ரஜீவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை. பிரமிளாவுக்குப் பெரும் பதட்டமாயிற்று! பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு விரைந்தாள்.
ஓலைக் குடிசையின் வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்துச் சற்றுப் பயத்துடன், “ரஜீவன்…” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தாள்.
அவனுடைய சைக்கிளும் வெளியே இல்லை. வீட்டுக்குள் யாரும் இருப்பது போலவும் தெரியவில்லை. கதவு மட்டும் எப்படித் திறந்து கிடக்கும்? யோசித்துக்கொண்டு விழிகளைச் சுழற்றியபோது விறாந்தையின் தரையில் கிடந்தவனைக் கண்டவளின் மனம் கலங்கிப் போயிற்று. வேகமாக அவனிடம் ஓடினாள்.
“ரஜீவன்… ரஜீவன்…” அவனோ அரை மயக்கத்தில் கிடந்தான். அவள் மெதுவாகக் கன்னத்தில் தட்டியதைக் கூடத் தாங்க முடியாமல், “அம்மா…” என்று கண்ணீர் உகுத்தான். தேகமெங்கும் காயங்களும் கண்டல்களும்.
பார்த்தவளின் விழிகள் கலங்கிற்று! அவள் மீது கொண்ட பற்றினால் தன் உடம்பைப் புண்ணாக்கிக்கொண்டானே! வேகமாக ஒரு ஆட்டோவைப் பிடித்து வைத்தியரிடம் அழைத்துப்போனாள்.
அவனைப் பார்த்துவிட்டு, “என்ன இது? மாட்டைப் போட்டு அடிச்ச மாதிரி அடிச்சிருக்கு!” என்று சீறினாலும், தனபாலசிங்கத்தின் நண்பர் என்பதில் மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகள் வழங்கினார் அவர்.
“பிரமிளா, கட்டாயம் நல்ல காய்ச்சல் வரும்மா. கவனமா பாக்கச் சொல்லு. குளிக்கவே வேண்டாம். ஆனா இதமான சுடுதண்ணில உடம்பை துடைக்கச் சொல்லு. சுடுதண்ணி ஒத்தடம் குடுக்கலாம்.” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
வருகிற வழியில் உணவும் வாங்கிக்கொண்டு வந்து அவனுக்கு ஸ்பூன் போட்டு ஊட்டிவிட்டாள். மாத்திரைகளும் கொடுத்து முடித்தபோது, உயர்தரத்தில் இரண்டாமாண்டு படிக்கும் அவனுடைய தங்கை ராதா பள்ளிக்கூடத்திலிருந்து வந்து சேர்ந்தாள்.
வந்தவள் தமையனைப் பார்த்து அதிர்ந்து அழுதாள். அவளையும் சமாளித்து அவளின் உதவியோடு அவனின் உடம்பை இதமான சுடுதண்ணீரில் துடைத்து, உடைமாற்றி உறங்க வைத்தாள்.
அவள் சமைக்க ஆயத்தமாவது தெரிந்தது. அப்பா இறந்துவிட்டதால் ஒரு புத்தகக் கடையில் கணக்காளராகப் பணியாற்றித்தான் அந்தக் குடும்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்களின் அன்னை பரிமளா.
“என்ன சமைக்கப்போறாய்?”
“அம்மா முருங்கைக்காய்க் குழம்பும் பருப்பும் வைக்கச் சொன்னவா மிஸ்.”
இதுதான் அந்தக் குடும்பத்தின் நிலமை. அன்னை வேலைக்குப் போயே ஆக வேண்டும். படிக்கிற பிள்ளைதான் பள்ளிக்கூடத்தால் வந்து பசியோடு சமைக்க வேண்டும்.
ரஜீவன் உயர் தரத்தை முடித்துவிட்டு மேலே படிக்காமல் ஒரு தனியார் தொழில்துறை நிறுவனம் ஒன்றில் வயரிங் செய்வதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். அது இலவசக் கல்வி. கடைசி வருடம் என்பதில் அங்கங்கே பயிற்சி வேலையும் செய்வதால் சம்பளம் சொற்பமாய்த்தான் கிடைக்கும்.
இந்த வருடம் முடித்த பிறகுதான் அவனுக்கு முழுச் சம்பளத்துடன் அந்த நிறுவனமே வேலை வாங்கிக்கொடுக்கும். இப்படியிருக்க அவளுக்காக இவன் ஏன் இந்த வேலை பார்த்தான்?
“சரி நீ சமை. நான் ஒருக்கா வெளில போயிட்டு வாறன்.” என்று அவளிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
ஒரு தளபாடக் கடைக்குச் சென்று இதமான மெத்தை ஒன்றை வாங்கினாள். கூடவே ஒரு மாதத்துக்குத் தேவை என்று அவளுக்குத் தெரிந்த அளவில் அரிசி, பருப்பு, சீனி, மா என்று சமையல் சாமான்களைப் பலசரக்குக் கடையில் வாங்கினாள்.
எல்லாவற்றையும் ஒரு ஆட்டோவில் ஏற்றித் தன்னைப் பின்தொடரச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். எதிர்ப்பட்ட பழக்கடையில் நிறுத்திப் பழங்கள் வாங்கிக்கொண்டு திரும்பியபோது தன் நண்பர்களோடு நின்றிருந்தான் மோகனன்.
இவளைக் கண்டுவிட்டு, “எங்களோட மோதினா என்ன நடக்கும் எண்டு இப்ப தெரிஞ்சிருக்கும். ஆடின ஆக்கள் எல்லாம் எப்பிடி அடங்கிட்டினம் பாத்திங்களாடா? ஆரிட்ட சேட்டை விட்டுப் பாத்தவே?” என்றான் எள்ளல் சிரிப்பும் ஏளனப் பார்வையுமாக.
ஒருகணம் விழிகளை மூடித் தன் கோபத்தை அடக்கப் பார்த்தாள் பிரமிளா. உடல்வலி தாங்கமுடியாமல் அனத்திக்கொண்டிருக்கும் ரஜீவன் கண்முன்னே வந்துபோகத் திரும்பி நேராக அவனிடம் வந்தாள்.
“உடம்பில தெறிச்சாலும் சாக்கடை எண்டு தெரிஞ்சா விலகித்தான் போகோணும்! அதுக்குப்பேர் அடங்கிப் போறது இல்ல. அருவருத்து விலகிப்போறது. ஆனா என்ன, தான் ஒரு சாக்கடை எண்டுறது சாக்கடைக்குத் தெரியாதுதானே. அதால நீ இன்னும் துள்ளு!” என்றுவிட்டு விருட்டென்று தன் ஸ்கூட்டியில் ஏறிப் புறப்பட்டிருந்தாள் பிரமிளா.
முகமெல்லாம் சிவக்க அவமானத்தில் சிறுத்துப்போனான் மோகனன்.
வாங்கிய பொருட்களை எல்லாம் கொண்டே இறக்கினாள். வீடு வந்த பரிமளாவிடம் நடந்ததைச் சொல்லி மன்னிப்பையும் கேட்டுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டபோது, முற்றிலும் களைத்துப்போயிருந்தாள் பிரமிளா.
தன்னை ஒருநிலைப்படுத்தி வேலை செய்யமுடியாமல் சிந்தை கலைந்துகொண்டே இருந்ததில் சினமுற்றான் கௌசிகன்.
எந்தக் களையையும் அதன் ஆணிவேர் வரை சென்று பிடுங்கி எறிவதுதான் அவன் இயல்பு. இங்கே மேலோட்டமாகப் புல்லை மட்டுமே செருக்கியது போன்ற ஒரு தோற்றம் அவனைப் போட்டுப் பந்தாடியது.
கூடப்பிறந்தவள் மீது மிகுந்த சினம் உண்டாயிற்று! அவன்தான் என்று அவள் அடையாளம் காட்டியிருக்க, காரியத்தைக் கச்சிதமாக முடித்து வைத்திருப்பான். வீட்டில் தனியாகக் கூப்பிட்டுக் கேட்டும், அன்னையைக் கொண்டு கேட்பித்தும் உண்மையைச் சொல்லாதவளை என்ன செய்வது?
அவளின் சமூக வலைத்தள அத்தனை எக்கவுண்டுகளையும் அழித்தான். ரஜீவனைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தான். இதற்கெல்லாம் துணைபோன பிரமிளாவின் மீதும் மிகுந்த கோபம் கொண்டான்.
அடுத்தநாள் காலை, கல்லூரிக்குச் செல்லமுதல் ரஜீவனின் வீட்டுக்குத்தான் சென்றாள் பிரமிளா. காய்ச்சல் காய்ந்துகொண்டுதான் இருந்தது. என்றாலும் இன்றைக்கு எழுந்து அமர்ந்திருந்தான். ஆனால், உடலின் காயங்கள் எல்லாம் நேற்றைக்கு விட இன்றைக்குத்தான் அதிகமாக வலிக்கிறது என்றான் அவன்.
“என்னாலதான் இவ்வளவு வேதனையையும் நீ அனுபவிக்கிறாய் என்ன?” அவனருகில் அமர்ந்து வேதனையோடு சொன்னவளின் கை மெல்ல அவன் கரத்தின் காயங்களை வருடிக்கொடுத்தது.
“நீங்க எனக்கு மிஸ்தான். ஆனா என்னவோ உங்களைப் பற்றி நினைச்சா அக்கா எண்டுதான் மனதில படும். என்ர அக்காக்கு ஒண்டு எண்டா எனக்குக் கோபம் வரும்தானே.” உதடுகளை அசைக்க முடியாதபோதும் வாய்க்குள்ளேயே வார்த்தைகளை மெல்ல உதிர்த்தான் அவன்.
கண்கள் கலங்கிப் போயிற்று பிரமிளாவுக்கு. “இவ்வளவு நல்லவனா இருக்காத ரஜீவன். இந்தக் குடும்பத்துக்கு நீ ஒருத்தன்தான் இருக்கிறாய். அம்மா தங்கச்சிய நீதான் பாக்கவேணும். அதை மறந்திடாத.” என்றவள், கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து எழுந்துகொண்டாள்.
புறப்படுவதற்கு முதல் நேற்றிலிருந்து அவளைக் குடையும் கேள்வியை மெல்லக் கேட்டாள்.
“கடைசியா என்ன சொன்னவே?”
அந்தக் கேள்வி நரகமாகக் கழிந்த நேற்றைய நாளைக் கண்முன்னே கொண்டுவந்ததில் அவன் கைகளில் மெல்லிய நடுக்கம். கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கள் மெலிதாகக் கலங்கிற்று.
தரையில் பார்வை இருக்க, “அவேக்கு நான்தான் எண்டு தெரியும். வீடியோ சிக்காததால விட்டுட்டினம். நானும் கடைசிவரைக்கும் உண்மையச் சொல்லேல்ல.” என்றான் மெல்ல.