அவன் வந்து, ‘தனபாலசிங்கம் இருக்கிறாரா?’ என்று இன்முகத்துடன் வினவியபோது, ‘இருக்கிறார் வாங்கோ!’ என்று நல்லபடியாக வரவேற்று அமரவைத்தது சரிதாதான். இப்படிக் கணவரைச் சந்திக்கப் பலர் வருவது வழமை. அவன் வந்திருப்பத்தைச் சொல்லி, அவர் வந்து அவனோடு கல்லூரியைப் பற்றி உரையாட ஆரம்பித்தபோதுதான் அவன் யார் என்றே இனம் கண்டுகொண்டார்.
கண்டுகொண்ட கணத்திலிருந்தே மனம் காந்தத் தொடங்கியிருந்தது. சூடாக நான்கு வார்த்தைகள் கேட்டுவிடக் காயப்பட்டுக் கிடந்த தாயுள்ளம் துடித்தாலும் கணவரைத் தாண்டிக் கதைக்க முடியவில்லை.
அவன் போன பிறகுதான் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டார். பிரமிளாவும் இருந்ததில் வாயை அடக்கிக்கொண்டு, அவள் உடை மாற்றி வர உணவைப் போட்டுக் கொடுத்தார்.
சமையலறை மேசையிலேயே அவள் அமர்ந்து உண்ணத் தொடங்கவும் கணவரின் அருகில் வந்து அமர்ந்தார்.
“எனக்குத்தான் ஆர் எண்டு தெரியேல்ல. நீங்க என்னத்துக்கப்பா அவனோட இருந்து கதைச்சனீங்க? என்னவோ நல்லவன் மாதிரி சிரிச்சுக் கதைக்கிறான். செய்த கேவலமான வேலைக்கு ஒரு மன்னிப்புக் கூடக் கேக்கேல்லை!” அவ்வளவு நேரமாக மனத்துக்குள்ளேயே வைத்துப் புழுங்கிய அனைத்தும் தனிமை கிடைத்ததும் வெடித்துக்கொண்டு வெளியே வந்தது.
சாய்மனைக் கதிரையில்(ஈஸி சேர்) சாய்ந்தபடி, ஒரு கை தலைக்கு மேலே இருக்க, கண்களை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த தனபாலசிங்கம், மெல்ல விழிகளைத் திறந்து மகள் எங்கே என்றுதான் முதலில் பார்த்தார்.
அவளுக்குக் கேட்காது என்று தெரிந்த பிறகு மனைவியிடம் திரும்பினார்.
“மன்னிப்புக் கேட்டா உன்ர மனம் ஆறிடுமா, இல்ல எங்கட பிள்ளைக்கு நடந்த அவமானம் இல்லை எண்டு மறைஞ்சு போயிடுமா? அந்த மன்னிப்பால எந்த மாற்றமும் வராது எண்டேக்க(என்கிறபோது) அதை எதிர்பாக்கிறதே அர்த்தமில்லாத ஒண்டு.” என்றார் அவர் அமைதியான குரலில்.
உண்மைதானே. அவன் கேட்டால் மட்டும் அவரின் மனம் அமைதி பெற்றுவிடுமா என்ன? “பிள்ளை எப்பிடித்தான் தாங்குறாளோ தெரியேல்லை. இன்னும் எனக்கு அதை நினைக்க நினைக்க நெஞ்சுக்க அடைச்சுக்கொண்டு வருது.” என்றார் கனத்த குரலில்.
“உன்ர பெத்த மனம் மா. அது அப்படித்தான் தவிக்கும். அவள் இளம் பிள்ளை. தைரியசாலியும். கடந்து வருவாள். சில விசயங்கள் நடக்கக் கூடாது! நடக்காம கவனமா இருக்கோணும். அதையும் மீறி நடந்தா அதுக்குப் பிறகு அதை எப்பிடிக் கடந்து வாறது எண்டு மட்டும்தான் யோசிக்கோணும். அதைத்தான் பிள்ளை செய்றாள். அவளுக்குத் துணையா நாங்க இருக்கோணும்.” எடுத்துச் சொன்னார் தனபாலசிங்கம்.
“ம்ம்…” கணவரின் வார்த்தைகள் எப்போதும்போல அவரின் மனத்தைச் சற்றே ஆற்றியதுதான். என்றாலும், “உங்களுக்குக் கவலையா இல்லையாப்பா?” என்று கேட்டார்.
பதில் சொல்லாமல் விழிகளை மூடிக்கொண்டார் தனபாலசிங்கம். ஒரு நெடிய மூச்சொன்று அவருக்குள்ளிருந்து வெளியேறிற்று! பிரமிளா உண்டுவிட்டு வரவும் அவர்களின் பேச்சு அப்படியே நின்றுபோயிற்று!
வீடு நோக்கிக் காரை விரட்டிக்கொண்டிருந்தான் கௌசிகன். தனபாலசிங்கத்தின் நாகரிக மறுப்பும், பிரமிளாவின் பதிலடியும் அவனுக்குள் சினத்தைக் கிளப்பிவிட்டிருந்தன. ‘ஓய்வை நிம்மதியா கழிக்க விரும்புறன்’ என்பதன் பொருள் இனியும் இதைப் பற்றிக் கதைத்துக்கொண்டு இங்கே வராதே என்பதுதானே?
அவனுடைய கீழுதடு இலேசாக வளைந்தது. கூடவே எதிரில் வந்த சந்தியில் காரையும் வளைத்துத் திருப்பினான்.
அவனுக்குத் தேவை அவள்! அந்த அவளின் பின்புலத்தை நேரில் காண வேண்டும்! திருமதி கௌசிகன் என்கிற இடத்தை அலங்கரிக்கிறவளுக்கு என்று சில தகுதிகள் வேண்டும்! அதெல்லாம் அவளுக்கும் அவளின் குடும்பத்துக்கும் உண்டா என்று ஆராயத்தான் அவளின் வீட்டுக்கே சென்றான்.
அதற்கு அவரின் பிரிவுபசார அழைப்பு ஒரு காரணி. அவ்வளவே! மற்றும்படி அவர் வந்தாலும் ஒன்றுதான், வராவிட்டாலும் ஒன்றுதான்!
இன்னொருவருக்கு விற்பதற்கு என்று வாங்கும் நகைகளையே தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று நேரிலேயே பார்த்து வாங்குகிறவன் அவன். அப்படியிருக்க, அவனுக்கு மனைவியாய் வருகிறவளின் தரத்தைப் பரீட்சிக்காமல் விடுவானா?
அவர்கள், அவர்களின் இல்லம், குடும்பச் சூழல் எல்லாமே அவனுக்கு மிகுந்த திருப்திதான்.
இது எல்லாவற்றையும் விட எப்போதும் அவனைச் சீண்டிச் சினம் கொள்ள வைக்கும் அவளின் அந்த நிமிர்வு, ‘முடிந்தால் என்னை அடக்கிப் பார்’ என்று சவால் விட்டுக்கொண்டே இருக்கிறது!
ஆக, திருமதி கௌசிகன் அவள்தான்! அவன் முடிவு செய்துவிட்டான்.
யாழினியின் எண்ணங்களை முற்றிலுமாக ரஜீவனே ஆட்கொண்டிருந்தான். இதுவரை எல்லாவற்றுக்கும் அவள்தான் பயந்து நடுங்குவாள். அவளே அதட்டி மிரட்டுகிற ஒரு ஆள் என்றால் அவளின் அன்னை மட்டும்தான். இப்போது இன்னும் ஒருவனும் வந்து மாட்டியிருக்கிறானே!
அன்று அவள் கோபத்தில் சிடுசிடுத்தபோதும் அதட்டியபோதும் நக்கலடித்தபோதும் அடங்கிப் போனவனை எண்ணி எண்ணி ஆரம்பத்தில் தனக்குள் சிரித்துக்கொண்டிருந்தாள். நாளாக நாளாக அவன் பேசியவைகள் ஒவ்வொன்றும் நினைவில் நின்று, நெஞ்சில் ஆழமாகப் பதிந்துகொண்டிருந்தன.
அண்ணா அந்த அடி அடித்தும் உண்மை சொல்லாதது, அண்ணாக்களுக்குப் பயப்படாமல் தன் முன் வந்து மன்னிப்புக் கேட்டது, அதே நேரம் ‘எனக்குத் தண்டனை தரும் தகுதி உன்ர அண்ணாக்களுக்கு இல்லை’ என்று சொன்னது, அவள் சும்மா சொன்னதை உண்மையாகவே எடுத்துக்கொண்டு ஓடியது, அளவுக்கதிகமாகத்தான் அவன் மீது ஏறுப்பட்டிருக்கிறோம் என்று அவளுக்கே புரிந்தபோதும் அவன் பணிந்தே போனது என்று அனைத்துமே அவள் இதயத்தைத் தொட்டிருந்தன.
கடைசியாக, ‘உங்கட அண்ணா என்ர ஃபோனை உடைச்சிட்டார். அதால தங்கச்சின்ர நம்பர் தரவா?’ என்று கேட்டது நெஞ்சுக்குள்ளேயே நின்று, அவனுக்கு ஒரு கைப்பேசி வாங்கிக் கொடுப்போமா என்கிற அளவுக்கு அவளைச் சிந்திக்கத் தூண்டிக்கொண்டிருந்தது.
விஜிதாவிடம் இதைப் பற்றிக் கேட்போமா என்று நினைத்தவள் எதைப்பற்றியும் யோசிக்காமல் விறுவிறு என்று தயாராகி வெளியே வந்தாள். மாலைப்பொழுதில் அவள் வெளியே புறப்படவும் புருவங்களைச் சுருக்கினான் மோகனன்.
அதைக் கவனித்தும் பொருட்படுத்தாமல், “அம்மா, நான் விஜி வீட்டை போயிட்டு வாறன்!” என்று அவனுக்குக் கேட்கும் விதமாகவே உரக்கச் சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
“உன்னை எல்லோ வெளில போகக் கூடாது எண்டு சொல்லியிருக்கு!” என்று தடுத்தான் மோகனன்.
“ஏன் நான் போகக் கூடாது?” என்றுமில்லாமல் அன்று திருப்பிக் கேட்டாள் யாழினி.
தப்பே செய்தபோதும் துணிந்து வந்து மன்னிப்புக் கேட்ட ரஜீவன் மீதான நல்லபிப்பிராயமும், இனி அவனால் அவளுக்கு ஒன்றும் நடக்காது என்கிற திடமும், அவனைப் போட்டு அந்த அடி அடித்தார்களே என்கிற ஒருவிதக் கோபமும் அவளைக் கேட்க வைத்தன!
“ஏய்! என்ன வாய் காட்டுறாய்? போ வீட்டுக்க! வெளிக்கிட்டுட்டா ஊர் சுத்துறதுக்கு!” மோகனனின் அதட்டலில் மளுக்கென்று விழிகளில் நீர் சூழ்ந்தது.
வந்த தைரியமும் மறைந்துவிட, தேகம் நடுங்கினாலும் ‘நான் ஏன் வீட்டுக்கையே இருக்கோணும்’ என்கிற ஒருவித முசுட்டுப் பிடிவாதம் பிறக்க அங்கேயே நின்றாள்.
அதற்குள் மோகனனின் சத்தம் கேட்டு ஓடிவந்தார் செல்வராணி.
“என்ன தம்பி? ஏன் அவளைப் பேசுறாய்?”
“பேசாம? வெளில போகக் கூடாது எண்டு சொல்லியும் எங்க வெளிக்கிட்டிருக்கிறாள்?”
“எங்க வெளிக்கிட்டனான்? விஜி வீட்டதான் போகப்போறன். அதுக்கு ஊர் சுத்துறன் எண்டு அர்த்தமா?” கண்ணீருடன் அன்னையிடம் சண்டைக்குப்போனாள் யாழினி.
இருவரும் அவரிடமே கோபப்பட, யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் விழித்தார் செல்வராணி.
மகளின் கண்ணீர் அன்னை உள்ளத்தை அசைக்க, “அவளோட படிக்கிற பிள்ளையின்ர வீட்டதானே தம்பி. போயிட்டு வரட்டுமன்.” என்று அவளுக்காகப் பரிந்து வந்தார்.
“நாள் முழுக்கக் கம்பஸ்ல சேந்துதானே இருக்கினம். பிறகு என்ன வீட்ட போறது? என்ன எண்டாலும் நாளைக்குக் கம்பஸ்ல கதைக்கட்டும் இல்ல ஃபோன்ல கதைக்கட்டும்!” என்றான் அவன் முடிவாக.
“ஏன் அம்மா நான் போகக் கூடாது? அப்பிடி என்ன பிழை செய்தனான்? வீடியோ எடுத்தது எவனோ ஒருத்தன். ஒண்டுக்கு ரெண்டு பேர் தடிமாடு மாதிரி அண்ணா எண்டு இருந்தும் அவனைப் பிடிக்க முடியேல்ல. அதுக்கு என்னை வீட்டுக்க அடைச்சு வைப்பினமா?” பொறுக்கவே முடியாத கோபத்தில் பொங்கியவள், அன்னையின் விழிகள் அச்சத்துடன் வாசலை நோக்கவும் தானும் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்தவளுக்கு அங்கே நின்ற பெரிய தமையனைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும் போலாயிற்று! என்ன செய்வது, எங்கே ஓடுவது என்று தெரியாமல் தாயின் பின்னே ஒடுங்கியவளின் தேகம், நிலநடுக்கம் கண்ட பூமியைப் போன்று நடுங்கிற்று!
மோகனன் என்பதால்தான் அவளுக்கு இவ்வளவுக்காவது தைரியம் வந்தது. இப்படி இவன் வருவான் என்று தெரிந்திருக்க வாயே திறந்திருக்க மாட்டாளே!
வீட்டினுள் வந்து நின்று, “இங்கால(இந்தப் பக்கம்) வா!” என்றான் அவன்.
தாயின் தோள்களைப் பற்றியிருந்தவளின் கைகளில் பெரும் நடுக்கம். அசையக்கூடத் தெம்பற்றவளாக அப்படியே நிற்க, “முன்னுக்கு வா!” என்றான் மீண்டும்.
“போம்மா.” என்று செல்வராணியும் தள்ளிவிட அவன் முன்னால் வந்து நின்றவளின் தலை தானாகக் குனிந்துகொண்டது!
“அவனை நாங்க கண்டுபிடிக்கேல்லையோ?” அமைதியாக வந்த கேள்வியில் அவளுக்குள் குளிர் நடுக்கம் பிறந்தது.
“சொல்லு! அவனை நாங்க கண்டு பிடிக்கேல்லையா, இல்ல நீ அவன்தான் எண்டு சொல்லேல்லையா?”
அன்றைக்குப் போன்று பொய்யுரைக்கத் தைரியமற்று அதற்காக மெய்யையும் உரைக்க முடியாமல் அப்படியே நின்றாள் அவள்.
“அந்தப் பெடியன் வீடியோ எடுக்கேல்லையாம் தம்பி. நானும் கேட்டனான். ஆரோ ஒரு பிள்ளையைச் சும்மா கைகாட்டக் கூடாதுதானே.” மகளை முற்றிலுமாக நம்பிய செல்வராணி அவளுக்காகப் பேசினார்.
“ஓ! அதுதான் அவன் வந்து இவளிட்ட மன்னிப்புக் கேட்டவனாமா?” பட்டென்று வந்து விழுந்த கேள்வியில் விலுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகள் வெளியே தெறித்துவிடும் போலாயிற்று! அவ்வளவு அதிர்ச்சி.
‘கடவுளே! கடவுளே! கடவுளே!’ என்று மனம் பயத்தில் அலறித் துடித்தது.
“கூடப்பிறந்தவள் எண்டு உன்னை நாங்க நம்பினா எங்களுக்கே ஒளிச்சு மறைப்பியா நீ?” உறுமிக்கொண்டே அவன் அவளை நெருங்க, தன் களவு பிடிபட்ட அதிர்வில் அசையக்கூட முடியாமல் சிலையென நின்றவளை அடித்துவிடுவானோ என்று பயந்து நடுவில் புகுந்தார் செல்வராணி.
“நீ அவனை ஏதும் செய்துபோடுவாய் எண்டுற பயத்தில மறைச்சிருப்பாள் தம்பி. சின்ன பிள்ளைதானே, தெரியாம செய்துபோட்டாள். நீ கோவப்படாத!” வேகமாக அவனின் கோபத்தைத் தணிக்க முனைந்தார் அவர்.
அவன் அவரை இலகுவாகவே நகர்த்திவிட்டான். “நீ எங்க எண்டாலும் போகலாம்! ஆரை எண்டாலும் சந்திக்கலாம். இத நான் உன்னை நம்பிச் சொல்லேல்ல. இன்னொருத்தியை நம்பித்தான் சொல்லியிருக்கிறன்! எனக்கு எதிரா நிண்டாலும் கூடப்பிறந்த உன்னட்ட இல்லாத நேர்மை அவளிட்ட இருக்கு!” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றுபோனான் அவன்.