“அப்ப அவனில பிழை இல்ல. உன்னிலதான் பிழை.”
“அண்ணி?” அதிர்ந்துபோய்ப் பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கோடாக இறங்கிற்று.
“அவன் ஒரு கேள்வி கேட்டவன். அதுக்கான பதிலை நீ சொல்லி இருக்கோணும். அதுக்குப் பிறகும் அவன் வந்தாத்தான் பிரச்சனை.”
“பதில் சொல்லாம போனா விருப்பம் இல்லை எண்டு அர்த்தம் அண்ணி.”
பிரமிளா இல்லை என்பதுபோல் மறுப்பாகத் தலையை அசைத்தாள். “இழுத்தடிக்கிறாள், தனக்குப் பின்னால சுத்தவைக்கிறாள் எண்டுற அர்த்தமும் வரும்.” என்றாள் நிதானமாக.
“என்ன அண்ணி இப்பிடிச் சொல்லுறீங்க?” அண்ணியே தன்னை விளங்கிக்கொள்ளவில்லையா என்கிற வேதனையோடு கேட்டாள் சின்னவள்.
“முதல் நீ அழுறதை நிப்பாட்டு. நாளைக்கு நீயே அவனைத் தேடிப்போறாய். எனக்கு விருப்பம் இல்லை, நான் படிக்கோணும், என்னை டிஸ்டப் பண்ணாதீங்கோ எண்டு அவன்ர கண்ணைப் பாத்துச் சொல்லுறாய். அதுக்குப் பிறகு அவன் ஏதும் தொந்தரவு தந்தா அப்ப பாப்பம்.” என்றாள் முடிவுபோல்.
மோகனன் சினத்துடன் என்னவோ சொல்ல வரவும் பார்வையாலேயே அடக்கினான் கௌசிகன். இத்தனை நேரமாக அண்ணனும் தம்பியுமாக அதட்டியும் வரவழைக்க முடியாமல் போன விடயத்தை வந்த ஒற்றை நொடியில் வெளியே கொண்டுவந்துவிட்டாளே மனைவி.
மெல்லிய வியப்புடன் அவளைக் கவனித்திருந்தான் கௌசிகன்.
கோபத்துடன் அங்கிருந்து எழுந்துபோனான் மோகனன்.
“நாளைக்கு அவனை நீயே தேடிப்போய்ச் சொல்லிப்போட்டு என்ன சொன்னவன் எண்டு வந்து சொல்லு. சரியோ? இப்ப போ! போய் முகத்தைக் கழுவிப்போட்டு பாக்கிற வேலையைப் பார்! இதெல்லாம் ஒரு விசயம் எண்டு இதையே யோசிச்சுக்கொண்டு இருக்கிறேல்ல.” என்று அவளை அனுப்பிவிட்டுக் கணவனை நோக்கியவளின் விழிகளில் கோபம் மிகுந்திருந்தது.
“வீட்டுல இருக்கிற பொம்பிளைப் பிள்ளைக்கு ஒரு பிரச்சினை எண்டதும் வெட்டுறன் குத்துறன் எண்டு வெளிக்கிடுறதை விட்டுட்டு, அவளே அதை எப்பிடி ஹாண்டில் பண்ணுறது எண்டு சொல்லிக் குடுக்கோணும். அதை விட்டுட்டு அவளையே பிழை சொல்லி வீட்டுக்கையே முடக்குவீங்களா? முதல், இதென்ன பேச்சுவார்த்தைகள் பயன்படுத்துறீங்க? ஊர் சுத்துறது, ஒழுங்கா இருக்கிறேல்ல, கூத்தடிக்கிறது எல்லாம் ஒரு தங்கச்சிட்ட அண்ணா கதைக்கிற கதையா?” என்று அதட்டினாள்.
“எல்லாத்துக்கும் முதல், மனதில இருக்கிறதை அது சரியோ பிழையோ வீட்டில சொல்லுற அளவுக்கு அவளைக் கதைக்க விடுங்க. அவள் சொல்லுறதையும் கேளுங்க. கூடப்பிறந்த அண்ணனைப் பாத்தாலே அவளுக்கு நடுங்குது. அந்தளவுக்கு இருக்கு உங்கட செய்கை.” என்னவோ தன் வகுப்பு மாணவனைக் கண்டிக்கும் ஆசிரியைப் போல் அவனை அதட்டிவிட்டுப் போனாள் பிரமிளா.
அசந்துபோய் அமர்ந்திருந்தான் அவன். அவள் தலையிடாமல் இருந்திருக்க அவனுக்கு வந்த கோபத்துக்கு அந்த அவனை இன்றைக்கு இரண்டில் ஒன்று நிச்சயமாகப் பார்த்திருப்பான். இவளானால் நடந்ததை நொடியில் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டாள். கூடவே அவனையே குற்றவாளியாகவும் மாற்றிவிட்டிருக்கிறாள்.
உதட்டோரம் அரும்பிய சிரிப்புடன் மேடிடத் துவங்கியிருந்த வயிற்றுடன் மாடி ஏறிக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவனின் முகம் பார்த்துக் கதைத்திருக்கிறாள். இல்லையில்லை அதட்டியிருக்கிறாள். ஆயினும் மனம் உல்லாசத்தில் மிதந்தது. அன்னை தன் அறைக்குள் செல்வது தெரிந்ததும் பள்ளிச் சிறுவனைப் போலத் துள்ளி எழுந்து அவளிடம் ஓடினான்.
மகளோடு சேர்ந்து இனி என்னாகுமோ என்று நடுங்கிக்கொண்டிருந்த செல்வராணிக்கு, மருமகள் தலையிட்டுச் சுமூகமாக முடித்த பிறகே மூச்சே வந்தது. இல்லாமல் அவரின் முரட்டு மகன்களை யாராலாவது அடக்க முடியுமா என்ன?
அவன் அறைக்குள் வந்தபோது யாருடனோ கைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள் அவள்.
“நீ தலையிடாத தீபன். ஆனா தூர நிண்டு கவனி. யாழி சொன்னதை வச்சுப் பாத்தவரைக்கும் இவள்தான் பயந்திட்டாள் போல இருக்கு. எண்டாலும் ஒருக்கா கவனி. நல்லா பயந்து போயிருக்கிறாள். இப்ப மட்டுமில்லை எப்பவும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“ஆர் அது?” தனக்குள் பொங்கிய உற்சாகத்தை மறைத்தபடி சாதாரணம்போல் விசாரித்தான்.
“எனக்குத் தெரிஞ்ச பெடியன்.” அவனைப் பாராமல் மொட்டையாகப் பதில் வந்தது.
அது தெரிந்தபோதும் காட்டிக்கொள்ளாமல் பேச்சுக்கொடுத்தான் அவன்.
“பிறகு அவனால ஏதும் பிரச்சனை வராதா?”
அவன் கேட்க வருவது விளங்க, “அவனுக்கும் இவள் தங்கச்சிதான்.” என்றாள் அப்போதும் சுருக்கமாக.
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறாய்?”
“அவனை நல்லா தெரிஞ்ச படியாலதான்.”
பிடிகொடுக்காமலேயே பேசும் அவளை உதட்டில் மலர்ந்த சிரிப்புடன் பார்த்தான். அவன் முகம் பார்க்கமாட்டாளாம். இன்முகமாக ஒரு வார்த்தையேனும் பேசமாட்டாளாம். ஆனால், குட்டுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் மாத்திரம் நன்றாகக் குட்டுவாளாம்! இவளை என்ன செய்தால் தகும்?
அவனைக் கண்டுகொண்டாள் பிரமிளா. கைப்பேசியை மின்னேற்றியில்(சார்ஜரில்) சேர்ப்பித்துவிட்டு அப்படியே அங்கிருந்து நழுவப் பார்த்தாள். கண்கள் சிரிப்பில் மின்ன அவளை எட்டிப் பற்றித் தன்னிடம் கொண்டு வந்தான் கௌசிகன்.
“எப்ப பாத்தாலும் என்னட்ட இருந்து ஓடுறதிலையே குறியா இருப்பியா நீ?” செல்லமாகக் கோபித்துக்கொண்டவனின் விழிகள் மனைவியின் முகத்தில் ஆசையோடு படிந்தன.
அகப்பட்டுக்கொண்டதில் முதலில் திகைத்தாலும் வேகமாகச் சமாளித்து, “விடுங்கோ!” என்று விலக முயன்றவளின் இடையை மெல்ல வளைத்தான். நெற்றியைத் தீண்டிக் கண்களை முத்தமிட்டுக் கன்னத்தில் நழுவிய அவன் இதழ்கள் தாபத்துடன் கழுத்து வளைவில் பதிந்தன.
“விடுறதுக்கா வளைச்சுப் பிடிச்சனான்?” காதோரம் உதடுகளை உரசவிட்டபடி கேட்டான் அவன்.
இந்தத் தாக்குதலைப் பிரமிளா எதிர்பார்க்கவில்லை. “என்ன செய்றீங்க?” என்று தடுமாறினாள். நிறைய நாட்களுக்குப் பிறகான கணவனின் நெருக்கம் அவளையும் என்னவோ செய்தது.
இதழ்களின் பயணமும் விரல்களின் விளையாட்டும் தன்னிலை இழக்கச் செய்வதை உணர்ந்து, “கௌசி பிளீஸ்!” என்றாள் தன்னை மறந்து.
அவளின் அதரங்கள் அவனுடைய பெயரினை சுருக்கி உச்சரித்தபோது மனம் கிறங்க அவ்விதழ்களைச் சிறை செய்தான் அவன்.