அங்கே, கண்களைத் துடைத்துக்கொண்டு தேநீர் ஆற்றக்கூட முடியாமல் சமையல் கட்டைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சரிதா.
“தயவுசெய்து அழாதீங்கோ. உங்கட கவலை எனக்கு விளங்குது. ஆனா, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் நடக்கமுதல் கோயில்ல வச்சு உங்கட மகளைப் பாத்ததும் என்ர மகனுக்குக் கட்டிவைக்கோணும் எண்டு ஆசப்பட்டனான். என்ர கண்தான் பட்டதோ தெரியாது, பிள்ளைக்கு நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துபோச்சு. அண்டைக்குக் கோயில்ல வச்சு நீங்க அழுத நேரம் நானும் அங்கதான் இருந்தனான். இதையெல்லாம் செய்தது என்ர மகனா எண்டு எனக்கே பெரிய அதிர்ச்சியா இருந்தது. சத்தியமா சொல்லுறன்; அண்டுல இருந்து இண்டுவரை நான் ஒருநாள் கூட நிம்மதியா இருக்கேல்ல. ‘உனக்குக் கல்யாணம் எண்டு ஒண்டு நடந்தா அது அந்தப் பிள்ளையோடதான்’ எண்டு என்ர மகனுக்குச் சொல்லிப்போட்டன்.” என்றவர் முடிக்கமுதல் சீறினார் சரிதா.
“ஏன் உங்களுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? எங்கட வீட்டு நிம்மதியக் குலைக்க எண்டு எங்க இருந்து வந்து நிக்கிறீங்க? உங்கட மகனுக்கு வேற ஆரை எண்டாலும் கட்டிக் குடுங்கோ! உங்கட வீட்டுக்கு அவளைத் தந்தா அவளோட சேர்ந்து நாங்களும் தினம் தினம் அழவேணும்! அது எங்களுக்கு ஏலாது.” என்று ஒரேடியாக முறித்தார் சரிதா.
செல்வராணிக்கு முகம் கன்றிப்போயிற்று! தன் மகனை மணந்தால் காலத்துக்கும் அழவேண்டி வரும் என்றல்லவா சொல்லிவிட்டார். பெற்றமனம் என் பிள்ளை அந்தளவுக்குக் கெட்டவன் இல்லை என்று நிரூபித்துவிடத் துடித்தது. ஆனால் எப்படி?
“இல்லையம்மா. அந்தளவுக்கு நான் விடமாட்டன். என்னை நம்புங்கோ! என்ர சொந்த மகள் மாதிரி அவளை நான் பாப்பன்.” என்றார் கெஞ்சலாக.
“என்ன கதைக்கிறீங்க நீங்க? நீங்க சொந்த மகள் மாதிரி பாக்கிறதுக்கா கட்டி வைக்கிறது? அவளுக்குப் பெத்த அம்மா நான் இருக்கிறன். காலத்துக்கும் என்ர பிள்ளையை நான் பாப்பன். அதுக்கு நீங்க தேவையில்லை. கட்டிக்குடுக்கிறது மனுசனோட சந்தோசமா வாழுறதுக்கு! அது உங்கட வீட்டுல கடைசிவந்தாலும் நடக்காது. அதைவிட ஒரு பொம்பிளையை இப்பிடிக் கேவலப்படுத்துற கேவலமான ஒருத்தனை எங்கட வீட்டுக்கு மருமகனா நாங்க எடுக்க மாட்டோம்!” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் சொன்னார் சரிதா. அவரால் எந்த நாசுக்கையுமோ நாகரீகத்தையுமோ கடைப்பிடிக்க முடியவில்லை.
கேடுகெட்ட மகனுக்காகக் கெஞ்சிக்கொண்டு நிற்கும் அந்தப் பெண்மணியின் மீது எரிச்சல்தான் வந்தது.
“கோபப்படாதீங்கோம்மா. கொஞ்சம் நான் சொல்லுறதையும் பொறுமையா கேளுங்கோ. அவன் கோபக்காரன்தான். ஆனா மோசமானவன் இல்லை. கல்யாணம் நடந்திட்டா உங்கட மகள் அவனுக்கு மனுசி. தன்ர மனுசிய அவன் விட்டே குடுக்கமாட்டான். நல்லா வச்சிருப்பான். எனக்குத் தெரியும்.”
“கடவுளே! உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது? எங்களுக்கு இதுல விருப்பம் இல்லை எண்டு. ஏன் இப்பிடி எங்கட மகள்தான் வேணும் எண்டு அடம் பிடிக்கிறீங்க? ஊர்ல வேற பொம்பிளைகளே இல்லையா?”
அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் நின்றார் செல்வராணி. அன்றைக்குச் சரிதா விட்ட சாபமும், அவரின் மகன் இழைத்த பாவத்துக்கான பரிகாரத்தை அந்தக் குடும்பத்துக்குச் செய்தே ஆக வேண்டும் என்கிற பிடிவாதமும்தான் இத்திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று அவரைத் தூண்டியது.
ஆனால், அவரின் மகன் எதனால் இந்த முடிவை எடுத்தான்? அவர் சொன்னதால் மட்டுமே என்று நம்புவதற்கு அவர் ஒன்றும் அவனைத் தெரியாதவர் இல்லையே? அவன் மனத்தில் வஞ்சம் இருக்கிறதா, இல்லை நேசம் இருக்கிறதா என்று அந்தக் கடவுள் ஒருவன் மட்டுமே அறிவான். அப்படியிருக்க என்னவென்று எதைச் சொல்வார்?
எது எப்படியானாலும் இத்தனை அவமதிப்புக்குப் பிறகும் இவர்களின் பெண்ணையே மணமுடித்து வைத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏன் அவருக்குள் இருக்கிறது என்று அவருக்கே தெளிவில்லை.
ஏதோ ஒன்று… அன்று கோவிலில் பார்த்தவளின் நடை, விழிகளில் தெரிந்த நேர்மை, அந்த முகத்தில் தெரிந்த சீதேவித்தனம் எல்லாம் என் குடும்பத்தின் விடிவிளக்கு அவள்தான் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.
“திரும்பவும் எங்களை நோகடிக்கப் போறீங்களா?” விழிகளில் சந்தேகத்துடன் கேட்டவரிடம் பதறி, “அப்பிடி இல்லையம்மா.” என்றார் செல்வராணி அவசரமாக.
“பின்ன என்ன?”
“இதைச் சொன்னா உங்களுக்கு இன்னும் கோபம் வரும். ஆனா, எனக்குப் பொய் கதைக்க விருப்பம் இல்லை. நாளைக்கு என்னதான் நல்ல மாப்பிள்ளையை நீங்க தேடிக் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்தாலும் இதைக் குத்திக்காட்டி அவன் கதைக்க மாட்டான் எண்டு என்ன நிச்சயம்? அதுக்கு, அவள் எங்கட மகனையே கட்டலாம் எல்லோ. அவனும் நீங்க நினைக்கிற அளவுக்குக் கெட்டவன் இல்லை. கொஞ்சம் கோவக்காரன்.”
அதற்கும் சரிதா அசைய மறுத்தார். “எல்லாரும் உங்கட மகனை மாதிரியே கேடுகெட்ட குணத்தோட இருக்க மாட்டீனம். அதால எங்கட பிள்ளையின்ர வாழ்க்கையைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். அவளைப் பற்றி
முழுதா விளங்கின ஒருத்தன் வருவான். அவனோட என்ர பிள்ளை நல்ல சந்தோசமா வாழுவாள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அதால திரும்ப திரும்ப இதைக் கதைக்க வேண்டாம்!” என்று முடித்துவைத்தார் அவர்.
அசைகிறாரே இல்லையே என்கிற நிராசையோடு திரும்பவும் அவர் வாயைத் திறக்க, “போதும் விட்டுடுங்கோ! இதுக்கு மேல என்னாலயும் பதில் சொல்லேலாது. உங்களுக்கு ஒண்டு தெரியுமா? இந்த வீட்டுல உங்கட மகனைப் பேச்சுல கூட நாங்க வர விடுறேல்ல. அப்பிடியானவன மருமகனான எடுக்கவே மாட்டோம்!” என்றபோது, என்னதான் அவரின் பேச்சில் நியாயம் இருந்தபோதிலும் அவமானமாய்ப் போயிற்றுச் செல்வராணிக்கு.
இதற்குமேல் என்ன கேட்பது, எப்படிக் கேட்பது என்று எதுவுமே புரியமறுக்க அப்படியே திரும்பிக் கணவரிடம் சென்றார்.
விறாந்தையில் அமர்ந்திருந்தாலும் பெண்கள் பேசியதை ஆண்களும் கேட்டுக்கொண்டுதான் அமர்ந்திருந்தனர். மனைவி வெளியே வர ராஜநாயகமும் எழுந்துகொண்டார். “எதுக்கும் உங்கட மகளோடயும் கதைங்கோ. ஆனா, நீங்க என்ன முடிவு எடுத்தாலும் இந்தத் திருமணம் கட்டாயம் நடக்கும்!” என்றவரைக் கலக்கத்துடன் நோக்கினார் செல்வராணி.
ஏற்கனவே நொந்துபோயிருக்கிற அந்தக் குடும்பத்தை இந்த மனிதர் இன்னும் நோகடித்து விடுவாரோ என்கிற பயம் அப்பிக்கொள்ள, விழிகளால் தனபாலசிங்கத்திடம் மன்னிப்பை இறைஞ்சினார்.
அவரால் முடிந்தது அவ்வளவுதான்.
வருகிற வழியில், “அவேக்கு விருப்பம் இல்லை எண்டால் விடுவம். எங்கட மகனுக்கு இன்னும் வசதியான வீட்டுல நல்ல பிள்ளையா பாக்கலாம்.” என்று சொல்லிப்பார்த்தார்.
“ஏன்? அந்த வாத்திக்கு இந்த ராஜநாயகம் வீட்டுக்குப் பொம்பிளை குடுக்கக் கசக்குதாமோ? அவளைத்தான் கட்டுவன் எண்டு உன்ர மகன் சொல்லிப்போட்டான். அதால அவள்தான் உனக்கு மருமகள்!” என்று முடித்துவைத்தார் அவர்.
கடவுளே! அவனே சொல்லிவிட்டான் என்றால் அது நடந்தே தீருமே. ஆரம்பித்து வைத்தது என்னவோ அவர்தான். முடித்துவைக்கப் போகிறவன் அவரது மகன் என்றானபிறகு எதையும் மாற்றிப்போடுகிற சக்தி அவருக்கு இல்லை. அந்த ஆற்றாமையில் விளைந்த கண்ணீரைக் கண்களை மூடி அடக்கிக்கொண்டார் செல்வராணி.
கல்லூரி முடிந்து வீடு வந்த பிரமிளா உணவை முடித்துக்கொண்ட பின் அனைத்தையும் சொன்னார் தனபாலசிங்கம்.
கேட்க கேட்கப் பிரமிளா அதிர்ச்சியின் உச்சத்தைத்தான் தொட்டுக்கொண்டிருந்தாள். அவனும் அவளும் திருமண பந்தத்தில் இணைவதா? அவனைப் போன்ற நேர்மையற்ற ஒருவனோடு அவளின் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்வதா?
அந்த எண்ணம் கூடப் பிடிக்காமல் முகத்தைச் சுளித்தாள். கல்லூரியில் சக மனிதனாக அவனை எதிரில் காண்பதையே விரும்பாதவள் இல்லற வாழ்வில்? இறக்கும் தருணம் வரை கூட வருகிற ஒருவனாக அவனா? கடவுளே என்னால் முடியாது! அவள் தலை அவளை அறியாமலேயே மறுப்பாக ஆடியது.
“என்னம்மா?” என்றார் தனபாலசிங்கம்.
பரிதவிப்புடன் தந்தையை நோக்கினாள் அவள்.
“என்னப்பா இதெல்லாம்? இவே எல்லாம் என்ன மனுசர்? பள்ளிக்கூடமாவது வேற அப்பா. இது நானும் என்ர மனசும் சம்மந்தப்பட்ட விசயம். சாதாரணமா ரெண்டு மனுசர் பழகிற மாதிரிக் கூடப் பழக முடியேல்ல. இதுல கல்யாணம், வாழ்க்கை?”
“உனக்கு அவரப் பிடிக்கேல்லையாம்மா?” மகளின் மனத்தை அறிந்துகொள்ளச் சும்மா கேட்டுப்பார்த்தார் தனபாலசிங்கம்.
“பிடிக்குமா பிடிக்காத எண்டு சொல்ற அளவுக்கு எல்லாம் அவரைப் பற்றி நான் யோசிச்சதே இல்லை. தெரிஞ்ச வரைக்கும் அவர் இருக்கிற பக்கமே போகாம இருந்தா நல்லம் எண்டுற எண்ணம் மட்டும்தான்.” மகளின் சஞ்சலம் நிறைந்த பேச்சுப் பெற்றவர்களை உருக்கியது.
“அப்ப வேண்டாம் என்று சொல்லட்டாம்மா?”
“உங்களுக்குக் கவலையா இருக்காப்பா? கேட்டு வந்த சம்மந்தத்தை வேண்டாம் எண்டு சொல்லுறன் எண்டு.” தன் மறுப்பால் அவர்கள் வருந்துகிறார்களோ என்கிற கலக்கத்தோடு கேட்டாள் அவள்.
பெற்றவர்கள் துடித்துப் போயினர். “என்ன கதை இது? நாங்க ஏற்கனவே விருப்பம் இல்லை எண்டு சொல்லிப்போட்டோம். சிலநேரம் உனக்குப் பிடிச்சிருக்கோ எண்டுதான் கேட்டது. உண்மையைச் சொல்லப்போனா நீ வேண்டாம் எண்டு சொன்ன பிறகுதான் நிம்மதியா இருக்கு. அதே மாதிரி உனக்குப் பிடிச்ச பெடியனோடதான் உன்ர கல்யாணம் நடக்கும். நீ ஒண்டுக்கும் கவலைப்படாத.”
பெற்றவர்களின் துணை மனத்தைச் சாந்தமாக்க, “சரியப்பா.” என்றுவிட்டு நிம்மதியோடு எழுந்து சென்றாள்.
அன்று இரவே அழைத்துக் கேட்டார் ராஜநாயகம்.
என்ன இது விடாமல் தொந்தரவு தந்தபடி என்கிற சரிதாவின் புறுபுறுப்போடு, “மகளுக்கும் இதில் விருப்பமில்லை.” என்று சொல்லி, அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி இட்டார் தனபாலசிங்கம். அல்லது அப்படி எண்ணிக்கொண்டார்.
ஆனால், அதற்குக் கமா போட்டு ஆரம்பிக்க அடுத்தநாள் விடியலுக்காகக் காத்திருந்தான் கௌசிகன்!