பார்வை கடினமுற, “என்ன கதைக்கிறோம் எண்டு யோசிச்சுக் கதை!” என்று, அடிக்குரலில் அதட்டினான் அவன்.
“யோசிக்காம கதைக்கிற பழக்கம் எனக்கு இல்ல. உங்கட கண்ணில பட்டு நான் படுற பாடே போதும். அவள் சின்ன பிள்ளை. உங்கட தம்பியால அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது! அதுக்கு நீங்கதான் பொறுப்பு!” என்றவள், அடுத்தடுத்து ஆட்கள் மேடையேற அதோடு பேச்சை முடித்துக்கொண்டாள்.
அருகில் நிற்கிறவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று அவனின் உடல்மொழி சொன்னபோதும், அதைக்குறித்துக் கவலை கொள்ளவில்லை பிரமிளா. அவள் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லையே!
கடைசியாகக் குரூப் போட்டோ எடுப்பதற்காக அவளின் நெருங்கிய நட்பு வட்டம் ஒன்றாக மேடை ஏறியது. அவளின் தாய் தந்தையரோடு திருநாவுக்கரசு சேர் உட்பட, சசிகரன், ஆசிரியத் தோழிகள், அமரன், தீபச்செல்வன், ரஜீவன் என்று ஒரு பட்டாளமே குவிந்துவிட, ஃபோட்டோவுக்குச் சரியாக நிற்பதே அவர்களுக்குள் பெரிய நகைப்பை உருவாக்கிக் கொண்டிருந்தது.
வயதில் பெரியவர்களை நிற்க வைத்தும் சின்னவர்களை முன்னால் அமரவைத்தும் புகைப்படம் எடுக்கத் தயாரானபோது, கௌசிகனின் பக்கம் முன்னால் அமர்ந்திருந்த தீபனை மற்றப்பக்கம் வந்து நிற்கச் சொன்னார் புகைப்படம் எடுப்பவர்.
அங்கே கடைசியாகப் பிரதீபா அமர்ந்து இருப்பதைப் பார்த்துத் தயங்கினான் தீபன். தான் அழைக்காமலேயே அவன் வந்தது கருத்தில் இருந்ததில், “இந்தப் பக்கம் வா தீபன்!” என்று பிரமிளா சொன்னபிறகே வந்து அமர்ந்துகொண்டான் அவன்.
புகைப்படம் எடுத்து முடிந்ததும் ஒவ்வொருவராக வாழ்த்துச் சொல்லி விடை பெற்றனர். பிரமிளாவுக்கு உண்மையிலேயே அது ஒரு நெகிழ்வான தருணமாக அமைந்து போயிற்று! கடைசியாகத் தீபன் ஒரு பரிசினை அவளிடம் நீட்டினான்.
நன்றி சொல்லிப் பெற்றுக்கொள்ள, “எண்டைக்கும்(என்றைக்கும்) நீங்க நல்ல சந்தோசமா இருக்கோணும் அக்கா!” என்று, மிகுந்த பாசத்துடன் அவன் மொழிந்தபோது, அவனுடைய குரல் கரகரத்துப் போயிற்று!
பிரமிளாவுக்கும் தொண்டை அடைத்துக்கொண்டது. பிரதீபா கலங்கிய கண்களை யாருக்கும் காட்டாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
கௌசிகனை அன்புடன் ஆரத்தழுவி, “அக்காவைச் சந்தோசமா வச்சிருக்கோணும் அண்ணா. அவவைப் போல நல்ல மனம் உள்ள ஒருத்திய நீங்க எங்க தேடியும் கண்டு பிடிக்க மாட்டீங்க.” என்றான் அவன்.
“அதாலதான் தலைகீழா நிண்டு உன்ர அக்காவைக் கைப்பிடிச்சு இருக்கிறன்.” என்று நகைத்தான் அவன்.
‘பெரிய கெட்டித்தனம்தான்!’ அவனுக்குக் கேட்கும்படியே புறுபுறுத்தாள் பிரதீபா. அது காதில் விழுந்தாலும் ஒன்றும் சொல்லாமல், “அவள் உனக்கு அக்கா எண்டால் நான் உனக்கு அத்தான்.” என்றான் கௌசிகன்.
பிரமிளாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “இல்ல! நீங்க எனக்கு அண்ணாதான்!” என்றுவிட்டு, மேடையை விட்டு இறங்கிச் சென்றான் அவன்.
கடைசியாக ரஜீவன் தயங்கி தயங்கி நிற்க, என்னவோ கொண்டுவந்துவிட்டுத் தயங்கிக்கொண்டு நிற்கிறான் என்று புரிந்து போயிற்று பிரமிளாவுக்கு. எனவே, “எங்களுக்குப் பரிசு ஒண்டும் இல்லையா ரஜீவன்?” முகத்தில் மலர்ச்சியைத் தேக்கிக் கேட்டாள்.
“அது அக்கா… ஒரு மோதிரம்தான் வாங்கி…னான். அதுதான்.” சங்கடத்துடன் ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினான்.
ஆண்களுக்கான ஒரு மோதிரம், அதுவும் ஒரு பவுன் வருமளவில் இருந்தது.
அவனுடைய நிலைக்கு இதுவே கடன் பட்டுத்தான் செய்திருப்பான் என்று பிரமிளாவுக்குப் புரிந்து போயிற்று!
எனவே, “எனக்குப் போட்டா என்ன அவருக்குப் போட்டா என்ன? ஒரு மோதிரமே எங்களுக்குத் தாராளமா காணும். நீயே போட்டுவிடு!” என்றாள் அவள்.
“இல்ல… நீங்களே…” அவனையெல்லாம் போட அனுமதிக்க மாட்டான் என்று தெரிந்து தயங்கினான் அவன்.
“நீயே போட்டுவிடு! இனி அவர் உனக்கு அத்தான். பிறகு என்ன தயக்கம்?” என்றவள், அவர்கள் இருவரையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தவனின் கரத்தைத் தூக்கிப் பிடித்து, “எனக்குச் சொந்தத் தம்பி இல்லை. அதுக்குப் பதிலா நீ செய்றாய். போட்டுவிடு!” என்றாள் மீண்டும்.
அது தனக்கான செய்தி என்று விளங்க, தன்னிடமிருந்து நிரந்தரமாக அவனைக் காப்பாற்றும் தன் மனையவளின் புத்தி சாதுர்யத்தை எண்ணிச் சிரித்தபடி இப்போது தானே தன் கையை அவனிடம் நீட்டினான் கௌசிகன்.
நீங்காத தயக்கத்தோடு மோதிரத்தை அணிவித்துவிட்டு, மேடையை விட்டு இறங்கியவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி.
அன்றைக்குத் தமையன், ‘உன்னை நம்பவில்லை’ என்று சொன்னதிலிருந்து இவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தாலும், வீதியில் திடீரெனக் குறுக்கே வந்துவிடும் வாகனத்தைப் போன்று, திடீர் திடீரென்று அவன் அவளின் எண்ணங்களில் வந்து நின்றுவிடுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை.
அப்படியிருக்க, இன்று காலையில் வேட்டி சட்டையில் அவனைக் கண்டதிலிருந்து அவளிடம் ஒரு பாதிப்புதான். அவனையே பார்த்துக்கொண்டிருக்க ஆவலும், அவனிடம் பேச்சுக்கொடுக்க ஆசையும் எழுந்துகொண்டு இருந்தன. இப்படியெல்லாம் நினைக்கக் கூடாது என்று புத்தி சொன்னாலும் மனம் அதையேதான் விரும்பியது.
தன் வீட்டுத் திருமணம் போன்று ஓடியாடி வேலை செய்தவனோடு கதைக்க அவள் எவ்வளவோ முயன்றும் முடியாமல் நழுவிக்கொண்டிருந்தான் அவன்.
தெரிந்தே தவிர்க்கிறான் என்று தெரிந்த கணத்திலிருந்து ஒரு கோபம் கனன்றுகொண்டே இருந்தது. கொக்குக்கு ஒன்றே மதி என்பதுபோல் தமையன்மார்கள், சொந்தங்கள் அனைவரினதும் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுத் தனியாக அகப்பட்டவனின் கையில் போகிற போக்கிலேயே ஒரு பேப்பர் துண்டைப் பொத்திவிட்டுப் போனாள் யாழினி.
திடுக்கிட்டுப்போனான் ரஜீவன். இந்தப் பெண் மறுமுறையும் அடிவாங்கித் தராமல் விடமாட்டாள் போலவே! மனம் அலறினாலும் தனியாகச் சென்று அந்தப் பேப்பரை விரித்துப் பார்த்தான்.
“இந்த நம்பருக்கு நாளைக்கு எடுக்கிறாய்!” என்று ஒரு இலக்கத்தைக் குறிப்பிட்டிருந்தாள் அவள்.
‘குடும்பமே கட்டளைதான் போடும் போல இருக்கு!’ இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் தன்னையே நொந்தபடி தன் வேலைகளைப் பார்க்கப்போனான் அவன்.
ஒரு வழியாக வரவேற்பு முடிந்து, அதன்பிறகான குடும்பச் சடங்குகள் எல்லாமே முடிந்து, தங்கள் மகளைக் கணவனோடு அவனின் வீட்டில் விட்டுவிட்டு மனம் கனக்க விடைபெற்றனர் தனபாலசிங்கம் தம்பதியினர்.
கணவனாகிப்போனவனின் அறைக்குள் தனித்து நின்றவளுக்கு இனிவரும் நாட்கள் என்ன வைத்திருக்கிறது என்பதே தெரியவில்லை. அதைப் பற்றி மேலே சிந்திக்க முடியாமல் கடந்துபோன கொஞ்ச நாட்களாகச் சரியாக உறங்காததும், அன்றைய நாளுக்கே உரித்தான அலுப்பும் சேர்ந்துகொண்டன. ஒருவிதச் சோர்வுடன் அவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவனும் வந்தான். ஏதாவது பேசுவான், குறைந்தது மேடையில் நடந்ததைப் பற்றியாவது கேட்பான் என்று அவள் நினைக்க, அவனோ கதவை அடைத்துவிட்டு வந்து அணிந்திருந்த ஷர்ட்டைக் கழற்றினான்.
இயல்பான கூச்சம் தடுக்கப் பார்வையை அகற்றிக்கொண்டாள் பிரமிளா. தாங்கியில் சட்டையைக் கொழுவிவிட்டு அவளை நெருங்கினான் அவன்.
ஒருவித அதிர்வுடன் நெருக்கத்தில் தன் முன்னே நின்றவனை அவள் ஏறிட்டுப் பார்க்க, “கல்யாணம் எண்டு ஒண்டு நடந்தா இதெல்லாம் இயல்பா நடக்கும் எண்டு உனக்குத் தெரிஞ்சிருக்கும்தானே?” என்றான் அவன்.
பதில் சொல்லத் தெரியாமல் அவள் நிற்க, “டீச்சரம்மாகுத் தெரியாம இருக்குமா என்ன?” என்றவன் சின்னச் சிரிப்புடன் அவளை அணைத்தான்.