அத்தனை வருடங்களாக அதிபராகக் கம்பீரமாக அமர்ந்திருந்து கோலோச்சிய அவரின் அறைக்குள் நுழையக்கூடப் பிடிக்காதவராகப் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தார் தனபாலசிங்கம்.
அவருக்கு அந்தப் பாடசாலை சொந்த வீட்டைப் போன்றது.
முதன்முதலில் ஆசிரியராகப் பதவியேற்று, ஒருவித மனப்பயத்தோடு முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவனைப் போன்று தயங்கிக்கொண்டே அந்தக் கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்து, பல அனுபவங்களைப் பெற்று, பல பொறுப்புகளைப் பொறுப்பெடுத்து நடாத்தி, உப அதிபராகிப் பின் அதிபரானவர்.
அவரின் தொழில்துறை வாழ்க்கையில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்விலும் பிரித்துவைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சொந்தம் அந்தப் பள்ளிக்கூடம்!
தன் வாழ்க்கைத் துணையைக் கண்டுகொண்டதும் அங்கேதான்; நேசம் கொண்டதும் அங்கேதான்; மனைவியோடு இணைந்து பணியாற்றியதும் அங்கேதான். மகள்களை முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து, அழகு பார்த்ததும் அங்கேதான். இதோ மூத்தவளை ஆசிரியராக்கி அழகு பார்த்துக்கொண்டிருப்பதும் அங்கேதான்.
கூடவே, மாணவச் செல்வங்களின் நலன் விரும்பியாக, அவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டவராக, ஒரு தந்தைக்கு ஒப்பாக வாழ்ந்திருக்கிறார். அங்கு நிற்கும் ஒவ்வொரு மரமும் ஒரு பழைய கதை சொல்லும். அவரின் நினைவுகளை மீட்கும். எழுந்து நிற்கும் கட்டடம் தொடங்கி, சிரித்துக்கொண்டு நிற்கும் பூக்கன்றுகளிலிருந்து கல்லூரியின் கேட் வரைக்கும் அவரிடம் சொல்லும் செய்திகள் ஓராயிரம்.
அப்படி என் பாடசாலை என்று சொந்தத்தோடு பணியாற்றிய இடத்துக்கு ஒரே நிமிடத்தில் அந்நியனாக்கப்பட்டு வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். இந்த அறுபது வயதில் இந்த உதாசீனம் தேவையா என்ன? மனதே புண்ணாகிப்போயிற்று.
இதையெல்லாம் தாங்கிக்கொண்டு என் பதவியை எனக்கே தாருங்கள் என்று கேட்கும் இந்த அவல நிலை எதற்காக? மனத்தின் கசப்பு தொண்டையை அடைக்கத் தன் பிள்ளைச் செல்வங்களைப் பார்த்தார்.
முகம் வாடித் தெரிந்தாலும், முகத்தில் களைப்புத் தெரிந்தாலும் அவரைச் சுற்றிச் சூழ்ந்தபடி தங்களின் கோரிக்கைகளைப் பதாகைகளில் சுமந்தபடி உறுதியோடு அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு இது மூன்றாவது தவணை. சாதாரணத் தரம் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவிகளுக்கு இது மிகவுமே முக்கியமான நேரம். இப்போதுபோய்ப் போராட்டம் என்று அமர்ந்திருந்தால் எதிர்காலம் என்னாகும்?
“படிங்கோ பிள்ளைகள், நல்ல மார்க்ஸ் எடுக்கோணும். கம்பசுக்கு போகோணும்.” என்று புகட்டிய தானே அவர்களின் கல்வியைத் தடுத்து வைத்திருப்பது நியாயமா என்ன?
யார் அதிபராக இருந்தாலும் இந்தப் பிள்ளைகள் நல்லமுறையில் கற்றுச் சிறந்து விளங்கினால் போதுமே! இந்தப் போராட்டமே வேண்டாம், பிள்ளைகளின் படிப்பு வீணாகக் கூடாது என்று சொல்ல எண்ணி மகளைத் தேடினார்.
அங்கே யாருடனோ மிகத் தீவிரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
அவளும் பாவம். இதுவரை நேரமாக நிர்வாகசபையின் மற்ற உறுப்பினர்களை எல்லாம் தொடர்புகொண்டு, இதற்கான காரணம் என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள். யாருமே நியாயமான நேர்மையான பதிலைச் சொல்லக் காணோம்.
எப்படிச் சொல்லுவார்கள்? சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டுமே!
இது தனியார் பள்ளிக்கூடம். அதன் பொறுப்பை அமெரிக்க மிஷன் தன் கீழே இயங்கும் நிர்வாகசபைக்கு முழுமையாகக் கொடுத்திருந்தது.
அப்படி முழுக்கட்டுப்பாடும் அவர்களின் கையில் இருந்தும் கூட அவர்களுக்குப் பிடித்த ஆசிரியர்களை நியமிக்கவோ, மாணவர்களை ஒவ்வொரு வருடமும் புதிதாகச் சேர்த்துக்கொள்கையில் ‘நன்கொடை’ என்கிற பெயரில் பணம் பார்க்கவோ, மாணவிகளுக்குப் புத்தகத்துக்குக் கட்டணம், காண்டீன் உணவுக்குக் கட்டணம், ஸ்மார்ட் கிளாஸ் என்கிற பெயரில் பணம் என்று எதையும் வசூலிக்கவோ, டியூஷன் செண்டருக்கு செல்லக் கட்டாயப்படுத்தவோ அவர்களால் முடிந்ததில்லை.
பழைய மாணவிகள் வழங்கும் நன்கொடையில் கைவைக்கவும் முடிந்ததில்லை. அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக நிற்பவர் தனபாலசிங்கம்.
ஒரு வருடம் இரண்டு வருடமாக அல்ல! இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக! அவர் உப அதிபராகப் பதவியேற்ற போதே இப்பிரச்சனைகள் எல்லாம் ஆரம்பமாயிற்று. எப்போதடா அவரின் பதவிக்காலம் முடியும் என்று நீண்ட வருடங்களாகக் காத்திருந்தவர்களுக்கு அவர் தன் காலம் முடிந்த பிறகும் சேவையாற்றப்போகிறேன் என்று அமெரிக்க மிஷனுக்கு அனுமதி கேட்டு அனுப்பியதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
கூடவே, பிறக்கப்போகிற புது வருடமும் அதன்போது பெருமளவில் உள்வாங்க இருக்கும் புதிய மாணவியரும் அடுத்த காரணம். அதற்குமுதல் அவரை அகற்றினால்தான் புதிய விதிமுறைகள் என்று அறிவித்து, அதற்குப் பெற்றோரைத் தயார் செய்து, பணத்தோடு மாணவியரை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
முதலே அறிவித்தால் அமெரிக்க மிஷனுடன் தொடர்புகொண்டு அவர் எதையாவது செய்துவிடுவார் என்றுதான் யோசிக்கவே இடம் கொடுக்காமல் தூக்கி வெளியே எறியப் பார்க்கிறார்கள்.
இப்போது உப அதிபராக இருக்கும் திருநாவுக்கரசு, தனபாலசிங்கத்தின் நீண்ட காலத்து நண்பர். முறையின்படி தனபாலசிங்கம் ஓய்வுக்குச் செல்கையில் உப அதிபராக இருப்பவர்தான் அதிபராவார். இத்தனை வருடங்களாக இதுதான் அப்பள்ளிக்கூடத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது.
அப்படித் திருநாவுக்கரசு அதிபரானால் பிறகு என்றைக்கும் அவர்கள் எண்ணுவதைச் செயலாற்ற முடியாமலேயே போய்விடும். பின் அந்த வரிசையில் அவரின் மகள் வந்து நிற்பாள் என்று தெரிந்துதான் இத்தனை ஏற்பாடும்.
அவர்களின் இந்த எண்ணம் நடந்துவிடக் கூடாதுதான். ஆனால், அவரின் பிள்ளைச் செல்வங்கள் வெய்யிலில் வாடி வதங்கி, படிப்பை விட்டுவிட்டு அவருக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதைக் கண்கொண்டு காண இயலவில்லையே!
எனவே, சைகையில் மகளைத் தன்னிடம் அழைத்தார்.
“என்னப்பா?” என்று வந்தாள் பிரமிளா.
“இந்தப் போராட்டம் தேவையாம்மா? பார் பிள்ளைகள. படிக்கவேண்டிய நேரத்தில போராடிக்கொண்டு இருக்கினம். நான் இல்லாட்டியும் அவர்களால அவ்வளவு ஈஸியா எதையும் மாத்தேலாது. திருநாவுக்கரசு இருக்கிறார். நீ இருக்கிறாயம்மா. நல்ல மனம் உள்ள நிறைய டீச்சர்ஸ் இருக்கினம். பிறகும் என்னம்மா? பதவிக்காக இப்பிடிக் குந்தி இருந்து போராடத்தான் வேணுமா?” என்று கேட்டார்.
“பதவிக்காகவோ அப்பா இந்தப் போராட்டம்?” அவரின் நீண்ட விளக்கத்தை ஒற்றைக் கேள்வியில் முறியடித்தாள் அவள்.
“அதுதானே தனபாலன் சேர். பதவி ஆருக்கு வேணும்? எனக்கு வேணுமா இல்ல உங்களுக்கு வேணுமா? எதுலயும் ஒரு நியாயம் வேண்டாமா? படிச்ச பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிற ஆசிரியர்கள் நாங்க. நாங்களே ஒரு அராஜகத்துக்கு அடிபணிஞ்சு போனா இந்தப் பிள்ளைகளின்ர கதி என்ன சொல்லுங்கோ?” என்று வினவினார் திருநாவுக்கரசு.
அவரும் அவர்களை எண்ணித்தானே வேண்டாம் என்கிறார். “எங்கட நியாய அநியாங்களால அந்தக் குழந்தைகள் எல்லோ நடுவில மாட்டுப்பட்டு நிக்குதுகள்.” என்றார்.
“இண்டைக்கு ஒரு நாள் படிப்பு வீணாகிறதுக்கே இவ்வளவு கவலைப்படுறீங்க அப்பா. அக்கிரமம் பிடிச்சதுகளின்ர கைல பள்ளிக்கூடம் போனா இந்தப் பிள்ளைகளின்ர எதிர்காலமே வீணாகிப்போயிடாதா? காசுக்குக் கல்வியை விக்கலாமா அப்பா? தெரிஞ்சுகொண்டே அதுக்கு நாங்க துணை போறதா?” பொறுமையாகக் கேட்டாள் பிரமிளா.
உண்மைதானே. ஆனால், அவரால் இதையெல்லாம் பார்க்க முடியவில்லையே.
தந்தையின் மனம் புரிந்தது பிரமிளாவுக்கு. “நீங்க வேணுமெண்டால் வீட்டுக்குப் போயிட்டு பிறகு வாங்கோவன். வெய்யில் வேற உச்சிக்கு ஏறுது. பிரஷர் கூடிடும் அப்பா.” இதமான குரலில் சொன்னாள் அவள்.
“என்ர பிள்ளைகள் எல்லாம் வெயிலுக்க கிடக்க என்னைப் போய்ச் சுகமா இருக்கச் சொல்லுறியாம்மா? அந்தளவு சுயநலக்காரனா உன்ர அப்பா?” இயலாமையோடு கேட்டவரின் கேள்வியில் அழகாக முறுவலித்தாள் பிரமிளா.
“இந்தப் பிள்ளைகள் உங்களுக்காகப் போராடுறதுல ஒரு அர்த்தம் இருக்குத்தான் அப்பா!” பெருமை முகத்தில் துலங்கச் சொல்லிவிட்டு நடந்தவள், ஒருகணம் நின்று, “கட்டாயம் நியாயம் வெல்லும் அப்பா! கவலைப்படாதீங்க!” என்று அவருக்குத் தைரியம் கொடுத்துவிட்டுப் போனாள்.
அங்கே பள்ளிக்கூட மதிலுக்கு வெளியில் நின்று எட்டிப்பார்த்து, “பிரமிளா மிஸ்!” என்று சத்தமாக அழைத்தான் ரஜீவன்.
அவள்தான் அவனை வரச்சொல்லியிருந்தாள். அவனிடம் சென்று, “அவசரமா ஒருக்கா வீட்டை போய்வரோணும். ஏலுமா உனக்கு?” என்று வினவினாள்.
ஒரு பழைய சைக்கிள். அதை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு மதிலால் எட்டிப் பேசிக்கொண்டிருந்தான் அவன். “இது என்ன கேள்வி மிஸ்? என்ன செய்யோணும்? அதை மட்டும் சொல்லுங்கோ மிஸ்.” என்றான் வேகமாக.
“வீட்டை அம்மா நிக்கிறா. அவவிட்ட(அவரிடம்) கேட்டு என்ர லாப்டப், சார்ஜர் வயர், அப்பிடியே என்ர ஃபோன் சார்ஜரையும் வாங்கிக்கொண்டு வாறியா?”
“ஐஞ்சு நிமிசம் மிஸ். எடுத்துக்கொண்டு ஓடி வாறன். வேற எதுவும் எண்டாலும் சொல்லுங்கோ.” என்றுவிட்டு அந்தக் கணமே பறந்தான் அவன்.
கைப்பேசி சத்தம் எழுப்பவும், மாணவிகளின் கோஷம் கேட்காத தூரம் தள்ளி நின்று அழைப்பை ஏற்றாள்.
“என்னக்கா நடக்குது அங்க? அம்மா என்னென்னவோ சொல்லுறா?” பதட்டத்துடன் விசாரித்தாள் அவளின் தங்கை பிரதீபா.
“ப்ச்! என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்?” என்று சலித்தவள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள்.
“பாவம் என்னக்கா அப்பா. அவருக்கு மூத்த பிள்ளையே எங்கட பள்ளிக்கூடம்தான். அவரைப் போய்… எல்லாம் நாய்க் கூட்டம்! நன்றி கெட்டதுகள். பிடிச்சுவச்சுக் கன்னம் கன்னமா வெளுக்க வேணும் போல இருக்கு எனக்கு! நீங்க அவனுக்கு இன்னும் ரெண்டு போட்டிருக்கோணும். பரதேசி! நான் வெளிக்கிட்டு அங்க வரவா? அப்பாவைப் பாக்கோணும் மாதிரி இருக்கு.” என்றாள் அவள்.
இதுவே சாதாரணப் பொழுதாக இருந்திருக்கத் தங்கை பாவித்த சில சொற்களுக்காகக் கடுமையாக்க கண்டித்திருப்பாள் பிரமிளா. ஆனால், இன்று அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் நிலையில் அவள் இல்லை. தந்தையை எண்ணி நெஞ்சில் வேதனை மண்டியது. அங்கிருந்தே திரும்பி அவரைப் பார்த்தாள்.
எப்போதுமே மெல்லிய நிறத்திலான ஷேர்ட்தான் அணிவார். இன்றும் முதல்நாள் என்பதில் இளம் நீலத்தில் முழுக்கை ஷேர்ட் அணிந்து அதைக் காற்சட்டையினுள் இன் செய்து, ஷூக்கள் அணிந்து, நரைத்த முடியைப் படியாவாரி மிகுந்த மரியாதையான தோற்றத்தில் இருந்தார். உண்மையாக உழைத்த ஒரு மனிதனுக்கு எதற்கு இத்தனை பெரிய அநியாயம்? அவமானம்?
“அக்கா சொல்லுங்கோவன்! வரவா?” தமக்கையிடமிருந்து பதில் இல்லை என்றதும் அங்கிருந்து சத்தமாகக் கேட்டாள் பிரதீபா.
“நீ வந்து என்ன செய்யப்போறாய் தீபா? அங்கயும் இங்கயும் அலையாம ஒழுங்கா படிக்கிற வழியப் பாரம்மா. அப்பாவுக்கு நாங்களும் வேதனையைக் குடுக்கக் கூடாது. விளங்கினதோ?” என்று தமக்கையாகக் கண்டித்தாள் பிரமிளா.
“நான் ஒண்டும் அப்படிச் செய்யமாட்டன்!” திருகோணமலை பல்கலையில் கலைப்பிரிவின் மூன்றாமாண்டு மாணவிதான் பிரதீபா. சின்ன குழந்தையாக மாறித் தமக்கையிடம் சிணுங்கினாள்.
“எனக்கும் தெரியுமம்மா. எண்டாலும் சொன்னனான்!” சமாதானமாய் உரைத்தவள் திடீரென்று கேட்ட மாணவிகளின் கூச்சலில், “நீ வை! நான் பிறகு கதைக்கிறன்!” என்றுவிட்டு, அங்கு விரைந்தாள்.


