“அவர விடச் சொல்லுங்கோம்மா. எனக்குப் பயமா இருக்கு…” கதறியவளின் உடல், மழையில் நனைந்த கோழிக் குஞ்சினைப் போலப் படபடவென்று நடுங்கியது.
யாரைச் சொல்கிறாள் என்று அவர் விழிகளால் அலச, அவரின் பார்வையை மறைத்தபடி வந்த மோகனன், “அவளைக் கூட்டிக்கொண்டு போங்கோ!” என்றான்.
நடுங்கும் மகளின் பயத்தைப் போக்குவதே பிரதானமாகத் தோன்றிவிட, யாரைச் சொன்னாள் என்கிற கேள்வியைத் தவிர்த்துவிட்டு அவளை அழைத்துச் சென்றார் செல்வராணி.
தங்கையை நம்பவில்லை கௌசிகன். தரையில் கிடந்தவனைக் கூர்ந்து கவனித்த நொடியில் அவளின் விழிகளில் தெறித்த அதிர்ச்சி அவன்தான் என்று உறுதியாகவே சொல்லிற்று!
ஆனாலும் மறைத்துவிட்டாள்! யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற நினைக்கிறாள்? பல்லைக் கடித்தவனுக்குத் தரையில் கிடந்தவனை நொறுக்கித் தள்ளும் வெறியே கிளம்பிற்று!
ஆனால், அவனின் கட்டுக்கடங்காத கோபமே யாழினிக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமும் உண்டே!
எனவே தன்னை அடக்கினான். “செய்தது நீதான்! எனக்குத் தெரியும். என்ன, வீடியோ கைல கிடைக்காததால தப்பிட்டாய். ஆனா, உறுதி ஆகாததுக்கே இந்த நிலைமை. ஏதாவது வெளியில வந்திச்சு… உனக்கு ஒண்டும் செய்ய மாட்டன்.” என்றவன் பார்த்த பார்வையில் மிச்சம் சொச்சமாய் இருந்த மொத்த சக்தியையும் திரட்டிக்கொண்டு விழுந்தடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினான் அவன்.
நடக்கவே முடியாமல் தாண்டித் தாண்டிக் கிழிந்த சட்டையுடன் போகிறவனைக் கண்ணீர் மல்கப் பார்த்திருந்தாள் யாழினி.
கௌசிகனின் கையசைவில் அனைவருமே அங்கிருந்து நகர்ந்திருந்தனர். அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தவனின் தாடையின் இறுக்கம் குறையவே இல்லை.
நடந்துகொண்டிருந்தவளை எடுத்த வீடியோ பாரதூரமான விளைவுகளை உருவாக்காது! அவனுக்கும் சொந்தக் கோபம் எதுவுமில்லை. விசுவாசத்தின் வெளிப்பாடுதான் இது. கொடுத்த அடியே ஏனடா இந்த வேலை பார்த்தோம் என்றுதான் நினைக்க வைக்கும். ஆனால், ஒருவனுக்கு அவனுடைய தங்கையிடம் சேட்டை விடத் தைரியம் வந்திருக்கிறதே! அதுவும் ஒரு பொடிப்பயலுக்கு!
காரணம் அந்த டீச்சரம்மா! மிக அழகான முறுவல் ஒன்று முகத்தில் படர எழுந்து நடந்தான்.
கடைசிக்கு முதல் பாடம் பிரமிளாவுக்கு ஃபிரீ என்றதில் நாளைக்கான பாடத்தயாரிப்பில் முனைந்திருந்தாள்.
அப்போது அவளின் கைப்பேசிக்குத் தகவல் வந்ததற்கான ஒலி கேட்டது. ‘ரஜீவனோ?’ மனம் நடுங்க மின்னலாகக் கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்.
ஏதோ ஒரு புது இலக்கத்திலிருந்து வாட்சப் மெசேஜ் வந்திருந்தது. அந்த இலக்கத்தைப் பதிந்துவிட்டு எடுத்துப் பார்த்தாள். ஒரு புகைப்படம். அதுவும் ரஜீவன். பார்த்தவள் நெஞ்சைப் பற்றிக்கொண்டு பதறிவிட்டாள்.
உதடு கிழிந்து, இரத்தம் சிந்தி, ஆடைகள் அழுக்காகி என்று அவனைப் பார்க்க முடியவில்லை. வேகமாக யார் அனுப்பியது என்று பார்த்தாள். அவனேதான்.
அவளின் உள்ளத்தைத் துடிதுடிக்க வைப்பது அவன் மட்டும்தானே!
பதறித் துடித்துக்கொண்டு அவனின் அறையை நோக்கி ஓடினாள். இந்தமுறை கதவைத் தட்ட வேண்டும் என்கிற நினைவே இல்லை.
“என்ன இது? ஏன் இப்படி? அவன் சின்ன பெடியன். அவனைப் போய்… ஏன் இப்பிடிச் சித்திரவதை செய்து இருக்கிறீங்க?” தன் கைப்பேசியைக் காட்டிக் கேட்டவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.
மேசையின் அந்தப்புறம் அமர்ந்திருந்தவன் முன் நோக்கி வந்து அவள் காட்டியதை மிக நன்றாகப் பார்த்துவிட்டு மீண்டும் இலகுவாகச் சாய்ந்துகொண்டான்.
அவளின் துடிப்பில் திருப்தியான புன்னகை ஒன்று மலர்ந்தது.
“இப்ப எங்க அவன்? தயவுசெய்து அவனை விடுங்கோ. கௌசிகன் பி…ளீ…ஸ்!” அவள் கெஞ்சுவதை அவன் மிகவுமே ரசித்தான்.
நடந்ததற்கு முழுக்காரணமாக இவள் இருக்க மாட்டாள்தான். நேர்மை, நியாயம், நீதி என்கிறவள் அப்படி நடக்கமாட்டாள். அவனுக்குத் தெரியும்! ஆனால், அவனுக்குத் துணை போனாளே! அதற்குத் தண்டனை வேண்டாமா? இந்தக் கௌசிகனை அவனுடன் சேர்ந்து ஏமாற்றவா பார்க்கிறாள்!
அவன் விழிகளில் தென்பட்ட பளபளப்பில் நிதானத்துக்கு வந்தாள் பிரமிளா.
“எங்க ரஜீவன்?”
“எங்க அந்த வீடியோ?” பதில் வினாவினை எழுப்பினான் அவன்.
“எந்த வீடியோ?” தனக்குள் அதிர்ந்தாலும் வார்த்தைகள் தடக்கிவிடாமல் கவனமாகக் கேட்டாள்.
அவனோ முறுவலித்தான். வசீகரம் மிகுந்த முறுவல். அவளுக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கின.
“நீ சொல்லி அவன் எடுத்தானா இல்ல அவன் எடுத்ததை நீ அழிச்சியா?”
“கேவலமான வேலை பாக்க எனக்குத் தெரியாது! இத உங்களுக்கு முதலே சொல்லியிருக்கிறன்.” பட்டென்று பதிலிறுத்தாள் அவள்.
“அதேதான்! அவன் எடுத்திருக்கிறான், நீ அழிச்சிருக்கிறாய். அவனைக் காப்பாத்தி இருக்கிறாய். ஆனா, ஒருத்தனுக்கு என்ர வீட்டுப் பொம்பிளைப் பிள்ளையில கை வைக்கிற தைரியம் வரலாமோ?”
அவனுடைய அந்தக் கேள்வியில் மிகுந்த சீற்றம் கொண்டாள் பிரமிளா. “அப்ப என்னில கைவைக்கிற தைரியத்தை உங்களுக்கு ஆர் தந்தது? அதுக்கு ஆர் தண்டனை தாறது? உங்களைக் கட்டி வச்சு நான் அடிக்கவா?”
அவன் விழிகள் வியப்பில் விரிந்தன. “உன்னால முடிஞ்சா செய்!” என்றான் சிறு சிரிப்புடன்.
மனம் வெகுண்டுவிட, “இவளால என்னை என்ன செய்யேலும் எண்டுற அகங்காரம் இப்பிடிக் கதைக்க வைக்குதா கௌசிகன்? காலம் எப்பவும் உங்கட பக்கமே நிக்காது. காத்து மாறி அடிக்கும். அண்டைக்குப் பாப்பம்!” என்றவளிடம், “பாக்கலாமே!” என்றான் அவன் மங்காத சிரிப்புடன்.
‘நீயெல்லாம்… மனுசனே இல்ல!’ வெறுப்புடன் வெளியேறப்போனவளைத் தடுத்தது அவன் கேள்வி.
“அந்த வீடியோ எங்க?”
இப்போது அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. எந்தப் பெரிய யானையாக இருந்தாலும் எறும்பின் குடைச்சலின் முன்னே நிற்க முடியாதே!
“எந்த வீடியோ?” மிதப்புடன் திருப்பிக் கேட்டாள்.
அவனுடைய கூரிய விழிகள் ஒருமுறை இடுங்கியதிலேயே அவள் மறைத்துக்கொண்ட சிரிப்பை அவன் கண்டுகொண்டான் என்று சொல்லிற்று!
“உன்ர இந்தக் கெட்டித்தனத்தால அவனுக்குத்தான் ஆபத்து!” என்றான் அமைதியான குரலில்.
அந்தக் குரலில் அவளுக்கு நெஞ்சுக்குள் பகீர் என்றது. அதை மறைத்துக்கொண்டு, “என்ன கெட்டித்தனம் இப்ப நான் உங்களுக்குக் காட்டினனான்? அப்பிடியே காட்டினாலும் என்ர கெட்டித்தனத்த முறியடிக்கேலாத அளவுக்கு மொக்கா(மக்கு) நீங்க?” என்ற அவளின் கேள்வியில், மற்றது மறக்க அவன் கண்ணில் சிரிப்பு வந்திருந்தது.
முதன் முறையாக அவன் மனம் தானாகவே அன்னை சொன்ன கூற்றுடன் அவளை ஒப்பிட்டுப் பார்த்தது.
“நீ கெட்டிக்காரி மட்டுமில்ல மனத்திடமானவளும்தான். உன்ன நான் தவற விடக் கூடாது போலவே!” என்றவனின் பார்வையில் இப்போது ரசனை வந்திருந்தது.
“என்ன சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.”
அதற்குப் பதில் சொல்லாது, “ஒண்டுமில்ல! நீ போகலாம்!” என்றான் அவன்.