“அப்பிடி என்னப்பா அந்தரம்? எனக்கு ஒரு சிரமமும் இல்ல. அதை விடுங்கோ. நீங்க ரெண்டுபேரும் கவனம் என்ன? ரஜீவன் ஒவ்வொரு நாளும் வருவான். என்ன எண்டாலும் சொல்லுங்கோ வாங்கித்தருவான். வேற… வேற என்ன? நானும் பக்கத்தில தானேப்பா இருக்கிறன். என்ன எண்டாலும் கூப்பிடுங்கோ என்ன. அம்மா… கவனம் என்னம்மா…” எதைச் சொல்வது, எந்த விதத்தில் தைரியம் கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறினாள் அவள்.
“அம்மாச்சி! சும்மா எதையும் யோசிக்காம கவனமா போ. எனக்கு அப்பா இருக்கிறார். அவருக்கு நான் இருக்கிறன். ரெண்டு பேருக்கும் டீவி இருக்கு, வாசிக்க நிறையப் புத்தகங்கள் இருக்கு. போதாக்குறைக்குத் தோட்டம் இருக்கு. நாங்க சமாளிப்போம். நீ கவனமா இரு. சந்தோசமா இருக்கோணும் என்ன. தீபா, கவனமா போகோணும். போனதும் ஃபோன் எடுத்துச் சொல்லோணும் சரியோ? சும்மா விளையாடாமா கவனமா படிக்கோணும் செல்லம். சரிசரி நேரமாச்சு கவனமா வெளிக்கிடுங்கோ.” என்று இரண்டு பிள்ளைகளையும் தேற்றி அனுப்பிவைத்தனர் பெற்றோர்.
அவர்கள் போனபின்னர் வீட்டைத் திரும்பிப் பார்க்க, சில நொடித்துளிகளுக்கு முன்னர் பிள்ளைகளின் சிரிப்பால் நிறைந்து கிடந்த இடம் வெறிச்சோடித் தெரிந்தது.
கணவரைத் திரும்பிப் பார்த்தார் சரிதா. அவரின் முகமும் சரியில்லை என்றதும், “அப்பா எம் எஸ் உதயமூர்த்தி எழுதின ‘எண்ணங்கள்’ வாசிக்க வேணும், அதுக்குத் தொந்தரவே இல்லாத அமைதி வேணும் எண்டெல்லோ சொன்னனீங்க. அதை இப்ப வாசிக்கலாமே?” என்றார், அவரைத் திசை திருப்பிவிடும் நோக்குடன்.
“இப்ப வாசிக்கிற மூட் இல்லையம்மா. நான் கொஞ்சம் சரிஞ்சு எழும்பப் போறன். நீ என்ன செய்யப்போறாய்?” என்றார் அடைத்த குரலில்.
“நானும் கொஞ்சம் சரியட்டோ எண்டு பாக்கிறன்.” இருவருக்குமே அவ்வளவு இலகுவில் பிள்ளைகளின் எண்ணங்களிலிருந்து வெளியே வரமுடியவில்லை. என்ன, மற்றவரிடம் காட்டிக்கொள்ளாமல் தமக்குள் மறைத்துக்கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் திருகோணமலைக்குச் செல்லும் பேருந்து வந்து நின்றிருந்தது. ஆட்டோக்காரரின் உதவியோடு பெட்டிகளை ஏற்றிவிட்டு, அவருக்கான பணத்தைக் கொடுத்து அனுப்பினாள் பிரமிளா.
யன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்ட தீபாவின் அருகே தானும் அமர்ந்து, “ஏன் அமைதியா இருக்கிறாய்?” என்று வினவினாள்.
“இல்லையே. நான் எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன்.” என்று புன்னகைத்தாள் பிரதீபா.
“அப்பிடியோ? எனக்கு என்ர தங்கச்சியைப் பற்றித் தெரியாது தானே. அதால நீ சொல்லுறதை நம்பத்தான் வேணும்.” என்று சிரிப்புடன் சொன்ன தமக்கையைக் கனிவுடன் பார்த்தாள் தங்கை.
அவளுக்கே ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும். ஆனாலும் அம்மாவை, அப்பாவை, அவளை என்று எல்லோரையும் கவனித்துக்கொள்கிறாள். இப்படி ஒரு அக்கா கிடைக்க என்ன தவம் செய்தாளோ தெரியாது.
ஆசையோடு அவளை அணைத்துக்கொண்டு, “உங்களை எல்லாரையும் விட்டுட்டு போக மனமே இல்லை அக்கா. அதுதான்… வேற ஒண்டும் இல்லை.” என்றாள் முகம் முழுக்கச் சிரிப்பைப் படரவிட்டு.
உண்மைதானா என்று தங்கையின் முகத்தை ஆராய்ந்தாள் பிரமிளா. அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல், முகத்தை மலர்த்திக் குறும்புச் சிரிப்பு விரிய படக்கென்று கண்ணைச் சிமிட்டினாள் சின்னவள்.
“உன்ன!” என்றவளுக்கும் முகம் மலர்ந்துபோயிற்று. பேருந்தில் ஓட்டுநர் ஏறி அமர்வதைக் கவனித்துவிட்டு எழுந்து, கவனம் சொல்லி மனத்தில் பாரத்துடன் விடைகொடுத்தாள்.
பேருந்து நகரத் தொடங்கியது. தனியாக நின்று தலையாட்டி வழியனுப்பிய தமக்கையைப் பார்த்தபோது, அநாதரவாக அவளை விட்டுவிட்டுத் தான் போவதுபோல் தோன்றிவிட, சொரியப் பார்த்த கண்ணீரை எப்படி அடக்கிக்கொண்டாள் என்று தெரியாமலேயே அடக்கி, அவளுக்கு டாட்டா காட்டி விடைபெற்றாள் பிரதீபா.
அவர்கள் வந்தது, பஸ்ஸில் ஏறியது, பஸ் புறப்படுகிறவரை அங்கேயே நின்று பிரமிளா வழியனுப்பியது என்று எல்லாவற்றையும் சினத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் மோகனன்.
பிரதீபா இன்று புறப்படுகிறாள் என்று தெரிந்ததால் பஸ்ஸில் வேறு யாரையோ தேடி ஏறுவதுபோல் ஏறி, அவளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணித்தான் கடந்த இரண்டு மணி நேரமாகக் காத்திருந்தான்.
கூடவே வந்த பிரமிளா பஸ் ஏற்றிவிட்டுப் போகாமல் அவளோடேயே அமர்ந்திருந்து பேசி, பஸ் புறப்படுகையில் இறங்கி, பஸ் கண்ணுக்கு மறைந்த பிறகுதான் அங்கிருந்தே போனாள். எந்தப் பக்கம் போனாலும் குறுக்காக வருகிறாளே என்கிற எரிச்சலோடு வண்டியை உதைத்துக் கிளப்பினான் அவன்.
பேருந்தில் போய்க்கொண்டிருந்த பிரதீபா, கலங்கிவிட்ட விழிகளைத் துடைத்துக்கொண்டு, ஃபோனில் விறுவிறு என்று கௌசிகனின் பெயரைத் தேடி எடுத்து அழைத்தாள்.
இரண்டாவது ரிங்கிலேயே, “கௌசிகன்!” என்றது அவனது அழுத்தமான குரல்.
“பெரிய கிழிஞ்ச பெயர்! கௌ… சிகனாம்! நீங்க ஏன் நேற்று எங்கட வீட்டை வரேல்ல? வந்து சாப்பிட்டுப் போகேல்ல? உங்களால எங்கட வீட்டுல எல்லாருக்கும் கவலை. ஏன் இப்பிடிச் செய்றீங்கள்? எங்கட அக்காவைக் கட்டுங்கோ எண்டு நாங்க உங்களைக் கேட்டனாங்களோ? இல்லை தானே. விருப்பம் இல்லை எண்டு சொல்லியும் கட்டினது நீங்க. அப்பிடி கட்டினா முறையா எல்லாத்தையும் செய்யோணும். அதுதான் நல்ல மனுசருக்கு அழகு. அதை விட்டுட்டு என்ன செய்துகொண்டு இருக்கிறீங்க? எனக்கு உங்களைப் பிடிக்கவே இல்லை.” இருந்த ஆத்திரத்துக்கு என்ன பேசுகிறோம் என்று உணராமலேயே பொரிந்து தள்ளினாள்.
இது யார் என்று முதலில் திகைத்து, பின் கண்டுபிடித்து, “தீபா?” என்று அவன் கேள்வியாக இழுக்க, “என்ன நீங்க அப்பிடிக் கூப்பிடக் கூடாது!” என்று சீறினாள் அவள். “என்னில உண்மையா பாசம் வச்சிருக்கிறவே மட்டும்தான் அப்பிடிக் கூப்பிடுறது! நீங்க கூப்பிடக் கூடாது! என்னோட கதைக்க வேண்டாம். வைங்க ஃபோனை!” தான்தான் அவனுக்கு அழைத்தோம் என்பதையே மறந்து அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.
அதன் பிறகுதான் கொஞ்சமேனும் மனம் அடங்கிற்று. அக்காவை வருத்தியவருக்குக் கொஞ்சமாவது திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்று சந்தோசப்பட்டாள். நிதானத்துக்கு வர வர வேறு ஒரு பயம் கவ்விப்பிடிக்கத் தொடங்கிற்று.
தான் பேசிய கோபத்தை அக்காவிடம் காட்டிவிடுவாரோ? நல்லது செய்வதாக எண்ணித் தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்று கலங்கிக்கொண்டிருக்க அவனே அழைத்தான்.
நெஞ்சில் கலக்கம் பிறக்க, நடுங்கிக்கொண்டே அழைப்பை ஏற்று, “ஹலோ…” என்றாள் உள்ளே போன குரலில்.
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் இந்த நம்பர்ல இருந்து ஆரோ ஒரு ஆள் எடுத்து என்னைத் திட்டிப்போட்டு வச்சது. அது ஆர் எண்டு தெரிஞ்சு கொள்ளலாமா?” என்றது அவனது நகைக்கும் குரல்.
மனத்தில் இருந்த பயம் அவனது இலகு குரலையும் நகைப்பையும் உணரவிடாமல் செய்ய, பேச்சு வராமல் நின்றாள் அவள்.
அவளின் நிலையை அவனால் கணிக்க முடிந்தது.
“தீபா…” என்று அழைத்தான்.
“ம்ம்…”
“பஸ் ஏறிட்டியா?”
“ஓம்.”
“கவனமா போகோணும் என்ன. திருகோணமலைக்குப் போய் இறங்கினதும் எனக்கு ஒரு மெசேஜ் போட்டுவிடு.” பயந்திருக்கிறாள் என்று புரிந்துவிட இதமான குரலில் பேசினான்.
அவன் அப்படி அக்கறை எடுத்துச் சொன்னது மனத்துக்கு இதம் சேர்க்க, “ம் சரி.” என்றாள் சற்றே தெளிந்த குரலில்.
“என்ன பதில் எல்லாம் சுருக்கமா வருது? அத்தான்ல இன்னும் கோபம் போகேல்லையா?” சிறு சிரிப்புடன் அவளைப் பேசவைக்க முயன்றான் அவன்.
“அத்தான்… அது சொறி… அத்தான் நான் யோசிக்காம…” எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் அவள்.
ஆனால், அவள் அத்தான் அத்தான் என்று வாய்க்கு வாய் அழைத்தது அவனை அசைத்தது; அவள் மீதான பற்றினை உண்டாக்கிற்று. “விடு! கதைச்சது எங்கட பி…ர…தீ…பா தானே.” என்றான் நகைத்தபடி.
‘பொல்லாத அத்தான்! என்ர பெயரை வச்சு இழுக்கிறார்.’ தன் சிரிப்புச் சத்தம் அவனுக்குக் கேட்டுவிடக் கூடாது என்று வாயைப் பொத்திக்கொண்டாள் பிரதீபா. அவன் கோபித்துவிடவில்லை என்பதில் மனதில் உற்சாகம் பொங்கி வழிந்தது.
“என்ன சத்தத்தைக் காணேல்ல?”
“அது அத்தான்… ஓடுற பஸ்ல ஒண்டும் கிளியரா கேக்கேல்லை. நான் பிறகு எடுக்கவா?” என்று கேட்டுவிட்டு அவசரமாக அழைப்பைத் துண்டித்தவளின் முகத்தின் முறுவல் நெடுநேரமாக மறையவே இல்ல.
வீட்டுக்கு வந்த பிரமிளா மனத்தளவில் முற்றிலுமாகக் களைத்துப் போயிருந்தாள். அவனது காரைக் காணவில்லை. வீட்டில் அவன் இல்லை என்பதே சற்று அவளை ஆற்றுப்படுத்தியது.
“சாப்பிடுறியாமா?” என்ற செல்வராணியிடம், “இல்ல நான் சாப்பிட்டன்.” என்றுவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்தவளுக்கு இது என்ன வாழ்க்கை என்றுதான் தோன்றிற்று.
அம்மா அப்பா அங்கே தனியே. தங்கை திருகோணமலையில் தனியே. அவள் இங்கே தனியே. குருவிக்கூடாக இருந்த குடும்பம் இப்படிப் பிரிந்து போயிருக்கிறோமே என்கிற வேதனையில் உழன்றுகொண்டிருந்தவள் எப்படி உறங்கினாள் என்று தெரியாமலேயே உறங்கிப் போயிருந்தாள்.
மாலையில் வீடு வந்த கௌசிகனை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனையாள் கட்டிலை நோக்கி இழுத்தாள். ஒரு முறுவலுடன் வீட்டுடையை மாற்றிக்கொண்டு அவளை நெருங்கினான் அவன்.