அன்று ஞாயிற்றுக்கிழமை. தீபா மத்தியானம் தான் புறப்படுகிறாள் என்றபோதிலும், காலை உணவை முடித்துக்கொண்டதுமே அம்மா வீட்டுக்குப் புறப்பட்டாள் பிரமிளா.
ஒரு குடும்பமே அவளைச் சுற்றி இருக்கிறது. ஆனாலும் அந்த வீட்டில் தன்னையும் ஒருத்தியாக உணர முடியவில்லை. இங்கிருந்து என்ன செய்வது என்கிற சலிப்பு. அங்குப் போனால் தங்கையோடு கொஞ்ச நேரத்தைச் செலவிடலாம் என்கிற ஆவல். இன்றைக்கு ஞாயிறு என்பதால் அவனும் வீட்டில் இருப்பான் என்கிற ஊகமும் ஓடிவிடு என்று துரத்தியது.
தயாராகிக் கீழே வந்தவளைத் தொலைக்காட்சியில் கவனமாக இருந்த கௌசிகன் கேள்வியோடு திரும்பிப் பார்த்தான்.
‘நேற்றுக் கூப்பிட்டும் வராத உனக்குப் பதில் சொல்ல வேணுமோ?’ என்கிற வீம்புடன் அவன் பார்வையை அலட்சியம் செய்தபடி இறங்கினாள் அவள்.
தமையனுக்கு மாறாக, “உங்கட அம்மா வீட்டை போறீங்களா அண்ணி? இண்டைக்குப் பிரதீபா போறா என்ன?” கேள்வியும் அவளே பதிலும் அவளேயாகக் கேட்டாள் யாழினி.
“ஓம் யாழினி. நேரத்துக்கே போனா கொஞ்சநேரம் அவளோட கதைச்சுக்கொண்டு இருக்கலாம். இப்ப போனா இனி அடுத்த செமஸ்டர் லீவுக்குத்தான் வருவாள்.” என்றவள் பொதுவான ஒரு வருகிறேனுடன் ஸ்கூட்டியில் வெளியேறி இருந்தாள்.
அந்த வீட்டின் கேட்டைத் தாண்டிய பிறகுதான் சிறையிலிருந்து தப்பிய உணர்வு.
இவளைக் கண்டதுமே, “அக்கா! நீங்க மத்தியானம்தான் வருவீங்க எண்டு நினைச்சன். வாங்க வாங்க.” என்று ஓடிவந்து கூட்டிக்கொண்டு போனவளின் உற்சாகம் பிரமிளாவையும் தொற்றிக்கொண்டது.
பெற்றவர்களுக்கும் காலையிலேயே பெண்ணைக் கண்டதில் மிகுந்த சந்தோசம். “வா அம்மாச்சி!” பாசத்துடன் வரவேற்றார் தனபாலசிங்கம்.
சின்ன பெண்ணைப் போன்று ஓடிப்போய் மகளுக்குத் தேநீரும் உணவும் கொண்டுவந்து கொடுத்தார் சரிதா.
“சாப்பிட்டன் அம்மா.” என்று சொன்னதைக்கூடக் கருத்தில் கொள்ளாமல், “அதுக்கு என்ன? கடலைதான் இண்டைக்கு அவிச்சுத் தாளிச்சனான். உடம்புக்குச் சத்து, சாப்பிடம்மா.” என்று அவளைச் சாப்பிட வைத்துவிட்டுத்தான் விட்டார்.
தாங்களாவது அனுசரணையாக இருந்து அவளுக்கு ஆறுதல் தந்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் அவர்கள் கவனித்துக்கொள்வதை உணர்ந்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று. இவர்களுக்காகவாவது அவனை மாற்றி அவனோடு சந்தோசமாக வாழ்ந்துவிட முயல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
பிரதீபா போகிறாள் என்பதில் தனபாலசிங்கம் வாங்கிவந்திருந்த கோழியை வெட்டிக் கறி வைத்து, இரவுக்கு அங்கே போய்ச் சாப்பிடுவதற்கு என்று ரொட்டி சுட்டு, அதற்கு அவள் வேண்டுமே வேண்டும் என்று அடம்பிடித்த உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்து சமையலை முடித்தார் சரிதா.
அது போதாது என்று, “என்ர அக்காச்சி எல்லா. உங்கட ஸ்பெஷல் வட்டலாப்பம் செய்து தாங்கோவன். என்ர ஃபிரெண்ட்ஸ்க்கும் நீங்க செய்றது சரியான விருப்பம். பிளீஸ் பிளீஸ்!” என்று கெஞ்சினாள் பிரதீபா.
சரிதாவுக்குப் பெரிய மகளை வேலை வாங்க மனமில்லை. எனவே, “ஏன் அம்மாச்சி? அக்கான்ர கலியாணத்துக்குச் செய்த அரியதரம், பயத்தம்பணியாரம், முறுக்கு எல்லாம் இருக்கு. வெட்டுப்பலகாரம் செய்திருக்கிறன். முட்டை மா எல்லாம் எடுத்து வச்சிருக்கிறன். பிறகு ஏன் அக்காவை வேலை வாங்குறாய். அவள் உன்னக் கொண்டுவந்து விட்டுட்டு அங்க போகோணும் எல்லோம்மா.” என்று எடுத்துச் சொன்னார் அவர்.
முகம் வாடினாலும், “ஓம் என்ன? ஓகே ஓகே எனக்கு இருக்கிறதே காணும்! ஆனா, அடுத்தமுறை நான் வரேக்க செய்து தரோணும் சரியா?” என்று சமாளித்தாள் சின்னவள்.
அவளை முறைத்துவிட்டு, “என்னவோ நான் அங்க வெட்டி முறிக்கிற மாதிரி எல்லோ ரெண்டுபேரும் கதைக்கிறீங்கள். இஞ்ச எப்பிடி அம்மா பாக்கிறாவோ அப்பிடித்தான் அங்க மாமி பாக்கிறா. நீ வா நாங்க செய்வம்!” என்று வேலையைத் தொடங்கினாள் பிரமிளா.
அவள் என்னவோ சர்வ சாதாரணமாகத்தான் சொன்னாள். கேட்டிருந்த பெற்றோருக்கு அந்த வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன. பரவாயில்லை. பெண் அங்கே சிரமப்படாமல்தான் இருக்கிறாள். தாமும் முறையாக நடந்துவிட வேண்டும் என்று எண்ணி, தனபாலசிங்கம் மகளை அழைத்தார்.
“என்னப்பா?” என்று வந்தவளைப் பாசத்துடன் தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.
“நீங்க இன்னும் இஞ்ச விருந்துக்கு வரேல்லயம்மா. எப்ப எண்டு சொன்னா முறையா வந்து கூப்பிடலாம்.”
அவளின் மாப்பிள்ளை அத்தனை முறைகளையும் தாண்டியவன் அல்லவா. அவனுக்கு என்ன முறை செய்வது? தன் கோபத்தைப் பெற்றோரிடம் காட்ட விரும்பாமல், “பாப்பம் அப்பா. நான் அவரோட கதைச்சிப்போட்டு சொல்லுறேனே. அதுவரைக்கும் நீங்களா ஒண்டும் கதைக்க வேண்டாம்.” என்றாள் பொதுவாக.
அப்படிச் சொன்ன மகளின் தலையை வருடிக்கொடுத்தார் தனபாலசிங்கம். முதல்நாள் அவன் வீட்டுக்குள் வராமல் போனதிலேயே பல விடயங்கள் அவருக்குப் புரிந்திருந்தது. இன்று பெண்ணின் மனதும் புரிந்தது.
பிறந்தது இரண்டுமே பெண் குழந்தைகள் என்று என்றைக்குமே அவர் வருந்தியதில்லை. மாறாகச் சீரும் சிறப்புமாக வளர்த்து, நல்ல கல்வியைக் கொடுத்துச் சொந்தக்காலில் நிற்கவைத்தார். இத்தனையையும் செய்துவிட்டுத் திருமணத்தில் கோட்டை விட்டுவிட்டேனோ என்று மனம் அரித்தது.
தானாவது முன்னின்று மறுத்திருக்க வேண்டுமோ? அவன் உருவாக்கிய பிரச்சினைக்கு வேறு வழியில் தீர்வைக் கண்டிருக்க வேண்டுமோ என்று பல கேள்விகள் அவரைப்போட்டுக் குடைந்தன.
ஆனால், எந்த வழியில் தடுத்திருக்க முடியும் என்று இப்போதும் புலப்படவில்லை. கல்லூரியில் நடந்த இவ்வளவு பெரிய பிரச்சனைக்கே நியாயமான தீர்வு தராமல் உறங்கும் காவல்துறை, இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வைத் தந்திருக்குமா?
இன்னுமே உடலில் காயத்தோடும் ஊமை வலியோடும் நடமாடும் ரஜீவன் என்னாகியிருப்பான்? அவனின் அன்னைக்கு அவரால் என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும்? எல்லாவற்றையும் விட அவர்களின் கையில் அகப்பட்டுக்கொண்ட கல்லூரியும், அங்குக் கற்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலமும்தான் அவரை இன்னுமே மருட்டியிருந்தது.
தன் பெண்ணும் அதைத்தான் முதன்மையாக யோசித்துவிட்டுத் திருமணத்துக்குச் சம்மதித்திருப்பாள் என்று தெரியும். எல்லாம் புரிகிறதுதான். ஆனால், அவரின் அன்பு மகளின் எதிர்காலம் என்னாகப்போகிறது? நெஞ்சின் மேலே யாரோ மிகப்பெரிய பாராங்கல்லை வைத்து அழுத்துவது போலுணர்ந்தார் தனபாலசிங்கம்.
இப்படித் தன் மனது கிடந்து துடித்தபோதும், அதை மறைத்து, “நடந்த எதையும் மாத்தேலாது. நடக்கிறத நல்லதா பாத்துக்கொள்ளோணும் என்னம்மா. என்ர பிள்ளை கெட்டிக்காரி. அவளுக்கு எல்லாம் தெரியும்தானே.” என்றார் மிகுந்த கனிவுடன்.
ஒன்றும் சொல்லாமல் அவரின் தோளில் சாய்ந்துகொண்டாள் பிரமிளா. எப்படிப்பட்ட குடும்பம் அவளுடையது. ஆனால், எங்கே போய் மாட்டியிருக்கிறாள்?
தான் எதையாவது உடைத்துப் பேசப்போய் அதுவே கணவனின் மீது கோபத்தை அவளுக்குள் உண்டாக்கி, அந்தக் கோபத்தில் அங்கே போய் அவள் சண்டை பிடித்து, வாழ்க்கையை இன்னுமே சிக்கலாக்கிக்கொள்ளக் கூடாது என்று, எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு தைரியம் கொடுக்கிற வகையில் தன்னைத் தேற்றிய ஒப்பற்ற தந்தையைக் கலங்கவைத்துவிட்டாளே.
மனம் மீண்டும் மீண்டும் இவர்களுக்காகவாவது நான் நன்றாக வாழ்ந்துவிடக் கூடாதா என்று ஏங்கிற்று.
அவள் அப்படி அமைதியாகிப்போனது தாக்க, “சரி அம்மாச்சி. நீ போய் வேலையைப் பார். தங்கச்சிக்கு நேரமாகப் போகுது!” என்று திசை திரும்பிவிட்டார்.
“ஓம் அப்பா. வட்டலாப்பம் செய்யோணும்.” என்றபடி எழுந்துபோய் ஒரு அடுப்பை மெல்லிய சூட்டில் விட்டு, சக்கரையைக் கரைத்தாள்.
அப்படியே முட்டைகளை எடுத்து உடைத்து அதற்கு ஏலக்காய்த் தூள் சேர்த்துத் துளியளவு உப்புச் சேர்த்து கையாலேயே அடித்தாள். கரைந்துவிட்ட சக்கரையைக் குளிர்வதற்காகக் குளிர்ந்த நீரின்மேல் பாத்திரத்துடன் வைத்து அது குளிர்ந்ததும் டின் தேங்காய்ப் பால், கரைத்த சக்கரை என்று எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்துக் கலந்து, அதை வடித்து ஒரு சில்வர் பாத்திரத்தில் விட்டு, அலுமினியம் பேப்பரால் மூடி நீராவியில் நன்றாக அவித்து எடுத்தாள்.
இதற்குள் அவள் பாவித்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துச் சமையலறையை ஒதுக்கிக் கூட்டி அள்ளியிருந்தாள் பிரதீபா.
“சூடு ஆறட்டும். நீ வா, குளிச்சிட்டு வருவோம்!” என்று கிணற்றடிக்குப் போன பிள்ளைகள் இருவரையும் பார்த்திருந்த பெற்றோருக்கு மனது நிறைந்து போயிற்று. காலத்துக்கும் இருவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
அங்கே கிணற்றடியிலும் அப்பாவின் பழைய சாரம் இரண்டை எடுத்து இரண்டு பெண்களும் குறுக்குக் கட்டுக் கட்டிக்கொண்டு குளிக்கிறோம் என்கிற பெயரில் டேங்கில் நிரம்பியிருந்த தண்ணீரில் போதும் போதும் என்கிற அளவில் கும்மாளம் அடித்தனர்.
தன்னை மறந்து சிரித்து மாய்ந்தாள் பிரமிளா. இத்தனை நாட்களாக அவளைப் போட்டு அழுத்திய பாரங்கள் எல்லாம் எங்கோ சென்றுவிட, பழைய பிரமிளாவாகவே மாறிப்போயிருந்தாள்.
கழுத்தில் கிடந்த புதுத் தாலிக்கொடி அதைக் கட்டியவனை நினைவூட்டினாலும் அவளின் சந்தோசத்துக்குக் குறைவில்லாது போயிற்று!
மத்தியான உணவை நால்வருமாக முடித்து, பிரதீபாவின் பெட்டிகளை எல்லாம் கட்டி, அதை ஒரு ஆட்டோவில் போட்டுவிட்டு ஸ்கூட்டியில் புறப்பட்டனர் பெண்கள்.
“தீபாவை விட்டுட்டு அப்பிடியே அங்க போய்டுவன் அம்மா. நாளைக்குப் பள்ளிக்கூடம் போக முதல் வந்திட்டு போறன். கவனமா இருங்கோ என்ன?” என்று சொல்லும்போது குரல் தேய்ந்து போயிற்று.
இனி அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டும்தானே. எப்படிச் சமாளிப்பார்கள், என்ன செய்வார்கள்? அப்பாவுக்கு வேலையாவது இருந்திருக்கப் பொழுது போயிருக்கும். வேதனையோடு அம்மா அப்பாவைப் பார்த்தாள்.
பெற்றவர்களுக்கும் மனத்தில் பாரமாயிற்று. இதை ஒன்றும் அவர்கள் எதிர்பார்க்காமல் இல்லை. ஆனாலும் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
இந்தப் பிள்ளைகள் பக்கத்தில் இல்லாமல் ஒவ்வொரு நாட்களையும் எப்படிக் கழிப்பது? யாருக்காகக் காலையிலேயே எழுவது? யாருக்காகச் சமைப்பது? யாரோடு கதைப்பது? அழுகை வந்தபோதும் கணவனும் மனைவியும் வெகு கெட்டித்தனமாகத் தங்களின் மனத்தை மறைத்துக்கொண்டனர்.
“விடியக்காலம அந்தரப்பட்டு வெளிக்கிட்டு அவசரமா ஓடி வராம பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு வந்திட்டு போம்மா.” என்று சொன்னார் தனபாலசிங்கம்.