கண்ணீர் கன்னங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. அதைப் பார்த்தவனுக்கு இன்னுமே சீற்றம் பெருகிற்று. படார் என்று கைகள் இரண்டையும் அடித்துக் கும்பிட்டான். “அம்மா தாயே! என்னை விட்டுடு! திரும்பவும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து திரும்பவும் அடிவாங்கித் தராத. என்ர குடும்பம் என்னை மட்டும்தான் நம்பி இருக்கு! தயவு செய்து போய்த்தொலை!” என்றான்.
“சொ…சொறி!” பொங்கிய கண்ணீருடன் வார்த்தையை உதிர்த்துவிட்டு அவனைத் திரும்பியும் பாராமல் வீட்டின் பின்பக்கம் ஓடிப்போனாள் யாழினி.
பிரமிளாவின் வீட்டு வாசலில் கொண்டுவந்து காரை நிறுத்தினான் கௌசிகன். அவள் இறங்கும் முன், “பின்னேரம்(மாலை) நான் வரமுதல் வந்திடு!” என்றான்.
“இப்ப நீங்களும் வந்திட்டுப் போங்க!” என்றபடி இறங்கினாள் பிரமிளா.
அக்கா அத்தானோடு வருகிறாள் என்று தீபா சொல்லியிருப்பாள். அம்மாவும் அப்பாவும் அவர்களுக்காகக் காத்திருப்பார்கள் என்று தெரியும். எனவே அழைத்தாள்.
அவன் காரை விட்டு இறங்காமல் இருக்க, “வந்திட்டுப் போங்கோ!” என்றாள் மீண்டும் அழுத்தி.
அந்த அழுத்தத்தில் அவன் புருவங்களை உயர்த்தினான். சின்ன சிரிப்புடனேயே காரைத் திருப்பிக்கொண்டு போய் மறைந்தான்.
என்னைக் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்காதே, தோற்றுப்போவாய் என்று உணர்த்த முற்பட்டானோ? போகிற காரையே பார்த்திருந்தாள் பிரமிளா.
அங்கே அவர்களை வரவேற்க வந்த தகப்பனிடம் தன் சஞ்சலத்தை மறைத்து, “வேலை இருக்கு எண்டு அவசரமா போறார் அப்பா.” என்றாள் முறுவலை வரவழைத்துக்கொண்டு.
புரிந்தது என்பதாகத் தலையசைத்துவிட்டு, சின்னதாய்ப் புன்னகைத்தார் தனபாலசிங்கம். அப்புன்னகை அவளின் உள்ளக்கிடக்கைகளை உணர்ந்துகொண்டார் என்று காட்டிக்கொடுக்க, தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
“சுகமா இருக்கிறீங்களா அப்பா?” வீட்டுக்கு நடந்துகொண்டே கேட்டாள்.
“எனக்கு என்னம்மா குறை? அருமையான ரெண்டு பிள்ளைகளைப் பெத்த அப்பன் நான். நான் நல்லாத்தான் இருக்கிறன். நீ எப்பிடி இருக்கிறாய்? அந்த வீடு, வீட்டு ஆக்கள் எல்லாம் எப்பிடி?” மெல்ல விசாரித்தார்.
இடையில், “அக்கா, வாங்கோ அக்கா!” என்று வரவேற்ற ரஜீவனிடமும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, “அந்த வீட்டு ஆம்பிளைகளைப் பற்றி இன்னுமே எனக்கு ஒண்டும் தெரியேல்ல அப்பா. யாழினி எங்கட தீபா மாதிரித்தான். பாசமான பிள்ளை. மாமி… அந்த வீட்டுல இருக்கிற பாவப்பட்ட மனுசி மாதிரி இருக்கு.” என்றவளை ஓடிவந்து, “வாம்மா!” என்று அணைத்துக்கொண்டு கண்கள் கலங்க உச்சியில் உதடுகளைப் பதித்தார் சரிதா.
கணவரின் கண்ணசைவில் அவளின் கணவனைப் பற்றி எதுவுமே கேளாமல், அவளைப் பற்றிய நலனை விசாரித்துத் தெரிந்துகொண்டார். ஒற்றை நாளைப் பற்றி விசாரிக்க அவரிடம் ஓராயிரம் கேள்விகள் இருந்தன.
“தீபா! யாழி எங்க?” வந்ததிலிருந்து அவளைக் காணவில்லை என்றதும் விசாரித்தாள் பிரமிளா.
“வேர்க்குது, முகம் கழுவிக்கொண்டு வாறன் எண்டு கிணத்தடிக்குப் போனவா அக்கா. நான் பாத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுப் பின்பக்கம் சென்றாள் தீபா.
சற்று நேரத்திலேயே, “வந்திட்டிங்களா அண்ணி? உங்கட வீட்டுக் கிணத்துத் தண்ணி சில் எண்டு நல்ல குளிரா இருந்தது. அதுதான் நல்லா அடிச்சு முகம் கழுவினான்.” என்று கலகலத்தவள், கண்ணீர் தடத்தை மறைத்திருக்கிறாள் என்று ரஜீவனுக்கு மட்டும் தெரிந்தது.
அப்படிக் கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று இப்போது தன்னையே குட்டிக்கொண்டான். ஆனால், அவள் இப்படி அவனோடு பேசுவதை அவளின் அண்ணன்களில் யாராவது பார்த்துவிட்டால் மூன்றாவது முறையாகவும் அடிவாங்குகிற தெம்பு சத்தியமாக அவனுக்கு இல்லை.
எல்லாவற்றையும் விடக் கண்ணில் ஆர்வம் மின்னத் தன்னையே சுற்றி சுற்றி வருகிறவளை விலக்கி நிறுத்துவதுதான் நல்லது! அவனுக்கு அவளும் பொருத்தமில்லை. அவளுக்கு அவனும் பொருத்தமில்லை.
மத்தியான உணவும் முடிந்ததும் வீட்டுக்குப் புறப்பட்டாள் பிரமிளா.
ஏற்றப்பட்ட பொருட்களைச் சுமந்துகொண்டு வருகிற வாகனத்துடன் வருவதற்கு ரஜீவன் தயங்க, “நீயும் வா. அங்கேயும் எனக்கு நீதான் ஹெல்ப் செய்யோணும்!” என்று அழுத்திச் சொல்லிவிட்டு யாழினியுடன் புறப்பட்டாள் பிரமிளா.
ரஜீவன் யாழினியைப் பார்த்தான். இவனைப் பார்த்துவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் வேறுபக்கம் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள். வேறு வழியின்றித் தானும் வாகனத்தில் புறப்பட்டான் ரஜீவன்.
அன்று முழுவதும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான் மோகனன். அவனின் நினைவுகளில் எங்கும் நீக்கமற நிறைந்துபோயிருந்தாள் பிரதீபா. நேரம் செல்ல செல்ல, அவளின் ஆளுகை அவனுக்குள் ஓங்க ஓங்க, அவள் எனக்கு வேண்டுமே வேண்டும் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன்.
உறுதியாக அது மனத்தில் முடிவானதும் எழுந்து அன்னையைத் தேடிச் சென்றான்.
சமையலறை வரை வந்தவனின் செய்கையில் உள்ளூர ஆச்சரியமாக உணர்ந்தபடி, “சாப்பிட ஏதாவது தரவா தம்பி?” என்று வினவினார் செல்வராணி.
அதற்கு ஒன்றும் சொல்லாது, “எனக்கு அண்ணின்ர தங்கச்சிய பேசுங்க அம்மா!” என்றான் அவன்.
“என்னது?” அவருக்கு அவன் சொன்னதைக் கிரகிக்கவே நேரமெடுத்தது. விளங்கிய கணம் திகைத்துப்போனார்.
இது என்ன அடுத்த பிரச்சனை? மனத்தில் திகில் பரவியது. அந்தக் குடும்பம் மூத்தவளைத் தந்ததே பெரிய விசயம். இதில இளையவளையுமா? அதுவும் இவனுக்கு? கடைசிவந்தாலும் அது நடக்காது என்று அவருக்கே உறுதியாகத் தெரிந்தது.
ஆனால், இதை அவர் வாயைத் திறந்து சொல்லிவிட முடியாது. அவசரமாக யோசித்து, “தம்பி, இப்பதான் அண்ணான்ர கலியாணம் முடிஞ்சிருக்கு. அதவிட அது படிக்கிற பிள்ளை. படிப்பை முடிக்கட்டும். இப்பதானே அவே நமக்கு நெருங்கின சொந்தமா வந்திட்டினம். நேரம் பாத்துக் கதைக்கலாம். எப்பவும் அவசரப்படுற மாதிரி அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துப்போடாத.” என்றார் நிதானமாக.
“அதுக்குள்ள அவள் ஆரையாவது விரும்பினா?”
“அந்த வீட்டுப் பிள்ளைகள் அப்பிடியானவே இல்லை.”
“அப்ப நாங்க மோசமா?” பட்டென்று திருப்பிக் கேட்டான் அவன்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் என்ர வளப்புப் பிழைச்சுத்தான் போச்சுது தம்பி.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோனார் செல்வராணி.
போகிறவரை முறைத்துப் பார்த்தாலும் அவளின் விடயத்தில் அவசரப்பட்டு அவளை இழக்க அவனும் தயாராக இல்லை.
*****
அன்று இரவும் அவளை நெருங்கினான் கௌசிகன். காலையில் அவ்வளவு சொன்னோமே அதன் பிறகுமா என்று அவள் பார்க்க, “முறையா தாலி கட்டி, எனக்கு மனுசியா வாழ வந்தவள்தானே நீ. வா வாழு!” என்றான் அவன்.
அவளுக்கோ அவள் சொன்னது அவனுக்கு விளங்கவில்லையா, அல்லது அவன் சொன்னது அவளுக்கு விளங்கவில்லையா என்று குழப்பமாயிற்று!
தானே கல்லெறிந்துவிட்டுக் குழம்பிய குட்டையில் இலகுவாக மீனைப் பிடித்தான் அவன்.