“பாத்து முடிச்சிட்டாய் எண்டா சொல்லு வெளிக்கிடுவம்.” என்றான் அவன் நகைப்பைச் சிந்தும் குரலில்.
பிரமிளாவுக்கும் சிரிப்பு வந்துவிடும் போலிருக்க வேகமாகப் பார்வையை வெளிப்புறம் நகர்த்தினாள். அவர்களின் வீட்டுக்கு அவனுடனேயே சென்று, ஆறுதலாகப் பேசிவிட்டு வந்ததாலோ என்னவோ மனதின் பாரம் இறங்கியிருந்தது. அதில் வயிறும் நிரம்பித் தெரிய, “எனக்குக் காணும்.” என்றாள்.
அவளின் பவுலை வாங்கி அதிலிருந்த மிகுதியையும் அவன் வாயில் போட, அவளின் விழிகள் அப்படியே விரிந்து போயிற்று.
“என்னடியப்பா? அடிக்கடி இப்பிடியே பாக்கிறாய்? என்னில காதல் கீதல் வந்திட்டுதா?” என்றான் அவன்.
‘வந்திட்டாலும்!’ மீண்டும் உதட்டுச் சிரிப்பை மறைக்கவேண்டிய நிலைக்கு ஆளானாள் பிரமிளா.
பவுல்களை எறிந்துவிட்டு வந்து, “போவமா?” என்றபடி காரை எடுத்தான்.
மனதில் இருந்த இலகுத்தன்மை பிரமிளாவுக்கு மோகனனைப் பற்றி அவனிடம் பேசத் தூண்டியது.
“உங்கட தம்பி எந்த வேலைக்கும் போறேல்லையா?”
எதற்குத் திடீரென்று இந்தப் பேச்சு? அளவிடுவதுபோல் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுப் பதில் சொன்னான் அவன்.
“அவனுக்கு ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தவே நேரம் காணாது. இதுல எங்க வேலை செய்றது?”
பிரமிளாவுக்குப் புரியவில்லை. நேரகாலம் பாராமல் உழைக்கிறவன் அவன். மாமனாரும் அதேதான். வீட்டில் அவரைக் காண்பதே அரிது என்பதுபோல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அலைந்துகொண்டே இருப்பார். அப்படியிருக்கையில் அவனை மட்டும் ஏன் இப்படி விடுவான்?
“உங்களுக்கு உதவிக்கு நீங்க கூப்பிடலாமே?” என்னவோ அவனை வேறு பாதையில் திருப்பிவிட்டால் கொஞ்சம் மாறுவானோ என்று எண்ணினாள் பிரமிளா.
“கூப்பிட்டா வந்து நிப்பான். எனக்கும் கொஞ்சம் வேலை குறையும்தான். ஆனா வாழ்க்கையையும் இந்த வயசிலதானே அனுபவிக்கிறது. எனக்குத்தான் அது அமையேல்ல. அவனாவது சந்தோசமா இருக்கட்டும் எண்டுதான் ஆளைக் கொஞ்சம் விட்டுப் பிடிச்சிருக்கு.”
அவளுக்கு ஏனோ அதில் முழுமையான உடன்பாடில்லை. பொறுப்பை எடுத்துக்கொள்கிற வயது அவனுக்கு வந்தாயிற்று என்றே தோன்றிற்று. பொறுப்பைக் கொடுத்தால்தானே பொறுப்பற்ற குணம் அகன்றுபோகும்.
கௌசிகனுக்கு மனைவியின் எண்ணவோட்டம் புரிந்தது. “நேற்றே ஆளுக்குக் கொஞ்சம் கூடப் பேசிப்போட்டன். பாப்பம் பொறு. அப்பிடி எங்க போகப்போறான். மெல்ல மெல்ல ஆளைத் தொழிலுக்க இழுக்கலாம்.”
ஓ… இது அவளுக்குத் தெரியாது. இருந்தாலும்…
“எனக்கு என்னவோ அவனைக் கொஞ்சம் நீங்க கூடுதலா கவனிச்சா நல்லம் எண்டுதான் படுது. உங்கட தம்பிட்ட இருக்கிறது விளையாட்டுக்குணம் இல்ல.”
“அவன உனக்குப் பிடிக்காதோ?” ஒரு மாதிரிக் குரலில் வினவினான் அவன்.
குறை சொல்வதாக நினைக்கிறான். குறைதான். ஆனால், இந்தக் குறையின் பின்னே இருப்பது அவனைத் திருத்திவிடு என்கிற நல்லெண்ணம்! அதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறவன் மீது மெல்லிய கோபம் உண்டாயிற்று.
“உங்களையும்தான் எனக்குப் பிடிக்காது. அதுக்கெண்டு குறையா சொல்லிக்கொண்டு இருக்கிறன்?” என்று பட்டென்று கேட்டாள்.
பதில் சொல்ல வராமல் திகைத்துவிட்டு பக்கென்று சிரித்தான் அவன்.
இப்படி முகத்துக்கு நேரே சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. சொல்வதைப் புரிந்துகொள்ளமாட்டேன் என்று நின்றால் நடுமண்டையில் தானே குட்டவேண்டி இருக்கிறது. அவளும் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லையே!
அதன்பிறகான சிறிது நேரம் மௌனத்திலேயே கழிய, “இன்னுமே பிடிக்காதா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
அதென்ன இன்னுமே? பிடிக்கிற மாதிரி என்றைக்கு நடந்தானாம்? வீதியில் பார்வையைப் பதித்துப் பேசாமல் இருந்துகொண்டாள் பிரமிளா.
ஸ்டேரிங்கில் இருந்த கரமொன்று நீண்டு வந்து, அவளின் கரத்தைப் பற்றி விரலோடு விரல்களைக் கோர்த்துக்கொண்டது. பிரித்துக்கொள்ள முயன்றாள். திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் விடமறுக்கப் பேசாமல் அமைதியானாள் பிரமிளா.
“அவனோட நீயும் கொஞ்சம் கதைக்கலாமே.” சற்று நேரத்து அமைதியின் பின் நயமாக வினவினான் அவன்.
மோகனனை வேற்றாளாகவே விலக்கி வைத்திருக்கும் அவளின் செய்கையை அவன் கவனிக்காமல் இல்லை. ஆரம்பமே அவர்களுக்கிடையே உருவாகிப்போன முறுகல்தான் அதற்குக் காரணம் என்றும் தெரியும். தானாக மாறுவாள் என்றுதான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தான். அது நடக்கும் போல் தோன்றாது போகவே சந்தர்ப்பம் கிடைக்கவும் சொன்னான்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, ஒன்றும் வராமல் பேசாமல் இருந்தாள் பிரமிளா.
“நீ அவனுக்கு அண்ணி. அவன் பிழையே செய்தாலும் பெருந்தன்மையா மன்னிச்சு நடக்கலாம்.”
யாழினியோடு போல் இல்லாவிட்டாலும் சாதாரணமாகவேனும் மோகனனோடு பேச அவளால் முடிவதில்லைதான். அதற்குக் காரணம் அவனுடைய ஏளனப் பார்வைகள். மதிக்காத செய்கைகள். அலட்சிய குணம். சற்று முன்னர்தான் அவனைப் பற்றிக் குறை சொன்னதாகச் சொன்னான். இனி இதையும் சொன்னால் கேட்கவா போகிறான்? பேசாமலேயே இருந்தாள் அவள்.
வற்புறுத்த மனம் வராமல், “நீயும் கொஞ்சம் அவனைக் கவனிச்சா நான் சந்தோசப்படுவன்.” என்றதோடு அவனும் விட்டுவிட்டான்.