அவனைக் கண்டுவிட்டும் அடுத்த பாடவேளைக்கான வகுப்பை நோக்கித் தொய்வே இல்லாமல் நடந்தவளின் கையைப் பற்றித் தடுத்தான்.
“இந்தச் சந்தோசமான விசயத்த ஓடிவந்து என்னட்டச் சொல்லவேணும் எண்டு உனக்குத் தெரியாதா?” என்று சிடுசிடுத்தான்.
“அந்த அளவுக்கு என்ன இருக்கு இதுல?” தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு நிதானமாகக் கேட்டாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கின. அவளை அன்னையாகவும் அவனைத் தந்தையாகவும் மாற்ற ஒரு குழந்தை கருக்கொண்டிருக்கிறது என்பது ஓடிவந்து சொல்லும் விடயமில்லையா?
“கல்யாணம் எண்டு ஒண்டு நடந்தா இதெல்லாம் நடக்கிறதும் வழமைதானே?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அவள்.
திருமண இரவன்று அவன் சொன்ன அதே வார்த்தைகள்!
நடந்தவள் நின்று திரும்பி, “இன்னொரு விசயம். நானும் நீங்களும் கணவன் மனைவி எண்டுறது இந்தப் பள்ளிக்கூடத்துக்கே தெரியும்தான். அதுக்காக இப்பிடிக் கையப் பிடிக்கிறது, நெருங்கி நிண்டு கதைக்கிறது, முறைக்கிறது எல்லாம் அநாகரீகம். இந்த வளாகத்துக்க நான் டீச்சர். அந்தப் பதவிக்கான மரியாதையைத் தந்து கதைக்கப் பழகுங்க.” என்றுவிட்டுப் போனாள்.
அவன் பார்வை தன்னையே துளைப்பதை உணராமல் இல்லை. ஆனாலும் சட்டை செய்யவில்லை.
தன் அலுவலக அறையின் இருக்கையில் விழுந்தவனுக்குச் சற்று நேரம் எந்த வேலையும் ஓடவில்லை. அவளும் அவளின் வார்த்தைகளும் மாத்திரமே சுற்றிச் சுழன்றன.
சோர்ந்த விழிகள், சற்றே மெலிந்து தெரிந்த தேகம், உற்சாகமற்ற உடல்மொழி என்று மனைவி விழிகளுக்குள் வந்து, ‘நீ அப்பா ஆகிவிட்டாயடா’ என்று உணர்த்தத் தொடங்கினாள்.
ஒருவிதப் பரவசம் அவனுக்குள் பொங்கிற்று. அவளைக் கைக்குள் வைத்தபடி இந்த உணர்வைக் கொண்டாட உடலும் உள்ளமும் பரபரத்தன. கையைப் பிடித்ததற்கே பெரும் பாடம் ஒன்றை நடத்திவிட்டுப் போகிறவளிடம் இதெல்லாம் நடந்துவிட்டாலும்! கோபம் போய் உதட்டோரம் மெல்லிய சிரிப்பொன்று படர்ந்தது.
கல்லூரி முடிந்து பெரும் சோர்வுடன் வீடு வந்தவளை அதிருப்தியுடன் நோக்கினார் தனபாலசிங்கம். இருந்தும் உடை மாற்றி, உணவை முடித்துக்கொண்டு அவள் வருகிறவரை பொறுமையாக இருந்துவிட்டுப் பேசினார்.
“உனக்கு அவர்ல நியாயமான கோபம் இருக்கலாம். அதை இதுல காட்டியிருக்கக் கூடாது. அம்மா அப்பா ஆகிறது எண்டுறது எல்லாத்தையும் தாண்டின ஒரு சந்தோசம். அதை நீ எல்லோ அவரிட்ட சொல்லியிருக்கோணும். சந்தோசமா கொண்டாடியிருக்க வேண்டிய ஒரு விசயத்த சங்கடமா மாத்தக் கூடாதம்மா.” என்று எடுத்துரைத்தார்.
அவளுக்கும் அது புரியாமல் இல்லை என்பதில், “சொறி அப்பா!” என்றபடி அவரின் மடியில் தலை சாய்த்தாள்.
பெற்றவரின் கை தானாக அவளின் தலையை வருடிக் கொடுத்தது. “இப்ப என்னத்துக்கு மன்னிப்பு எல்லாம் கேக்கிறாய். என்ர பிள்ளை கெட்டிக்காரி. எல்லாத்தையும் யோசிச்சு நடப்பாள். எனக்குத் தெரியும்.
எண்டாலும் நல்லதை எடுத்துச் சொல்ல வேண்டியது அப்பான்ர கடமை எல்லோ.” என்றார் அவளைத் தேற்றும் முகமாக.
சற்று நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள் பிரமிளா. ‘சந்தோசமா நீ என்னட்டத்தானே சொல்லியிருக்கோணும்’ என்று நியாயம் பேசியவன் மனத்திலேயே நின்றான்.
எத்தனை அநியாயங்களைப் போகிற போக்கில் அவளுக்குச் செய்திருப்பான். அதுவே தனக்கு என்றதும் கோபம் வருகிறதம்மா? நியாயம் பேசுவானா?
“ஆனா அப்பா, கருவில உருவான பிள்ளையைப் பற்றிச் சொல்லேல்ல எண்டுறதுக்கே கோபப்படுற மனுசனுக்கு, வயதுக்கு வந்த மகளைப் பாக்கக் கூடாத கோலத்தில உங்களிட்டக் காட்ட மனசு வந்திருக்கே. அவரிட்ட எப்பிடியப்பா என்னால இதச் சந்தோசத்தோட சொல்ல ஏலும் சொல்லுங்கோ?”
அவளின் கேள்வியில் சற்றே திகைத்துத்தான் போனார் தனபாலசிங்கம்.
சில்லறைத்தனமான அந்த விடயங்களை எல்லாம் நினைத்துக்கூடப் பாக்கிறவள் அல்ல அவள். உடல் நிலை மாற்றமும், அதனால் உண்டான மனதின் தடுமாற்றமும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று புரிந்துபோயிற்று.
தாய்மை அடைந்திருக்கிற பெண்ணுக்கு இது ஆரோக்கியமான விடயம் அல்லவே.
“அம்மாச்சி! எந்தப் பிழையும் செய்யாத நீ ஏன் அதையெல்லாம் இன்னும் நினைவிலேயே வச்சிருக்கிறாய்? அது உன்ர வாழ்க்கையையும் சந்தோசத்தையும் கெடுக்கப்பாக்கும். தனியா இருக்கிற வரைக்கும் முரட்டுத்தனமா இருக்கிறது ஒரு சில ஆம்பிளைகளின்ர குணம். இதுல பணம், பெயர், செல்வாக்கு எண்டு அதுவேற போட்டு ஆட்டும். அதுவே கல்யாணம், மனுசி, குடும்பம் எண்டு காலம் போகேக்க அவேன்ர மனதிலையும் நிறைய மாற்றம் வரும். பாசமும் பந்தமும் தானம்மா மனுசரைக் கட்டி வைக்கிற மந்திரக் கயிறு. அது இல்லாமையா குழந்தையைப் பற்றித் தன்னட்டச் சொல்லேல்ல எண்டு கோபப்படுவார். அதால கல்யாணத்துக்கு முதல் எப்பிடி இருந்தாரோ அப்பிடித்தான் இப்பவும் இருப்பார் எண்டு நீயா முடிவு கட்டாத.” என்றுவிட்டு, “அதுசரி, அந்தப் பேப்பரை அவர்தான் எனக்குக் காட்டினவர் எண்டு உனக்கு ஆர் சொன்னது?” என்று வினவினார்.
அவளுக்குப் புரியவில்லை. அவனைத் தவிர வேறு யார் காட்டியிருக்க முடியும்? கேள்வியுடன் தலையை உயர்த்தித் தகப்பனைப் பார்த்தாள்.
“திருநாவுக்கரசுதான் கொண்டுவந்து காட்டினவர். அத பாத்துக்கொண்டு இருக்கேக்கதான் தம்பி வந்து கதைச்சவர். அவர் கொண்டுவந்து காட்டேல்ல.” என்ற தகப்பனை அதிர்வுடன் நோக்கினாள்.
“என்னப்பா சொல்லுறீங்க?”
“உண்மை தானம்மா. அவர் கொண்டுவந்து காட்டவும் இல்ல. அதைப் பற்றி ஒரு வார்த்தை கதைக்கவும் இல்ல.” என்றதும் பரபரப்புற்றுப் போனாள் பிரமிளா.
“அதைக் காட்டி அவர் உங்களை மிரட்டவும் இல்லையா?” நம்பமுடியாமல் கேட்டாள்.
“இல்லையே. அவர் அண்டைக்கு ஒரு வார்த்த கூடக் கதைக்கேல்ல. வேற என்னவோ கதைக்கத்தான் வந்தவர். இருந்த மன நிலைக்கு அவரைக் கதைக்க விடாம நானாத்தான் ராஜினாமா செய்றன் எண்டு சொன்னனான்.”
‘ஓ…’ அதை உள்வாங்கிக்கொள்ளவே அவளுக்குச் சற்று நேரமாயிற்று.
நறுக்கிய நகத்துண்டு அளவிலான அவனைப் பற்றிய நல்ல செய்தி முதன் முதலாக அவளின் காதில் விழுந்திருக்கிறது. அதுவே அவளுக்குள் மிகப் பெரிய சந்தோசத்தைக் குமிழியிட வைக்க வல்லதாய்ப் போயிற்று. மெல்ல எழுந்து அறைக்குள் புகுந்துகொண்டாள்.
அதுநாள் வரையில் தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டாமலேயே நகர்ந்துகொண்டிருந்த அவர்களின் உறவைப் பலப்படுத்த உருவாகியிருக்கும் குழந்தையா, அல்லது என் வயிற்றுக்குள் ஒரு குழந்தை என்கிற குறுகுறுப்புத் தேகம் முழுக்கப் பரவியிருந்ததா தெரியவில்லை. ஏதோ ஒன்று அவளின் சிந்தனைக் கோணத்தை அவன் புறமாகத் திசை திரும்பிற்று!
கண்ணை மூடிக் கட்டிலில் சரிந்தவளின் விழிகளுக்குள் வந்து நின்றான் கணவன்.