தீபாவுக்கான வேலைகளை எல்லாம் முடித்து, அவளை அவள் கணவனிடம் அனுப்பிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து அப்படியே தொப்பென்று அமர்ந்துகொண்டாள் பிரமிளா.
மனமும் உடலும் அந்தளவில் களைத்திருந்தது. காரணம் கணவன்! அவன் சொன்ன வார்த்தை. கேட்ட நொடியில் விதிர்விதிர்த்துப் போனாள். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அவனோடான அவளின் வாழ்க்கை சுருக்கப்பட்ட பதிப்பாக, நொடி நேரக் காட்சியாக நெஞ்சில் மின்னி மறைய, அதே வாழ்க்கையை இன்னொரு பெண்ணோடு வாழ்வானாமா என்று மனம் கொதித்துப்போனது.
எவ்வளவு தைரியம் அவனுக்கு?
இதில் அவளே பெண் பார்க்க வேண்டுமாம். பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். அவளைச் சீண்டிவிட்டுத் தன்னிடம் வரவைக்கத்தான் அப்படிச் சொன்னான் என்று புத்திக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும்… எவ்வளவு தைரியம் அவனுக்கு என்று அவளின் கோபக் கொம்புகள் சினம் தணியாமல் அவனை முட்டி மோதிக்கொண்டே இருந்தன.
கல்லூரி விடயத்தில் வெற்றி பெற்றும் தோல்வியை ஏற்றுக்கொண்ட போதும் சரி, அவளுக்காக மாட்டிக்கொண்ட ரஜீவன் பல துன்பங்களை அனுபவித்தபோதும் சரி, அவளின் கொள்கைகள் கோட்பாடுகள் அனைத்தையும் அடித்து உடைத்துக்கொண்டு அவளின் வாழ்க்கைக்குள் அவன் அத்துமீறி நுழைந்தபோதும் சரி, அதன் பிறகான அவர்களின் போராட்டம் மிகுந்த வாழ்விலும் சரி எங்குமே அவள் உடைந்துவிடவில்லை.
வருகிறதை எதிர்கொண்டிருக்கிறாள். கலங்கி நின்றாலும் துவளாமல் அடுத்தது என்ன என்று பார்த்திருக்கிறாள். அதுவே குழந்தையை இழந்தபோது அது முடியவில்லை. எல்லாமே முற்றிலும் அறுபட்டுப் போன உணர்வு.
இன்னும் இழக்க என்னிடம் என்ன இருக்கிறது என்கிற விரக்தி. இது எல்லாவற்றுக்கும் உச்சமாகத் தன் குழந்தை தனக்கில்லாமல் போக அவன்தான் காரணம் என்று நெஞ்சில் ஆழமாகப் பட்டிருந்தது.
அப்படியானவனோடு இன்னும் என்ன வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது? இனிப் போவதற்கு அவளிடம் உயிர் ஒன்றுதான் இருக்கிறது. அதையும் அவனுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் அனுபவிக்கிற இந்தப் புத்திர சோகத்தைத் தன்னைப் பெற்றவர்களுக்கும் கொடுப்பதா என்கிற கோபம்தான் என்னை விட்டுவிடு என்று சொல்ல வைத்தது.
அந்த, ‘என்னை விட்டுவிடு’ என்பதற்குப் பின்னால் என்ன இருந்தது? விவாகரத்தா அல்லது இன்னொரு மணவாழ்க்கையா என்றால் எதுவுமே இல்லை. அதைப் பற்றி அவள் சிந்தித்ததில்லை.
இழப்பிலிருந்தே மீண்டிராதவள், வாழ்வின் மீதான பற்றை இழந்திருந்தவள் எதிர்காலத்தைப் பற்றி ஏன் யோசிக்கப் போகிறாள்? என்னால் இனியும் அவனோடு வாழ முடியாது என்பது மாத்திரம்தான் அவளின் நிலைப்பாடாக இருந்தது.
அப்படி இல்லை என்று நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறான் அவளின் கணவன். இல்லாமல் அவனுடைய இரண்டாம் தாரம் என்கிற பேச்சில் அவளின் நெஞ்சு இந்தளவுக்குக் காந்துமா என்ன?
‘இனியும் ஏதாவது கதைத்துக்கொண்டு வரட்டும், குடுக்கிறன்!’ என்று காத்திருக்க அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை.
ஹோட்டல் கட்டுமானம் முடிவுறுகிற நிலைக்கு வந்துவிட்டதால் முழு மூச்சாக அதில் இறங்கியிருந்தான்.
அவர்களுக்குள் ஆயிரம் முறை சண்டைகள் வந்திருக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் உனக்கு நான்தான் எனக்கு நீதான் என்று ஒரு முறையல்ல பலமுறை அழுத்திச் சொல்லியிருக்கிறான். அது தெரிந்தும் பிரிவைப் பற்றிப் பேசியவளை என்ன செய்வது? கோபத்தில் இரைந்துவிட்டு வந்தவனுக்கு மீண்டும் அவளை நெருங்கவே பயமாயிற்று.
ஆறாமலேயே கிடக்கும் அவன் மனத்தைப் பற்றி யோசிப்பார் யாருமில்லை! ஒருவித விரக்தியும் வெறுமையும் சூழ வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
அவனுடைய கனவுக் கட்டடம் சொந்த உழைப்பில் எழுந்து நின்றது. தரையில் முன் பக்கம் உணவுச்சாலையும் பின்பக்கமும் மேலேயும் அறைகளையும் தயார் செய்திருந்தான்.
மொட்டை மாடியில் நீச்சல் குளம். அதன் அருகிலேயே குட்டியாக பார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அவளைக் கூட்டிக்கொண்டு வந்து பெருமையும் சந்தோசமுமாகக் காட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
என்னதான் அப்பாவின் சொத்துப் பத்துக்கு அதிபதி என்றாலும் இது அவனுடைய உழைப்பும் அடையாளமும் அல்லவா. ஆனால், இன்றைக்கோ ஒன்றும் பிடிக்கவில்லை. ‘ஹோட்டல் மிருதுளா’ என்று தன் பெண்ணின் பெயரையே அதற்குச் சூட்டினான்.
கட்டடத்தின் உச்சியில் மிருதுளா என்கிற பெயர் ஒவ்வொரு எழுத்தாக நிறுத்தப்பட்டு, அவ்வெழுத்துகள் ஒவ்வொன்றும் வானத்து விடிவெள்ளியாக ஒளிர்ந்ததைப் பார்த்தபோது அவன் விழிகள் பனித்துப் போயிற்று.
மிருதுளா அங்கு வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை. என்னவோ இப்போதெல்லாம் மகளும் அந்தச் செல்ல மகளின் நினைவுகளும் மாத்திரமே அவனது ஆறுதலாகிப் போயிற்று.
அவள் இப்போதெல்லாம் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள். அவனிடம் ஓடி வருகிறாள். அப்பா தூக்குங்கோ என்று தாவிக் கொள்கிறாள். இரவுகளில் அவன் மீது கால்களைப் போட்டுக்கொண்டு உறங்குகிறாள். அவளோடுதான் அவனின் தினப்பொழுதுகள் நகர்கின்றன.
அவனுடைய ஹோட்டலுக்கான எலக்ட்ரிக், வயரிங் வேலை பார்ப்பதற்கு ரஜீவனின் நிறுவனத்தைத்தான் நியமித்திருந்தான். குறிப்பாக ரஜீவனை. அவனுடைய வேலைகளைக் கவனித்துத் திருப்தியானதும் ஒருநாள் வந்து, ஒரு அட்டையைக் கொடுத்து, “இஞ்ச போய்ப்பார்! வேல இருக்காம்.” என்றான்.
மெலிதாக வியர்க்க ஆரம்பித்தாலும், “இல்ல… அது எனக்கு என்ர தகுதிக்குத்தான் வேல வே…ணும். சிபாரிசில இல்ல.” என்றான் ரஜீவன் திக்கித் திணறி.
கௌசிகனின் விழிகளில் கோபம் வந்து அமர்ந்தது. “நான் உனக்குச் சிபாரிசு செய்தனான் எண்டு ஆர் சொன்னது? அவே கேட்டவே நான் உன்னக் கைகாட்டி இருக்கிறன். உனக்கு இன்னும் வேல கிடைக்கேல்ல. கிடைக்கிறது உன்ர கெட்டித்தனம். போ!” என்ற அவனின் அதட்டலில் விட்டால் போதும் என்று ஓடி இருந்தான் அவன்.
அடுத்த நாளே முகமெல்லாம் மலர்ந்திருக்க அவன் முன்னே வந்து நின்றான். “வேலை கிடைச்சிட்டுது. ந…நல்ல சம்பளம் அத்… அண்…” தான் எல்லாம் உறவுமுறை சொல்லி அழைத்தால் ஏற்பானா என்கிற பயத்தில் அவன் வாய் திக்கிற்று.
“அவள் உனக்கு அக்காதானே? அத்தான் எண்டே சொல்லு!” என்றான் அவன்.
“சரி அத்தான்.” என்றவனுக்கு ஏனோ விழிகள் பனித்துப் போயிற்று. “அண்டைக்கு… நான் அக்காவைக் கூப்பிடாம இருந்திருக்கலாம். ஆனா எனக்கு ஒரு பிரச்சினை எண்டாலோ, என்ன செய்றது எண்டு தெரியாத நிலை வந்தாலோ அக்காட்டத்தான் போய்ப் பழக்கம். அந்த நினைப்பில யோசிக்காம அவவுக்குச் சொல்லிட்டன். என்னாலதான் எல்லாம் நடந்தது. சொறி அத்தான்.”
நீண்ட நாட்களாக இதை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று காத்திருந்தவன் இன்றைக்குத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு வழியாகச் சொல்லிவிட்டான்.
அந்த அறையே சற்று நேரத்துக்கு அமைதியாயிற்று. ஜன்னல் புறமாகச் சென்று நின்றுகொண்டான் கௌசிகன்.
கோபித்துக்கொண்டாரோ என்று இவன் யோசிக்கையிலேயே, “போய் ஒழுங்கா வேலையைச் செய். அதுல முன்னுக்கு வாறதைப் பற்றி மட்டும் யோசி.” என்று அனுப்பிவைத்தான்.
அவன் குரலில் என்ன இருந்தது? கண்டுபிடிக்கத் தெரியாமல் தலையை ஆட்டிவிட்டு வெளியேறினான் ரஜீவன்.
யாழினிக்கு இதை அறிந்ததும் துள்ளிக் குதிக்காத சந்தோசம். அண்ணாவைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். நூற்றுக்கு நூற்றிஐம்பது விழுக்காடு அவனுடைய வேலையில் திருப்தி ஏற்படாமல் இப்படி ஒரு ஏற்பாட்டை நிச்சயம் செய்திருக்க மாட்டார்.
பல்கலைக்குச் சென்றதும், விஜிதாவின் கைப்பேசியிலிருந்து அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதுமே, தன் முத்தங்களைத்தான் அவனுக்குப் பரிசளித்தாள். அன்று, அண்ணியின் குழந்தை விடயமாக மிகக் கடுமையாகத் திட்டிவிட்டு வைத்தது வேறு மனதில் இருந்ததில் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.