அத்தியாயம் 38
எதையும் தருவித்து அருந்தவோ, உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா.
எல்லாமே முடிந்து போயிற்று, இனி இதைப் பற்றி நினைக்கவே கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறாள். ஆனால், நியாயம் கிடைக்காமல் அநியாயமாக அடங்கிப்போன வலி, நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருந்தது.
மாணவிகளோ ஆசிரியர்களோ இல்லை பெற்றோர்களோ வந்து அவளிடம் கேள்வி கேட்கப்போவதில்லைதான். ஆனால், அவளின் மனம் கேட்குமே! நீ இந்தக் கல்லூரிக்கு நியாயம் செய்யவில்லை என்று சொல்லுமே! இதோ, சதா குத்திக்கொண்டே இருக்கிறதே!
வீட்டில் இளகிய முகம் காட்டினாலும் தான் நினைத்தவற்றை நடாத்தி முடிப்பதில் எந்தத் தயவு தாட்சண்யமும் காட்டாத கணவனின் குணம் அவளை மிகவுமே வருத்திற்று! அவன் இப்படித்தான் என்று தெரியாமலில்லை. ஆனாலும் நல்லது செய்துவிடமாட்டானா, தன் மனம்போல் நடந்துவிடமாட்டானா என்று குட்டியாய் உள்ளுக்குள் எதிர்பார்க்கும் மனத்தை என்ன செய்ய?
“ரெண்டு கோப்பிக்கு சொல்லுறன் மிஸ்.” அந்தக் குரலில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். சசிகரனைக் கண்டதும் கண்களை எட்டாத முறுவல் ஒன்று மலர்ந்தது. “எனக்குப் பழச்சாறு இருந்தா சொல்லுங்கோ சேர்.” என்றாள்.
தன்னைப் போலவே அவளும் ஒரு கோப்பிப் பிரியை என்று தெரிந்திருந்தவன் விழிகளை வியப்பாக விரித்தான். “என்ன மிஸ் புதுசா? இப்பிடித் திடீரெண்டு கோப்பியைக் கைவிட்டா அது கவலைப்படாதா?”
“அடிக்கடி கோப்பி குடிக்கிறது குழந்தைக்கு அவ்வளவு நல்லமில்லையே சேர்?” தன் ரகசியத்தைப் பகிரும் சிறு கூச்சமும் சிரிப்புமாகச் சொன்னவளை முதலில் புரியாமல் நோக்கிவிட்டு, உடனேயே கண்களை அகலமாக விரித்தான் அவன்.
“மிஸ்ஸ்ஸ்… சொல்லவே இல்ல பாத்தீங்களா? எண்டாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள். கையத் தாங்க எனக்கு நல்ல சந்தோசமா இருக்கு!” என்று அவளின் கரம் பற்றித் தன் வாழ்த்தைத் தெரிவித்தான்.
அது அருகிருந்த ஆசிரியர்களின் காதுகளிலும் எட்டிவிட எல்லோருமே வாழ்த்திச் சென்றனர். கலங்கியிருந்த மனது சற்றே இதமாக உணர்ந்தது.
கேட்டதுபோலவே அவளுக்குப் பழச்சாறையும் தனக்குக் கோப்பியையும் எடுத்துக்கொண்டு வந்து அவளின் முன்னே அமர்ந்துகொண்டான் சசிகரன்.
“என்னடா மிஸ் வாட்டமா தெரியுறாவே எண்டு யோசிச்சன். இப்பதானே விசயமே விளங்குது.” என்றுவிட்டு, இப்போது எத்தனை மாதம், அவளின் நலன், குழந்தையின் நலன் என்று விசாரித்தான்.
முழுக்கவனம் இல்லாமல் பதில் சொன்னவளின் முகம் என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.
“என்ன மிஸ்? சந்தோசமா இருக்கவேண்டிய இந்த நேரத்தில எதைப் பற்றி யோசிக்கிறீங்க? என்னட்ட சொல்லலாம் எண்டா சொல்லுங்கோ.” என்றான் இதமான குரலில்.
அவன் முகம் பார்க்க முடியாமல் பழச்சாறு இருந்த குவளையின் விளிம்பை வருடியபடி, “நான் கேஸ வாபஸ் வாங்கிட்டன் சசி சேர்.” என்றாள். அதைச் சொல்லும்போதே தவறிழைத்துவிட்ட உணர்வில் அவள் குரல் கரகரத்தது.
அவனிடமிருந்து பதிலற்றுப்போக அவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது. நல்ல நண்பன். சக ஆசிரியன். எப்போதும் அவளுக்குத் தோள் கொடுப்பவன். அவன் தன்னைத் தவறாக எண்ணுகிறானோ என்று கலங்கி, நடந்தவற்றை முழுவதுமாகப் பகிர்ந்துகொண்டாள்.
“நடந்து முடிஞ்ச விசயத்துக்கான நியாயமா இந்தப் பள்ளிக்கூடத்தின்ர எதிர்காலமா எண்டு வரேக்க ரெண்டாவதைத்தான் என்னால தெரிவுசெய்ய முடிஞ்சது சேர். ஆனா… இப்ப யோசிச்சா… நானும் பிள்ளைகளுக்கு நியாயமா நடக்க இல்ல தானே.” என்றாள் கசந்த முறுவல் ஒன்றுடன்.
மறுத்துத் தலையசைத்தான் சசிகரன். “ஒரு காலமும் உங்களால அப்பிடி நடக்கவே ஏலாது. அதுதான் நீங்க. எவ்வளவு பெரிய விசயத்தச் சாதிச்சு இருக்கிறீங்க எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா மிஸ்?” என்று கேட்டான் அவன்.
அவள் பதிலற்று இருக்க, “யோசிச்சுப் பாருங்கோ, இவ்வளவு நாளும் படாத பாடெல்லாம் பட்டு எதுக்காகக் கௌசிகன் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தன்ர கட்டுப்பாட்டுக்க கொண்டுவந்தாரோ அது நடக்கவே போறேல்ல. உங்கட அப்பா அதிபரா இருந்தாத்தான் நடக்கும் எண்டு நாங்க எல்லாரும் நினைச்ச விசயத்த, அவர் இல்லாமையே நடக்க வச்சிருக்கிறீங்க. அப்பிடிப் பாக்கேக்க கௌசிகனுக்குத்தான் பெரும் தோல்வி.” என்றான் அவன்.
அப்போதும் அவளின் முகத்தில் தெளிவின்மை தெரிய, “எனக்கு விளங்குது. சில கசப்பான சம்பவங்கள் நடந்ததுதான். பிள்ளைகள் வருந்தினவேதான். அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது மிஸ். எங்களால தடுத்திருக்கக் கூடியத நாங்க தடுக்காம விட்டிருந்தா மட்டும்தான் கவலைப்படோணும். இதெல்லாம் எங்களையும் மீறி நடந்தது. சில விசயங்களைச் சாதிக்கிறதுக்கு இன்னும் சில விசயங்களைக் கடந்துதான் வரவேண்டி இருக்கு.” என்றான்.
அவன் சொல்வது உண்மைதான். ஆனால், இலவசக் கல்லூரி இலவசமாகவே இயங்குவதற்காக ஒன்றை இழப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? அவனுக்குக் கௌசிகன் யாரோ ஒருவன். அவளுக்கு?
தன் கணவன் தனக்கும் கல்லூரிக்கும் நியாயம் செய்யவில்லை என்பது உண்மைதானே? குற்றம் ஒன்றுக்குத் தண்டனை கிடைக்கவிடாமல் செய்து, அதற்கு அவளையும் கூட்டுச் சேர்த்திருக்கிறான்.
சசிகரனுக்கும் அவளின் மனத்தின் குமைச்சல் விளங்காமல் இல்லை. கூடவே அவளாகவே அதிலிருந்து வெளியே வந்துவிடுவாள் என்றும் தெரியும். அதற்குமேல் அதைப் பற்றிப் பேசப் பிடிக்காமல், “என்ர பிரியமான தோழி அம்மாவா பதவி உயர்வு பெற்றிருக்கிறா. சோ நான் அதைக் கொண்டாடுற மூட்ல இருக்கிறன். பசிக்குது மிஸ், சாப்பாடு வாங்கித் தாங்க!” என்றான்.
நடந்தவற்றை அவனிடம் பகிர்ந்ததே அவளைப் பெருமளவில் ஆற்றுப்படுத்தியிருக்கக் கேட்டதை வாங்கிக்கொடுத்து அவன் உண்டதும் அடுத்த வகுப்பை நோக்கி இருவரும் நடந்தனர்.
*****
அன்று கௌசிகன் வீடு வந்து சேர்வதற்கு இரவு எட்டு மணியைத் தாண்டியிருந்தது. அறைக்குள் நுழைந்ததுமே மென் ஊதா நிறத்தின் மீது மல்லிகைகளைத் தூவி விட்டாற் போன்ற முழுநீள நைட்டியில் அமர்ந்திருந்து, கல்லூரி வேலைகளில் ஈடுபட்டிருந்த பிரமிளாவைத்தான் கண்கள் தேடிப்பிடித்துத் தேங்கி நின்றன.
அவன் வந்ததை உணராமல் இருக்கச் சாத்தியமில்லை. இருந்தும் அசையாமலிருந்து தன் வேலையிலேயே கவனமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டவளை எப்படி அணுகுவது என்று சில கணங்கள் யோசித்துவிட்டு, மெல்ல அவளருகில் சென்று நின்றான்.
தான் தன் கணவனாலேயே அசைய முடியாமல் கட்டிப்போடப்பட்டு இருக்கிறோம் என்பது அவளுக்கு மிகுந்த மனவுளைச்சலை உண்டாகியிருக்கும் என்று உணர முடிந்தது. எப்படியாவது அவளைத் தேற்றிவிடு, சமாதானம் செய்துவிடு என்று மனம் உந்திற்று. எப்படி? வழி தெரியாது மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.
“சாப்பிட்டியா?”
எதையோ குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தவள் முகம் கொடுத்தது. எழுதிக்கொண்டிருந்த பேனையை மேசையில் போட்டுவிட்டு எழுந்துபோக முனைந்தாள். முன்னே வந்து நின்று மறித்தான் கௌசிகன்.
வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
“சாப்பிட்டியா எண்டு கேட்டனான்.” அவளின் முகத்திருப்பல் சுட்டுவிட்டதில் கேள்வி அழுத்தம் திருத்தமாக வந்தது.
“இவ்வளவு நேரத்துக்குப் பிறகும் நான் ஏன் சாப்பிடாம இருக்க?” அந்த அழுத்தம் அவளையும் உசுப்பிவிடப் பதிலும் சூடாகவே வந்தது.
“நீ முதல் என்னப் பார்!”
அவன் சொன்னதைச் செய்யாது அவனைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தவளின் கையைப் பற்றினான் கௌசிகன். விருட்டென்று அவனிடமிருந்து கையைப் பறித்துக்கொண்டு இரண்டடி விலகி நின்றாள் அவள்.
அதுவரை நேரம் காத்துவந்த நிதானம் பறந்துவிட, அவளை நெருங்கினான். வலுக்கட்டாயமாக அவளின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு, “என்னைப் பார் பிரமி!” என்றான் அதட்டலாக.
அப்போதும் கைகளை விடுவித்துக்கொள்ள மட்டுமே முயன்றவளின் செயல் அவனை மிகவுமே தாக்கிற்று!
“இந்த அலட்சியம் உனக்கு நல்லதுக்கில்ல!” என்றவனின் எச்சரிக்கையில், விலுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகளில் அனல் பறந்தது.
“என்ன செய்வீங்க? சொல்லுங்க! அப்பிடி என்ன செய்வீங்க? அடிப்பீங்களா? இல்ல கட்டிவச்சுக் கொடுமை செய்வீங்களா? இவ்வளவு காலமும் நீங்க செய்ததோட ஒப்பிடேக்க அது ஒண்டும் பெரிய வலியத் தரப்போறேல்ல!”
அவளின் சீற்றத்தில் ஒருகணம் திகைத்து நின்றுவிட்டான் அவன். சமாதானம் செய்ய நினைத்து ஆரம்பித்துப் பாதையே மாறிப்போனதை அப்போதுதான் உணர்ந்து நிதானித்தான். அவளின் கைகளை விட்டுவிட்டு நிதானமாகத் தன்னை விளக்க முயன்றான்.
“நீ சம்மதிச்ச பிறகுதானே எல்லாம் நடந்தது பிரமி.”
“சம்மதிக்க வச்சது ஆரு?” என்று அடுத்த நொடியே சீறினாள் பிரமிளா. “செய்றதை எல்லாம் செய்துபோட்டு நல்லவனுக்கு நடிக்கிறீங்க. முதல் உங்களிட்ட வந்து ஏதாவது கேட்டனானா? புதுசா வந்து விளக்கமெல்லாம் சொல்லுறீங்க. பார்த்த முதல் நாளே உன்ன அழிச்சுப்போடுவன் எண்டு சொன்ன ஆள்தானே நீங்க. அதைத்தானே கொஞ்சம் கொஞ்சமா செய்றீங்க. பிறகும் என்ன?” என்றவளின் பேச்சில் அதிர்ந்து நின்றுவிட்டான் கௌசிகன்.
அன்றைக்கு, ‘யாரோ ஒருத்தி’ தன் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்க முனைகிறாள் என்கிற கோபத்தில் சொன்னான்தான். அதற்கென்று இன்றைக்கும் அப்படி நினைப்பானா?
ஏற்றுக்கொள்கிற சில கடமைகளும் பொறுப்புகளும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க விட்டுவிடுவதில்லையே! ஆனால், காயப்பட்டு நிற்கிறவளிடம் என்ன சொல்லித் தேற்றுவான்?
அன்று அவனிடமிருந்து விலகியவள்தான். அதன் பிறகு மாறவே இல்லை. தாய்மை அடைந்ததில் உண்டாகியிருந்த அந்த மெல்லிய இளகல் தன்மை மறைந்து போயிற்று. அவனை எதிர்கொள்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் முகத்தில் மிகுந்த இறுக்கத்துடனேயே எதிர்கொண்டாள்.