அடுத்த நாள் கல்லூரி முடிந்து புறப்படுகையில், “பழக்கடைக்கு விடுங்க.” என்றாள் பிரமிளா.
நேற்றிலிருந்தே முகம் கொடுக்காமல் இருந்தவளிடம் ஏன் எதற்கு என்று கேட்டு, அவளின் கோபத்தை இன்னுமே கூட்டிவிட மனமில்லை அவனுக்கு. டவுனில் இருந்த பழக்கடையில் காரை நிறுத்தினான்.
அவள் இறங்கப்போக, “இந்த வெயிலுக்க நீ எங்க போறாய்? என்ன வேணும் எண்டு சொல்லு, வாங்கிக்கொண்டு வாறன்!” என்று கேட்டு, அவள் சொன்னதை வாங்கிக்கொண்டு வந்து காரின் பின் சீட்டில் வைத்தான். காரை வீதியில் ஏற்றிவிட்டு இனி எங்கே என்பதுபோல் அவளை நோக்கினான்.
அவள் காட்டிய பாதையில் பயணப்பட்ட கார், ஒரு நடுத்தர வீட்டின் முன்னே சென்று நின்றது.
“ஆரின்ர வீடு?”
“அந்தப் பெடியன்ர வீடு.”
அவள் செய்யப்போகிற காரியம் பிடிக்காத பாவத்தில் அவன் புருவங்களைச் சுளித்தான். “உனக்கு இஞ்ச என்ன அலுவல்?” மெல்லிய சினத்துடன் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தாள் பிரமிளா.
“அந்தத் தாய் தகப்பனைப் பற்றி யோசிக்க மாட்டீங்களா? மகன் தெரியாம பெரிய இடத்தில கை வச்சிட்டான், இனியும் என்ன எல்லாம் நடக்குமோ, ஒவ்வொரு நாளும் வெளில போற மகன் நல்லபடியா திரும்பி வருவானா எண்டு தினம் தினம் பயந்துகொண்டு இருப்பினம். அப்பிடி ஒண்டும் நடக்காது, நீங்க பயப்படாதீங்க எண்டு சொல்லவேண்டியது எங்கட கடமை. அதை எப்பிடியும் நீங்க செய்யப்போறேல்ல. என்னாலையும் அப்பிடி இருக்கேலாது.” என்றுவிட்டு அவள் இறங்க அவனும் இறங்கினான்.
“நீங்க எங்க வாறீங்க?” சந்தேகத்துடன் அவனை நோக்கிக் கேட்டாள்.
ஒரு முறைப்புடன், “நட பேசாம!” என்றுவிட்டு, பழங்கள் நிறைந்த பையை எடுத்துக்கொண்டான் அவன்.
வெளியே காட்டிக்கொள்ளாதபோதும் அவனும் கூடவே வந்தது அவளுக்கு மெல்லிய வியப்பை உண்டாக்கிற்று.
அவர்களை யார் என்று அறிந்ததும் கண்களில் கலக்கம் சூழத் தங்களுக்குள் பார்வையை வேகமாகப் பரிமாறியவர்களைக் கண்டு மனம் கசிந்தது பிரமிளாவுக்கு.
அவர்களின் பக்கம் தவறே இல்லையென்றாலும் வலியோர் என்றறிந்தால் ஒதுங்கிப் போக நினைக்கும் அந்த எளியவர்களின் குணம்தானே இவனைப் போன்றவர்களின் அகங்காரத்தை இன்னுமே தூண்டிவிடுவது.
“பயப்பட வேண்டாம் அம்மா. நாங்க பிரச்சினைக்கு வர இல்ல. தங்கச்சியாரின்ர கையைப் பிடிச்சிட்டார் எண்டுற கோவத்துல சின்ன தமையன் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார். என்ன இருந்தாலும் வீடு புகுந்து அவர் அப்பிடி நடந்தது சரியான பிழை. இவர்தான் அவரின்ர மூத்த தமையன். நான் அவரின்ர வைஃப்.” என்றதுமே, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, விழிகளில் கூர்மையும் புருவ மத்தியில் முடிச்சுமாக நின்றவனின் மீது அவர்களின் பார்வை பெரும் கலக்கத்துடன் படிந்தது.
அவனைக் காட்டிலும் இவன்தான் பொல்லாதவனாம் என்றுதானே கேள்வியுற்றிருந்தார்கள். அப்படியிருக்க அவனே வீட்டுக்குள் வந்து நிற்கிறானே!
அந்த அன்னையின் அடிவயிறே கலங்கிப் போயிற்று. “என்ர பிள்ளை வயதுக்கோளாறுல அப்பிடி நடந்திட்டான் தம்பி. இனிச் செய்ய மாட்டான். தகப்பனும் நேற்று அடிச்சுப்போட்டார். அவனை ஒண்டும் செய்து போடாதீங்கோ. எங்களுக்கு எண்டு இருக்கிறது அவன் மட்டும்தான்.” கண்ணீருடன் மன்றாடியவரை நெருங்கி, வேகமாகக் கையைப் பற்றிக்கொண்டாள் பிரமிளா.
“அழாதீங்கோ அம்மா! எங்கட வீட்டுப்பிள்ளை செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டுட்டு, இனி ஒரு பிரச்சினையும் வராது, நீங்க பயப்படாம இருங்கோ எண்டு சொல்லிப்போட்டுப் போகத்தான் இவரையும் கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றவள், நீங்களும் ஒரு வார்த்தை சொல்லுங்களேன் என்பதாகக் கணவனைப் பார்த்தாள்.
அவளின் விழிகளில் தெரிந்த செய்தியைப் படித்தானே தவிர ஒரு வார்த்தையேனும் உதிர்த்தான் இல்லை அவன். கோபம்தான் வந்தது பிரமிளாவுக்கு.
இருந்தாலும், அவர்களின் பார்வை உண்மையா என்பதுபோல் அவனிடம் இருக்கக் கண்டு, “இல்லாம இந்த நிலமையில இருக்கிற என்னை இவர் இஞ்ச கூட்டிக்கொண்டு வந்திருப்பாரா?” என்று, தன் தாய்மை நிலையைச் சுட்டிக்காட்டிக் கேட்டு, அவர்களை நம்ப வைத்தாள்.
“ஐயா, நீங்களும் உங்கட மகனை இனி இதைப் பற்றிக் கதைச்சு கண்டிக்க வேண்டாம். இளம் வயதில இதெல்லாம் வந்து போறதுதானே. நடந்ததுக்கு ஐயாவும் அம்மாவும் எங்களை மன்னிக்க வேணும்.” என்று முறையாக மன்னிப்பையும் வேண்டிக்கொண்டு கணவனோடு புறப்பட்டாள்.
காரில் ஏறியவளுக்குப் பக்கத்தில் இருக்கிறவனின் மீது அப்படியொரு ஆத்திரம் உண்டாயிற்று.
“அந்தப் பழ பாக்கை கையில குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? நிலத்தில வைக்கிறீங்க. அந்தளவுக்குச் செருக்கு உங்களுக்கு! இதுக்குக் கொண்டு போகாமையே இருந்திருக்கலாம். இல்ல நீங்க வராம இருந்திருக்கலாம். இனி ஒண்டும் நடக்காது எண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்தானே. அந்த அம்மா உங்கட முகத்தை முகத்தைப் பாக்கிறா. கல்லுளிமங்கன் மாதிரி விறைச்சுக்கொண்டு நிக்கிறீங்க. என்ன மனுசன் நீங்க? அவ்வளவு திமிரும் அகங்காரமும்!” என்று தன் சினமடங்கும் வரை பொரிந்துகொட்டிக்கொண்டே வந்தாள்.
கேட்டுக்கொண்டு வந்தானே தவிர வாயே திறக்கவில்லை. கடைசியில் அவள் சொன்ன கல்லுளிமங்கனில்தான் கண்ணில் சிரிப்புடன் திரும்பிப் பார்த்தான்.
“அம்மா அப்பா எனக்கு ஒரேயொரு பெயர்தான் வச்சது. ஆனா நீ இருக்கிறியே…” என்று சிரித்தவனுக்கு ஒரு முறைப்பைத்தான் பதிலாகக் கொடுத்தாள் பிரமிளா.
எவ்வளவு திட்டினாள். ஏதாவது பேசினானா? உண்மையிலேயே கல்லுளிமங்கன்தான்!
கோபத்தில் அதீதமாகச் சிவந்திருந்த முகத்தைக் கவனித்துவிட்டு, “நல்ல கடையா பாத்து நிப்பாட்டவா? ஏதாவது சாப்பிட்டுப் போகலாம்.” என்று கேட்டான்.
பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பிரமிளா. இவ்வளவு நேரமாக அவள் பேசியதற்கு ஏதாவது சொன்னானா? அவனுக்கு மட்டும் அவள் பதில் சொல்ல வேண்டுமோ?
சிறு சிரிப்புடன் காரை ஓரம் கட்டிவிட்டு இறங்கிப்போய், பழக்கலவை பவுல் இரண்டு வாங்கிக்கொண்டு வந்து ஒன்றை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்காமல் முகத்தைத் திருப்பியபடியே அவள் இருக்க, “தொண்டைத் தண்ணி காயிர வரைக்கும் என்னைத் திட்டித் தீத்திட்டாய்தானே. பிறகும் என்ன கோவம்? பிடி!” என்றான் இளஞ்சிரிப்புடன்.
அதற்குமேல் மறுக்கத் தோன்றாமல் பெற்றுக்கொண்டாள். இப்போது யோசிக்கையில் அவளின் விருப்பத்துக்கு மறுப்புச் சொல்லாமல் கூடவே வந்ததும், ஒன்றும் சொல்லாமல் நின்றதுமே பெரிய விடயமாகத் தோன்றிற்று. இவ்வளவு நேரமாகப் பொரிந்துகொட்டியும் வாயைத் திறக்கவில்லையே!
ஏனோ ‘எனக்கு எதிரா நிண்டாலும் அவளிட்ட ஒரு நேர்மை இருக்கு’ என்று அவன் சொன்னதாக யாழி சொன்ன வார்த்தைகள் நினைவிலாட, திரும்பிக் கணவனை நோக்கினாள்.
முழங்கை வரை மடித்துவிட்டிருந்த ஷர்ட்டை கல்லூரிக்காக இன் செய்திருந்ததை இப்போது வெளியே இழுத்துவிட்டிருந்தான். முகத்திலும் அன்றைய நாளுக்கான களைப்பு நிறைந்துதான் இருந்தது. ஆயினும் கம்பீரம் குன்றாத தோற்றம்.
இவன் யார்? இவனின் குணநலன்கள் என்ன? சில நேரங்களில் அவளுக்கென்று ஒரு மனது இருப்பதையே மறந்தவனாக ஆழமாகக் காயப்படுத்துகிறான். சில நேரங்களில் அவளைத் தாண்டி அவனுக்கு எதுவுமே பெரிதில்லை என்பதுபோல் உணரவைக்கிறான். இதில் எது அவன்?