அவன் பார்வையில் இருந்ததைப் படித்தவாறே, இல்லை என்று தலையசைத்தார் அதிகாரி.
இதழோரத்து வளைவை இலகுவாக அடக்கியபடி எழுந்து, “அப்ப நான் வகுப்புக்குப் போறன்!” என்றுவிட்டு வெளியே வந்தவளுக்கு மனத்தில் மிகுந்த திருப்தி.
இருந்தாலும் மாணவிகள் போராடியது, அந்தக் கும்பல் உள்ளே நுழைந்தது, கல்லூரியே அல்லோலகல்லோலப்பட்டது, நிலைகுலைந்துபோய் அமர்ந்திருந்த தந்தை, அவளின் புகைப்படம் பேப்பரில் வந்தது என்று அனைத்துக் காட்சிகளும் மனத்திரையில் மீண்டும் விரிந்தன. இதற்கெல்லாம் என்ன செய்தாள் அவள்? என்ன செய்ய முடிந்தது? அமைதியை இழந்த மனத்துடன் வகுப்புகளை எடுத்து முடிப்பதற்குள் தன் மொத்த சக்தியையும் இழந்துவிட்டிருந்தாள் பிரமிளா.
வாழ்க்கை இத்தனை கனம் மிகுந்ததாக மாறும் என்று கனவிலேனும் எண்ணியதில்லை. இனி என்னாகும்? ஒளியே ஊடுருவ முடியாத அடர்ந்த காட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டு விடிவெள்ளியைத் தேடுகிறாளோ?
மனம் கிடந்து குமையக் களைத்துப்போய் வீடு வந்தவளை வரவேற்றது ஹாலில் அமர்ந்திருந்த ராஜநாயகம்தான். கொழும்புக்குப் போன இந்த மனிதர் எப்போது வந்தார் என்று ஓடிய யோசனையை, எப்போது வந்தால் எனக்கு என்ன என்று எண்ணியபடி தங்களின் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அவன் இன்னும் வந்திருக்கவில்லை என்று கார் இல்லாத முற்றம் ஏற்கனவே சொல்லிற்று. கல்லூரிக்கு வந்துவிட்டு மத்தியானம் போலவே கடைக்குப் போய்விடுவது வழக்கம். சிலநேரம் அவனுடைய ஹோட்டலுக்குப் போய்விட்டு இருள் கவ்வும் பொழுதில்தான் வருவான். இல்லையோ மாலையே வந்துவிடுவான் என்று இத்தனை நாட்களில் அவனின் நாளாந்த நடவடிக்கையை அறிந்து வைத்திருந்தாள்.
அதனால்தான் அம்மா வீட்டுக்குப் போகாமல் இங்கேயே வந்ததே. அங்கே போனால் நிச்சயம் தன் முகம் காட்டிக்கொடுத்துவிடும். கேட்டால் மறைக்க மனம் வராது. எல்லாவற்றையும் சொல்லித் தனியே இருக்கும் அவர்களை ஏன் வருத்த?
முகம் கழுவி உடைமாற்றிக்கொண்டு வந்தவளுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தார் செல்வராணி.
எவ்வளவு ஒதுங்கிப்போனாலும் கருத்தில் கொள்ளாமல் பார்த்து பார்த்துக் கவனிக்கும் அவரின் அன்பில் மனம் சுட்டுவிட, “நானே போட்டுச் சாப்பிட்டு இருப்பன்.” என்றாள் முணுமுணுப்பாக.
அதற்கே முகம் மலர்ந்துபோயிற்றுச் செல்வராணிக்கு. “தொண்டை காயக் காயக் கத்திப் பாடம் எடுத்துக் களைச்சுப்போய் வந்திருக்கிறாய். நான் வீட்டிலதானே இருக்கிறன். சாப்பிடு. முகமெல்லாம் வாடிக்கிடக்கு. சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எழும்பு.” அந்த அன்பு, அன்னையை நினைவூட்ட அவளுக்குள் எதுவோ உடைந்தது. விழிகள் அவரிடம் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயந்து தட்டிலேயே பார்வையைப் பதித்துச் சாப்பிட்டாள்.
செல்வராணிக்கும் எவ்வளவு முயன்றாலும் தள்ளியே நிற்கும் மருமகளின் செய்கைகள் கவலையைத் தராமல் இல்லை. ஆனாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்தானே. அவர் சொன்னது போல உணவை முடித்துக்கொண்டு உறங்கி எழுந்தவளுக்கு மனம் அமைதி அடைந்திருந்தது. பெற்றோருக்கு அழைத்துக் கதைத்துவிட்டுத் தன் பள்ளிக்கூட அலுவல்களில் ஈடுபட்டாள்.
மனத்தின் ஒரு பகுதி காலையில் கணவனும் அதிகாரியும் முயற்சித்த விடயத்திலேயே நின்றது. ஒருபோதும் அவளின் புறமிருந்து சிந்திக்கவே மாட்டானா என்ன?
அவளின் புறம் கூட வேண்டாம். நியாயத்தின் பக்கமிருந்து? நடந்தவைதான் முடிந்துபோயிற்று. அவற்றையும் சரி செய்து இனியாவது நேர்மையாக நடப்பான் என்கிற நம்பிக்கையைக் கூடத் தர மறுக்கிறானே. அவனின் செய்கைகள் அவளைக் காயப்படுத்தினால் அதனால் அவனுக்கு ஒன்றுமே இல்லையா?
கீழே அவன் குரல் கேட்டது. அதற்குமேல் அவளால் இயல்பாகத் தன் வேலைகளைப் பார்க்க முடியவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். செவிகள் அவனின் நடவடிக்கைகளையே குறிப்பெடுக்க ஆரம்பித்தன. மேலே வந்து கத்துவானோ? சண்டையிடுவானோ?
“பிரமி எங்கம்மா?” தாயிடம் அவன் கேட்பது காதில் விழுந்தது.
“மேல. பொறு கூப்பிடுறன்.” என்ற செல்வராணியின் குரல், “அம்மாச்சி, தம்பி வந்திட்டான் வா!” என்று அழைத்தது.
இப்போதெல்லாம் அவளின் கையாலேயே தேநீர் அருந்தவும் உணவை உண்ணவும் விரும்பினான். அவளாகத் தவிர்த்தால் கூட விடுவதில்லை. வேறு வழியற்று இறங்கி வந்தவளிடம், “ஒரு தேத்தண்ணி தா!” என்றான் சோபாவில் இலகுவாகச் சரிந்தபடி.
கசங்கிய ஆடை, கலைந்த கேசம், களைத்திருந்த முகம் இன்றைக்கு வேலை கூட என்று அவளுக்கே சொல்லிற்று. அருகில் மாமனாரும் இருந்ததில், “உங்களுக்கும் போடவோ?” என்று வினவினாள்.
“போடு போடு குடிப்பம்!” என்றார் மனிதர். மருமகள் தனக்கு அடங்கி நடப்பதில் அவருக்கு ஒரு குதூகலம்.
சமையலறை நோக்கி நகர்ந்தவளுக்கு இவனுக்குக் கோபம் இல்லையோ, முகம் இயல்பாக இருந்ததே என்று குழப்பமாயிற்று. எதுவாயிருந்தாலும் சண்டை வராதவரைக்கும் சந்தோசம்தான்.
ஆனால், காலம் அவளை அப்படி விடுவதாயில்லை. அவனின் வேலைகளைப் பற்றி விசாரித்துவிட்டு ஆரம்பித்தார் ராஜநாயகம்.
“என்ன நடக்குது தம்பி? கேஸ் இன்னும் வாபஸ் ஆகேல்லையாம். பள்ளிக்கூடத்தில அட்மிஷன் போடுற நாள் நெருங்குது. இன்னும் எந்த மாற்றமும் அறிவிக்க இல்லையாம். பிறகு எதுக்கு அந்தப்பாடு பட்டுப் பழைய பிரின்சிபலை ஓட வச்சது. அதே இலவசப் பள்ளிக்கூடம் நடத்தவா?” அவள் நிற்கிறாள் என்கிற நினைப்பின்றி அவர் கேட்டபோது, அவன் பார்வை தேநீரைக் கொண்டுவந்த மனைவியிடம் நிலைத்தது.
தந்தையை ஓடவைத்தது என்று அவர் சொன்னது அவளைப் பாதித்தது. அதோடு அந்தப் பள்ளிக்கூடம்… மனம் கலங்கிவிட அவர்களின் முகம் பாராது கொடுத்துவிட்டுத் தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
சற்று நேரத்திலேயே அவன் வந்து அவளருகில் அமர்ந்தான். இருக்கும் மனநிலைக்கு அவனுடன் எந்தச் சம்பாசணையையும் உண்டாக்க விருப்பம் இல்லாமல் அவள் எழுந்துகொள்ள, “வெதர் நல்லாருக்கு என்ன.” என்றான் தோட்டத்தில் பார்வையைப் பதித்து.
எதற்கு இந்த நாசுக்கு? செய்யப்போகிற நாசகார செயலுக்கா?
“நீங்க எல்லாருமே எவ்வளவு பாவப்பட்ட மனுசர் எண்டு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா தயவு செய்து உங்கட அரசியலை, பாவத்தை அந்தப் பள்ளிக்கூடத்துக்க கொண்டு வராதீங்க. சாப்பிடுறதுக்கு ஒரு நேரச் சாப்பாடு இல்லாட்டியும் பரவாயில்ல எப்பிடியாவது நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்து, பிள்ளைகளைப் படிப்பிச்சு, உருப்படியாக்கி விடோணும் எண்டுற கனவோட இருக்கிற ஏழைகளின்ர வயித்தில அடிச்சுப் போடாதீங்கோ. உழைக்க வழியா இல்ல. அதுவும் குறுக்கு வழில உழைக்க உங்களுக்குச் சொல்லியா தரோணும்? ஆளை அடிக்கிறது, கடத்துறது, சித்திரவதை செய்றது எண்டு நீங்க செய்யாத பாவம் இல்லை. தயவு செய்து அதுக்குப் பரிகாரமாவாவது அந்தப் பிள்ளைகளுக்கு நல்லதைச் செய்ங்கோ. புண்ணியமா போகும். இதை உங்களுக்காகக் கேக்கேல்லை. நாளைக்கு எங்களுக்கும் பிள்ளை எண்டு வரேக்க, அந்தப் பிள்ளை உங்களுக்கு மட்டும் பிள்ளை இல்ல என்ர பிள்ளையும்தான். என்ர பிள்ளை பாவங்களைச் சுமந்துகொண்டு இந்த மண்ணில பிறக்க வேண்டாம். உங்களோட என்ர வாழ்க்கை பிணைக்கப்பட்டதையே நான் எந்த ஜென்மத்தில ஆருக்குச் செய்த பாவமோ எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கிறன். இதுல பிள்ளையையும் அந்தப் பாவத்துக்க குளிக்க வச்சிராதீங்க.” படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு விறுவிறு என்று வீட்டுக்குள் சென்று மறைந்திருந்தாள் அவள்.
கொவ்வைப்பழம் போல் சிவந்துவிட்ட முகத்துடன் இறுகிப்போய் அமர்ந்திருந்தான் கௌசிகன்.