திருமணமாகி வருவதற்கு முதல் வெளியாட்கள் மூலம் அறிந்துகொண்டதை விடவும் மிகுந்த வசதியானவர்கள் என்று அந்தக் குடும்பத்துக்குள் வந்தபிறகு புரிந்துகொண்டிருந்தாள் பிரமிளா.
எதற்குமே குறைவில்லை. எல்லாமே அதிகப்படிதான். பிறகும் ஏன் இந்தப் பணத்தாசை? சரி அப்படியே அடங்காத ஆசை எனில் உழைத்துச் சேர்க்கட்டும். அதை விட்டுவிட்டு எப்படியாவது பிள்ளைகளைக் கற்பித்து, வாழ்வின் விடியலைப் பார்த்துவிடத் துடிக்கும் குடும்பங்களின் இரத்தத்தை உறிஞ்ச நினைப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்?
கல்வியை வியாபாரமாக்குவதா? அதை அவளின் கணவனாகிப் போனவனே செய்வதா? எப்படியான ஒருத்திக்கு எப்படியான ஒருவனைக் கொண்டுவந்து விதி இணைத்துவிட்டிருக்கிறது?
மனம் புழுங்க, தன் வேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு நேரத்துக்கே படுக்கையில் விழுந்தாள்.
அவன் வரமுதல் உறங்கிவிட நினைத்தாள். அவள் பேசிய பேச்சுக்கு நிச்சயமாக அவன் சும்மா விடமாட்டான். இருக்கிற மனநிலைக்கு அவளும் வாயை மூடிக்கொண்டு அமைதி காக்கப்போவதில்லை. இன்னுமொரு வாய்த் தர்க்கத்தைப் புரிகிற அளவுக்கு அவளின் மனத்திலும் உடலிலும் தெம்பில்லை. உறங்கிவிட்டால் இது ஒன்றும் இருக்காதே என்பதற்குத்தான் இத்தனை பிரயத்தனமும்.
ஆனால், மனம் விழித்துக்கிடந்து குமுறுகையில் உறக்கம் எப்படி வரும்?
சற்று நேரத்தில் அவனும் வந்தான். மனது கனத்துவிட அறையின் கதவை அடைத்தவனிலேயே இருந்தது அவளின் கவனம். விளக்கை அணைத்து விடிவிளக்கை ஏற்றி, மேல் சட்டையைக் கழற்றிவிட்டு வந்து அவளருகில் நெருங்கிப்படுத்து, “ஏதும் குட் நியூஸ்?” என்றான் அவன்.
அவளின் சிந்தனையின் திக்கு வேறாக இருந்ததில் கேள்வியின் பொருள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“பிள்ளையைப் பற்றிக் கதைச்சியே.”
அவள் பேசியது என்ன அவன் கிரகித்துக்கொண்டது என்ன? பெரும் பிரளயத்தை எதிர்நோக்கியிருந்தவளுக்குக் கோபம் மூண்டுபோயிற்று. “ப்ச்! நடக்காமையா போகப்போகுது?” என்றாள் முகத்தைத் திருப்பிக்கொண்டு.
“அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு சலிப்பு?” அதட்டியவனின் கை போர்வைக்குள் புகுந்து, அவளின் வெற்று வயிற்றை மென்மையாக வருடிற்று.
திகைத்துத் திரும்பினாள் பிரமிளா. அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “இந்த மணி வயித்துக்க ஒரு குட்டி பேபி இருந்தா எப்பிடி இருக்கும்?” என்றான் அவன்.
அந்தக் கேள்வி உண்டாக்கிய தாக்கத்தில் நொடிநேரம் அசைவற்று இருந்துவிட்டு, கூச்சத்துடன் அவன் கையை விலக்கிவிட முயன்றாள்.
அவளை இலகுவாகத் தடுத்துக்கொண்டே, “இல்ல இருக்கா?” என்றான் மீண்டும்.
அவனிடம் குழந்தையைப் பற்றிப் பேசியிருந்தாலும் தன் தாய்மையைப் பற்றி அவளாக யோசித்ததில்லை. இன்று அவனுடைய கேள்வி அடிவயிற்றில் என்னவோ செய்ய, “இன்னும் இல்ல.” என்றாள் முணுமுணுப்பாக.
“ஏன் இல்ல? எனக்கு வேணும்! மூண்டு மாதம் ஆயிற்றே.” என்றவனின் உதடுகள் அவளின் கன்னக் கதுப்பில் புதைந்தன. வயிற்றை வருடிய விரல்கள் வேறு லீலைகளிலும் ஈடுபட்டன. பிரமிளாவும் சுயத்தில் இல்லை. குழந்தை என்கிற மந்திரம் அவளையும் மயக்கியிருந்தது. நம் கருவறையில் உருக்கொண்டு, நம் உதிரம் பெற்று நமக்குள்ளேயே இன்னோர் உயிர் உருவாகிறபோது, அதை எதன் காரணத்தினாலும் வெறுத்துவிட முடியுமா என்ன?
அதிசயத்திலும் அதிசயமாக நடந்தவற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் அவன் பேசவில்லை. அதன் பிறகான நாட்கள் ஒருவித மௌனத்திலேயே கடந்தன. தன் பேச்சுக்கு எந்த எதிரொலியுமே இல்லை என்பதை நம்ப முடியாமல் யோசித்துக்கொண்டிருந்தாள் பிரமிளா.
அப்படி விடுவது அவனது இயல்பு இல்லையே. இத்தனை நாட்களில் அவள் அறிந்து வைத்திருக்கும் கௌசிகனுக்கும் இந்த அமைதியானவனுக்கும் பொருந்திப் போகவே மாட்டேன் என்றது.
*****
அன்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த யாழினியிடம் வந்தான் ஒருவன். அவனும் அங்கே கடைசி வருடத்து மாணவன்தான். ஆரம்ப நாட்களில் அடிக்கடி இவளின் பார்வை வட்டத்துக்குள் வருவான். சீனியர் என்கிற முறையில் இவளும் இயல்பாகச் சில உதவிகளைப் பெற்றிருக்கிறாள். அவனும் இவளிடம் வேலைகள் ஏவி இருக்கிறான்.
இப்படி நல்ல முறையிலான அறிமுகம் அவர்களுக்குள் உண்டு. அதில் புன்சிரிப்புடன் அவள் பார்க்க, “வீட்டுக்கு வெளிக்கிட்டாச்சா? வாவன் ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்?” என்று அவளையும் அழைத்துக்கொண்டு வீதியைக் கடந்தான் அவன்.
“சீனியர்! என்னட்ட காசு இல்ல. கூட்டிக்கொண்டு போனா நீங்கதான் வாங்கித் தரோணும். சரியோ?” கள்ளச் சிரிப்புடன் சட்டம் பேசியவளை முறைத்தான் அவன்.
“பெரிய நகைக்கடையின்ர ஓனர் அப்பா. ஆனாலும் ஒரு டீக்கு இந்தப்பாடு. நானே வாங்கித்தாறன் வா!”
“அதாலதான் அப்பா இன்னுமே நகைக்கடைக்கு ஓனரா இருக்கிறார்!” என்று கிழுக்கிச் சிரித்தாள் அவள்.
இயல்பான கலகலப்போடு டீயை அருந்தி வடையையும் சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில், “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு யாழினி. உனக்கும் என்னைப் பிடிக்கும் எண்டு நம்புறன். என்ன சொல்லுறாய்?” என்றான் நேரடியாக.
வாய்க்குப் போன வடை பாதியிலேயே நின்றுபோனது. திகைப்புடன் அவனைப் பார்த்தாள் யாழினி. இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லையே.
பயத்துடன் விழிகளைச் சுழற்றியபோது, முகத்தில் கடினத்துடன் அவளைக் கடந்தான் ரஜீவன். கடவுளே! அவனுக்கும் கேட்டிருக்குமோ? கட்டாயம் கேட்டிருக்கும். அதனால் தான் அவ்வளவு கோபம்.
கைகால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கிற்று. சொன்னவனை மறந்துவிட்டுப் போகிறவனையே பார்த்தாள். அவளின் மனதும் அவனிடம் ஓடிற்று. அப்போதுதான் அவன் மீது தனக்குள் உருவாகியிருக்கும் அபிப்பிராயத்தின் பெயரும் தெளிவாகப் புரிந்தது.
“அங்க என்ன பாக்கிறாய் யாழினி? தெரிஞ்ச ஆக்கள் ஆருமோ?” அருகில் இருந்தவனின் கேள்வி எரிச்சலைக் கொடுக்கப் பதில் சொல்லாமல் எழுந்து தன் பொருட்களை அள்ளிக்கொண்டு வெளியே ஓடினாள்.
“யாழினி நில்லு! பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என்று அவளை வேகமாக நெருங்கினான் அவன். சைக்கிளின் அருகே சென்றவளின் கைகால்கள் எல்லாமே நடுங்கிற்று. பயத்துடன் ரஜீவனைத்தான் துனைக்குத் தேடினாள்.
ரஜீவன் கண்மண் தெரியாத கோபத்தில் இறுகிப்போய் நின்றிருந்தான். அடுத்த தெருவில் இருக்கிற வீட்டில்தான் கடந்த மூன்று நாட்களாக எலக்ட்ரிக் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இன்று வேலை முடிந்து வருகையில் மத்தியானம் சரியாக உண்ணாததில் பசியெடுக்க, சாப்பிட வந்தான். யாழினி யாரோ ஒருவனுடன் சிரித்துக் கதைத்துக்கொண்டு வரும்போதே பார்த்துவிட்டான். அப்போதே மனது காந்தத் தொடங்கியிருந்தது. ஆனாலும், அவள் யாரோடு கதைத்தால் எனக்கென்ன சிரித்தால் எனக்கென்ன என்றுதான் நினைத்தான்.
அந்த நினைப்புக் கூட அந்த அவன் காதலைச் சொல்லும் வரையில்தான். சொன்னதுமே உடம்பு முழுக்க நெருப்பெனக் கொதித்தது. அவனைத் தூக்கிப்போட்டு மிதித்துவிட்டு அவளுக்கும் இரண்டு போட்டால் என்ன என்கிற அளவுக்கு ஆத்திரம் கிளம்பிற்று. அதைக் காட்டும் வகையற்று எழுந்து வருகையில் அவளை முறைத்துவிட்டு வந்தான்.
இப்போது, அவள் தன்னைத்தான் தேடுகிறாள் என்று உணர்ந்த நொடியில் தானாகவே உந்தப்பட்டு அவளருகில் சென்று நின்றான்.
“என்னவாம் அவன்?” எரிச்சலை அடக்கமுடியாமல் சிடுசிடுத்தான். “காதலிக்கிறானாமே. நீயும் காதலிக்க வேண்டியதுதானே. பிறகு என்னத்துக்கு என்னைத் தேடுறாய்?”
அவளுக்கு இவனைப் பார்த்தும் பயம், அவனை நினைத்தும் பயம். இருவரும் முட்டிக்கொண்டுவிடுவார்களோ என்று அதுவேறு கலக்கமாயிற்று.
“எனக்கு வீட்டை போகவேணும். பயமா இருக்கு. கூட்டிக்கொண்டு போங்கோ!” என்றாள் தன்னை மீறிக் கலங்கிவிட்ட விழிகளோடு.
அப்படியே நின்றுவிட்டான் ரஜீவன். சற்று நேரம் கலங்கிப்போயிருந்த அவளின் விழிகளையே பார்த்தான். உச்சியில் ஏறியிருந்த கோபம் அப்படியே கரைந்துபோயிற்று. குறிப்பிட்ட இடைவெளியில் நின்று இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “வீட்டை போறதுக்கு என்ன பயம்? கவனமா போ.” என்றான் தணிந்த குரலில்.
“நீங்களும் வாங்கோவன்.” அவளுக்கு இவனை விட்டுவிட்டுப் போக மனமில்லை.
இன்னும் அங்கேயே நின்றவனின் மீது பார்வை இருக்க, “எனக்கு வேலை இருக்கு. நீ போ!” அழுத்தமாக அதட்டிய குரலை மீறமுடியாமல் புறப்பட்டாள் யாழினி.
அவள் திரும்பி திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தவனுக்கு, ‘திரும்பவும் அடிவாங்கித் தராம விட மாட்டா போலயே’ என்றுதான் ஓடியது. தனியே விடவும் மனமற்று அவளைத் தானும் பின்தொடர்ந்தான். அதன்பிறகுதான் முன்னுக்குப் பார்த்து சைக்கிளை மிதித்தாள் அவள்.
அவர்களின் தெருவுக்குள் நுழையுமுன் இவனைப்பார்த்துத் தலையசைத்தாள் யாழினி. பதில் எதுவும் கொடுக்கத் தோன்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரஜீவன்.
அவள் மறைந்ததும் பெயர் சொல்லாத சுகமும் மயக்கமும் ரஜீவனின் மனத்தில் சூழ்ந்தன. இது எங்குக் கொண்டுபோய் விடப்போகிறது என்று புரியாமல் இல்லை. இருந்தும் நெஞ்சைச் சூழ்ந்த இன்பம் அகலமாட்டேன் என்றது.