கைப்பேசியின் சத்தத்தில் துயில் கலைந்தாள் பிரமிளா. அப்போதுதான் கணவனின் கையிலேயே மீண்டும் உறங்கிப்போயிருக்கிறோம் என்று புரிந்தது. அவனும் நல்ல உறக்கத்திலிருந்தான். அவனிடமிருந்து மெல்ல விலகிக் கைப்பேசியை எட்டி எடுக்க, “என்ன?” என்றான் உறக்கம் கலையாத குரலில்.
“தீபா.” என்றவாறே கட்டிலை விட்டு எழுந்து அழைப்பை ஏற்றாள்.
“போய்ச் சேர்ந்திட்டியா தீபா?”
“ஓம் அக்கா. ரூமுக்கு வந்து ஒரு குளியலும் போட்டாச்சு. அம்மாக்கும் எடுத்துச் சொல்லிட்டன். அத்தானும் சொல்லச் சொன்னவர், சொல்லி விடுறீங்களா?” அவளுக்கு இன்னுமே அவனுக்கு அழைக்கத் தயக்கமாயிருந்தது.
இவன் எப்போது அவளிடம் சொன்னான் என்று கேள்வி ஓடினாலும், தலையணையைக் கட்டிக்கொண்டு கிடந்து தன்னையே தொடரும் அவன் பார்வையிலிருந்து தப்பிக்க எண்ணி, “பக்கத்திலதான் இருக்கிறார். குடுக்கிறன் நீயே சொல்லு.” என்றுவிட்டு அவனிடம் கைப்பேசியை நீட்டினாள்.
“ஐயோ வேண்டாம் குடுக்காதீங்கோ. குடுக்காதீங்கோ. நான் கதைக்கேல்ல…” என்றவளின் அலறலை உள்வாங்கியபடி, “ஏன், என்னோட எல்லாம் கதைக்க மாட்டீங்களா பி…ர…தீ…பா?” என்று கேட்டான் அவன்.
“அது அத்தான்… நான் வந்து சேர்ந்திட்டன் அத்தான். அதச் சொல்லத்தான் எடுத்தனான். பாய் அத்தான்.” என்று உளறிக்கொட்டிவிட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.
சிரிப்புடன் நிமிர இங்கே அவளின் அக்காளும் குளியலறைக்கு ஓடியிருந்தாள்.
உறங்கி எழுந்த அலுப்புத் தீரக் குளித்துவிட்டு வந்தவளுக்கு மாலைத் தேநீரைப் பலகாரத்தோடு கொடுத்தார் செல்வராணி. யாழினியும் சேர்ந்துகொள்ள, “அம்மா அப்பா சுகமா இருக்கினமாம்மா?” என்று விசாரித்தார் செல்வராணி.
“ஓம். சுகமா இருக்கினம்.” முகம் பாராமல் அவள் சொன்ன பதில் அவரின் மனத்தைத் தைத்தது. இருந்தும் விடாமல், “நாளைக்கு ஸ்கூல் போறியாம்மா? இல்ல லீவா?” என்று கேட்டு அவளைத் தன்னோடு பேசவைக்க முனைந்தார்.
“இல்ல போகோணும்.” என்று சொல்லிவிட்டு, யாழினியின் புறம் திரும்பி, “கீழ இருக்கிற என்ர மேசையை மேல எங்கட அறைக்குக் கொண்டு போகோணும். ரெண்டு பேரும் சேர்ந்து தூக்குவமா?” என்று கேட்டாள்.
என்ன முயன்றாலும் தன்னைத் தவிர்க்கும் மருமகளின் செய்கையில் காயப்பட்டார் செல்வராணி. வீட்டினர்தான் அப்படி என்றால் வந்த மருமகளுமா? இந்த ஜென்மத்தில் எனக்கு இதுதான் வாய்த்திருக்கிறது போலும் என்றெண்ணித் தன்னையே நொந்துகொண்டார்.
“வாருங்கள் அண்ணி! வந்து என் பலத்தை வந்து பாருங்கள்!” அணிந்திருந்த பிளவுசின் கையை மேலே வீராவேசமாக இழுத்துவிட்டுவிட்டு புஜத்தைப் பரிசோதித்தபடியே எழுந்து வந்தாள் அவள்.
“பலத்தைப் பாருங்க எண்டு சொல்லிப்போட்டு எதுக்குக் கையில இருக்கிற எலும்பைக் காட்டுறாய்?”
“அண்ணி!” என்று சிணுங்கினாள் சின்னவள். “இந்தளவுக்கு அவமானப்படுத்தக் கூடாது!” என்றவளைப் பார்த்து அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.
பெண்கள் இருவருமாக மேசையைத் தூக்கிக்கொண்டு இரண்டு படிகள் ஏறியிருப்பார்கள். அறையிலிருந்து வெளியே வந்த கௌசிகன் பார்த்துவிட்டு, “என்ன செய்றீங்க ரெண்டு பேரும்?” என்று அதட்டியபடி வேகமாக இறங்கி வந்தான்.
“அண்ணின்ர மேசையை மேல உங்கட ரூமுக்குக் கொண்டுபோறம் அண்ணா.” பயந்த குழந்தையாகப் பதில் சொன்னாள் யாழினி.
“அதுக்கு? என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?” என்று மனைவியிடம் கடிந்துவிட்டு, “மோகன் நிக்கிறானா? அவனைக் கூட்டிக்கொண்டு வா!” என்று தங்கையை அனுப்பிவிட்டான்.
ஓடிப்போய்ச் சின்ன தமையனைக் கையோடு கூட்டிக்கொண்டு ஓடிவந்தாள் யாழினி.
அண்ணனும் தம்பியுமாகக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தனர். நடப்பதை நம்பமுடியாமல் பார்த்திருந்தாள் பிரமிளா.
“வேற ஏதும் கொண்டுபோகோணுமா?” என்றான் அவளிடம்.
“கொஞ்ச புக்ஸ் இருக்கு. அது நானே போக வரேக்க கொண்டுபோய்ச் சேர்ப்பன்.”
அவள் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். மாடிக்குச் செல்லும் படியின் பின் பக்கமாக இடுப்பளவு உயரத்தில் மூன்று வரிகளுக்குப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தாள். இதை இவள் எப்போது கொண்டுபோய்ச் சேர்ப்பாள் என்று நினைத்துவிட்டு அண்ணனும் தம்பியுமே கொண்டுபோகத் தொடங்கினர்.
இந்தளவுக்கு உதவி செய்வான் என்று பிரமிளா சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரஜீவனைக் கேட்கத்தான் நினைத்தாள். பொருட்களைக் கொண்டுவந்து இறக்கிய அன்று அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்ட யாழினி, சங்கடத்துடன் அவளைப் பார்த்த செல்வராணி, எரிச்சலும் சினமுமாக முறைத்த மோகனன் என்று அங்கிருந்தவர்களின் பார்வையே சரியில்லை.
அதை உணர்ந்த ரஜீவனும் சங்கடத்துடன் அவசர அவசரமாக இறக்க, கீழே இறக்கியதே போதும் என்று அவனை அனுப்பிவிட்டிருந்தாள். கூடவே, ஒரு குமர்ப்பிள்ளை, அதுவும் அவனோடு ஏற்கனவே பிரச்சனைப்பட்டவள் இருக்கிற வீட்டுக்கு அவனை அடிக்கடி வரவைப்பதும் சரியல்ல என்று விளங்கிற்று.
அந்த வீட்டில் இருக்கிற எந்த ஆணிடமும் தானாகச் சென்று உதவி கேட்க விருப்பமில்லை. அவனே கண்டுவிட்டு வந்து உதவியது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவளும் புத்தகங்களை மேலே கொண்டுபோகத் தொடங்க யாழினியும் சேர்ந்துகொள்ள இருவர் நால்வரானதில் வேகமாகவே வேலை முடிந்திருந்தது.
பார்த்த செல்வராணிக்கு மனது நிறைந்தே போயிற்று. இப்படி எல்லாவற்றிலும் தன் வீட்டுப் பிள்ளைகள் இணைந்து ஒற்றுமையாக நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நடக்க வேண்டுமே!
பிரமிளாவுக்கு இப்போது அவனிடம் நன்றி சொல்லவேண்டுமா என்று ஓடியது. அவன் மாத்திரமல்ல மோகனனும் சேர்ந்து உதவினானே. தமையனின் பேச்சைத் தட்ட முடியாமல் செய்திருப்பானாயிருக்கும். அவளுக்கும் கணவனிடம் நேராக நன்றியைச் சொல்லப் பிரியமில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னுடைய விசேச உணவான வட்டலாப்பத்தை அன்றைக்கு இரண்டாவது முறையாகச் செய்து, குட்டிக் கிண்ணங்களில் போட்டு யாழினியிடம் எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டாள்.
உண்டு பார்த்துவிட்டு, “வெகு சுவையா செய்திருக்கிறாயம்மா. நானே இதுவரைக்கும் இந்த ருசியில செய்தது இல்ல.” என்று மனதாரப் பாராட்டினார் செல்வராணி.
என்னதான் அவள் அவரை ஒதுக்கினாலும் பொல்லாதவள் என்றோ குணம் சரியில்லாதவள் என்றோ ஒதுக்க முடியாதபடிக்கு நல்ல பெண்ணாகத்தான் தெரிந்தாள் பிரமிளா. அவளுக்கு அவர் மீது கோபம். அது மறைந்த பின்பு தன்னோடும் கதைப்பாள் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.
“அண்ணி! டேஸ்ட் எண்டா அப்பிடி ஒரு டேஸ்ட்! இனி ஒவ்வொரு வீக்கெண்டும் எனக்கு மட்டும் செய்து தரோணும் சரியோ?” என்று கேட்டபடி வந்து இன்னுமொருமுறை தன் கிண்ணத்தை நிரப்பிக்கொண்டு போனாள் யாழினி.
சமையலறையை ஒதுக்கிவிட்டு யாழினியோடு மேலே சென்று புத்தகங்களை அடுக்கி, நாளைய பாடத்திட்டத்துக்கானவற்றைத் தயார் செய்து, நாளைக்கு அணியவேண்டிய சேலையையும் எடுத்து வைத்தாள் பிரமிளா.
“படிச்சு முடிச்சுத்தானே அண்ணி வேலைக்குப் போறது? உங்களைப் பாத்தா படிச்சே முடியாது போலயே. இதுல நான் எல்லாம், ‘ஒவ்வொரு நாளும் டிசைன் டிசைனா சாறியை கட்டிக்கொண்டு எங்களைச் சாகடிக்க வந்திடுவினம்’ எண்டு டீச்சர்ஸ்ஸ பற்றி நினைச்சிருந்தேனே.” என்று வளவளத்தவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் பிரமிளா.
“ஓகே ஓகே! எனக்கு விளங்குது. ஆனா டீச்சர்ஸ் எல்லாரும் புதுசு புதுசா நல்ல வடிவான சாறி கட்டிக்கொண்டு வருவினம் எண்டுறதும் உண்மைதான் அண்ணி.”
“பின்ன என்ன ஒரே சாறிய ஐஞ்சு நாளும் கட்டச் சொல்லுறியா? கண்ணையும் உறுத்தாம கருத்தைக் கவருற மாதிரி சாறி தேடி எடுக்க நாங்க படுற பாடு எங்களுக்குத்தானே தெரியும்.”
“அதுவும் சரிதான்…”
அப்போது பார்த்துப் பிரமிளாவின் கைபேசி அழைத்தது. கட்டிலில் கிடந்ததை எடுத்துக் கொடுக்கப்போன யாழினியின் கை, ரஜீவன் என்ற பெயரைப் பார்த்ததும் ஒரு நொடி நின்றது. இதயம் வேகமாகத் துடித்தது.
அன்று அவன் கைகள் இரண்டையும் அடித்துக் கும்பிட்டு ஆளை விடு என்று சொன்னது மின்னி மறைய, விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு எடுத்துக்கொடுத்தாள்.
அவள் அழைப்பை ஏற்க, ‘நான் கீழ போறன்’ என்று சைகையில் காட்டிவிட்டு ஓடிவந்து அறைக்குள் புகுந்த பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டாள்.
அன்றைக்குப் பிறகு இனி அவனோடு கதைக்க முயல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தாள். அதில் இப்போதும் மாற்றமில்லை. ஆனாலும் அவளின் மனநிலையையே மாற்றிவிடுவதற்கு ரஜீவன் என்று ஒளிர்ந்த அந்தப் பெயரே போதுமாயிருந்தது.
அவளால் அவன் நிறையக் காயப்பட்டிருக்கிறான். கைப்பேசி உடைந்துபோயிருக்கிறது. அதனால் உண்டான இரக்கம், தன்னிடம் இருக்கும் பழைய கைப்பேசியை அவனுக்குக் கொடுப்போமா என்று யோசிக்க வைத்தது.