வழமைபோன்று வெளியே செல்லத் தயாராகி வந்த மகனைக் கண்டு விழித்தார் செல்வராணி. நேற்றுத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. இன்னும் பெண் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே இல்லை. இவன் என்னவோ மணமாகி மாதக்கணக்கானவன் போன்று காட்டிக்கொள்கிறானே.
இந்தக் கணவராவது செய்யவேண்டிய முறைகளை இவனிடம் சொல்லியிருக்கலாம். அவரும் எப்போதும்போன்று கடைக்குப் புறப்பட்டிருந்தார். எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும் இன்றுவரை ராஜநாயகத்துக்கு ஊரில் இருக்கும் நாட்களில் அவரே காலையில் சென்று சுவாமிப்படத்துக்கு விளக்கு வைத்துக் கடை திறந்து முதல் வியாபாரம் செய்யவேண்டும். அதன்பிறகுதான் காலை உணவைக்கூட உண்பார்.
இப்போது, மகனிடம் எதை எப்படிச் சொல்வது என்று தெரியாது செல்வராணி விழிக்க, உணவு மேசையில் அமர்ந்துகொண்டான் அவன்.
“பிரமிளா எங்க தம்பி?” மருமகளுக்கும் சேர்த்து உணவிட விரும்பிக் கேட்டார்.
“சொன்னாத்தான் சாப்பாடு வருமோ?” வேகமாக அவனிடமிருந்து வந்த கேள்வியில் முகம் சுண்டிப்போனது அவருக்கு. காலையில் தேநீர் கூட மருமகளுக்குக் கொடுக்க முடியாமல் போயிற்று. உணவைக் கொடுத்தாவது அதை ஈடுகட்டலாம் என்று நினைத்தார். அது தவறா? மருமகளின் முன்னும் அவமானப்பட்டுவிட வேண்டாம் என்று எண்ணி அமைதியாகப் பரிமாறினார்.
ஒரு கையில் இருந்த ஃபோனில் கவனமாக இருந்தவன் மறுகையால் உணவை உண்டுகொண்டிருக்க, அங்கே வந்தான் மோகனன்.
தனக்குப் பிடிக்காத பெண்ணை அண்ணா மணந்த கோபம் இன்னுமே மனதில் இருந்ததில், காலை வணக்கத்தைச் சொல்லாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்துகொண்டான்.
அவனுக்கும் பரிமாற வந்த செல்வராணி, மூத்த மகனின் அறையிலிருந்து வெளியே வந்து படியிறங்கிய மருமகளைக் கண்டதும், “சாப்பிட வாம்மா!” என்று இன்முகமாக அழைத்தார்.
அவளை அழைத்தாலும் கவனம் முழுவதும் ‘மனைவியைப் பார்க்கிறானா?’ என்று மூத்தவனிலேயே இருந்தது. அவனோ அவளுக்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லாதவன் போன்று ஃபோனிலேயே கவனமாக இருந்தான்.
மின்னலாக உணவருந்தும் மேசையில் அமர்ந்திருந்தவர்களிடம் பார்வை பாய்ந்து மீள, “நான் பிறகு சாப்பிடுறன்.” என்றாள் பிரமிளா. அவளின் விழிகளிலும் புதுக் கணவனின் மீதான ஆர்வமும் இல்லை ஆசையும் இல்லை.
என்ன செய்வது என்று அவர் சிந்தனை வயப்பட்டிருக்க, மோகனனுக்கோ தன்னைக் கவனிக்காமல் அந்தத் திமிர் பிடித்தவளைக் கேட்ட அன்னையின் மீது சினம் பற்றிக்கொண்டு வந்தது. “சாப்பிட வந்து இருக்கிறன் நான். என்னைக் கவனிக்காம அலட்டிக்கொண்டு நிக்கிறீங்க. முதல் எனக்குச் சாப்பாட்டைப் போடுங்க!” என்று எரிந்து விழுந்தான்.
பிரமிளாவே அதிர்ந்துதான் போனாள். பெற்ற அன்னையிடம் இப்படி ஒரு தொணியில் பேசமுடியுமா என்ன? அவளின் பார்வை வேகமாக மாமியாரிடம் பாய்ந்தது. முகமெல்லாம் சிவந்து சுருங்கிவிட்டது செல்வராணிக்கு. சற்றுமுன்னர் தானே மருமகளின் முன்னால் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று நினைத்தார். யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் கைகள் நடுங்க வேகமாக உணவைப் பரிமாறினார். கலங்கிவிட்ட விழிகள் பார்வையை மறைத்தது.
கௌசிகன் மீது பிரமிளாவுக்கு மிகுந்த சினம் உண்டாயிற்று! அடுத்த வீட்டுப் பெண்களைத்தான் மதிக்க மாட்டான் என்று பார்த்தால் தன் தாயையும் அப்படித்தானா வைத்திருக்கிறான்?
ஒருவிதக் குறுகுறுப்பில் நிமிர்ந்து பிரமிளாவை நோக்கினான் கௌசிகன். அவள் விழிகளில் தெறித்த சினத்திலும் குற்றச் சாட்டிலும் புருவத்தைச் சுருக்கினான்.
கண்ணுக்கு முன்னால் பெற்ற அன்னையைக் கூடப்பிறந்தவன் அதட்டிக் காயப்படுத்துகிறான். மூத்தவனாக அதைப் பார்ப்பதை விடுத்து என்னை எதற்குப் பார்க்கிறான்? வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வாசலில் சென்று நின்றவளின் விழிகள் வீதியிலே இருந்தது.
அப்போதுதான் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த யாழினி, “யாரை அண்ணி பாத்துக்கொண்டு நிக்கிறீங்க?” என்று விசாரித்தாள்.
“தீபா வந்துகொண்டு இருக்கிறாள். அதுதான்.”
அதைக் கேட்டதும் மோகனனின் உடல்மொழியில் ஒரு மாற்றம். வேகமாக நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். ஒரு கை உயர்ந்து கேசத்தைக் கோதிச் சரி செய்தது.
அதற்குள், பிரமிளாவின் ஸ்கூட்டியில் வந்து சேர்ந்திருந்தாள் பிரதீபா.
தமக்கையைக் கண்டதும், என்னவோ நெடுங்காலமாகப் பிரிந்தே இருந்தது போன்ற ஒரு உணர்வு தாக்க, அவசர அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு, “அக்கா!” என்றபடி ஓடிவந்து அணைத்துக்கொண்டாள்.
“எப்பிடி இருக்கிறீங்க அக்கா?” ஆசைதீர தமக்கையைப் பார்த்தபடி கேட்டவளுக்குக் கண்கள் கலங்கிப் போயிற்று.
முதல் நாள் அவளை இங்கே விட்டுவிட்டுப் போகும்போது, அக்காவை அவர்களுக்கே சொந்தம் என்று கொடுத்துவிட்டுப் போவது போலவும், என்னவோ இனி அவளைப் பார்க்கவே முடியாது போலவும் உணர்வுகள் வந்து தாக்கியதில் முற்றிலுமாகத் துவண்டுபோயிருந்தாள் பிரதீபா. கடந்த மூன்று வருடங்களாகப் பல்கலை விடுமுறைகள் தவிர்த்து அவர்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் இப்படியொரு பிரிவுத்துயர் அவளை வாட்டியதில்லை.
காலையில் எழுந்ததுமே அக்காவைப் போய்ப் பார்க்கலாமா என்றுதான் ஓடியது. போகலாமா, போனால் ஏதும் நினைப்பார்களோ, அப்படி என்னதான் நினைக்க இருக்கிறது? நினைத்தால் நினைக்கட்டும், என் அக்காவை நான் பார்க்கப் போகிறேன் என்று அவளுக்குள்ளேயே கேள்வி பதில்கள் ஓடிக்கொண்டே இருந்தது.
அப்போதுதான், ‘என்ர ஸ்கூட்டியை கொண்டுவந்து தாறியா செல்லம்?’ என்று செய்தி அனுப்பியிருந்தாள் பிரமிளா. பார்த்ததுமே கண்களில் நீர் கோர்த்துப்போயிற்று. எத்தனை நாட்களாயிற்று அக்காவின் இந்த, ‘செல்லம்’ என்கிற அழைப்பைக் கேட்டு? பிரிவு அக்காவையும் நெகிழ்த்திவிட்டதோ? கண்ணீரும் சிரிப்பும் ஒருங்கே தோன்ற அடுத்த நொடியே தயாராகி இங்கே வந்து சேர்ந்திருந்தாள்.
“நல்லா இருக்கிறன். அம்மாவும் அப்பாவும் என்ன செய்யினம்?” தங்கையின் பாசத்தில் முகமெல்லாம் மலர்ந்து சிரிக்க விசாரித்தாள் பிரமிளா.
தங்கையைக் கண்டதும் அவளுக்குள் உருவான மாற்றத்தை அங்கே ஒருவன் காணாதது போன்று கவனித்துக்கொண்டு இருப்பதை உணராமல் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
“வாசல்லையே நிண்டு கதைக்காம ரெண்டுபேரும் உள்ளுக்கு வாங்கோம்மா.” என்று வரவேற்றார் செல்வராணி.
அப்போதுதான் அங்கு மற்றவர்களும் இருக்கிறார்கள் என்கிற சுரனையே தீபாவுக்கு வந்தது. அதில், ஒருவித அந்நியத்தன்மை தாக்கிவிட, “இல்ல.. ஸ்கூட்டியை விடத்தான் வந்தனான். நான் போகோணும் அக்கா…” என்று தடுமாறினாள் அவள்.
“அதுக்குமுதல் வந்திருந்து சாப்பிட்டு போ!” என்று அழைத்தது வேறு யாருமல்ல சாட்சாத் கௌசிகன் தான்!
“நான் சாப்பிட்டன்!” முறைப்புடன் பட்டென்று பதிலிறுத்தாள் தீபா.
“எங்கட வீட்ட வந்தா சாப்பிடாம போகேலாது!” அவனும் விடாமல் சொன்னான்.
“நான் ஒண்டும் உங்கட வீட்டை வரேல்ல. என்ர அக்காட்டத்தான் வந்தனான்.”
“உன்ர அக்கா இருக்கிறது எங்கட வீட்டை.” அவளோடு சரிக்குச் சரியாக நின்று மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான் அவன்.
“என்ர அக்கா என்னத்துக்கு உங்கட வீட்டை இருக்கோணும்? நான் கூட்டிக்கொண்டு போறன்!” என்றவள், சும்மா சொல்லாமல், “நீங்க வாங்கோ அக்கா, நாங்க போவோம்! இது அவரின்ர வீடாமே. அவரின்ர வீட்டுல அவரே இருக்கட்டும்!” என்று அவளின் கையைப் பற்றி மெய்யாகவே இழுத்தாள்.
‘போகவா?’ சவாலாக அவனை நோக்கினாள் பிரமிளா. அவளுக்கும் இதைச் சாட்டாக வைத்துப் போய்விட்டாள் என்ன என்றுதான் ஓடியது.
ஒருவினாடி பார்வையால் மனைவியை அளந்துவிட்டு, சண்டைக்கார மச்சாளிடம் திரும்பி, “அம்மா தாயே! தயவு செய்து கூட்டிக்கொண்டு போயிடாத! என்ர மனுசி இல்லாம என்னால வாழவே ஏலாது!” என்று, வசனம் பேசிவிட்டு வாய்விட்டு நகைத்தான் அவன்.
யாழினிக்கு இந்தத் தமையனைக் கண்டு விழிகள் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்து போயிற்று! அதைவிட, ‘இந்த அண்ணா என்னோடு இப்படியெல்லாம் கதைப்பதே இல்லையே’ என்று ஒரு வேதனையும் உண்டாயிற்று!
முறுவல் அரும்பிய முகத்துடன், “நீ வாம்மா. அவன் சும்மா பகிடிக்கு உன்னோட சண்டை பிடிக்கிறான். இது உன்ர அக்கான்ர வீடு. நீ எப்பவும் வரலாம் எப்படியும் இருக்கலாம். வாம்மா!” என்ற செல்வராணி, பிரமிளாவிடமும், “தங்கச்சிய கூட்டிக்கொண்டு வாம்மா சாப்பிட!” என்று அழைத்தார்.
“வா!” அவளும் அழைக்க, அப்போதும், “இல்லை அக்கா, எனக்கு வேண்டாம்!” என்றாள் தயக்கத்துடன். கடைக்கண் பார்வை கௌசிகனைத் தொட்டு மீண்டது.
“அவள் எனக்கு மரியாதை தாறாள். அவளின்ர அத்தான் நான் இருக்கேக்க, எனக்கு முன்னால எப்பிடி சாப்பிடுறது எண்டுற பயத்திலதான் வேண்டாம் எண்டு சொல்லுறாள். அப்பிடித்தானே தீபா?” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ஒரு முறைப்புடன் வந்து சரக்கென்று நாற்காலியை இழுத்துவிட்டு அமர்ந்துகொண்டாள் அவள்.
சிறு நகைப்புடன், “சாப்பிடு!” என்று அவளின் தலையில் தட்டிவிட்டு தன்னுடைய அறைக்கு எழுந்து சென்றான் கௌசிகன்.