“டேய்! சந்திக்கு வாங்கடா! இண்டைக்கு அவன் செத்தான்!” பற்கள் நறநறக்க கைபேசியில் உத்தரவிட்டபடி மோட்டார் வண்டியின் திறப்பினை எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிய மோகனன், அறை வாசலில் நின்ற தமையனைக் கண்டு திகைத்து, வேகமாக அழைப்பைத் துண்டித்தான்.
“எங்க போறாய்?”
பதில் சொல்லாமல் கைமுஷ்டி இறுக நின்றிருந்தான் அவன்.
“எங்கயடா போறாய்?”
“அவனை இனியும் சும்மா விடச் சொல்லுறீங்களா அண்ணா?”
“என்ன செய்யவேணும் எண்டு எனக்குத் தெரியும். நீ உன்ர வேலை எதுவோ அதை மட்டும் பார்!”
கூடப்பிறந்தவன் இப்படிச் சொல்லிவிட்ட பிறகு அதை மீறவும் முடியாமல் அப்படியே விடவும் முடியாமல் மறுப்பை முகத்தில் காட்டிக்கொண்டு நின்றான் அவன்.
“ஒரு கிழமைக்கு நான் நிக்கமாட்டன். அப்பாவோட சேர்ந்து கடையை நீதான் பாக்கோணும். வேற எந்த வேலையும் செய்யக் கூடாது. இதையும் மீறி என்ர காதுக்கு ஏதாவது வந்துது…” என்றுவிட்டுத் திரும்பி நடந்தான் அவன்.
அடக்க முடியாத சினத்தில் வண்டியின் திறப்பைத் தூக்கி எறிந்தான் மோகனன்!
*****
“ஆரையம்மா அண்ணா சொன்னவன்? நானும் இண்டு முழுக்க யோசிச்சுப் பாத்திட்டன், பிடிபடுதே இல்ல.” அறைக்குள் முடங்கிக் கிடந்த யாழினியின் அருகில் வந்து அமர்ந்தவாறே கேட்டார் செல்வராணி.
இருந்த கோபத்துக்கு அன்னையைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் யாழினி. “அண்ணா என்ன நம்பமாட்டன் எண்டு சொல்லியிருக்கிறார். அது பெருசா தெரியேல்ல உங்களுக்கு. அந்த அவள் யார் எண்டு யோசிக்கிறீங்க! நல்ல அம்மா நீங்க!”
“நீ செய்ததும் பிழை தானேம்மா. உண்மையைச் சொல்லியெல்லோ இருக்கோணும். எல்லாத்தையும் மறைச்சுப்போட்டு என்னோட சண்டைக்கு வந்தா சரியோ? அவன் உனக்காத்தானே எல்லாம் செய்தவன்.”
“அதேமாதிரி அவருக்காகத்தான் நானும் சொல்லேல்ல. அவனா எண்டு தெரிய முதலே அந்த அடி. நான் அவன்தான் எண்டு சொன்னா விடுவாரா? அவனுக்கு ஏதும் நடந்தா அண்ணாக்கும் தானே பிரச்சனை. அவனையும் காப்பாத்தி அண்ணாவையும் காப்பாத்த நினைச்சன். அண்டைக்கு அவன் கிடந்த கோலத்தைப் பாத்த பயத்திலையும்தான் சொல்லேல்ல!”
மகளின் மனதும் அவருக்கும் புரிந்தது. எனவே, “சரி விடு! அண்ணாதானே. கோபத்தில சொல்லியிருப்பான், அதையெல்லாம் நீ பெருசா எடுக்காத. அவனுக்கும் ஆயிரம் வேலை எல்லாமா. கடையைப் பாக்கோணும். பள்ளிக்கூடத்தைப் பாக்கோணும். அவன் கட்டிக்கொண்டு இருக்கிற ஹோட்டல் வேலை இருக்கு. இதுல உன்ர பிரச்சனை வேற. இதில நான் ஒரு பக்கம் கல்யாணம் கட்டு எண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறன்.” என்று, இப்போது அவளின் கோபத்தைத் தணிக்க முயன்றார் அவர்.
அது புரிந்தபோதும் அவளின் மனவருத்தம் முற்றிலுமாக நீங்கவில்லை. ‘என்ர அண்ணா என்னை நம்ப மாட்டாராம். ஆனா ஆரோ ஒருத்திய நம்புவாராம். எல்லாம் அந்த எருமையால வந்தது!’ என்று அதுநாள் வரை அவளின் நினைவுகளில் நிறைந்திருந்த ரஜீவனையும் தூக்கி வீசிவிட்டாள்.
அண்ணா என்றால் நடுங்குவாள்தான். அதற்காகப் பாசம் இல்லாமல் போகுமா? அண்ணாக்களை மதிக்கவில்லை என்கிற கோபத்தால்தானே ரஜீவனைக்கூட கிரவுண்டில் ஓடு என்று சொன்னாள். அப்படியிருக்க அந்த அண்ணா சொன்ன வார்த்தைகள்? ரோசத்தில் ‘இனி நீ எங்கும் போகலாம்’ என்று அவன் சொல்லியும் வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
“ஆரையும் விரும்புறானோமா?” மீண்டும் கேட்டார் செல்வராணி. அவருக்குப் பத்திரிகையில் வந்த பெண்ணை மணக்காமல் விட்டுவிடுவானோ என்கிற கவலை மேலோங்கி நின்றது. அன்றைக்கு அவர் வேறு கதைக்கத் தெரியாமல் அவனிடம் கதைத்து வைத்தாரே!
“ஆரு? உங்கட மூத்த மகன்? லவ்? போங்கம்மா போய்ப் பாக்கிற வேலையைப் பாருங்கம்மா!”
“ஏனம்மா துரத்துறாய்?”
“பின்ன என்னம்மா? ‘எனக்கு எதிரா நிண்டாலும்’ எண்டு சொன்னவர் எல்லா. காதலிக்கிற பெட்டைய எனக்கு எதிரா நிக்கிறவள் எண்டு சொல்லுவாரோ?”
“அதுதானே…” அவரும் அவளுக்கேற்றாற் போன்று இழுக்க, “என்ன அதுதானே? நான் நினைக்கிறன் அந்த டீச்சர் அக்காவைத்தான் சொல்லியிருக்கிறார். எனக்குத் தெரிஞ்சு அண்ணாக்கு எதிரா நிக்கிறது அந்த அக்கா மட்டும்தான்.” என்றவளின் பேச்சில் பூவாகவே மலர்ந்து போயிற்று செல்வராணியின் முகம்.
“அப்ப அந்தப் பிள்ளையாத்தான் அண்ணா விரும்புறானோ?” என்றவரைப் பார்த்து மீண்டும் தலையில் அடித்துக்கொண்டாள் யாழினி.
“என்ன பிள்ளை?”
“போங்கம்மா! போய்ச் சமையலப் பாருங்கோ! உங்களுக்கு அது மட்டும்தான் சரியா வரும்!” என்று துரத்தினாள் அவள்.
“என்ன எண்டு சொல்லன்.”
“எதிரா நிக்கிறவள் எண்டு சொன்னவர் எண்டு சொல்லுறன், திரும்பவும் விரும்புறாரோ எண்டு கேக்கிறீங்க?”
“எதிரா நிண்டா விருப்பம் வராதா?”
“அதுதானே!” என்றாள் அவள் இப்போது.
“அண்ணாக்கு அடங்கிப் போற ஆளைவிட முட்டிக்கொண்டு நிக்கிற ஆள்தான் தோதா இருக்கும்.” என்றவள் துள்ளிக்கொண்டு வந்து தாயின் முன் அமர்ந்து அவரின் கரமிரண்டையும் பற்றினாள்.
“செல்வராணி! அப்ப நீங்க ஆசைப்பட்ட மாதிரியே அந்த அக்காதான் எனக்கு அண்ணியா வரப்போறா போல!” என்றவளுக்கு உடனேயே அவளைப் பார்க்கும் ஆவல் பேரலையெனப் பொங்கியது.
“அண்ணியைப் போய்ப் பாத்துக்கொண்டு வருவமா அம்மா? அந்தப் பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிறா எண்டுறதைத் தவிர அவாவைப் பற்றி எங்களுக்கு ஒண்டும் தெரியாது. பெயர் கூடத் தெரியாது.”
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனா அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுக்காம பேசாம இரு! அண்ணா என்ன சொல்லுறான் எண்டு பாப்பம்.” என்று அவரும் ஆவலும் பயமுமாகக் காத்திருக்க, அவனோ அன்று இரவே கொழும்பு புறப்பட்டிருந்தான்.
செல்வராணிக்கு எல்லாமே சப் என்று ஆகிப்போயிற்று.
பிரமிளாவுக்கு அடுத்து வந்த நாட்கள் மிக அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிந்தன. அதற்குக் காரணம் கௌசிகன்! அவன் அவள் கண்ணிலேயே படவில்லை. ஒரு வாரமாகக் கல்லூரிக்கே வரவில்லை.
அப்பாவின் மறுப்பைக் குறித்து அவளை நோக்கிக் கேள்விகள் பாயுமோ என்றெல்லாம் யோசித்திருக்க அப்படி எதுவுமே நடக்கவில்லை. இப்படிக் கண்களில் படாமலேயே இருந்துவிட்டான் என்றால் மிகவும் நன்றாக இருக்குமே என்று எண்ணினாள்.
ஆனால், அப்படி இருக்கமாட்டான் என்பதற்கு அடையாளமாக அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் வேலைகள் மிக வேகமாய் நடந்துகொண்டிருந்தன.
புதிய பொருட்களும் வந்து இறங்கிக்கொண்டிருந்தன.