ஒரு வழியாக மதிய இடைவேளை வரையிலும் அன்றைய நாளைக் கடத்தியிருந்தாள் பிரமிளா.
‘இந்த ரஜீவன் என்ன ஆனானோ?’ என்கிற கலக்கம் போட்டு அவளை ஆட்டியது. அழைத்துக் கேட்க முடியாதே. தப்பித் தவறி அவர்கள் அவனைப் பிடித்திருந்தால் அவளிடமிருந்து போகும் ஒரு அழைப்பு அவளுக்காக அவன்தான் செய்தான் என்று உறுதிப்படுத்திவிடுமே.
எப்போதடா பள்ளிக்கூடம் முடியும் அவன் வீட்டுக்கு ஒரு நடை போய்ப்பார்க்கலாம் என்று காத்திருக்க, கௌசிகன் வேக நடையில் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே செல்வது தெரிந்தது. போதாத குறைக்குக் காரை அவன் ரிவர்ஸில் எடுத்த விதமே எங்கோ அவசரமாகப் போகிறான் என்று உணர்த்த, இவளுக்கு ஒரு முறை திக் என்று நெஞ்சு குலுங்கி நடுக்கம் பிடித்திருந்தது.
‘தெய்வமே ரஜீவன் பிடிப்படக் கூடாது!’ என்று இவள் பரிதவித்துக்கொண்டிருக்க, அங்கோ, வந்து இறங்கியவனை அப்படியே அள்ளியிருந்தது மோகனனின் கும்பல்.
எட்டுப்பேர் அமரக்கூடிய வாகனத்துக்குள் தூக்கிப்போட்டு, கதவு சாற்றப்பட்ட கணத்திலேயே காலாலும் கையாளும் உதைத்துத் தள்ளினர். கத்துவதற்குக் கூடச் சந்தர்ப்பம் இல்லாமல் அடி விழுந்ததில் மூர்ச்சியாகிப் போனான் ரஜீவன்.
“போதும் விடுங்கடா. தெளியவச்சு அடிப்பம். அடிக்கிறது வலிக்கிறதை விட எங்கட வீட்டுப் பொம்பிளைப் பிள்ளையில கை வச்சா எப்பிடி அடி விழும் எண்டு அவனுக்குத் தெரியோணும்!” என்றான் மோகனன்.
அவர்களின் வாகனம் ஒரு மரத்தின் கீழே நின்றது. சுயநினைவற்றுக் கிடந்தவனை இழுத்துக்கொண்டு போய்த் தரையில் போட்டனர். மோகனனின் உத்தரவில் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான் ஒருவன்.
“டேய் எழும்படா! ரெண்டு தட்டுத் தட்ட முதலே மயங்குற ரேஞ்சுல இருக்கிற நீயெல்லாம் என்ன வேலை பாத்திருக்கிறாய்!” என்று இரு கன்னத்திலும் தட்டினான்.
அதுவே அறைகளாக விழ மெல்லத் தெளிந்தவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
அதற்குள் கௌசிகன் மோகனனை அழைத்தான்.
“என்ன சொல்லுறான்!”
“நீங்களே கேளுங்கோ அண்ணா!” என்றுவிட்டு, அவனை இணைப்பில் வைத்துக்கொண்டே, “ஏனடா வீடியோ எடுத்தனி?” என்று அதட்டினான் மோகனன்.
“என்ன வீடியோ?” சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் ரஜீவன்.
“என்னடா ஒண்டுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா?” எட்டி அவன் உதைத்த உதையில், “அம்மா!” என்று கத்தினான் ரஜீவன்.
“எங்கட தங்கச்சி என்ன பொய்யா சொல்லுறாள்? சொல்லடா, ஏன் வீடியோ எடுத்தனி?” என்றவன் போட்ட அடியில் கதறித் துடித்தான் அவன்.
“உங்கட வீட்டுப் பொம்பிளைப்பிள்ளை லூசுத்தனமா எதையோ சொன்னா அப்பாவி என்னைப் போட்டு அடிப்பீங்களா? நான் எடுத்தா என்ர ஃபோன்லதானே இருக்கும். கண்டுபிடியுங்களன்.” அடி தாங்கமுடியாத வலியில் கத்தினான் ரஜீவன்.
அப்படி அவன் சொன்னதிலேயே பல விடயங்கள் பிடிபட, “அவனை அள்ளிக்கொண்டு இஞ்ச வாங்கடா!” என்று உத்தரவிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கௌசிகன்.
“என்ர தங்கச்சி உனக்கு லூசா?” என்று கேட்டுவிட்டு மோகனன் விட்ட அறையில் ரஜீவனின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.
மீண்டும் அள்ளிக்கொண்டு போய் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் அவனைக் கொட்டினார்கள்.
அங்கே நின்ற கௌசிகனைப் பார்த்த ரஜீவனின் நெஞ்சுக்குள் குளிர் பிறந்தது. மிக வேகமாய்ப் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
பிரமிளா சொன்ன, ‘பயப்படாத. எங்கட பயம்தான் அவேக்கு ஆயுதம். நீ பயப்பட்டா தோத்திட்டாய், அவங்களிட்ட மாட்டிட்டாய் எண்டு அர்த்தம்!’ என்பதை நெஞ்சுக்குள் உருப்போட்டான்.
“பேப்பர்ல வந்த ஃபோட்டோக்கு பழி தீக்க இந்த வேலையைச் செய்தியோ?” நிதானமாக வெளிவந்த கௌசிகனின் கேள்வியில் ரஜீவன் திடுக்கிட்டான்.
“இல்ல. இல்ல நான் செய்யவே இல்ல. எனக்கு ஒண்டும் தெரியாது!” அவனை அறியாமலேயே பதறினான்.
“உனக்குத் தெரியாது! ம்ஹூம்! நீ வீடியோ எடுக்கேல்ல. அதைக் கொண்டுபோய் அந்த டீச்சரிட்ட காட்டேல்ல. அவள் உன்னைக் கூட்டிக்கொண்டு போய் பஸ் ஏத்தி விடேல்ல. இதெல்லாம் நடக்கேல்ல? ம்?”
“இல்ல நடக்கேல்…” அவன் சொல்லி முடிப்பதற்குள் நான்கைந்து கால்கள் அவனைப் பந்தாடின.
மூச்சு விடுவதற்குக் கூடத் தெம்பற்றவனாகத் தரையில் கிடந்தவனின் சட்டைக் கொலரைப் பற்றி இழுத்தான் கௌசிகன். “என்ர வீட்டுப் பொம்பிளையிலேயே கைய வச்சிட்டு ஒண்டுமே தெரியாதவன் மாதிரி பஸ்ல போயிட்டு வந்தா நாங்க பிடிக்கமாட்டமா?” என்றவன் விட்ட அறையில் சுழன்றுபோய் விழுந்தவனுக்கு அதற்குமேல் முடியாது என்று புரிந்துபோயிற்று!
இருமியவனின் வாயிலிருந்து உமிழ் நீருடன் இரத்தமும் கலந்து வந்துகொண்டிருந்தது.
தமையனின் பார்வையின் பொருள் உணர்ந்து யாழினியை அழைத்துவரச் சென்றான் மோகனன்.
காலையில் அன்னையை எண்ணிக் கவலையுற்றபடி பல்கலைக்குத் தோழிகளுடன் சென்றுகொண்டு இருந்தவளை திடீரென்று யாரோ ஒருவன் முன்னால் வந்து நின்று வீடியோ எடுத்தான்.
திகைத்துத் திடுக்கிட்டு ஓடிப்போய்ப் பிடிப்பதற்குள் அவன் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தான். அழுகையும் பயமும் பொங்க, உடனேயே சின்ன அண்ணாவுக்கு அழைத்துச் சொல்லியிருந்தாள். அதன் பிறகு பல்கலைக்குப் போகும் தைரியம் அற்று வீட்டுக்குள் அடைந்துகொண்டவள் கண்டதையும் எண்ணிப் பயந்து நடுங்கிக் கண்ணீர் உகுத்துக்கொண்டு இருக்கையில்தான் மோகனன் வந்து அழைத்தான்.
அங்கே கௌசிகன் அமர்ந்திருப்பதைக் கண்டதுமே அவளுக்குள் பயம் முளைத்தது. ‘இந்தச் சின்னண்ணா பெரியண்ணா இருக்கிறார் எண்டு சொல்லியிருக்க அம்மாவையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வந்திருக்கலாம்.’ அவனுக்கு அருகில் செல்லக்கூடப் பயந்து, சற்றுத் தூரத்திலேயே தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டாள் யாழினி.
அவன் வீடியோ எடுக்கும் வரை எங்குப் பிராக்குப் பார்த்தாய் என்று திட்டப்போகிறாரோ என்று நினைக்க, “அவனா எண்டு பார்!” என்று ஆணையிட்டது கௌசிகனின் குரல்.
வேகமாக நிமிர்ந்தவள் விழிகளைச் சுழற்றினாள். அங்கு நின்ற எல்லா முகமும் அவள் ஏற்கனவே பார்த்த முகங்கள். இதில் யார் என்று கேள்வியுடன் திரும்பித் தமையனைப் பார்க்க, “அங்க கிடக்கிறான். அவனா எண்டு பார்!” என்றவனின் அதட்டலில் வேகமாக அவன் காட்டிய திசையில் பார்த்தாள்.
பார்த்த நொடியே, சேறும் மண்ணும் இரத்தமும் கலந்து, முகமெங்கும் இரத்தத் திவலைகளுடன் கிடந்தவனைக் கண்டு, “ஐயோ அம்மா!” என்று அலறியபடி ஓட்டம் பிடித்தாள் யாழினி.
வேகமாகத் தடுத்துப் பிடித்தான் மோகனன்.
“அவனா எண்டு சொல்லிப்போட்டுப் போ!” என்றவனின் பேச்சைக் கேட்கும் நிலையிலேயே இல்லை அவள்.
“என்ன விடுங்கோ! என்ன விடுங்கோ! அம்மா! ஐயோ அம்மா!” அவளின் கதறலில் என்னவோ ஏதோ என்று ஓடிவந்தார் செல்வராணி.
“அவனா எண்டு சொல்லிப்போட்டுப் போ!” கௌசிகன் போட்ட அதட்டலில் சர்வமும் அடங்கிப் போயிற்று அவளுக்கு.
அவன்தான். அவனேதான். அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இப்போதே இப்படியாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் ஆம் என்று சொன்னால்? உடல் ஒருமுறை உதறித்தள்ள, “தெரியே…ல்ல அண்ணா. நான் வடிவா பாக்கேல்லை. அவரை விட்டுடுங்கோ பாவம்.” என்றவள், பாய்ந்து சென்று அன்னையின் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.