அன்று, மூன்றாவது பாடவேளை முடிந்து வகுப்பை விட்டு வெளியே வந்தாள் பிரமிளா. அவளிடம் வந்து நிர்வாகி அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார் பியூன்.
அவளின் முகம் அப்படியே மாறிப்போயிற்று. இன்றைய நாளின் நிம்மதியையும் பறிக்கப்போகிறான். என்ன ஏது என்று அறிய முதலே மனம் சொல்லிற்று. ஆனாலும் ‘நிர்வாகியின் அழைப்பு’க்குப் பணிந்துதான் ஆக வேண்டும். தன் நிலையை நொந்தபடி சந்திக்கச் சென்றாள்.
இன்னுமே வீட்டிலாகட்டும் கல்லூரியிலாகட்டும் அவனை இயல்பாக எதிர்கொள்ள முடிவதில்லை. ஆனால், அவன் அவளின் கணவன். அவர்கள் ஒரு இல்லறத்தைக் கொண்டுசெல்கிறார்கள். என்ன விசித்திரமான வாழ்க்கை இது?
கதவைத் தட்டிவிட்டுத் திறக்க, அவனும் அவனோடு எதையோ மும்முரமாகப் பேசிக்கொண்டு இருந்த காவல்துறை அதிகாரியும் திரும்பிப் பார்த்தனர். “வா!” என்று அழைத்து இருக்கையைக் காட்டினான் கௌசிகன். அமர்ந்தவளுக்கு இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார் என்கிற கேள்வி.
அதற்கான பதில்போல், “உன்னச் சந்திக்கத்தான் வந்திருக்கிறார்.” என்று சொன்னான் அவன்.
அவளின் பார்வை அவர் புறமாகத் திரும்பிற்று. அவனருகில் மிகுந்த பணிவுடன் அமர்ந்திருந்த அவர், “சுகமா இருக்கிறீங்களாம்மா?” என்று மிகுந்த நயத்துடன் விசாரித்தார்.
இதே மனிதர்தானே அன்று காவல் நிலையத்தில் அவளை மரியாதையற்று நடத்தினார். சந்தேகமாகப் பார்த்தார். அப்போது அவள் பெரிய பின்புலம் இல்லாத சாதாரண ஆசிரியை. இன்றைக்கு அருகில் இருக்கிற அந்தப் ‘பெரிய மனிதனின்’ மனைவி. அதனால்தான் இந்தப் பணிவு!
மனத்தில் எழுந்த வெறுப்பை மறைத்துக்கொண்டு, “ஓம் நீங்க?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தாள்.
“உங்கட கணவர் மாதிரியான பெரிய மனுசரின்ர துணை இருக்கேக்க எங்களுக்கு என்ன துன்பம் வரப்போகுது.” கௌசிகனின் புறமாக அசட்டுச் சிரிப்பொன்றைச் சிந்தியபடி சொன்னார் அவர்.
மற்றவரை உச்சிகுளிர வைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தங்களின் தரத்தைத் தாமே குறைத்துக்கொள்ளும் இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள்?
நான் என்கிற என்னைத் தனித்துக் காட்டுவதே என் சுயம் இல்லையா. அந்தச் சுயத்தைத் தொலைத்து, அடுத்தவனுக்கு வால் பிடித்து அப்படி என்ன வாழ்க்கையை வாழ்கிறார்கள்?
இரவுகளில் உறக்கம் வருமா? நெஞ்சில் நிம்மதிதான் இருக்குமா? காவல் அதிகாரி என்கிற பதவிக்கேனும் அவரின் மீது மதிப்பே எழாமல் போயிற்று. அவர் சொன்னதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாது மரக்கட்டையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவரின் முகத்தில் மெல்லிய சுருக்கம் விழுந்தது. மேசையில் இருந்த பேனாவை உருட்டினார். கௌசிகனைத் திரும்பிப் பார்த்தார். அவனின் புருவங்களும் சுளித்திருந்தன. அவருடன் சேர்ந்து அவளும் பின்பாட்டுப் பாடவில்லை என்று கோபமோ? அதற்கு நீ வேறு யாரையும் பார்க்க வேண்டும். மனத்தில் சிலுப்பிக்கொண்டாள்.
அவள் அசையமாட்டாள் என்று தெரிந்ததும் அதிகாரி மெல்ல ஆரம்பித்தார்.
“நீங்க கணவன் மனைவி. இண்டைக்குச் சண்டை பிடிப்பீங்க. நாளைக்கு ஒற்றுமையாகி கேஸை வாபஸ் வாங்கச் சொல்லுவீங்க. அதுக்கு ஏன் ஒரு குழு அமைச்சு, மாடா உழைக்கிற எங்கட நேரமும் காலமும் வீணாக? அதுக்குக் கம்ளைண்ட்ட இப்பவே வாபஸ் வாங்கிட்டீங்க எண்டா எங்களுக்குச் சிரமம் இல்லாம இருக்கும். இதுக்காக நீங்க அங்க ஸ்டேஷனுக்கு வரத் தேவையில்ல. நான் பேப்பர்ஸ் எல்லாமே ரெடியா கொண்டு வந்திருக்கிறன். இதுல ஒரு சைன் வச்சீங்க எண்டா போதும்.” என்றவாறு, மேசையில் கிடந்த சில பழுப்பு நிற ஒற்றைகளை அவளின் முன்னால் நீட்டினார்.
இதற்குள் இப்படி ஏதாவதாகத்தான் இருக்கும் என்று ஊகித்தாள்தான். ஆனாலும் கொஞ்சமேனும் மனச்சாட்சி இல்லாமல் வாய் திறந்து இப்படிக் கேட்க முடிகிறதே.
நிதானத்தை வரவழைத்துக்கொண்டு, “இண்டைக்குச் சண்டை பிடிச்சிட்டு நாளைக்கு வந்து ஒற்றுமை ஆகிட்டோம் எண்டு சொல்லுறதுக்கு நான் ஒண்டும் உங்களிட்ட வந்து என்ர மனுசன் என்னைக் கொடுமை செய்றார், அடிக்கிறார் எண்டு முறையிடேல்ல. இது ஒரு கல்லூரிப் பிரச்சினை. ஒரு கும்பல் பள்ளிக்கூடத்துக்க அத்துமீறி நுழைஞ்சு இருக்கினம். மாணவிகளைத் தாக்கிக் காயப்படுத்தி இருக்கினம். எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம் இருக்கு. இதைச் செய்த முகங்களும் தெளிவா இருக்கு. அந்த முகங்கள் ஆரு, அவர்களைச் செய்ய வச்சது ஆரு எண்டுறதுதான் கேள்வி. இவர் இந்தப் பள்ளிக்கூட நிர்வாகி. நான் ஆசிரியை. அதால எண்டைக்குமே நானோ இவரோ வந்து வாபஸ் வாங்க மாட்டோம். இந்தப் பள்ளிக்கூட நிர்வாகியா இவரும் அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலைக் கண்டுபிடிச்சுத் தண்டனை வாங்கிக் குடுக்கிறதைத்தான் விரும்புவார். என்ன நான் சொல்லுறது சரிதானே?” என்றாள் அவனிடமே நேரடியாக.
அவன் அவளுக்கு வலை விரிக்க அவளோ அந்த வலைக்குள் இருந்தபடியே அதைத் தூக்கி அவன் மீதே போட்டுவிட்டாள். இருவரின் விழிகளும் மற்றவர் அறியாத சீற்றத்துடன் மோதிக்கொண்டன.
அவனின் அனுமதி இல்லாமல் அவர் வந்திருக்கப்போவதில்லை என்பதும் அதிகாரியின் வாய் பேசினாலும் வார்த்தைகள் அவனுடையவை என்பதும் அவளுக்குத் தெரியாமல் இல்லை. தான்தான் அவர்மூலம் இதைச் செய்விக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாமல் இருக்கப்போவதில்லை என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் மசிய மறுக்கிறாள். அவன் விழிகளில் ஆத்திரப் பளபளப்பு நன்கே ஏறிற்று!
என்னதான் தைரியமாகப் பேசினாலும் கணவனின் கடினப்பட்டுவிட்ட முகத்தைக் காண்கையில் அச்சத்தில் மனது சில்லிட்டுப் போவதை அவளால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
“இல்ல இப்பதான் திருமணமான புதுசு. இதையெல்லாம் யோசிச்சு உங்கட சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாம் எண்டு யோசிச்சன். வாழ்க்கையைச் சந்தோசமா அனுபவிக்க வேண்டிய நேரத்தில முடிஞ்சுபோனதுகளைப் பிடிச்சுத் தொங்கி என்ன காணப்போறம் சொல்லுங்கோ? உங்கட அப்பாவும் ஓய்வு பெற்றிட்டார். கல்லூரியும் பழையபடி இயங்குது. இவரே உங்கட கணவராவும் வந்திட்டார். ஒரு பள்ளிக்கூடத்துக்கையே தைரியமா நுழைஞ்சு பிள்ளைகளைக் காயப்படுத்தின கும்பலால நாளைக்கு உங்களுக்கு ஏதாவது நடந்திட்டா பயம்தானே?”
நல்லது சொல்வதுபோல் மறைமுகமாக மிரட்டுகிறாரா என்ன? அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது.
“அதைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்கோ. முந்தி(முன்னர்) வேணுமெண்டால் நான் சாதாரண ஒரு அதிபரின்ர மகள். ஆரும் எப்பிடியும் மிரட்டலாம். அடிபணிய வைக்கலாம். ஆனா இப்ப என்ர கணவர் இந்த ஊர்லையே செல்வாக்கான மனிதர். என்னைக் காப்பாத்த அவர் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனா அவர் இருக்கிறார் எண்டுற தைரியம்தான் இந்தக் கேஸை விடவே கூடாது எண்டுற எண்ணத்தை எனக்கு இன்னுமே அதிகமாக்கினது.” என்றாள் அழகான முறுவல் ஒன்றுடன்.
கௌசிகனின் புறம் திரும்பி, “எனக்கு ஒண்டு வர நீங்க விடமாட்டீங்கதானே?” என்றாள் உரிமையுடன்.
தனியறையில் கூட யாரோவாக்கித் தள்ளி நிறுத்துகிறவளின் இந்த உரிமைப் பேச்சில் அவன் முகம் கறுத்தது நன்றாகவே தெரிந்தது. “ம்ம்” எதற்கு அந்த ம்மைக் கொட்டினான் என்றே புரியாத பாவத்துடன் அவரிடம் திரும்பி, “வேற ஏதாவது கேக்கோணுமா?” என்றான்.