காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுத்தது. அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில்,
‘சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே’ என்கிற வரிகளை வீடியோவா ஏற்றிவிட்டிருந்தாள் யாழினி.
அந்த வரிகள் நெஞ்சுக்குள் புகுந்து குடைச்சலைக் கொடுத்தன. குரலில் இழைந்தோடிய சோகம் அவன் உயிரைப் பிசைந்தது. இன்னொரு கைகளில் அவளா? தாடை இறுக ஆத்திரத்தில் கண்கள் சிவந்துபோயிற்று.
வாலிபம் அவளின் கேள்விக்குப் பதில் சொல்லிவிடு என்று உந்திக்கொண்டிருக்க, வாழ்க்கையோ வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்றது. எதன்புறம் இசைவது என்று தெரியாமல் குழம்பித் தவித்தான்.
நிரந்தரமாகவே ஒரு சோர்வு தன்னைப் பற்றிப் பிடித்திருக்கும் உணர்வுடன் எழுந்து, கல்லூரிக்குத் தயாராகிக் கீழே வந்தாள் பிரமிளா.
மின்னலாக ஓடிவந்த யாழினி பிரமிளாவின் சேலையை விலக்கி முத்தமிட்டுவிட்டு, “குட்மோர்னிங் செல்லக்குட்டி!” என்று இடையை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
நேற்றைய கணவனின் செய்கை தானாக நினைவில் வந்தது. “அடிதான் வாங்கப்போறாய் யாழி!” என்று பொய்யாக மிரட்டியவளின் முகம் முழுவதும் சிரிப்புப் பரவிப் படர்ந்திருந்தது.
“அண்ணி! நான் ஒண்டும் உங்களக் கொஞ்ச இல்ல. என்ர குண்டுமணியத்தான் கொஞ்சினனான். அதத் தடுக்கிற உரிமை உங்களுக்கு இல்ல சரியோ! பொறாமையா இருந்தா சொல்லுங்கோ, உங்களுக்கும் ஒண்டு தாறன்.” அப்போதும் வயிற்றைத் தொட்டு உதட்டில் ஒற்றிக்கொண்டு சொன்னாள் அவள்.
“உண்மையாவே முதுகுல ஒண்டு போடப்போறன். நேரமாகுது ஓடிப்போய்ச் சாப்பிடு!” அவளின் சேட்டைகள் தாங்காமல் துரத்திவிட்டாள் பிரமிளா.
மகள் மருமகளின் பேச்சில் உருவான இதமான மனநிலையோடு காலை உணவைக் கொண்டுவந்து மேசையில் வைத்தார் செல்வராணி.
தயாராகி வந்த கணவனுக்கும் யாழினிக்கும் சேர்த்துப் பரிமாறிவிட்டு, தானும் போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள் பிரமிளா. அப்போதுதான் தயாரித்த பழரசத்தைக் கொண்டுவந்து அவளின் அருகில் வைத்து, “இதையும் குடியம்மா.” என்றார் செல்வராணி.
உணவை முடித்துப் பழரசத்தை எடுத்துக்கொண்டு, “யாழிய டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்து விடுங்கோ. கார், பைக் ரெண்டும் பழகட்டும்.” என்றாள் பிரமிளா கௌசிகனிடம்.
திடீரென்று எதற்கு இந்தப் பேச்சு? தங்கையின் முகம் பார்த்தான் கௌசிகன். அவளின் கண்களில் மின்னிய ஆவல், நீண்டநாள் விருப்பாக அது இருந்திருக்கிறது என்பதை உணர்த்திற்று!
தானாகக் கேட்கப் பயந்து சிபாரிசுக்குப் பெரிய இடத்தைப் பிடித்தாளோ? புருவங்கள் சுருங்க பார்வையை இப்போது பிரமிளாவின் புறம் திருப்பினான்.
“அவள் கேக்கேல்ல. நானாத்தான் சொல்லுறன். பதினெட்டு வயசானதுமே நீங்களா பழக்கியிருக்கோணும். அதைவிட்டுட்டு இப்பவும் யோசிச்சுக்கொண்டு இருந்தா என்ன கதை?”
தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியவளின் பேச்சில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “கம்பஸ் போயிட்டு வந்ததும் சொல்லு. சேர்த்துவிடுறன்.” என்று தங்கையிடம் சொல்லிவிட்டு எழுந்துபோனான் அவன்.
அதுவரை நேரமும், ‘அண்ணா நிச்சயம் மறுக்கத்தான் போகிறார்’ என்கிற பயத்தில் உறைந்துபோயிருந்த யாழினிக்கு அவனின் சம்மதத்தைக் கேட்டதும் கண்கள் கலங்கிப் போயிற்று.
எத்தனை நாள் கனவு. வசதியற்ற வீட்டுப் பெண்கள் கூட லைசென்ஸ் எடுத்து, லோனில் ஸ்கூட்டி வாங்கி ஓட்டிக்கொண்டு திரிய, இவள் இன்னுமே சைக்கிளைத்தானே வலித்துக்கொண்டிருக்கிறாள்.
இனி எல்லாம் மாறப்போகிறது!
நன்றி அண்ணி என்று சொல்ல நினைத்தாள். சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக்கொள்ள, உணவுத் தட்டில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
அப்போது வாசலில் ஸ்கூட்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வந்தான் ரஜீவன். “சேர், உங்களிட்ட கொண்டுவந்து குடுக்கச் சொன்னவர் அக்கா.” என்றபடி திறப்பை நீட்டினான்.
நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டுவிட்டு, “இனி நீ வேலைக்குப் போகோணும் எல்லா? எப்பிடிப் போவாய்?” என்று விசாரித்தாள் பிரமிளா.
“வெளில ஃபிரெண்ட் நிக்கிறான் அக்கா. அவனோட போவன். நேரமாகுது வாறன் போயிட்டு!” என்றுவிட்டு, செல்வராணியிடமும் தலையசைத்துவிட்டு வெளியே வந்தவனின் மனமோ சினத்தில் குமுறத் தொடங்கிற்று.
ஒற்றைப் பார்வை பார்த்தாளா? ஒருவன் வந்திருக்கிறான் என்று கூட மதிக்கவேயில்லையே!
சிவனே என்று இருந்தவனின் பின்னால் அலைந்து ஆசை காட்டுவது. சொன்னது நீதானா, இன்னொரு கையில் நானா என்று கேட்டு உசுப்பி விடுவது. வீட்டுக்கு வந்தால் மட்டும் நிமிர்ந்து ஒரு பார்வை கூடப் பார்க்காமல் உதாசீனம் செய்வது! எல்லாம் வேசம்! பசப்புக்காரி! வாடி உனக்கு இருக்கு! கருவிக்கொண்டு நண்பனின் பைக்கில் ஏறிக்கொண்டான்.
தான் உணர்ச்சிவசப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் அவனை அங்கே எதிர்பாராத யாழினி, அவன் முகம் பார்த்தால் இன்னுமே உடைந்து, இதுதான் என்று அவர்களுக்கே முடிவாகிவிடாத ஒன்றை இருப்பதாக வீட்டினருக்குக் காட்டிக்கொடுத்து, அவனை மீண்டும் மாட்டிவிடுவோமோ என்று பயந்துதான் தலையை நிமிர்த்தவேயில்லை.
அவன் மனநிலை அறியாமல் அப்படியே தன் அறைக்குள் ஓடி, பல்கலைக்கு நழுவியிருந்தாள்.
ஹாண்ட் பாக், புத்தகங்கள் சகிதம் வந்த பிரமிளா ஸ்கூட்டியின் திறப்பை எடுக்கப்போக, “கொஞ்ச நாளைக்கு என்னோட வா! ஸ்கூட்டி வேண்டாம்!” என்ற கௌசிகன் அவளின் பதிலை எதிர்பாராமல் காரை நோக்கி நடந்தான்.
அவளுக்கும் அதுதான் சரி என்று பட்டது. சாப்பிட்டது என்னவோ செய்வது போலிருக்கச் சீட்டில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். பிரதான வீதியில் காரை லாவகமாக ஏற்றி மிதக்கவிட்டான் கௌசிகன். அவளின் ஓய்ந்த தோற்றத்தைக் கவனித்துவிட்டு, “ஏலாம இருக்கா?” என்று விசாரித்தான்.
அவளிடம் பதில் இல்லை.
தன்னைக் குறித்தான எந்த விடயத்தையும் அவனோடு பகிர்ந்துகொள்ள அவள் எப்போதுமே தயாராயில்லை என்பது புரிந்தது. கடந்த இரண்டு நாட்களாகத் தெரிந்த இளகிய தன்மை கூடப் புதுவரவு அப்போதைக்கு உருவாக்கிவிட்ட மாற்றம்தான் போலும்! ஸ்டேரிங்கில் இருந்த ஒரு கையால் அவளின் கரத்தைப் பற்றி, “என்னோடயும் கொஞ்சம் நீ கதைக்கலாம் பிரமி.” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் கையை விலக்கிக்கொண்டாள் பிரமிளா. கண்முன்னால் வந்து நின்ற கல்லூரி, சில நாட்களுக்கு முன்னால் அவள் சொன்ன ஒரு சம்மதத்தை நினைவூட்டிவிட, இறங்கித் தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
சற்றுநேரம் போகிறவளையே பார்த்திருந்துவிட்டு காரைக் கொண்டுபோய் மர நிழலின் கீழே நிறுத்தினான் கௌசிகன்.
இவர்கள் எல்லோரும் வெளியேறுவதற்காகவே காத்திருந்த மோகனன் அன்னையிடம் வந்தான்.
“எப்பம்மா கதைக்கப் போறீங்க?”
‘இவன் இதை இன்னும் மறக்கவில்லையா’ என்று அதிர்வுடன் பார்த்தார் செல்வராணி. அந்த நேரத்து ஈர்ப்பில் கதைக்கிறான் என்று நினைத்தாரே. அப்படி இல்லையோ?
“பொறு தம்பி! உனக்கு இன்னும் பொறுப்பு வரேல்ல. அந்தப் பிள்ளைக்குப் படிப்பு முடியேல்ல. அதுக்கிடையில ஏன் அவசரப்படுறாய்? முதல் அண்ணாக்கு உதவியா நிக்கப் பார். அண்ணா, அண்ணியோட இருக்க வேண்டிய நேரம் இது. குழந்தை பிறக்கட்டும். அதுக்குப் பிறகு…” என்றவரைப் பொறுமையற்று இடைமறித்தான் அவன்.
“தேவையில்லாம அலட்டாதீங்கம்மா! சொன்னதைச் செய்யத் தெரியேல்ல. சும்மா புத்தி சொல்லிக்கொண்டு…” என்று எரிந்து விழுந்துவிட்டு, விருட்டென்று அங்கிருந்து போனான்.
முகம் சிவந்துவிட அப்படியே நின்றுவிட்டார் செல்வராணி. ஆனாலும் அமைதியாகப் போகமுடியாமல் அந்தப் பெண்ணின் பூமுகம் கண்ணுக்குள் வந்து நின்றது. மகனைத் தேடிப்போனார்.
“தம்பி இஞ்ச பார். எல்லாத்துக்கும் முதல் அந்தப் பிள்ளைக்கும் உன்னப் பிடிக்கோணும். யோசிக்காம அவசரப்பட்டு எதையும் செய்து போடாத.”
உதட்டோரம் வளைய அன்னையைப் பார்த்தான் அவன். “அண்ணாவும் அவவுக்குப் பிடிச்சுத்தான் கட்டினவரோ?”
பதறிப்போனார் செல்வராணி. எவ்வளவு பெரிய மோசமான முன்னுதாரணத்தைக் கொடுத்துவிட்டான் மூத்த மகன்.
“அண்ணான்ர விசயம் வேற. இது வேற. சும்மா நீ எதையாவது…”
“அம்மா போதும்! போய்ப் பாக்கிற வேலையப் பாருங்க. ரெண்டு நாளைக்கு வரமாட்டன். ஃபிரெண்ட்ஸோட வெளில போறன்!” ஒரு பையைத் தூக்கிக்கொண்டு போகிற போக்கில் சொல்லிக்கொண்டே சென்று மறைந்தான் அவன்.
நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. சொன்னது போலவே யாழினியை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டான் கௌசிகன். வைத்தியரிடம் தானும் கூடவே சென்று தாய் சேயின் நலமறிந்து வந்தான். மாலைகளில் நேரமிருக்கையில் அவளின் அன்னை வீட்டுக்கும் அழைத்துப்போனான்.
ஒருநாள் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த பிரமிளாவுக்கு நிர்வாகியாக அவனிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே, அன்று போலவே அவனோடு காவல்துறை அதிகாரியும் அமர்ந்திருந்து இது எதற்கான அழைப்பு என்று உணர்த்தினார்.
என்றோ ஒருநாள் இது நடக்கும் என்று தெரியும். நடக்காமல் இருந்துவிடாதா, மனது மாறிவிட மாட்டானா என்கிற நப்பாசையும் கூடவே தொற்றிக்கொண்டிருந்தது.
இல்லை, அவன் நினைத்ததை நடாத்தியே முடிக்கப்போகிறான் என்று தெரிந்த இந்த நொடி, எப்போதும் போலவே தன் நம்பிக்கைக்குள் அகப்படாமல் பொய்த்துப்போனவனை வெறித்தாள் பிரமிளா.
அதுவும் நொடிப்பொழுதுதான்.
ஒருவித அதிர்வு தாக்க அவன் நிமிர்கையிலேயே, “அண்டைக்கே நான் சைன் வச்சிருக்கலாம். தேவையில்லாம நேர்மை, நியாயம் எண்டு கதைச்சு உங்களை இழுத்தடிச்சிட்டன். சொறி!” என்று காவல் அதிகாரியிடம் உரைத்துவிட்டு, நின்றநிலை மாறாமல் குனிந்து மேசையில் கிடந்த ஒற்றைகளில் அவர் காட்டிய இடங்களில் எல்லாம் வேகவேகமாகக் கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அசைவற்றுப்போய் அமர்ந்திருந்தான் கௌசிகன். அவள் பார்த்த பார்வைக்கான பொருளைக் கலக்கத்துடன் தேடிக்கொண்டிருந்தது அவன் நெஞ்சம்.
“மிச்சத்தை இனி நான் பாத்துக்கொள்ளுவன் சேர். எதைப் பற்றியும் யோசிக்காம நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்றவர், அவனின் கவனம் முழுவதுமாகத் தன்னிடமில்லை என்று உணர்ந்து விடை பெற்றுக்கொண்டார்.