழிகாட்டியவள். அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பில், விலகளில் உண்மையிலேயே நிலைகுலைந்து போனான் அவன்.
“கடவுளாணைக்கு(கடவுள் மீது ஆணை) இனி இப்படி நடக்கமாட்டன் அக்கா. இதுவும் செய்றது பிழை எண்டு தெரிஞ்சு கைகால் எல்லாம் நடுங்கினதுதான். ஆனா, உங்களை அழ வச்சவங்கள் எல்லோ. அந்த ஆத்திரத்திலதான் செய்தனான். இனி எந்தக் காலத்திலையும் இப்படி நடக்கமாட்டன் அக்கா!” என்று பரிதவித்தவனைக் கண்டு பரிதாபம் உண்டாயிற்று அவளுக்கு.
“தெரிஞ்சோ தெரியாமலோ பெரிய பிழை செய்துபோட்டாய். இனித்தான் நீ கவனமா இருக்கோணும் ரஜீவன். ஆர் கேட்டாலும் ‘இல்ல. நான் எடுக்கேல்ல.’ அவ்வளவுதான் நீ சொல்லவேண்டிய பதில். போலீஸ் வரலாம். ஆர் எண்டே தெரியாத கும்பல் வரலாம். உன்ன வெருட்டலாம். அடிகூட விழலாம்.” அவள் சொல்ல சொல்லப் பயத்தில் பேயறைந்ததுபோல் மாறிய அவன் முகத்தைக் கவனித்துவிட்டு, “இதெல்லாம் வரலாம் எண்டுதான் சொன்னனான். வரும் எண்டு சொல்ல இல்ல. அதைவிட இவ்வளவு பயம் இருக்கிறவன் இதைச் செய்திருக்கக் கூடாது!” என்றாள் கண்டிக்கும் குரலில்.
அவனுக்கோ நடுக்கம் பிடித்திருந்தது.
“என்னை அவே ஆருக்குமே தெரியாதே அக்கா.” என்றவனைப் பரிதாபத்துடன் பார்த்தாள் பிரமிளா.
“உனக்கு அவன… அந்த ஆளைப் பற்றி இன்னும் சரியா தெரியேல்ல. நான் நினைக்கிறது சரியா இருந்தா இப்பவே உன்னைத் தேடத் தொடங்கி இருப்பாங்கள்.” என்றவளுக்கும் இவனைக் காப்பாற்றும் வழி புலப்படவேயில்லை.
“எப்ப வீட்டை இருந்து வெளிக்கிட்டனி? அம்மாட்ட என்ன சொல்லிப்போட்டு வந்தனீ?”
“என்ர ஐசி துலைஞ்சிட்டுது(தொலைந்துவிட்டது) அக்கா. புதுசுக்கு அப்லை செய்தனான். அது எடுக்க யாழ்ப்பாணம் போறன். பஸ் ஸ்டான்ட் போற வழியிலதான் அந்தப் பெட்டையைக் கண்டனான்.”
“சரி, அப்ப அத முதல் செய். ஐசி எடுத்துக்கொண்டுதான் நீ திரும்பி வரோணும். நீ வந்து பஸ்ஸால இறங்கேக்கையே அவங்கள் உன்னப் பிடிப்பாங்கள். ரெண்டு அடி வாங்கினாலும் மூச்சு விடாத. பிறகு உயிருக்கே ஆபத்து. உன்ர தங்கச்சிக்கும் ஆபத்து.” என்றதும் அழுதேவிட்டான் அவன்.
பாவமாய்ப் போயிற்று அவளுக்கு. “நீ உண்மையைச் சொன்னாத்தானே இதெல்லாம் நடக்கும் எண்டு சொல்லுறன். சும்மா அழாத. தெரியாம ஒரு பிழை செய்திட்டாய். அதால ஆருக்கும் ஒரு கேடும் இல்லை. பயப்பிடாத. எங்கட பயம்தான் அவேக்கு ஆயுதம். நீ பயப்பட்டா தோத்திட்டாய், அவங்களிட்ட மாட்டிட்டாய் எண்டு அர்த்தம். விளங்கினதா?” என்றவள், தானே போய் அவனை பஸ் ஏற்றிவிட்டு, அப்படியே பஸ் ஸ்டான்ட்டில் இருந்த புத்தகக் கடையில் வாங்கவேண்டி இருந்த புத்தகத்தையும் வாங்கிக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்.
சினம் கொண்ட சிங்கத்தைப் போல வாசலிலேயே அவளை எதிர்கொண்டான் அவன்.
“உன்ர வேலையா இது?”
“படிப்பிக்கிறதுதான் என்ர வேலை!” அவனை மருந்துக்கும் மதிக்காமல் போகிறபோக்கில் சொல்லிவிட்டு நடந்தாள் அவள்.
“ஓ! ரோட்டில நடந்துபோற பொம்பிளைப் பிள்ளைகளை வீடியோ எடுக்கச் சொல்லி நீதான் படிப்பிச்சிருக்கிறாய் போல!”
அப்படிக் கேட்டவனை நின்று துச்சமாய் நோக்கினாள் பிரமிளா.
“தரம் தாழ்ந்துபோய்க் கேவலமான வேலை பாக்கிறது உங்கட குடும்பத்து ஆக்கள். எனக்கு அப்படி ஒரு நினைப்பே வராது.”
“ம்ஹும்….” தாடையைத் தடவிக்கொண்டே அவளை நோக்கியவனின் விழிகளில் சிந்தனை. “அப்ப உன்ர விசுவாசியா அவன்?”
“எவன்?” நிமிர்ந்தே கேட்டாள்.
அவனோ அவளை நிதானமாக விழிகளுக்குள் உள்வாங்கினான். “நீ துணிச்சலான பெண் எண்டு தெரியும். கெட்டிக்காரியும் கூடத்தான்.” என்றவன் தந்திரச் சிரிப்போடு, “பாக்கலாம்!” என்றபடி விடைபெற்றான்.
கட்டுப்பாட்டையும் மீறிப் பிரமிளாவின் நெஞ்சு நடுங்கிற்று!