ரஜீவனைக் குறித்தான பயமும் கவலையும் நெஞ்சை அரிக்க, பதிவேட்டில் தான் வந்ததைப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்தவளின் அருகே திருநாவுக்கரசும் சசிகரனும் வந்தனர்.
“அப்பா எப்படி இருக்கிறாரம்மா?” உடைந்த குரலில் கேட்டார் திருநாவுக்கரசு. பல வருடங்களாக இணைந்து பணியாற்றியவர்கள். சகபாடி என்பதையும் தாண்டிய நட்பும் பாசமும் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றிப் போயிருந்தன. இன்றைக்கோ அவர் இல்லாத கல்லூரி வெறுமையாகக் காட்சியளிப்பதாக உணர்ந்தார்.
“இருக்கிறார் சேர்.” ஒரு சம்பிரதாய முறுவலோடு சொன்னாள் பிரமிளா.
“நேற்றே நிர்வாகசபையும் மாறிட்டுதாம். பகிடி தெரியுமா? இப்ப அப்பாக்குப் பதில் மகன் நிர்வாகியாம். பெருச்சாளிட்ட இருந்து பிடுங்கி பேயிட்ட குடுத்திருக்கு. எல்லாம் ஒரு சாட்டுக்கு. மற்றும்படி அதே ஆக்கள்தான்!” கோபத்துடன் தகவல் கொடுத்தான் சசிகரன்.
அவள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே. எனவே மாறாத அதே முறுவலுடன், “சசி சேர். இனி இதைப் பற்றி நாங்க கதைக்கிறதுக்கு ஒண்டுமே இல்ல. இன்னும் இப்பிடி நிறைய நடக்கும். நடக்கிறதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான்.” அக்கறையைற்றுச் சொல்லிவிட்டுத் தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
அவளுடனேயே சேர்ந்து நடந்தபடி, “நீங்க கொஞ்சம் கவனமா இருங்கோ மிஸ். கௌசிகன், இங்கேயே நிர்வாகிக்கு எண்டு ஒரு அறை செட் செய்றார்.” என்றவனை, நடை நிற்கக் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தாள் பிரமிளா.
அவனும் அவள் நினைப்பது சரிதான் என்பதுபோலத் தலையசைத்தான்.
“அவரின்ர நடமாட்டம் இனி இங்க அதிகமா இருக்கும்.” என்றவன், நடக்கும்படி சைகை காட்டிவிட்டுக் கூட நடந்தபடி, “இது கௌசிகன் எப்பவும் செய்றதுதான். அவர் இருக்கிற இடத்தில அவரின்ர ஆதிக்கம்தான் கூடுதலா இருக்கும். இந்தப் பள்ளிக்கூடம் முழுமையா அவரின்ர கட்டுப்பாட்டுக்க வருகிற வரைக்கும் அவரை அடிக்கடி இங்க பார்க்கலாம்.” என்றான் அவன்.
அலுவல் ஏதும் இருப்பின் அதிபரை வந்து சந்தித்துவிட்டுச் செல்வதுதான் இதுவரையான நிர்வாகியின் நடைமுறையாக இருந்திருக்கிறது. கூடவே ஏதும் விழா நடந்தால் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். அவ்வளவுதான். ஆனால், இந்த நிர்வாகி இங்கேயே இருந்து என்ன செய்யப் போகிறான்?
அவனைப் பற்றி யோசிக்காதே என்று அவளே நினைத்தாலும் விடாமல் தன்னைப் பற்றியே அவளை யோசிக்க வைத்துக்கொண்டிருந்தான் அவன்.
“உங்கட ஃபிரெண்ட் ஆரோ லோயர் எண்டு சொன்னனீங்க எல்லோ சசி சேர். மாவட்ட நீதிபதிட்ட மனு குடுக்கிறதைப் பற்றி அவரிட்ட விசாரிச்சனீங்களா?” அவனைப் பற்றிய பேச்சினைத் தவிர்க்க எண்ணிக் கேட்டாள்.
அதுவும் அவனை நோக்கியதுதான் என்பதை அவள் உணரவில்லை.
“அதுதான் எல்லாம் முடிஞ்சுதே எண்டு கேக்கேல்லை மிஸ். இதை வளர்க்க வேண்டாமே. இப்படியே விட்டுடலாமே. நடந்தது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டுமே.” அவனுக்கு என்னவோ இன்னும் கௌசிகனைக் கோபப்படுத்துவது அவளுக்கு நல்லதல்ல என்றுதான் தோன்றிற்று!
நின்று நிதானமாக அவனை நேர்விழிகளால் ஏறிட்டாள் பிரமிளா. “எதை வளக்க வேண்டாம் எண்டு சொல்லுறீங்கள்? ஒரு பள்ளிக்கூடத்துக்க காடையர் புகுந்ததையா? இல்ல பிள்ளைகளை அடிச்சு உதைச்சதையா? இல்ல…” என்றவள் அதற்கு மேலே பேசப் பிடிக்காதவளாக நிறுத்திவிட்டு, “எதுவும் இன்னும் முடியேல்ல சேர். ஆனா முடிச்சு வைக்கோணும்! முறையா முடிச்சு வைக்கோணும்!” என்றவளின் விழிகளில் தீவிரம் தீர்க்கமாகத் தெரிந்தது.
“உங்களுக்கு ஏலும் எண்டா கேட்டுச் சொல்லுங்கோ. இல்லாட்டி என்ன செய்றது எண்டு நான் பாக்கிறன்.” என்றுவிட்டு நடந்தவளைக் கண்டு முறுவல் பூத்தான் அவன்.
“பிரமிளா மிஸ்க்கும் கோபம் வரும் எண்டு இப்ப கொஞ்ச நாளாத்தான் தெரியுது.” அவனின் இலகுப் பேச்சில் அன்றைய நாளில் அவளின் முகத்தில் மெய்யான முறுவல் முதன் முதலாக மலர்ந்தது.
சசிகரனும் அவளும் முகத்தில் மலர்ந்திருந்த முறுவலோடு நீண்ட கொரிடோரில் அவர்களை அறியாமலேயே ஒரே மாதிரி காலடி எடுத்துவைத்து நடந்து வருவதை, விழிகளால் படமெடுத்தபடி வந்துகொண்டிருந்தான் அவளின் பேசுபொருளின் நாயகன்.
கைப்பேசியின் மறுமுனையில் இருந்தவன் என்ன சொன்னானோ, அதைக் கேட்டுப் பிரமிளாவில் மட்டுமே குவிந்த அவன் விழிகளில் தன் இரையைப் புசித்திடும் வெறி பளபளத்தது!
அதைப் பிரமிளாவின் உள்மனதும் உணர்ந்தது. இனம்புரியா பயம் தாக்க நிமிர்ந்து பார்த்தாள். எதிரில் கௌசிகன் வந்துகொண்டிருந்தான்.
அவன் விழிகளில் தெரிந்த கடுமையில் இவளின் நெஞ்சினில் குளிர் பரவிற்று. ரஜீவனைக் குறித்த பயமும் படபடப்பும் அதிகமாயிற்று! பாவம்; அனுபவமற்ற ஒரு இளைஞன். யோசியாமல் அவசரப்பட்டு ஒரு காரியத்தை அவளுக்காகச் செய்துவிட்டான். இனி இவனிடம் அகப்பட்டு என்னாகப் போகிறானோ?
ஒருவனைப் பார்க்கும்போதே இந்தளவுக்குப் பயத்தைத் தூண்ட முடியுமா என்ன?
அவன் ஒன்றும் தோற்றத்தில் காடையனைப்போலவோ காட்டானைப்போலவோ இல்லை. தூய்மையான ஆடைகளைத்தான் அணிந்திருந்தான். பார்ப்பவர் மதிக்கும் தோற்றத்தில்தான் இருந்தான். கடினம் மிகுந்த அந்தக் கண்கள்தான் அவளுக்குள் ஒரு நடுக்கத்தை விதைத்தன.
அவர்கள் இருவர் அங்கே நிற்கிறார்கள் என்பதையே பொருட்படுத்தாமல், சசிகரன் சொன்ன, “குட் மோர்னிங் சேர்!” ஐ அலட்சியம் செய்து அவர்களைக் கடந்திருந்தான் அவன்.
சசிகரனுக்கு முகம் கன்றிப் போயிற்று! பதில் முகமன் சொல்ல வேண்டாம், குறைந்தபட்சமாக ஒரு தலையாட்டல் கூட வேண்டாம், நீ சொன்னதை ஏற்றுக்கொண்டேன் என்பதாக ஒரு பார்வை? அதைக்கூட வழங்காமல் அவமானப்படுத்திவிட்டுப் போனவனின் செயலில் பிரமிளாவின் முகமும் சினத்தில் சிவந்து போயிற்று.
என்னை எவராலும் அசைக்க முடியாது என்கிற அகங்காரம்; அது கொடுக்கிற ஆணவம்; அந்த ஆணவத்தினால் உண்டான அலட்சியம் இப்படி மனிதர்களைக் கிள்ளுக்கீரையாக மிதிக்கத் தோன்றுகிறதோ?
மனம் வெம்பியபோதிலும், “விடுங்க சசி சேர். இதையெல்லாம் இனி நாங்க பழகிக்கொண்டா சரி.” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டுத் தன் வகுப்பை நோக்கி நடந்தாள் பிரமிளா.
சற்று நேரத்தில் பாடசாலையின் முதல் மணியோசை ஒலித்தது. பிரேயருக்காக மாணவியர்கள் எல்லோரும் பள்ளிக்கூட வளாகத்தில் ஒன்று கூடினர். யாரின் முகத்திலும் சிரிப்பும் இல்லை, செழிப்பும் இல்லை. அந்தந்த வகுப்பாசிரியர்கள் ஆங்காங்கே நின்றுகொள்ள எல்லோர் மனதிலும் நேற்று விடைபெற்றுச் சென்ற தனபாலசிங்கத்தின் நினைவுதான்.
“இன்றைக்குப் புதிய அதிபர் பதவியேற்பார்!” என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் புடை சூழ புதிய அதிபர் கல்லூரிக்குள் நுழைந்தார்.