அத்தியாயம் 42
அதன்பிறகான நாட்கள் அதுபாட்டுக்குக் கடந்தன. நடந்தவற்றை அறிந்திருந்த யாழினியும் அவனைத் தேடிச்சென்று மனதார மன்னிப்பை வேண்டியிருந்தாள்.
“அம்மா தாயே! ஆள விடு! தெரியாம உன்னோட கதைச்சிட்டன்!” என்று கை எடுத்தே கும்பிட்டான் அவன்.
ஒருவித அவமானம் தாக்கக் கண்ணீருடன் நின்றவளையும் அவனையும் கூட்டிக்கொண்டு போய்க் கேண்டீனில் வைத்துச் சமாதானம் செய்துவிட்டான் தீபன்.
கடைசி வருடத்து மாணவனான தீபன் முன்னின்று இதைக் கையாண்டதும், அந்த மூவருக்குள்ளும் புதிதாக நட்புக் கூட்டணி உருவானதும், யாழினியின் தமையன்களின் செல்வாக்கை அறிந்து இருந்ததும் சேர்ந்துகொள்ள. யாழினி எப்போதும் போலப் பல்கலைக்கழகத்தில் வளையவந்தாள்.
பிரமிளா இப்போது ஏழாம் மாதத்தைத் தொட்டிருந்தாள். எல்லோரினதும் கவனிப்பில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் நிறைய நேரம் நிற்கவேண்டி வருவதால் கால்கள் வீங்கத் தொடங்கிற்று.
அன்றும் பலூனைப் போல் வீங்கிவிட்ட கால்கள் கொதித்தன. யாழினிதான் வந்து இளம் சூட்டில் இருந்த தண்ணீரில் அவளுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
“கட்டில்ல காலை நீட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் இருந்தாலே சுகமா இருக்கும். நீ சிரமப்படாத.” என்றாள் பிரமிளா.
“நல்ல கதையெல்லோ இது! என்ர அண்ணிக்கு நான் செய்யாம வேற ஆர் செய்றது?” என்றவள் எப்போதும் போன்று எட்டி அவளின் வயிற்றில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
“செல்லக்குட்டி! எனக்கு லைட்டா உங்களில கோபம் வருது. நீங்க என்ர அண்ணியை ஆகவும் வருத்துறீங்க. இதெல்லாம் கூடாத பழக்கம் சரியோ?” குழந்தையோடு பேசியபடி ஒத்தடம் கொடுத்தவளை முறுவல் அரும்பப் பார்த்திருந்தாள் பிரமிளா.
இப்படி எதையாவது பேசி, செய்து என்று அடிக்கடி தீபாவை நினைவூட்டுவாள்.
“படிப்பு எல்லாம் எப்பிடிப் போகுது யாழி? அந்தப் பெடியன் திரும்ப ஒண்டும் கதைக்க இல்லையா?”
“அவர் இப்ப என்ர பெஸ்ட் ஃபிரெண்ட் அண்ணி. தீபன் அண்ணா, அவர், நான் நாங்க மூண்டுபேரும் ஒரு கேங் தெரியுமா? கம்பஸே எங்களைக் கண்டா நடுங்கும்! அந்தளவுக்கு டெரர் நாங்க!”
“ஓமோம்! உங்கட முகங்களைப் பாத்தாலே தெரியுது!” என்று சிரித்தாள் பிரமிளா.
“அண்ணி! இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது!” என்று சிணுங்கிவிட்டு, “அதுசரி, தீபன் அண்ணாவை உங்களுக்கு எப்பிடிப் பழக்கம்?” என்று விசாரித்தாள் அவள்.
“எங்கட ஊர்தானே அவனும். அதோட தீபான்ர கிளாஸ்மேட்.” என்றுவிட்டு, “கம்பஸ்ல அவன் எப்பிடி? குழப்படி இல்லையா?” அவனைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இவளின் வாயைப் பிடுங்குவதற்காகக் கேட்டாள்.
“நோ நோ நோ! அண்ணா ஒரு சுத்தத் தங்கம்! அவர் எண்டா எல்லாருக்கும் சரியான விருப்பம் அண்ணி. சூப்பர் ஆள்! ஆனா ஒரு ரகசியம் சொல்லட்டா.” என்றபடி கண்களை நாலாபுறமும் சுழற்றிவிட்டு, அவளருகில் வெகு நெருக்கமாக வந்து, “அவர் ஒரு பெட்டையக் காதலிக்கிறார்.” என்றாள் ரகசியக் குரலில்.
அவளின் பாவனையில் முகம் முழுக்கப் பரவிய சிரிப்புடன், “ஆர் அந்தப் பெட்டையாம்? உனக்குத் தெரியுமா?” என்றாள் பிரமிளாவும் சின்னவளின் குரலிலேயே.
உச்சுக் கொட்டினாள் அவள். “எவ்வளவு துப்பறிஞ்சும் அத மட்டும் கண்டுபிடிக்க முடியேல்ல அண்ணி! ஆனா கண்டுபிடிக்காம விடமாட்டாள் இந்த யாழினி!” என்றவளின் பேச்சில் அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.
அப்போது, வேலை முடிந்து வந்த கௌசிகன் அறைக்குள் நுழைந்தான்.
அடுத்த நொடியே, “அண்ணி பாய்!” என்று ரகசியக் குரலில் சொல்லிவிட்டு, ஒத்தடம் கொடுக்க என்று கொண்டுவந்த எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு அங்கிருந்து நழுவினாள் யாழினி.
தமையனைக் கண்டால் போதும். என்னவோ பேயைக் கண்டவள் போன்று அந்த இடத்தில் நிற்கமாட்டாள். இவனும் அப்படித்தானே சில நேரங்களில் பேயாட்டம் ஆடுகிறான். அந்த எண்ணம் உருவாக்கிய சிரிப்பைக் கொடுப்புக்குள் மறைத்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தாள் பிரமிளா.
சட்டையைக் கழற்றிக்கொண்டிருந்தவன் கவனித்துவிட்டான். “என்ன சிரிப்பு?” என்று வினவினான்.
“அவளை ஏன் இப்பிடிப் பயப்படுத்தி வச்சிருக்கிறீங்க? உங்களைக் கண்டாளே ஓடுறாள்.”
“அவள் சும்மா பயப்பிடுறதுக்கு நீ என்னைச் சொல்லுவியா?” வீட்டுடைக்கு மாறியபடி கேட்டான் அவன்.
“அப்ப நீங்க ஒண்டுமே செய்றேல்ல.”
“இப்ப என்ன செய்தனான் எண்டு ஓடினவள்?”
“இவ்வளவு காலமும் செய்ததே போதாதா?”
விடாமல் அவனை மடக்க நின்றவளை முறைத்துவிட்டு, “உன்ர தைரியத்தில கொஞ்சத்த அவளுக்குக் குடு. பிரச்சினை முடிஞ்சுது!” என்றுவிட்டுப் போய் உடம்பு கழுவிக்கொண்டு வந்தான் அவன்.
இருவருமாகக் கீழே சென்று உணவை முடித்தனர். அவன் செய்தியில் ஆழ்ந்துவிட மறுத்த செல்வராணிக்குச் சமையற்கட்டில் கொஞ்சம் உதவி செய்துவிட்டு உறங்குவதற்கு என்று மேலே வந்தனர் கணவனும் மனைவியும்.
அவன் தன் மடிக்கணணியில் மூழ்கிவிட, ஒரு புத்தகத்தோடு கட்டிலில் அமர்ந்துகொண்டாள் பிரமிளா. குறையாமல் இருந்த பாதங்களின் கொதிப்புப் புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தது.
எட்டித் தடவுவோம் என்றால் வயிறும் விடவில்லை, அவளால் வளையவும் முடியவில்லை. கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
மடிக்கணணியில் எதையோ மும்முரமாகத் தட்டிக்கொண்டு இருந்தான் அவன்.
கேட்போமா? ஏன் கேட்கக் கூடாது? செய்யட்டும்! இதற்கெல்லாம் இவனும் தானே காரணம்!
“என்ன வேணும் உனக்கு இப்ப?” அவ்வளவு நேரமாக அவள் படுகிற பாட்டை வேடிக்கை பார்த்தவன் வினவினான்.
“காலக் கொஞ்சம் தடவி விடுங்கோ.” ஒரு வழியாகக் கேட்டு முடித்தாள் அவள்.
“வீட்டுல நில்லு எண்டு சொன்னா கேக்கிறியா நீ? பிறகு வந்து காலுக்க நோகுது, கையுக்க நோகுது எண்டு ஆயிரம் கதை!” அவளைக் கடிந்தபடி மடிக்கணணியை மூடி வைத்துவிட்டு வந்து, அவளின் கால்களை எடுத்து மடியில் வைத்து இதமாக அழுத்திக் கொடுத்தான் அவன்.
அதுவே அவளுக்கு வலித்தது. “விட்டா காலையே பிடுங்கி எடுத்திருவீங்க போல. கொஞ்சம் மெதுவா.”
“என்னைப் பேசுறதுக்கு(திட்டுறதுக்கு) மட்டும் திறக்கிற வாயை நில்லு எண்டு சொன்னா மட்டும் திறந்திடாத!” என்றுவிட்டு, இன்னும் மென்மையாகப் பிடித்துவிட்டான்.
“காலைத் தடவி விடுறது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குப்போல. இந்தளவுக்குக் கோவம் வருது?” என்றவளை முறைக்க நிமிர்ந்தவன் அவள் விழிகளில் தெரிந்த சீண்டலில் பற்கள் தெரியச் சிரித்தான்.
நன்றாகவே பெரிதாகிவிட்ட வயிறு. அதனால் நிரந்தரமாகவே களைப்புற்ற தோற்றம். இருந்தாலுமே உறங்கப்போகும் அந்த நேரத்திலும் அவள் விழிகளில் பளிச்சிட்ட வெளிச்சம் அவனை அவளிடம் ஈர்த்தது. “ஆக ஏலாம இருந்தா வீட்டுல நில்லன் பிரமி.” என்றான் இதமான குரலில்.
“நிண்டு நான் என்ன செய்ய? பொழுது போகாது. ரெண்டு நாளைக்கு மேல பள்ளிக்கூடம் போகாம நிண்டா எனக்கு விசர் வந்திடும்.”
அன்றொருமுறை விடுமுறை எடுத்துவிட்டும் கல்லூரியைப் பார்ப்பதற்காக அவள் வந்தது நினைவில் வந்து போயிற்று.
“அதுக்காக? இப்பிடி உத்தரிக்க ஏலுமா சொல்லு?”
“இன்னும் மூண்டு மாதமும் இல்ல தானே.” என்றவளின் கை தன்பாட்டுக்கு வயிற்றை வருடிக்கொடுத்தது.
உருவான இந்தக் குழந்தைதான் அவளை அவனிடம் இந்தளவிலேனும் சுமூகமாக உரையாட வைத்ததே. எழுந்துபோய் அவளருகில் அமர்ந்துகொண்டு வயிற்றைத் தானும் வருடிக்கொடுத்தான்.
“செல்லம், உங்கட அம்மா, அப்பா சொல்லுறதைக் கேக்கிறாளே இல்ல. எதச் சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை வச்சிருப்பாள். நீங்களும் அப்பிடி இருக்கக் கூடாது, சரியோ?” என்றான் அவளைச் சீண்டும் விதமாக.
“ஓம் செல்லம். உங்கட அப்பா மாதிரி செருக்குப் பிடிச்ச மனுசனாவும் இருக்கக் கூடாது! சரியோ?” என்றவளை முறைக்க முயன்று முடியாமல், நகைத்தான் கௌசிகன்.