பெண்கள் மூவரும் அமர, செல்வராணி பரிமாறினார். எதிரில் அமர்ந்திருந்த யாழினியின் பார்வையும் மோகனனின் பார்வையும் அடிக்கடி தீபாவின் மீதே படிந்து படிந்து மீண்டன.
‘என் அண்ணாவுடன் இவ்வளவு சகஜமாக வாயாடுகிறாளே. அவரும் திருப்பி திருப்பிக் கதைக்கிறாரே’ யாழினியால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சின்ன பொறாமை கூட உண்டாயிற்று.
அவளிடம் மட்டும் எப்போதுமே நறுக்குத் தெறித்தாற்போன்றுதான் சொல்வதைச் சொல்லிவிட்டுப் போவான். என்னவோ தன்னைத் தமையன் ஒதுக்கி வைத்திருப்பது போன்றொரு எண்ணம் வந்து தாக்க, அப்படியே அமைதியாகிப்போனாள்.
மோகனனின் நிலையும் அதேதான். அண்ணாவிடம் துணிவாக வாயாடிய அவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. அவளின் கோபத்தில் தெறித்த செல்லக்குணம், சிறுபிள்ளைப் பிடிவாதம் எல்லாமே அவனைக் கவர்ந்தன.
இதில், அவன் ஒரு ஆண்பிள்ளை அங்கே இருக்கிறானே, அவனைச் சும்மாவாவது பார்ப்போம் என்று இல்லாமல், உண்மையைச் சொல்லப்போனால் அவனைப் பொருட்டே படுத்தாமல் இருந்தவளின் குணம் கூட அவனுக்குள் ஒருவித கோப அலைகளைப் பரப்பி, எப்படியாவது அவளைப் பார்க்க வைத்துவிட மாட்டோமா என்றுதான் எண்ண வைத்தது.
‘அம்மா தண்ணி தாங்க’, ‘இன்னும் போடுங்க’ என்று தன் இருப்பைக் காட்டியும் பார்த்தான். அவள் அவன் புறம் திரும்பவே இல்லை.
“நாளைக்கு உனக்கு எத்தனைக்கு பஸ்?” பிரமிளா கேட்க, “ரெண்டு மணிக்கு அக்கா. ஆறு ஆறரைக்கு எல்லாம் திருகோணமலைக்குப் போய்டுவன்.” என்று பதிலிறுத்தாள் தீபா.
“பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டுபோய்விட நான் வாறன். ஆட்டோக்குச் சொல்லவேணாம் எண்டு அப்பாட்டச் சொல்லு.”
“ம்ம்… சரி.”
அந்த அக்கா தங்கைக்குள் தெரிந்த அந்நியோன்யம் நாம் ஏன் இப்படி வளரவில்லை என்று யாழினியை யோசிக்க வைத்தது. அவர்களோடு தானும் ஒருத்தியாகச் சேர்ந்துகொள்ளும் ஆசை எழுந்ததில், “அண்ணி, ஸ்கூட்டியை விட்டுட்டுப் போறது எண்டால் என்னெண்டு போகப்போறா உங்கட தங்கச்சி?” என்று பேச்சுக்கொடுத்தாள்.
“நான் கொண்டுபோய் விட்டுட்டு வரேக்க எனக்குத் தேவையானதுகளைக் கொஞ்சம் கொண்டுவரப்போறன்.”
“அப்ப, நானும் வரட்டா அண்ணி?”
“மூண்டு பேர் எப்பிடி ஸ்கூட்டில போறது?”
அப்போது பார்த்துக் கௌசிகன் இறங்கி வந்தான். வேலைக்குப் போய்விடப்போகிறான் என்கிற பயத்தில், “எங்க போறதா இருந்தாலும் ரெண்டு பேரும் ஒருக்கா கோயிலுக்குப் போயிட்டு வந்தபிறகு போ தம்பி.” என்ற செல்வராணியின் குரல் அவரையும் மீறிக் கெஞ்சியது.
அந்தக் கெஞ்சலின் பின்னே மறைந்துகிடந்த பாசத்தையும் மன்றாடலையும் எப்போதும்போல் தூக்கி எறிந்துவிட்டு, “எனக்கு இப்ப நேரமில்லை!” என்று, வாசலை நோக்கி விரைந்துகொண்டே சொன்னான் அவன்.
“இண்டைக்கு மட்டும்தான் தம்பி. ஒரு நிமிச வேலைதான் போயிட்டு வாங்கோ!”
“ப்ச்! ஒருக்கா சொன்னா விளங்காதா உங்களுக்கு?” அவனுடைய அதட்டலில் முகம் கன்றிப்போனது அவருக்கு.
நொடியில் அவரின் மனநிலையைக் கணித்து, “அப்ப, கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே நான் வீட்டை வாறன். தீபா நீ யாழிய கூட்டிக்கொண்டு ஸ்கூட்டில வா!” என்று தங்கைக்குச் சொல்வது போன்று கணவனுக்கும் மாமியாருக்கும் அறிவித்துவிட்டு எழுந்து கையைக் கழுவச் சென்றாள் பிரமிளா.
நடை நின்றுவிட அவன் பார்வை கூர்மையுடன் அவளையே தொடர்ந்தது. அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வேகமாகச் சென்று, தன் கைப்பையையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.
ஒன்றும் பேசாமல் காரை நோக்கி நடந்தான் கௌசிகன். அவன் பின்னால் சென்றாள் பிரமிளா.
அன்று விடிந்ததிலிருந்து மனத்தை அரித்துக்கொண்டிருந்த வேதனை அகன்றுவிட, மிகுந்த நிறைவாக உணர்ந்தார் செல்வராணி. பின்னே, அசைக்கவே முடியாத மகனின் முடிவையே நொடியில் மாற்றியமைத்துவிட்டாளே அவரின் மருமகள். இந்தச் சாதுர்யம் அவருக்கு இல்லாததால்தானே இத்தனை சிக்கல்களும்.
கார் கோயிலை நோக்கி விரைந்தது. இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. மனம் பொறுக்காமல், “பெத்த தாயைக்கூட மதிக்கிற பழக்கம் உங்களுக்கெல்லாம் இல்லையா?” என்றாள் வெறுப்புடன்.
திடீரென்று தாக்கிய கேள்வியில் புரியாமல் பார்த்தான் அவன். “என்ன நடந்தது?”
இன்னும் சினமுண்டாக, “கண்ணைத் திறந்து பாத்தா உங்களுக்கே தெரியப்போகுது!” என்றுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
‘கண்ணுக்கு முன்னால நடந்ததக் கவனிக்காம என்ன நடந்ததாம்?’ எரிச்சல்தான் மிகுந்தது. அதுசரி! இவனே தாயை மதிக்கமாட்டான். பிறகு எப்படித் தம்பியார் செய்தது இவனுக்குத் தவறாகப் படும்?
கோயிலடியில் காரை நிறுத்திவிட்டு இறங்குமுன், “கெதியா வரோணும். எனக்கு இஞ்ச மெனக்கெட நேரமில்ல!” என்று அறிவித்தான் அவன்.
கதவில் கையை வைத்தவள் திறக்காமல் அவனைத் திரும்பிப் பார்த்து, “இவ்வளவு பிஸியானவருக்கு நேற்று தாலி கட்டுறதுக்கு மட்டும் எப்பிடி அவ்வளவு நேரம் வந்தது? அதுக்கும் நேரமில்லை எண்டு ஓடியிருக்கவேண்டியதுதானே.” என்று கேட்டாள்.
“உனக்காகத்தான்!” என்றான் அவன் தீவிரமான குரலில். “எனக்காக, என்னோட வாழுறதுக்காக ஆசையோட காத்துக்கொண்டு இருந்த உன்னை ஏமாத்த மனமில்ல. அதுதான் என்ர நேரத்தைச் செலவழிச்சு வந்து தாலி கட்டினான்.” என்றான் கண்களில் மாத்திரம் சிரிப்பைத் தேக்கி.
அவளோடு விளையாடுகிறான் என்று புரிந்தது. அதை ரசிக்கவோ ரசித்துச் சிரிக்கவோ மனமற்று மரத்த முகத்துடன் காரை விட்டு இறங்கினாள் பிரமிளா.
கௌசிகனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்துபோயிற்று. மௌனமாகவே கோயிலுக்குள் நுழைந்து சுவாமி கும்பிட்டுத் திரும்பியவர்கள் அதே மௌனத்துடனேயே அவளின் பெற்றவர்களின் வீடு நோக்கிப் பயணித்தனர்.
அங்கே, தீபாவோடு அவர்களின் வீட்டுக்குச் சென்ற யாழினி, பிரமிளாவின் பொருட்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த ரஜீவனைக் கண்டதும் அவள் அவள் வசமாக இல்லை. மனதெங்கும் ஒரு பரவசம். தமையானால் உண்டாகியிருந்த ஊமைக்காயமும் மருந்தாக அவனை நாடிற்று!
அவனோ அவளைத் திரும்பியும் பார்த்தான் இல்லை. அவள் வந்தபோது அன்புடன் உபசரித்த பிரமிளாவின் பெற்றோருடனும் தீபாவுடனும் சேர்ந்து பொருட்களை எடுத்து வைக்கையில் எவ்வளவோ முயன்றும் அவன் அசையவேயில்லை.
வாகனத்துக்குள் ஏறிப் பிரமிளாவின் புத்தகக் கட்டு ஒன்றினைக் கவனமாக வைத்த இடைவெளிக்குள், அவன் இறங்கிப் போகமுடியாதபடிக்கு வந்து நின்றுகொண்டு, “ஃபோன் எடுக்கச் சொன்னா எடுக்கோணும். நம்பர் தந்தவள் பாத்துக்கொண்டு இருப்பாள் எண்டு யோசிக்க்கிறேல்லையா?” என்றாள் அதட்டல் குரலில்.
பதட்டமாகிப்போனது அவனுக்கு. இப்படி ஒரு தனிமை அமைந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தும் உருவாக்கிவிட்டாளே. சினத்துடன் வேகமாக விழிகளைச் சுழற்றி வேறு யாரும் பார்க்கிறார்களா என்று கவனித்தான்.
இல்லை என்றதும், “அறிவில்ல உனக்கு? எவ்வளவு விலகிப்போனாலும் விடாம பின்னாலேயே வருவியா? உனக்கெல்லாம், ‘என்னைத் தொந்தரவு செய்யாத’ எண்டு மூஞ்சையில அடிச்ச மாதிரிச் சொல்லோணுமா?” என்று சீறினான் அவன்.
அந்தக் கடுமையில் பயந்துபோனாள் யாழினி. மளுக்கென்று சூழ்ந்துவிட்ட கண்ணீரோடு வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அன்று அவ்வளவு திட்டியும் அடங்கிப்போனவன், ஃபோனில் அவ்வளவு எடுத்தெறிந்து பேசியும் பணிந்து போனவன் இப்படிச் சீறுவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.