அவளின் அதட்டலில் போனவன் திரும்பி வந்தான்.
“ஹல்லோ! நிப்பாட்டுங்க! என்னையே கேள்வி கேக்கிற வேலை எல்லாம் இஞ்ச வேண்டாம்! விளங்கிச்சா?” அலட்சிய உடல் மொழியுடன் பதிலிறுத்தான் அவன்.
திடீரென்று கேட்ட பேச்சுச் சத்தத்தில் வெளியே வந்த யாழினி, மோகனனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
பிரமிளாவின் விழிகளில் அனல் பறந்தது. “நான் உனக்கு அண்ணி! ஒழுங்கு மரியாதையா கதைக்கப்பழகு. நீ உன்ர வேலைய ஒழுங்கா பாத்தா நான் ஏன் உன்னக் கேள்வி கேக்கப்போறன்?”
அவளை இளக்காரத்துடன் நோக்கி, “நீங்க முதல் உங்கட வேலைய மட்டும் பாருங்க. அண்ணாவைக் கட்டிட்டம் எண்டு எல்லாத்திலையும் தலையிடாதீங்க. இப்பிடித்தான் பள்ளிக்கூட விசயத்திலையும் துள்ளினீங்க. சத்தமே இல்லாம அடக்கினமா இல்லையா? அதேமாதிரி எப்பவும் அடங்கி இருங்க! இல்ல அடக்கவேண்டி வரும்!” என்றுவிட்டு அறைக்குள் புகுந்து, கதவை அறைந்து சாற்றினான் அவன்.
ஆத்திரத்தில் உடம்பெல்லாம் நடுங்க அப்படியே நின்றுவிட்டாள் பிரமிளா. முகத்திலேயே அறைந்தது போலிருந்தது. ஆனால், அவனைச் சொல்லிப் பிழை இல்லையே! இந்தத் தைரியத்தைக் கொடுத்தவன் வேறு ஒருவனாயிற்றே!
யாழினிக்குப் பிரமிளாவின் அருகில் போகவே முடியாமல் நடுங்கிற்று! அந்தளவில் அவளின் முகம் செந்தணலைப் போன்று சினத்தில் சிவந்து போயிருந்தது. என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியாமல் விஜிதாவுக்கு அழைக்க அறைக்கு ஓடினாள்.
மாலையில் வீடு வந்த கணவனைச் சற்றும் தணியாத கோபத்துடன் எதிர்கொண்டாள் பிரமிளா.
விடயத்தை அறிந்துகொண்டவன், “அத நீ என்னட்டச் சொல்லி இருக்க வேண்டியதுதானே?” என்று அவளைத்தான் குற்றம் சாட்டினான்.
பிரமிளா திகைத்துப்போனாள். இவனுடைய நியாயங்கள் எப்போதுமே தலைகீழானவை தானா? “இப்பவும் உங்களுக்கு அவன் எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கிறான் எண்டு விளங்கேல்லை. ஆனா நான் கதைச்சது மட்டும் பிழை.”
அதற்கும், “ப்ச்! அவன் சின்ன பிள்ளை. அவனோட மல்லுக்கட்டிக்கொண்டு நிப்பியா நீ.” என்றுதான் கேட்டான் அவன்.
“ஆரு? உங்கட தம்பி சின்ன பிள்ளை? ஒரு குடும்பத்தையே குலை நடுங்க வைக்கிறது எல்லாம் சின்ன பிள்ளை செய்ற காரியம் போல?”
“விடு! இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. அப்பிடி அவனை அடக்கி வைக்கிறதும் நல்லதுதான். இனி சேட்டை விடமாட்டான் தானே.” என்றான் வெகு சாதாரணமாக.
இவனாவது மோகனனைக் கண்டித்து அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது செய்வான் என்று நினைக்க, அவன் செய்ததே சரி என்பதுபோல் பேசுகிறானே. அதிர்வுடன் அவனை நோக்கினாள் அவள்.
அந்தப் பார்வையில் என்ன உணர்ந்தானோ அவளை நெருங்க, வேகமாக விலகி நின்றவளின் விழிகளில் பெரும் சீற்றம்!
“அது சரி! அண்ணா எப்பிடியோ அதப் பாத்துத்தானே தம்பி நடப்பான். அப்பிடியிருக்க அவனைச் சொல்லி பிழை இல்லையே! பள்ளிக்கூட விசயத்துல எப்பிடி அடங்கி இருக்கிறனோ அப்பிடி அடங்கி இருக்கட்டுமாம். இல்லாட்டி அடக்குவானாம்! அவன் சொன்னதும் உண்மைதானே…” என்றவளுக்கு மேலே பேசமுடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.
அதைக் கேட்டவனின் முகம் இறுகிற்று. அவளின் சீற்றமும் ஏன் என்று புரிந்து போயிற்று.
அவளையும் விடச் சின்னவன். எப்படி அவளிடம் பேசினான்? அதற்கு இடம் கொடுத்தவன் இவன்தானே?
என்றைக்கு இவனின் கண்ணில் பட்டாளோ அன்றிலிருந்து அவளின் சுயமரியாதை சுரண்டப்பட்டுக்கொண்டேதானே இருக்கிறது. துணைவனாக நின்று காக்கவா போகிறான். இல்லையே!
அவன் முன்னே உடைய பிடிக்காமல் விருட்டென்று அங்கிருந்து வெளியேற முனைந்தாள். அதற்கு விடாமல் தடுத்துப் பிடித்துச் சமாதானம் செய்தான் அவன்.
“சரி சரி! நான் அவனை என்ன எண்டு கேக்கிறன். நீ சும்மா கவலைப்படாத!” என்றபடி அவளின் முகம் பார்க்க முனைய அவளோ காட்ட மறுத்தாள்.
“நீங்க ஒண்டுமே கேக்க வேண்டாம். பிறகு அண்ணாவுக்கும் தம்பிக்கும் மூட்டிவிட்டுட்டாள் எண்டு அதுக்கும் ஒரு கதை சொல்லவா? என்னை விடுங்க முதல்!”
கலங்கிச் சிவந்திருந்த விழிகளில் மின்னிய கோபம் நெஞ்சை அள்ள, “அடியேய் மனுசி. அவனக் கேக்கிறன் எண்டுதானே சொல்லுறன். நீ கொஞ்சம் அமைதியா இருக்கமாட்டியா?” என்று அதட்டினான் அவன்.
“ப்ச்! நீங்க விடுங்க என்ன!” அவனின் எந்தச் சமாதானமும் எடுபடாமல் விலகி நின்றாள் அவள்.
“நீங்க கேளுங்க கேக்காம விடுங்க. அது உங்கட பிரச்சினை. ஆனா, நான் ஒண்டும் அடங்கி வாழ இஞ்ச வரேல்ல. உங்களுக்கு மனுசி. அவனுக்கு அண்ணி. அந்த மரியாதை எனக்கு வேணும்! முகத்தில அறையிற மாதிரிக் கதவை அடிச்சுச் சாத்திப்போட்டுப் போறான். இப்பிடி நடக்கிறது இதுதான் கடைசி முறையா இருக்கோணும் எண்டு உங்கட சின்ன பிள்ளையிட்ட சொல்லிவிடுங்கோ!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
முகம் இறுகத் தம்பியைத் தேடிப்போனான் கௌசிகன்.
அவன் வந்த வேகத்திலேயே எல்லாம் தெரிந்துகொண்டுதான் வருகிறான் என்று விளங்க, வேகமாக எழுந்து நின்றான் மோகனன். தமையனின் விழிகளில் தெரிந்த சீற்றத்தில் நடுக்கம் பிறக்கத் தலை தரையை நோக்கிற்று!
“அதென்ன அண்ணிய அடங்கி இருக்கச் சொன்னியாம்? அவள் ஆரு உனக்கு? என்ன கதப்பேச்சு இதெல்லாம்? எனக்கும் அவளுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கும். அத நீ உனக்குச் சாதகமாப் பயன்படுத்துவியா? தம்பி, சின்ன பிள்ளை, பொறுப்பு வர இன்னும் காலமிருக்கு எண்டு நினைச்சா என்ன வேலையெல்லாம் பாக்கிறாய் நீ? எனக்கு என்ன மரியாத தாறியோ அதே மரியாதையை அவளுக்கும் குடுக்கோணும்! இந்த வீட்டுல நான் வேற அவள் வேற இல்ல. விளங்கினதா உனக்கு!” தமையன் போட்ட அதட்டலில் தம்பியின் குனிந்திருந்த தலை ஆம் என்பதாக மாத்திரமே ஆடிற்று!
“முதல், அவனை ஒண்டும் செய்யாத எண்டு சொன்னேனா இல்லையா? என்ர சொல்ல மீறி நடக்கிற அளவுக்கு உனக்கு எங்க இருந்து தைரியம் வந்தது? உன்ர போக்கு வரவரப் பிழையா இருக்கு மோகனன். சொல்லுக் கேக்காம நீ நடக்கிறது இதுதான் கடைசியும் முதலுமா இருக்கவேணும்.” விரல் நீட்டித் தமையன் எச்சரிக்கவும் முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று அவனுக்கு.
“சொறி அண்ணா. இனி இல்ல.” என்றான் முணுமுணுப்பாக.
அப்போதும் விடாமல் அவனை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டு அவன் வெளியே வந்தபோது, மோகனனின் முகம் முற்றிலுமாக இரத்தப்பசை இழந்து வெளுத்துப் போயிருந்தது.