கைகளைக் கட்டிக்கொண்டு இயல்பாக நிற்பதுபோல் நின்றிருந்தாலும் அவளின் கைக்கட்டின் இறுக்கம் அவளை அறியாமலேயே கூடிப்போயிற்று!
அங்கே, பழைய அதிபருக்கான புகழாரம் சூட்டப்பட்டது. அவரின் பெருமைகள் புகழப்பட்டன; பாராட்டப்பட்டன! தான் அவரைப் போல இல்லாவிட்டாலும் மாணவர்களுக்கான முன்னேற்றத்துக்கு வழிவகுப்பேன் என்று புது அதிபர் வாக்குறுதியளித்தார்.
அடுத்துப் பேசிய கௌசிகனும் அதையே வேற்று வார்த்தைகளில் சொன்னான். மரத்துப்போன மனுசியாக அவர்கள் பகிர்ந்ததில் ஒற்றைச் சொல்லைக் கூடச் செவிமடுக்காமல் மரம்போல் நின்றிருந்தாள் பிரமிளா.
அறிவிப்புகள், பாராட்டுகள், பதவியேற்புகள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக மாணவியர் அவரவரின் வகுப்புகளுக்குச் சென்றனர். முதலாவது பாடவேளை ஆரம்பித்தது.
அவளின் வகுப்பு மாணவியர் எதையோ கேட்க முனைந்துகொண்டு இருப்பதை உணர்ந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் முகத்தில் இளக்கமற்ற தன்மையைக் கொண்டுவந்து வகுப்பெடுக்க ஆரம்பித்தாள்.
அதற்குமேல் மாணவியரால் என்ன செய்ய முடியும்? தங்களுக்குள் தவிப்புடன் பார்வையைப் பரிமாறிக்கொண்டு வகுப்பைக் கவனிக்க முயன்றனர்.
ஒரு வழியாக முதல் பாடவேளை முடிந்தது. வகுப்பை விட்டு வெளியே வந்தவளால் முடியவே இல்லை. தலை விண்விண் என்று வலித்தது. விட்டால் அழுகையே வந்துவிடும் என்கிற அளவில் நெஞ்சில் வேதனைகள் முட்டி மோதின. ஏன் இப்படி உணர்கிறோம் என்று புரிபடவேயில்லை.
காலையில் வலியை மறைத்தபடி வழியனுப்பி வைத்த அப்பா, ரஜீவன் உருவாக்கி வைத்திருக்கும் அடுத்த பிரச்சனை, அதனால் இனி அவனுக்கு என்னாகுமோ என்கிற பயம், அவளைக் கடந்துபோன கௌசிகனின் முகத்தில் கண்ட கடுமை, அவளிடம் சவால் விட்டதைப்போலவே ஒற்றை நாளில் அனைத்தையும் மாற்றித் தன் கைக்குள் இந்தக் கல்லூரியையே கொண்டுவந்துவிட்டானே என்கிற புழுக்கம், இந்தக் கல்லூரியின் எங்கோ ஒரு மூலையில் அவன் இருக்கிறான் என்பதே கண்முன்னால் நின்று அவளையே பார்த்துக்கொண்டு இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அவளை இயல்பாக இருக்கவிடாமல் அலைக்கழிக்கும் அவன் என்று எல்லாமே அவளுக்குள் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்தன.
வேறு பாடசாலைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விடுவோமா என்று சிந்திக்கும் அளவில் மன உளைச்சலை உருவாக்கியிருந்தான் கௌசிகன்.
இரண்டாவது பாடவேளை முடிந்தபோது மிகவுமே களைத்துப்போனாள். அதுவும் மாணவியர் எல்லோருமே அடிவாங்கிய குழந்தைகள்போலக் கவலையோடும் பரிதவிப்போடும் அவளின் முகத்தை முகத்தைப் பார்க்க ஐயோ என்றுதான் வந்தது.
இதற்குமேலும் வகுப்பெடுக்க முடியாது என்றாகிவிட, அரைநாள் விடுப்புக்கு விண்ணப்பித்தாள். அவளைக் கண்டதும் மிதப்பாகப் பார்த்த புதிய அதிபர், “ஏன்?” என்று வினா எழுப்பினார்.
அதற்குள் அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றவர், “லீவு கேட்டு வந்திருக்கிறா.” என்று பதில் சொல்வதிலேயே, அவன்தான் என்று அவளின் உள்ளம் சொல்லிற்று. தொலைபேசியை அதன் தாங்கியில் வைத்துவிட்டு, “நிர்வாகி உங்களை வரட்டாம்.” என்றார் அவர்.
‘ஏனடா லீவு கேட்டோம்’ என்று தன்னையே நொந்துகொண்டாள் பிரமிளா. ஆனாலும் அவரின் பார்வையில் தெரிந்த எள்ளல் அவளை நிமிர வைத்தது.
“பிரின்சிபல் நீங்கதானே?”
அவளின் கேள்வியில் அவரின் முகம் கருத்தது.
“ஒரு ஆசிரியைக்கு விடுமுறை வழங்கிற அதிகாரம் அதிபருக்குத்தானே இருக்கும். அதுதானே வழமை. இஞ்ச அப்பிடி இல்லையா?”
அவனுடைய இழுப்புக்கு இழுபடுவதைச் சொல்லிக்காட்டுகிறாள். அவருக்கும் ஆத்திரம்தான். வாழ் நாளிலேயே முதன்முறையாக அதிபராக வந்திருக்கிறார். அந்தச் சந்தோசத்தைக் கொண்டாட முடியாமல் தன் விருப்புக்கு இழுத்துக்கொண்டிருக்கிறான் அவன்.
எதையும் காட்டாமல் முகத்தில் சிரிப்பைப் படரவிட்டபடி, “புது நிர்வாகம், புது நிர்வாகி, புது அதிபர், அப்ப சட்டமும் புதுசுதானே. அப்பா அதிபரா இருக்கிறதால பள்ளிக்கூடமே எனக்குத்தான் சொந்தம் எண்டு இருந்த காலம் போயிட்டுது. கொஞ்சம் மற்றவேக்கும் பணிஞ்சு நடக்கப் பழகுங்கோ.” என்றார் அவர்.
‘ஓ!’ என்பதுபோல் தலையசைப்பால் கேட்டுவிட்டு, “புதுச் சட்டத்தைப் புதுவிதமாவும் எடுத்து இருக்கிறீங்க போல. அதுசரி அதிபருக்கான தகுதியோட முறையா வந்திருந்தா விதிமுறைகள் தெரிஞ்சிருக்கும். நீங்க எல்லாம் பின்வாசல் வழியா வந்து, எவன் எழுப்புவான் எண்டு பாத்திருந்து, ஓடிவந்து இடத்தைப் பிடிச்ச ஆள்தானே.” என்று நயந்த குரலில் சொல்லிவிட்டு வெளியேறினாள் அவள்.
மனிதருக்கு முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.
வெறுப்புடன் கதவைத் தட்டிவிட்டு அவனுடைய அலுவலக அறைக்குள் நுழைந்தாள். வரச் சொன்னவனோ அவளைப் பொருட்படுத்தவே இல்லை. ஏதோ ஒரு பைலுக்குள் பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தான். பிரமிளாவுக்குச் சினம் பற்றிக்கொண்டு வந்தது.
அவன்தான் வரச் சொன்னான். கதவைத் தட்டிவிட்டுத்தான் அவளும் வந்தாள். அப்படியிருந்தும் நிமிரவில்லை. அந்தளவில் ஆணவம்!
“எக்ஸ்கியூஸ்மீ சேர்!”
அதன் பிறகுதான் நிமிர்ந்து, எதற்கு வந்திருக்கிறாய் என்று பார்த்தான்.
திமிர்!
“லீவு கேட்டனான். புது நிர்வாகம், புது நிர்வாகி, புது அதிபர். அதால சட்டதிட்டமும் புதுசாம். அதன்படி லீவு கேட்கவேண்டியது உங்களிட்டயாம் எண்டு அதிபர் சொன்னார். ஆனா, இதுபற்றிய எந்த அறிக்கையும் எனக்கு வரேல்ல.” தெளிவாகவே அவன் உச்சி மண்டையில் குட்டினாள்.
அவனுக்குத் தன் தவறு புரிந்தது. ஒரு உந்துதலில் அவளை வரச்சொல்லிவிட்டான். இனித் திரும்ப அங்கு அனுப்ப முடியாது. அதைவிட அவளிடம் அவன் தோற்பதா? ஒன்றும் சொல்லாமல் அவளுடைய விடுமுறை விண்ணப்பத்தை வாங்கக் கையை நீட்டினான்.
அதைக் கொடுக்காமல், “இப்பிடிக் கிடைக்கிற லீவு எனக்குத் தேவையே இல்ல!” என்றுவிட்டு, தன் அப்ளிகேசனைக் கிழித்துக் குப்பை வாளிக்குள் போட்டாள்.
“கல்லூரி நிர்வாகம் எண்டு சொல்லுறது விளையாட்டுப் பொம்மை இல்ல. நீங்க நினைச்சபடி பந்தாட. அதுக்கு எண்டு ஒரு ஒழுங்கு இருக்கு, சட்டத்திட்டம் இருக்கு. விதிமுறை இருக்கு. ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டா மட்டும் போதாது. பதவில இருக்கிற ஆட்கள் பொறுப்பா இருக்கோணும். ஒரு நடைமுறையை நிறைவேற்ற முதல் ஆசிரியர்களுக்குக் கூட்டம் வச்சு, அவர்களுக்கு அறிவிச்சு, அவர்களின் சம்மதம் வாங்கவேணும்! நேரமிருந்தால் உண்மையாவே இந்தப் பள்ளிக்கூடத்தை நல்லா நடத்தவேணும் எண்டுற எண்ணமிருந்தால் பள்ளிக்கூடத்தின் வரையறை, சட்ட திட்டங்கள், ஒழுங்கமைப்புகளைக் கொஞ்சம் எடுத்துப் படிங்க!” என்றுவிட்டு வெளியேறினாள்.
அவளும் அமைதியாகப் போய்விடத்தானே நினைக்கிறாள். விட்டால்தானே!
கௌசிகனின் முகம் கடும் கோபத்தில் சிவந்தது. ‘எனக்கே பாடம் படிப்பிக்கிறியா!’ உதட்டோரம் வளைந்தபோது ரஜீவனுக்கான தண்டனையையும் நிர்ணயித்திருந்தான் அவன்.
‘இஞ்ச அடிச்சது அங்க வலிச்சிருக்கு எண்டால் அங்க அடிச்சாலும் இஞ்ச வலிக்கும்!’
மோகனனுக்கு அழைத்தான்.
“இப்ப அவன் எங்க?”
“யாழ்ப்பாண பஸ்ல போயிருக்கிறான் அண்ணா. அந்த டீச்சர்தான் பஸ் ஏத்தி விட்டிருக்கு.”
“ஓ…கேய்!” காதில் ஃபோன் இருக்க, கண்களை மூடி வலப்பக்கப் புருவத்தை நீவிவிட்டான். ஒரு விநாடி ஆழ்ந்த சிந்தனையின் பின், “டீச்சரம்மா வாயைத் திறக்கமாட்டா. கேக்கிறதுல பிரயோசனம் இல்ல. அதால நீ அவனைத் தூக்கு! எங்க போனாலும் வீட்டுக்கு வந்துதானே ஆகோணும்!” என்றவனின் குரல், ஆழ்ந்து அமைதியாய் அச்சத்தை ஊட்டும் வகையில் ஒலித்தது.