மனித இயக்கத்தால் முற்றிலும் கலைந்துவிடாத இனிமை நிறைந்த காலைப்பொழுதில் கௌசிகனின் அறையின் பால்கனியில் சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பிரமிளா.
முன்னும் பின்னும் மெலிதாக நாற்காலி ஆடிக்கொண்டிருக்க, தேகத்தை எரிக்காத மெல்லிய வெயில் முகத்தில் பட்டுக்கொண்டிருந்தது. விழிகளை மூடி அமைதியாக அமர்ந்திருந்தவளின் உள்ளம் அமையற்றுப் பொங்கிக் கொண்டிருந்தது.
மனதொப்பிய மணவாழ்வு ஒன்று அவர்களுக்குள் நடந்துவிடப் போவதில்லை. அது அவளுக்கு முன்னமே தெரியும். அதனாலோ என்னவோ தாம்பத்திய உறவைத் தடுக்கிற எண்ணம் இருக்கவில்லை.
இன்று இல்லாவிட்டால் என்றோ ஒரு நாள். அந்த என்றோ ஒரு நாள் மட்டும் அவளின் மனம் மாறிவிடப் போகிறதா என்ன? அல்லது அவள் அவனை விரும்பிவிடத்தான் போகிறாளா? அப்படியிருக்க அதைத் தடுப்பதில் என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது?
ஆனால், அதை அவளிடம் அனுமதி கேளாமலேயே அவன் நடத்திக்கொண்டதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிலுமே நான், எனது முடிவுகள் என்று மட்டுமே நடக்கும் இவனோடான வாழ்வை எப்படிக் கொண்டுபோகப் போகிறாள்?
ஏற்கனவே எந்தப் பற்றுதலும் இல்லாமல் ஆரம்பித்திருக்கும் மணவாழ்வு இப்படியே போனால் எந்தத் திசையில் செல்லும்? எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?
இப்படி மனத்தில் நிறையக் கேள்விகள். அக்கேள்விகளை உருவாக்கியவனோ அறைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவளுக்குக் காலையிலேயே விழிப்பு வந்துவிட்டிருந்தது. தலைக்கு முழுகியும் இருந்தாள். அன்னையின் சூடான பால் தேநீருக்கு நாவும் மனதும் ஏங்கிற்று!
காலை ஏழு மணியைத் தொட்டிருந்தது நேரம். அந்த வீட்டில் யாரும் எழுந்துவிட்டதற்கான அறிகுறியே இல்லை. நேற்றைய நாளின் களைப்பில் உறங்குகிறவர்களைக் குறை சொல்லவும் மனம் வராமல் சத்தமின்றி அறைக்குள் வந்தாள். அவன் இன்னுமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அங்கு நிற்க மனமற்று அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
கையில் தேநீர்க் கோப்பையுடன் படியேறிக்கொண்டிருந்தாள் யாழினி. இவளைக் கண்டதும், “அண்ணி! எழும்பிட்டீங்களா? நீங்க இன்னும் நித்திரை எண்டு நினைச்சன்.” என்றபடி விரைந்து வந்தவளிடம், “உஷ்ஷ்! மெல்லக் கதை. உன்ர அண்ணா நல்ல நித்திரை!” என்றபடி தங்களின் அறைக்கதவைச் சத்தமில்லாது சாற்றிவிட்டு வெளியே வந்தாள் பிரமிளா.
வாயில் விரல் வைத்துக் குழந்தைக்குச் சொல்வதுபோல் ரகசியக் குரலில் எச்சரித்த அண்ணி, யாழினியின் கண்ணுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தாள். அதுவும் அவள் இட்டிருந்த குங்குமமும், அணிந்திருந்த புதுத் தாலிக்கொடியும், சாதாரணப் பாவாடை சட்டையில் இருந்தவளையே மிகுந்த அழகியாகக் காட்டின.
“அண்ணி! நீங்க நல்ல வடிவு தெரியுமா. நேற்றுக் கல்யாணத்தில வச்சு அண்ணா உங்களைச் சைட் அடிச்சாரோ தெரியாது. ஆனா நான் நல்லா அடிச்சன்.” முகம் முழுக்கக் குறும்பு மின்னக் கண்ணடித்துச் சொன்னவளின் பேச்சில், அந்த வீட்டில் முதன் முதலாக மனத்திலிருந்து புன்னகைத்தாள் பிரமிளா.
“நீயும்தான் நல்ல வடிவா இருக்கிறாய். அப்பிடியே பொம்மைக்குட்டி மாதிரி!” உண்மையிலேயே யாழினியும் நல்ல அழகிதான். அதை மனதாரச் சொன்னாள் பிரமிளா.
அவளின் முகம் பளீரென மலர்ந்து போயிற்று! “உண்மையாவா அண்ணி! மகிழ்ச்சி மகிழ்ச்சி. என்னைப் பாராட்டிய அண்ணிக்கு என்ன குடுக்கலாம்? ஒரு தேத்தண்ணி? குடிங்கோ அண்ணி. நான் இன்னும் வாய் வைக்கேல்ல.” என்று தான் கொண்டுவந்த கப்பை அவளிடம் நீட்டினாள்.
பிரமிளாவுக்கு அவளின் செய்கையில் முறுவல் அரும்பிற்று! “நீ குடி. எனக்கு அடுப்படியைக் காட்டு. நானே ஊத்துறன்.” என்று படியிறங்கியவளோடு கூடவே இறங்கியபடி, “அவ்வளவு பயமா அண்ணி?” என்றாள் சின்னவள்.
“சேச்சே! நேற்றும் பாத்தனான். பொறுப்பா ஓடி ஓடி எல்லா வேலையும் செய்தனி. நேற்றைய களைப்பு இண்டைக்குக் கட்டாயம் இருக்கும். ஆனாலும் விடியவே எழும்பி நீயே உனக்குத் தேத்தண்ணி ஊத்தி இருக்கிறாய் எண்டேக்க, உனக்கு வீட்டு வேலைகளும் தெரியும். அதால உன்ர தேத்தண்ணியும் நல்லாத்தான் இருக்கும்.” என்று புன்னகைத்தவளை விழிகள் விரிய வியப்புடன் நோக்கினாள் யாழினி.
ஒற்றை நாளிலேயே அவளைப் பற்றி எவ்வளவு துல்லியமாகக் கணித்திருக்கிறார் என்று அவளுக்கு மிகுந்த ஆச்சரியம். கூடவே இந்தக் கெட்டிக்கார அண்ணியை மிகவுமே பிடித்தும் போயிற்று.
“நான் ஏன் வேண்டாம் எண்டு சொன்னனான் சொல்லு, விடியக்காலம முதல் டீயை உனக்குப் பிடிச்ச சுவையில நீ ஊத்தியிருப்பாய். அதை நீயே குடிச்சாத்தான் உனக்குக் குடிச்ச மாதிரி இருக்கும்.” என்றவாறே, சூடாகவே இருந்த கெட்டிலை இன்னுமொருமுறை தட்டிவிட்டு, யாழினி எடுத்துக்கொடுத்த தேயிலை, பால் மா, சீனி எல்லாவற்றையும் தனக்குப் பிடித்த அளவில் கலந்தாள் பிரமிளா.
“எனக்கும் சேர்த்துப் போடுங்கோ அண்ணி!” என்றவள் வேகவேகமாகத் தன்னுடயதைப் பருகி முடித்தாள்.
கேள்வியாகப் பிரமிளா பார்க்க, “இந்த வீட்டுல நீங்க போடுற முதல் டீ நான்தான் குடிக்கோணும். அண்ணாக்குக் குடுக்கிறதா இருந்தாலும் எனக்குப் பிறகுதான்.” என்றவளின் பேச்சுக்கு ஒரு புன்சிரிப்பைப் பதிலாகக் கொடுத்துவிட்டு தேநீர் ஆற்றுவதில் கவனம் செலுத்தினாள் பிரமிளா.
யாழினியின் பேச்சு இயல்பாகவே அவளையும் அவளுடைய தமையனையும் இணைத்துப் பேசியது புதிதாக, சற்றே வித்தியாசமாக ஒலித்தாலும், இனி இதுதான் வழமை என்பதையும் மெல்லத் தனக்குள் உள்வாங்கிக்கொண்டாள் பிரமிளா.
அவர்கள் தேநீரை அருந்தி முடிக்கும் தறுவாயில், அவசரம் என்று யாழினி ரெஸ்ட் ரூமுக்கு ஓட, அங்கு வந்தார் செல்வராணி.
பிரமிளாவைத் தேநீர் கப்புடன் கண்டதும், “நீயே ஊத்திக் குடிச்சியாம்மா? இண்டைக்கு எண்டு பாத்துக் கொஞ்சம் அயந்திட்டன். மற்றும்படி நேரத்துக்கே எழும்பிடுவன். இன்னொரு கப்புக் குடிக்கிறியாம்மா?” என்றவரின் முகத்தில் முதல் நாளே மருமகளைக் கவனிக்காமல் போனோமே என்கிற சங்கடம் நிறைந்திருந்தது.
அதை உணர்ந்தாலும் யாழினியிடம் போன்று அவரிடம் இயல்பாகப் பேசமுடியவில்லை. இவரால்தானே இன்று இங்கிருக்கிறேன் என்று எழுந்த எண்ணத்தையும் அகற்ற முடியாமல், “நானும் இப்பதான் வந்தனான்.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற முனைந்தாள்.
அனுபவம் மிக்க செல்வராணி அவளின் மனத்தைப் படித்தார். “என்னம்மா? உனக்கும் என்னில கோவமா?” என்று மிகுந்த வருத்தத்துடன் வினவினார்.
மனத்திலிருப்பத்தைச் சொல்லப் பிடிக்காமல் நின்றாள் பிரமிளா.
“கடவுள் சத்தியமா உனக்கு நல்லது செய்யத்தானம்மா நினைச்சனான். ஆனா அது இப்பிடி முடியும் எண்டு நினைக்கேல்ல.” தன்னைப் புரியவைத்துவிடும் வேகத்தோடு சொன்னவரின் பேச்சில் கசப்புடன் சிரித்தாள் அவள்.
“எனக்கு நீங்க செய்ததுக்குப் பெயர் நல்லதா? கல்யாணமே நடக்காம இருந்திருந்தா கூடச் சந்தோசப்பட்டிருப்பன். ஆனா… விடுங்க! இனி இதைப் பற்றிக் கதைக்கிறதில அர்த்தமில்ல.” என்றவள் அங்கிருந்து அகன்றாள்.
கண்ணீரில் கண்கள் நிறைந்துவிட அப்படியே நின்றார் செல்வராணி. ஒருமுறை கூட அவளின் வாயிலிருந்து மாமி என்கிற வார்த்தை வரவேயில்லையே!
பிரமிளாவுக்கு அதற்குள்ளேயே அந்த வீடு மூச்சு முட்டியது. ‘அம்மா வீட்டுக்குப் போயிட்டு வந்தா என்ன?’ அவளின் பொருட்களும் இன்னும் முழுதாக இங்கு வந்து சேரவில்லை. எனவே தயாராக எண்ணி அறைக்குள் சென்றாள்.
இவள் கதவைத் திறந்தபோது, அவன் வெளியே செல்லத் தயாராகிக் கதவை நோக்கி வந்துகொண்டிருந்தான். விழிகள் நான்கும் நேருக்கு நேர் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டன. அவள் தடுமாறவில்லை. பார்வையை விலக்கிக்கொள்ளாமல் அவனை நேராகப் பார்த்தாள். எதற்குத் தடுமாற? ஏன் அஞ்ச?
அவனும் அவளைப் பார்த்தான். பார்த்தவனின் உதட்டோரம் கோணலாய் ஒரு சிரிப்பு வளைந்து ஓடியது. என்னிடமிருந்து உன்னால் தப்பிக்க முடிந்ததா என்று கேட்டானோ?
மனம் சீற்றம் கொள்ள, ‘பெரிய சாதனைதான்!’ அவளின் உதட்டோரமும் வளைந்தது.
அவன் விழிகள் கூர்மையாயிற்று!
“எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்றான்.
“நீங்க ஏன் சிரிச்சனீங்க? வெண்டுட்டோம் எண்டுற நினைப்பா? இல்ல பெருசா எதையோ சாதிச்ச கொண்டாட்டமா? நான் உங்கட மனுசி. தாலி கட்டி உங்களோட வாழ வந்தவள். என்னை வாழ வைப்பீங்க எண்டு நம்பி வந்தவள். நீங்க வாழ வச்சீங்களா, இல்ல வேதனைப்பட வச்சீங்களா எண்டு நீங்களே யோசிச்சுப் பாருங்கோ. இவ்வளவு காலமும் வேணுமெண்டால் என்ர தோல்வி உங்கட வெற்றியா இருக்கலாம். ஆனா இனி என்ர தோல்வியும் உங்கட தோல்விதான். எனக்குப் பிடிச்சிருக்கா இல்லையா எண்டுற கேள்வியே இல்லாம எல்லாத்தையும் நடத்தி முடிச்சு இருக்கிறீங்க. அதே பிழை. இதுல என்னவோ பெருசா சாதிச்சவன் மாதிரி ஒரு சிரிப்பு. நீங்க படிச்ச மனுசன்தானே? கொஞ்சமாவது சிந்திச்சு நடங்க.” என்று பொரிந்தவளைக் கண்டு முறுவல் பூத்தான் அவன்.
“அப்ப நீ என்னை நம்பி வந்தவள். அப்பிடியா?”
உதட்டைக் கடித்தாள் பிரமிளா. அவள் என்ன சொன்னாள். அவன் எதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்? மனைவியாக வருகிற பெண் கணவனைத்தான் முதன்மையாக நம்புவாள். அந்தக் கோட்பாட்டின் வெளிப்பாடாக அப்படிச் சொன்னாலும் அவனை அவள் நம்புகிறாளா என்ன?
பதில் சொல்லப் பிடிக்காமல் அமைதியாக அவள் நிற்க, நெருங்கி வந்து அவளின் தாடையைப் பற்றித் தன்னை நோக்கி உயர்த்தினான் அவன்.
“சொல்லுங்க டீச்சரம்மா! நீங்க என்னை நம்பித்தான் வந்தீங்களா?” அவளை அறிந்தவனாக மீண்டும் கேட்டான் அவன்.
அப்போதும் பதில் சொல்ல மறுத்தாள் அவள்.
முகம் அவனை நோக்கியிருந்த போதிலும், பிடிவாதத்தை முகத்தில் காட்டி, அவனைப் பார்க்க மறுத்து இமைகளால் விழிகளுக்குச் சிறையிட்டு நின்றவளின் முகவடிவு மனத்தைக் கவர, கேட்ட கேள்வியை மறந்து தன் உதடுகளை அவளின் நெற்றியில் ஒற்றி எடுத்தான் அவன்.
படக்கென்று விழிகளைத் திறந்தவள் வேகமாக அவனிடமிருந்து விலக முயன்றாள். அதற்கு விடாமல் தடுத்து, “நல்ல வடிவா இருக்கிறாய்!” என்று காதோரமாகக் கிசுகிசுத்தவனின் உதடுகள் கன்னக் கதுப்பினுள் புதைந்தது.
“விடுங்கோ!” வேகமாக விடுபட முயன்றவளைச் சிறு சிரிப்புடன் தானே விடுவித்தான் அவன். “பாத்தியா, நீ சொன்னதும் விட்டுட்டன். இனியும் உன்ர விருப்பு வெறுப்புக்கு மரியாதை இல்லை எண்டு சொல்லக் கூடாது!” கேலிச் சிரிப்புடன் சொல்லிவிட்டு வெளியே நடந்தான் அவன்.
“ஊப்ஸ்!” அப்போதுதான் மூச்சையே இழுத்துவிட்டாள் பிரமிளா. எதைச் சொன்னாலும் அதைக் குதர்க்கமாகவே புரிந்துகொள்வானா இவன்?