அடுத்த நாள் பல்கலையில் நடந்தவற்றைப் பற்றித் தீபன் சொல்லியிருந்தாலும் யாழினியையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் பிரமிளா.
“இப்ப பயமில்லையே?”
பளிச்சென்று புன்னகைத்தாள் யாழினி. “இப்பதான் அண்ணி மூச்சே விடக்கூடிய மாதிரி இருக்கு. அவரிட்ட கதைக்கேக்க கைகால் எல்லாம் நடுங்கினதுதான். ஆனா, சொன்னபிறகு பெரிய ரிலீஃபா இருந்தது. அவரும் சொறி சொன்னவர்.”
பெரும் தளையிலிருந்து விடுபட்ட உணர்வுடன் சொன்னவளைப் பார்க்கையில் திருப்தியாக உணர்ந்தாள் பிரமிளா.
“இது உனக்கு நல்ல பாடம் யாழி. பயந்து ஓடுறதோ அழுகையோ உன்ர பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் தராது. நிண்டு நிதானிச்சு யோசிச்சு ஒவ்வொரு விசயத்தையும் கையாளப் பழகவேணும்.” என்று புத்தியும் சொன்னாள்.
பெரும் பாடமொன்றைக் கற்றுக்கொண்ட தெளிவோடு ஆம் என்று தலையசைத்துவிட்டு, “அப்பிடித்தான் அண்ணாவையும் சமாளிக்கிறீங்களா அண்ணி?” என்று எதேற்சையாகக் கேட்டாள் சின்னவள்.
மெல்லிய அதிர்வு தாக்க அவசரப்பட்டு எதையும் சொல்லாமல் அவளைப் பார்த்தாள் பெரியவள்.
சின்னவளுமே அப்படிக் கேட்க எண்ணியிருக்கவில்லை. அண்ணி கோபித்துக்கொள்வாரோ என்கிற சங்கடத்தோடு, “நான் பிழையா கேட்டுட்டேனா தெரியேல்ல அண்ணி. ஆனா, உங்களுக்கு எங்கட வீட்டையும் அண்ணாவையும் பிடிச்சிருக்கோ இல்லையோ தெரியாது. எனக்கு நீங்க என்ர பெரிய அண்ணியா வந்ததுல நிறையச் சந்தோசம். என்ர ரோல் மோடலே நீங்கதான்! ‘எனக்கு எதிரா நிண்டாலும் கூடப்பிறந்த உன்னட்ட இல்லாத நேர்மை அவளிட்ட இருக்கு’ எண்டு அண்ணாவும் ஒருக்கா என்னட்ட சொன்னவர்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டே சிட்டாகப் பறந்திருந்தாள்.
இத்தனை நாட்களாக வீட்டில் சொல்லவும் பயந்து அவனை எப்படிக் கையாள்வது என்றும் தெரியாமல் மனத்துக்குள்ளேயே இருந்து நச்சரித்த ஒரு விடயம் நல்லபடியாக முற்றுப்பெற்றுவிட்டதில் மிகுந்த உற்சாகமாக உணர்ந்தாள் யாழினி. அதன் பிரதிபலிப்பாக,
எனக்கெனப் பிறந்தவன் உண்மையில் நீதானே
உன் முகம் பார்க்கையில் பெண்மையில் தீதானே
கண்களை மூடினால் உன்னுடன் வாழ்ந்தேனே
நீ வரும் வரை நிலவெனத் தேய்ந்தேனே
அன்றாடம் நான் தூங்க அன்பே உன் மடி வேண்டும்
என் தாயின் அன்பெல்லாம் அன்பே நீ தர வேண்டும்
என்று பாடலைப் புலனத்தில் ஏற்றிவிட்டாள்.
இரண்டு நாட்களாக வெறுமையாகக் காட்சியளித்த அவளின் ஸ்டோரியை தேடிக்கொண்டிருந்த ரஜீவனுக்கும் அப்போதுதான் மனது அமைதியாகிற்று. அவள் மீது மிகுந்திருந்த சினம், கோபமாக உருமாறி இப்போது மனத்தாங்கலாக வந்து நின்றிருந்தது.
தன் வீட்டு ஆட்களின் முன் என்னைப் பார்க்க மாட்டாளாமா? மதிக்க மாட்டாளாமா? பிறகு எதற்கு ஆசையைத் தூண்டிவிட்டாளாம்? போடி! நீயும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் என்று ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டான்.
அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுதான் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்துவதே. அப்படியிருக்கையில் அவளும் அதைக் குத்திக் காட்டுவதைப் போல நடந்துகொண்டது அவனை மிகவுமே பாதித்திருந்தது.
அறைக்கு வந்து சேர்ந்திருந்த பிரமிளாவின் மனது கணவனின் வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றது. நேற்றைய அவனின் நெருக்கமும் இன்று தெரிந்துகொண்ட அவளைப் பற்றிய அவனின் கணித்தலும் மனத்திலேயே நின்று அவனையே நினைவூட்டிக்கொண்டிருந்தன.
கைப்பேசி சத்தமிடவும் சிந்தனை கலைந்து எடுத்தாள். தீபன் எதற்கு அழைக்கிறான்? காலையில் பேசினாளே.
“சொல்லு தீபன்”
“அக்கா, அது மோகனன் நாலஞ்சு பெடியளோட வீட்டுக்கே போய் அந்தப் பெடியன வெருட்டி(மிரட்டி) இருக்கிறான். அவன்ர அம்மா அப்பா வயசான மனுசர். நல்லா பயந்திட்டினம் போல. அம்மா ஒரே அழுகையாம். அப்பா அடிச்சுப்போட்டாராம். அதுல இவன் நல்லா குடிச்சிட்டு ரோட்டில விழுந்து கிடந்தவன். நல்ல காலம் எங்கட கண்ணில பட்டுட்டான்.” என்றான் அவன்.
அதைக் கேட்டுப் பிரமிளாவுக்குத் தலையை வலித்தது. “கடவுளே…” படித்துப் படித்துச் சொன்னாளே. கேட்டானா! வாலிப வயதில் சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை ஒரு விடயமாக்கி அந்தப் பெடியனுக்கு அதை ஆறாத வடுவாக்கிவிட்டானே இந்தப் புத்தி கெட்டவன்!
“இப்ப எங்க அந்தப் பெடியன்? பயப்படுற மாதிரி ஒண்டும் இல்லயே?” கவலையோடு விசாரித்தாள்.
“இல்லையில்லை. நடந்ததைச் சொல்லி, இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம் எண்டும் சொல்லி, அவனை அவன்ர வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுட்டு வந்திட்டம். அந்த அம்மா அப்பா பாவம் அக்கா. மகன் குடிச்சிட்டு நினைவில்லாமக் கிடக்கிறதப் பாத்து ஒரே அழுகை. இனியாவது வேற பிரச்சனைகள் வராம இருக்கிறதுதான் உங்கட மச்சாளுக்கும் நல்லம். இப்பவே இங்க கம்பஸ்ல நிறையப் பேருக்கு விசயம் தெரிஞ்சுபோச்சு. அதுதான்…” என்று, தற்போதைய நிலையைச் சொன்னான் அவன்.
மோகனன் மீது மிகுந்த சினம்தான் வந்தது அவளுக்கு. இனி யாழினியைக் குற்றவாளியைப் போல் பார்ப்பார்கள். அதையே சொல்லி மற்ற மாணவர்கள் சீண்டப் பார்ப்பார்கள். என்னவோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதைப் போல ஒதுக்கப் பார்ப்பார்கள். இதற்காகத்தானே கணவனையே பேசாமல் இருக்கச் சொன்னாள்.
“சரி நான் என்ன எண்டு பாக்கிறன். யாழியக் கொஞ்சம் இன்னும் கவனமா பாத்துக்கொள்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
யாழினியிடம் இதைப் பற்றிச் சொல்லி எச்சரித்து வைக்க எண்ணிக் கீழே இறங்கி வந்தாள். சரியாக அந்த நேரம் மோகனனும் வீட்டுக்குள் வந்தான்.
“அவனை ஒண்டும் செய்யாத எண்டு உனக்கு ஏற்கனவே சொன்னது மோகனன். பிறகும் என்னத்துக்கு வீட்டுக்கே போய் வெருட்டி இருக்கிறாய்?”
கேள்வி கேட்டவளை நோக்கி ஏளனமாக உதடு வளைத்துவிட்டு நிற்காமல் நடந்தான் அவன்.
“நில்லு மோகனன்! கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிப்போட்டு போ!”