அன்று காலையில் கல்லூரிக்குச் சென்றவளை அவசரம் அவசரமாக வந்து சந்தித்தார் திருநாவுக்கரசு.
“பிரமிமா, உன்ர மனுசன் நினைச்சதைச் சாதிச்சிட்டார் பாத்தியா?” என்றார் கவலையோடு.
கொஞ்ச நாட்களாக அமைதியாகத்தான் இருக்கிறான். புதிதாக எதையும் கேள்விப்படவில்லையே. இவர் எதைச் சொல்கிறார்?
“என்ன செய்தவர் சேர்?”
விளக்கம் சொல்லாமல், “இதை வாசிச்சுப்பார்.” என்று அறிக்கை ஒன்றை நீட்டினார்.
அதில், அடுத்த கல்வியாண்டில் புதிதாகச் சேர்த்துக்கொள்ள இருக்கும் மாணவியருக்கான சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.
மாணவியரின் கல்வி வசதிக்காக, கல்லூரியின் வளர்ச்சிக்காக, ‘நன்கொடை’ வழங்கவேண்டியதன் அவசியத்தை விளக்கி இருந்தனர். கல்வித் தரத்தை உயர்த்த தனியார் பயிற்சிகளை இனி குறைந்த விலையில் கல்லூரியே வழங்கும் என்றும், கணனி வகுப்புகள், மாணவிகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகுப்புகள் என்று ஏகப்பட்ட விவரங்கள்.
நடனம், பாட்டு, சித்திரம் என்று அனைத்துக்குமே தனித்தனி வகுப்புகள். அதற்கான கட்டண விபரங்கள். நீச்சல், தற்பாதுகாப்பு உடற்பயிற்சிக்கு என்று அது ஒரு பகுதி.
முழுவதையும் வாசிக்கப் பிடிக்காமல் நிமிர்ந்தாள். சுற்றிச் சுற்றி அவர்கள் சொல்லப்போவது என்ன? இதுவரை இலவசமாக இருந்த அனைத்தையும் வெளிப்பூச்சுப் பூசி, அதை ஒவ்வொரு வகுப்புகளாக்கி, அதில் மாணவியரை மறைமுகமாகக் கட்டாயப்படுத்திச் சேரவைத்துப் பணம் பார்க்கப் போகிறார்கள்.
அதை எதற்கு வாசித்து விளங்கிக்கொள்ள? ஆனால், அன்றைக்கு அவள் அவ்வளவு எடுத்துச் சொன்னாளே. சற்றும் செவிமடுக்கவே இல்லையா அவன்? திரும்ப திரும்ப உன் பேச்சும் நீயும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று காட்டிக்கொண்டே இருக்கிறான்.
“இது முறையா அறிவிச்சு வெளிவந்திட்டுதா சேர்?”
“இன்னும் இல்லையம்மா. நான் உப அதிபர் எண்டபடியா முதலே என்ர கைக்கு வந்தது. இப்போதைக்கு வெளில சொல்ல வேண்டாம் எண்டுதான் சொன்னவே. சொல்லாம இருந்து பள்ளிக்கூடத்துக்கு நானும் அநியாயம் செய்யிறதா சொல்லு? அப்பாவோடயும் கதைச்சனான். அமெரிக்கன் மிஷனுக்கு அறிவிப்பம் எண்டு சொன்னவர்.”
முறையாக அவர்கள் செய்யக்கூடியது அது ஒன்றுதான். ஆனால் அது எத்தனை தூரத்துக்கு வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குறிதான். பக்கத்திலேயே இருந்து கவனிக்கப் போகிறதா மிஷன்? அல்லது பதிவுகளில் வராமல், ‘நன்கொடை’ வசூலிப்பது இவர்களுக்கு எல்லாம் பெரிய காரியமா?
அந்தப் பக்கத்தால் நடந்துகொண்டிருந்த பியூனைக் கண்டதும் நொடியில் முடிவு செய்து அழைத்தாள் பிரமிளா.
“ரகு! நிர்வாகிய சந்திக்கோணும். எப்ப அவருக்கு டைம் இருக்கு எண்டு கேட்டுச் சொல்லுறீங்களா? நான் 11B ல நிப்பன்.”
தன் கணவனைச் சந்திக்க நேரம் குறித்துவரச் சொல்கிறாரே இந்தப் பெண்மணி என்று ஒரு நொடி குழம்பினாலும் அதை வெளிக்காட்டாமல். “சரி மிஸ்.” என்று தலையசைத்துவிட்டு நிர்வாகியின் அறையை நோக்கி நடந்தார் பியூன்.
திருநாவுக்கரசுக்குக் கவலையாயிற்று. “பள்ளிக்கூட விசயத்தக் கதைக்கப்போய்த் தம்பியோட சண்டை பிடிக்க வேண்டாம்மா. வாழ்க்கை முக்கியம். நடக்கிறதுதான் நடக்கும். நான் வேற யோசிக்காம ஓடிவந்து உன்னட்டச் சொல்லிப்போட்டன்.”
அவர் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் விடைபெற்றுத் தன் வகுப்பை நோக்கி நடந்தாள் பிரமிளா.
சற்று நேரத்திலேயே அவளின் வகுப்புக்கு வந்து, “இண்டைக்குப் பன்னிரண்டு மணிவரைக்கும் நிப்பாராம். உங்களுக்கு ஃபிரீ எப்பவோ அப்ப வரட்டாம் எண்டு சொன்னவர் மிஸ்.” என்று தகவல் சொல்லிவிட்டுப் போனார் பியூன்.
முற்பகல் வேளையில் பிரமிளாவும் நேரம் ஒதுக்கிக்கொண்டு கௌசிகனைச் சந்திக்கச் சென்றாள். தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் அவன். சோர்வாகத் தெரிந்த அவளின் முகத்தைக் கூர்ந்துவிட்டு, “உனக்கும் ஒண்டு சொல்லவா?” என்றான் உபசரிப்பாக.
அவளுக்குப் புகைந்தது. பலரின் வயிற்றில் அடிப்பதற்குத் திட்டம் தீட்டிவிட்டு இங்கே அவளின் வயிற்றைக் கவனிக்கிறானாமா? “எனக்கு ஒண்டும் வேண்டாம். ஆனா என்ன இது? அண்டைக்கு அவ்வளவு சொல்லியும் காதில வாங்கவே இல்லையா நீங்க? ஏன் இப்பிடி இரக்கமில்லாம இருக்கிறீங்க?” என்று தன் கையிலிருந்த அறிக்கையை மேசையில் தூக்கிப் போட்டாள் பிரமிளா.
சினத்திலும் சீற்றத்திலும் சிவந்திருந்த அவள் முகத்தை ஆராய்ந்துவிட்டு, “எனக்குக் காணும். மிச்சத்தை நீ குடி.” என்றபடி தன் கப்பை அவள் புறமாக வைத்தான் கௌசிகன்.
அறிக்கையை எடுத்து மேலோட்டமாகப் புரட்டியபடி, “இது உனக்கு எப்பிடி வந்தது?” என்றான் நிதானமாக.
அவன் தயாரித்த அறிக்கையைப் பற்றி அவள் பேசினால் அது அவளின் கைக்கு யார் மூலம் வந்தது என்று விசாரிக்கிறான் அவன். ஏன் அவரையும் ஏதாவது செய்யவா?
“எப்பிடி வந்தாத்தான் என்ன? இத நிப்பாட்டுங்க. இல்லையோ அரசாங்கத்துக்கு நீங்க செய்ற அநியாயத்தை எல்லாம் ஆதாரத்தோட எழுதிப் போடுவன். இந்தப் பள்ளிக்கூடத்தையும் அரசாங்கப்பள்ளிக்கூடமா மாத்தச் சொல்லி, பெற்றோர் ஊர் மக்கள் எல்லாரிட்டயும் கடிதம் வாங்கி அனுப்புவன். ஜி எஸ், டி எஸ் எண்டு எல்லார் மூலமும் அதைச் செய்ய வைப்பன். ஏற்கனவே இங்க நிறையப் பிரச்சினைகள் நடந்தபடியா நிச்சயமா அரசாங்கம் சும்மா விடாது. கேள்வி கேக்கும். தனியார் பள்ளிக்கூடமா இருக்கிற வரைக்கும்தானே நீங்க நினைச்சதை எல்லாம் செய்யலாம். அரசாங்கப் பள்ளிக்கூடமா மாத்திவிட்டா அமைதியா இருப்பீங்கதானே? ஆனா, எனக்குத் திரும்பவும் பிரச்சினை ஒன்றைக் கிளப்பிப் பிள்ளைகளின்ர படிப்பைக் குழப்ப விருப்பம் இல்லை. அதாலதான் உங்களிட்ட நேரடியா கதைக்க வந்திருக்கிறன். நீங்களாவே இதைக் கைவிட்டா ரெண்டு தரப்புக்கும் நிம்மதி.”
“திட்டமெல்லாம் பெருசாத்தான் இருக்கு!” உதட்டோர முறுவலுடன் தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் அவன்.
முடியாது என்கிறானா, அல்லது முயற்சித்துப்பார் என்கிறானா? அவள் மனம் புகைந்தது.
“ஏலாது எண்டு நினைக்கிறீங்களா?” கோபத்துடன் கேட்டாலும் உள்ளுக்குள் சோர்ந்துபோனாள் பிரமிளா. அது ஒன்றும் இன்றைக்கு நினைத்து நாளைக்கு முடிகிற காரியமல்லவே. அதற்குள் இவன் எத்தனையைச் செய்வானோ யாருக்குத் தெரியும்?
இப்படி, செல்வமும் செல்வாக்கும் இருக்கிறவனின் கைதான் ஓங்குமெனில் நீதி, நியாயம், நேர்மை என்பதெல்லாம் என்ன? பிறந்ததிலிருந்து அவள் கற்றவையும் சில வருடங்களாகக் கற்பிப்பவையும் பொய்யா?
அதற்குமேல் இயலாமல் தொண்டை அடைத்துக்கொண்டது. அவன் முன்னால் உடைந்துவிடக் கூடாது என்பதில் அவனுடைய மீதியைப் பருகக் கூடாது என்று எண்ணியதை மறந்து, தேநீரை எடுத்துப் பருகினாள்.
அவள் பருகி முடிக்கிற வரைக்கும் எதுவும் பேசவில்லை கௌசிகன். கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். வெறும் கப்பை மேசையில் வைக்க, “சரி! நீ கேக்கிற மாதிரியே இந்தப் பள்ளிக்கூடத்தில எந்த மாற்றமும் கொண்டுவராம நான் விடுறன். அதுக்குப் பதிலா நீ எனக்கு என்ன செய்வாய்?” என்றான் நிதானமாக.
அவளின் சந்தோசம், நிம்மதி, வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டவனுக்கு இன்னும் என்னதான் வேண்டும்? அவளின் உயிரா? “இனி இழக்கிறதுக்கு எண்டு என்னட்ட ஒண்டும் இல்ல. இன்னும் என்ன எதிர் பாக்கிறீங்க?” என்றாள் வெறுப்புடன்.
“நீ போட்ட கேஸ வாபஸ் வாங்கு. இஞ்ச நடந்த பிரச்சினைக்கு இனி ஆக்க்ஷன் எடுக்கமாட்டன் எண்டு சொல்லு. நானும் இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் பிரச்சினை வராம பாக்கிறன்.” வெகு இயல்பாகச் சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தாள் பிரமிளா.
ஆக அன்று புலி பதுங்கியது இதற்குத்தானா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவளை அடித்து வீழ்த்தத் திட்டம் போட்டிருக்கிறான்.
அதிரடியாக ஆடிக் காய்களை வெட்டுவது ஒரு வகையெனில் சத்தமே இல்லாமல் வேரோடு சாய்ப்பதும் இன்னோர் வகைதானே. எப்போதுமே அவள் உயிராக நேசிக்கும் ஏதோ ஒன்றின் கழுத்தை நெரித்தபடி அவளிடம் காரியம் சாதிப்பதையே தன் வழக்கமாக வைத்திருக்கிறான்.
இவன் ஆபத்தானவன். மிக மிக ஆபத்தானவன். ஒவ்வொருமுறையும் அவள் பட்டுத் தெரிந்து கொள்வது இதைத்தான்.
ஆக, அறிக்கையைத் திருநாவுக்கரசு வரைக்கும் கொண்டுவந்ததும் வேண்டுமென்றுதான். அவரின் காதில் போட்டால் அது தானாக இவளின் காதுக்கு வரும் என்று இவனுக்குத் தெரியாதா? இல்லாமல் அவர் இவர்களுக்கு உண்மையாக இருப்பவர் என்று தெரிந்தும் அவருக்குத் தெரிய விட்டிருப்பானா இந்தக் கிராதகன்?
அவனாகக் கேட்டும் அவள் வாங்காத வாபாசை அவளாகச் செய்ய வைக்கதான் இத்தனையும். நொடியில் ஓடிப் பிடித்தாள் பிரமிளா.
அவளால் கூட இதனை யோசிக்க முடியாமல் போயிற்றே.
“ஏன்? ஏன் இப்பிடிச் செய்றீங்க? சத்தியமா உங்களோட போட்டிக்கு நான் வரேல்ல. உங்கள தோக்கடிக்கவும் நினைக்கேல்ல. நியாயம் கிடைக்கோணும் எண்டு நினைக்கிறன். தப்புச் செய்தவன் தண்டனையை அனுபவிக்கோணும் எண்டு நினைக்கிறன். அது பிழையா? வாபஸ் வாங்கிப்போட்டு அந்தப் பிள்ளைகளிட்ட என்ன சொல்லுவன்? ‘மிஸ் விடமாட்டா, எங்களுக்காகப் போராடுவா, நியாயம் கிடைக்கும்’ எண்டு நம்பிக்கொண்டு இருக்கிற பிள்ளைகளின்ர முகத்தை எப்பிடி பாப்பன்? அவேக்கு முன்னால தலை குனிஞ்சு நிக்கச் சொல்லுறீங்களா? அப்பிடி நான் நிண்டா அது உங்களைப் பாதிக்காதா? நான், என்ர கவலை, என்ர வேதனை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா?” தாங்கமுடியாத துக்கத்தைச் சுமந்து படபடத்தாள் அவள்.
அவன் அசையவே இல்லை. அவளின் வேதனையை, துடிப்பை விழியாகற்றாமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.
“தேவையில்லாத பேச்சு எல்லாம் எதுக்கு? கேஸ நீ வாபஸ் வாங்கு, நான் பள்ளிக்கூடத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராம பாக்கிறன்.” என்றான் தன் முடிவில் மாறாதவனாக.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அசையாமல் தன் பிடியிலேயே நிற்கிறானே. என்றைக்குமே அவளால் அவனை மாற்றவே முடியாதா? வாழ்க்கையிலும் தோற்று, கொண்ட கொள்கையிலும் தோற்றுப் போகப் போகிறாளா?
நெஞ்சு துடிக்க, “என்ர முதுகெலும்பை அடிச்சு நொறுக்கி உங்கட காலுக்க போட்டு மிதிக்கோணும். காலத்துக்கும் நான் நிமிரக் கூடாது. நிமிந்தா நசிப்பீங்க. உங்களப் பாத்த நிமிசத்தில இருந்து நீங்க எனக்குச் செய்றது இதுதானே?” என்று வேதனையில் வெம்பிப்போய்க் கேட்டவளை மெல்லிய அதிர்வுடன் நோக்கினான் கௌசிகன்.
அதற்குமேல் அவளுக்குப் பேச்சே வரவில்லை. கட்டியவனே நெஞ்சுக்குழியில் கல்லைத் தூக்கி வைத்துச் சுவாசக்குழாயை நசுக்குவது போலுணர்ந்தாள்.
அப்போதும் அசையாது அமர்ந்திருந்தவனின் கல் நெஞ்சம் அவளின் விழிகளில் கண்ணீரைத் ததும்பச் செய்தன. அதை அந்தப் பொல்லாதவனிடம் காட்ட மனமற்று வேகமாக எழுந்து வெளியே வந்தாள்.
அசைவற்றுப்போய் அமர்ந்திருந்தான் கௌசிகன். மெல்ல நாற்காலியில் சாய்ந்து விழிகளை மூடினான். கண்ணீர் சேரத்துவங்கிய விழிகள் இரண்டு கண்ணுக்குள் வந்து நின்றன. ‘என்ர கவலையும் கண்ணீரும் உங்களை ஒண்டுமே செய்யாதா’ என்று கேட்டன. படக்கென்று விழிகளைத் திறந்தவனுக்கு மூடவே பயமாயிற்று.