அந்த வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. முடிக்கவேண்டிய பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும். மாதிரி வினாத்தாள் தயாரிப்பது, மாணவியருக்குப் பரீட்சை வைப்பது, அதைத் திருத்துவது, முந்தைய வருடத்துப் பரீட்சைப் பேப்பர்களைச் செய்வித்துப் பயிற்சியளிப்பது என்று பிரமிளாவின் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருந்தன.
நேரா நேரத்துக்கான உணவு உறக்கத்தைக் கூடச் சற்றே தள்ளி வைத்திருந்தவளைக் கண்ணில் எண்ணெய் விட்டபடி கவனித்துக்கொண்டார் செல்வராணி.
அன்றும் சந்தேகம் கேட்ட மாணவிக்குக் கைப்பேசியில் விளக்கியவாறே வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தாள் பிரமிளா. அவளுக்குத் தேநீருடன் முட்டைமாவும் போட்டுக்கொண்டு போய்க் கொடுத்து விட்டு வந்தார் செல்வராணி.
அதே நேரம் தீபாவும் அழைத்தாள். தினமும் அழைக்கிறவள் கடந்த இரண்டு நாட்களாக அழைக்கவே இல்லை என்பது நினைவில் வந்தது பிரமிளாவுக்கு. இருந்தும் மாணவி கேட்டதைச் சொல்லிக்கொடுத்து, அவள் விளங்கிவிட்டது என்று சொன்னபிறகு அழைப்பைத் துண்டித்துவிட்டு, தங்கைக்கு அழைப்பெடுத்தாள்.
“ஹலோ அக்கா…”
அப்படி அவள் ஆரம்பித்ததே என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று. ‘அன்புச் சகோதரிக்கு இதயம் நிறைந்த வணக்கங்கள்.’ என்றோ, ‘நான் இங்கு நலமே, நீங்கள் அங்கு நலமா?’ என்றோ ஆரம்பித்துக் கலகலப்பதுதான் அவளின் வழக்கம். அதற்கு மாறாக என்ன இது பதுங்கிய குரல்?
“எப்பிடி இருக்கிறாய் தீபா? அங்க எல்லாம் ஓகேதானே? ரெண்டு நாளா ஏன் எடுக்கேல்ல? அம்மா அப்பாவோட கதைச்சியா?” என்று மெல்ல விசாரித்தாள்.
தீபாவிடம் மெல்லிய மௌனம். அப்படி என்ன என்று இவள் யோசிக்கையிலேயே, “மோகனன் என்னை விரும்புறாராம் அக்கா.” என்றாள் அவள்.
‘என்னது?’ மனம் திடுக்கிட, இவள் எந்த மோகனனைச் சொல்கிறாள் என்று நம்ப முடியாமல் திகைக்கையிலேயே, “இப்ப ரெண்டு மாதத்துக்கு முதல் ஃபிரண்ட்ஸோட வழமையா நாங்க போற கடையில டீ குடிச்சுக்கொண்டு இருக்கேக்க திடீர் எண்டு வந்து நிண்டார். எனக்குப் பக்கத்திலேயே இருந்து எங்களோட டீ குடிச்சார். நானும், திருகோணமலைக்கு அலுவலா வந்திருக்கிறார் போல, என்னை எதிர்பாராமக் கண்டதும் வந்து கதைக்கிறார் போல எண்டு நினைச்சு, ‘என்ர அத்தான்ர தம்பி’ எண்டு பிரண்ட்ஸ்க்கு அறிமுகமும் செய்து வச்சனான் அக்கா. நல்ல மாதிரித்தான் கதைச்சவர். போகேக்க, என்ர ஃபோன்ல இருந்து அவரின்ர ஃபோனுக்கு மிஸ் கோல் குடுத்தவர். அப்பவே ஏன் எண்டு நினைச்சாலும் ஃபிரண்ட்ஸ்க்கு முன்னால கேக்கேல்லை நான்.” என்று கொஞ்சம் தயங்கினாள்.
நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தாலும் அவள் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள் பிரமிளா.
“அடுத்தநாள் பின்னேரம் ஃபோன் செய்து எங்கயாவது மீட் பண்ணுவமா எண்டு கேட்டவர். எனக்கு அது பிடிக்கேல்ல. ஏன் எண்டு கேட்டதுக்கு, ‘நான் வந்த வேலை முடிஞ்சுது. பொழுது போகுதில்ல. அதுதான் சும்மா உன்னைப் பாப்பம் எண்டு நினைச்சன்.’ எண்டு சொன்னார். அதுதான் நேற்றுக் கதைச்சோமே, எனக்கு இண்டைக்கு டைமில்ல எண்டு சொன்னனான். எப்ப உனக்கு டைம் இருக்கும் எண்டு கேட்டவர். அப்பிடி என்ன கதைக்கப் போறீங்க, என்ன எண்டாலும் இப்ப ஃபோன்லையே சொல்லுங்கோ எண்டு சொன்னதுக்கு ஒண்டுமில்ல சும்மாதான் எண்டு வச்சிட்டார்.”
இவள் சொல்ல சொல்ல அவளுக்கு இன்னுமின்னும் இரத்த அழுத்தம் கூடிக்கொண்டே போயிற்று.
“திரும்ப அடுத்த நாளும் ஃபோன் பண்ணினவர். நான் சினத்துல எடுக்கேல்ல. பிறகு என்னோட கதைக்க மாட்டியா எண்டு மெசேஜ் பண்ணினவர். என்ன கதைக்க? அப்பிடி என்ன கதைக்கிறதா இருந்தாலும் அங்க வந்தபிறகு உங்கட வீட்டை வருவன் அப்ப சொல்லுங்கோ, இல்ல அக்காட்டச் சொல்லுங்கோ, அக்கா எனக்குச் சொல்லுவா. என்னை டிஸ்டப் செய்ய வேண்டாம் எண்டு நேராவே சொல்லிட்டன் அக்கா.”
இன்னுமே நெஞ்சம் அதிர அவள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் பிரமிளா.
“பிறகு, என்னோட நீ ஃபோன்ல கதைக்காட்டி அங்க நேரா வந்து நிப்பன் எண்டு மெசேஜ் போட்டிருந்தவர். நீ என்னவாவது செய் எண்டு நினைச்சுப்போட்டு நான் பதில் போடேல்ல. பாத்தா அடுத்தநாள் கம்பஸ் வாசல்ல நிக்கிறார். எனக்குச் சரியான எரிச்சலா இருந்தது. முறைச்சுப்போட்டு நடக்க, இப்ப நீ என்னோட வரோணும், இல்லையோ நடக்கிறதே வேற எண்டு வெருட்டினவர்(மிரட்டினர்). அப்பிடி என்னதான் கதைக்கப்போறார் பாப்பமே எண்டு அவரோட போனனான். அதுக்கு முதல் என்ர ஃபிரெண்ட் ரம்யாவ உங்களுக்குத் தெரியும் எல்லா. ‘நான் என்ர அத்தான்ர தம்பியோட நாங்க வழமையா போற டீ கடைக்குப் போறன். நீ அப்பப்ப மெசேஜ் செய். உனக்கு நான் பதில் போடாட்டி உடன அக்காக்குச் சொல்லிவிடு’ எண்டு மெசேஜ் அனுப்பிவிட்டன். அங்க வச்சு என்னை அவருக்குப் பிடிச்சிருக்காம் எண்டு சொன்னவர். எனக்கு அப்பிடி ஒரு எண்ணமே இல்ல. அத்தான்ர தம்பி எண்டுதான் உங்களோட கதைக்கிறன் எண்டு உடனயே சொல்லிட்டன்.”
யாழினிக்குத் தான் என்ன சொல்லிக்கொடுத்தோமோ அதைப் போலவே தன் தங்கை தனக்கு வந்த பிரச்னையை அஞ்சாமல் அழாமல் எதிர்கொண்டிருக்கிறாள் என்று அந்த நேரத்திலும் தனக்குள் மெச்சிக்கொண்டாள் பிரமிளா.
“அந்த லூசு நான் சொன்னதைக் காது குடுத்துக் கேக்கவே இல்ல. அவசரப்பட்டுப் பதில் சொல்லாத, யோசி. முதல் கொஞ்ச நாளைக்கு என்னோட பழகு, கதை. அப்ப உனக்கும் என்னைப் பிடிக்கும். அதுக்குப் பிறகு பதில் சொல்லு எண்டு சொன்னது. எப்பவும் என்ர பதில் இதுதான் எண்டு சொல்லிப்போட்டு வந்திட்டன். அதுக்குப் பிறகும் விடாம ஒரே மெசேஜ், ஃபோன்கோல். நிம்மதியா படிக்க விடுறதே இல்லை அக்கா. நான் எடுக்கிறதும் இல்ல பதில் போடுறதும் இல்ல. அடிக்கடி இஞ்ச கம்பஸ் வாசல்ல வந்து நிக்கிறான். இப்ப இப்ப அவன் என்னத்தான் தேடி வாறான் எண்டு நிறையப்பேருக்குத் தெரியும். எல்லாரும் ஒரு மாதிரிப் பாக்கிற மாதிரி இருக்கு. நிறையப்பேர் என்னடி லவ்வா எண்டு கேக்கினம் அக்கா. எனக்குச் சரியான அவமானமா இருக்கு.” என்றபோது முதன்முறையாக அவளின் குரல் கலங்கி ஒலித்தது.
தீபா இப்படி இலகுவில் உடைகிறவள் அல்லள். அதில் பிரமிளாவின் மனதும் கலங்கிப் போயிற்று.
“இப்ப புதுசா வாட்ஸ் அப்ல இருந்த என்ர ஃபோட்டோச எடுத்து அவனோட நிக்கிற மாதிரி எடிட் செய்து அனுப்பி இருக்கிறான். நான் ஓம் எண்டு சொல்லாட்டி உங்களுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்குமாம்.” என்றபோது பிரமிளாவுக்கு மனது கொதித்துப்போயிற்று!
“நீங்க இப்பிடி இருக்கிற இந்த நேரம் இதையெல்லாம் சொல்லிக் கவலைப்பட வைக்க வேண்டாம் எண்டுதான் இவ்வளவு நாளும் சொல்லேல்ல. ஆனா இப்ப எனக்கே பயமா இருக்கு. இனி நான் என்ன செய்றது எண்டும் தெரியேல்ல அக்கா.”
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு பேசினாள் பிரமிளா.
“என்னத்துக்குப் பயப்பிடோணும்? அப்பிடி அவன் சொல்லுறது எல்லாம் நடந்திடாது தீபா. என்ர விசயம் வேற, இது வேற. இவ்வளவு நடந்திருக்கு. ஆனாலும் அவசரப்படாம, ஆத்திரப்படாம, பயப்படாம, தைரியமா அவனைக் கையாண்டு இருக்கிறாய். பிறகு என்ன பயம்? இப்ப எனக்கும் சொல்லிட்டாய் எல்லோ. என்ன செய்யலாம் எண்டு யோசிச்சுச் செய்யலாம் சரியா? இனி என்ன நடந்தாலும், அவன் என்ன கதைச்சாலும் எனக்கு ஒண்டு விடாம சொல்லு.” என்று தைரியம் கொடுத்தாள்.
“சரி அக்கா.” என்றவள் நினைவு வந்தவளாக, “அக்கா, நான் திருகோணமலை வந்த அண்டு(அன்று) பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவன். நான் கண்டனான். அப்ப வேற எதுக்கோ வந்திருக்கிறான் எண்டு நினைச்சன். இப்ப யோசிச்சா அண்டைக்கே என்னோட கதைக்க நினைச்சிருப்பான் போல. நீங்க நிண்டதுல பேசாம போயிருக்கலாம்.” என்று, தன் சந்தேகத்தையும் பகிர்ந்துகொண்டாள்.
அவள் சொன்ன எல்லாமே பிரமிளாவின் அடிவயிற்றைக் கலக்கிற்று. இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவளுக்குத் தைரியம் கொடுக்கிற விதமாகப் பேசினாள். கோபமாக எதையாவது சொல்லி அவனுக்குக் கோபமூட்ட வேண்டாம் என்றாள். தன்னிடம் சொன்னதை மோகனனிடம் சொல்லாதே என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
புகைப்படத்தை எடுத்து அவனோடு எடிட் செய்து அனுப்புகிற அளவுக்குப் போயிருக்கிறான் என்றால் இவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருப்பான். இவன்தான் என்னுடைய ஃபோட்டோவையும் போட்டானோ? சரக்கென்று மின்னல் வெட்டியதுபோல் ஓடியது அந்தச் சிந்தனை.
நிச்சயமாக அவனாகத்தான் இருக்க வேண்டும். அக்காவின் வழியிலேயே தங்கையையும் மடக்கப்போவதாகச் சொல்லியும் இருக்கிறானே! பிறகு என்ன?
அப்போது அங்கு வந்தார் செல்வராணி. அப்படியே கிடந்த முட்டை மாவைக் கவனித்துவிட்டு, “ஏனம்மா சாப்பிடேல்லை? சாப்பிட்டு முடி!” என்றார்.
அதற்குப் பதில் சொல்லாமல், “உங்கட பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்குடுத்து வளக்கவே இல்லையா நீங்க?” என்றாள் சூடான குரலில்.
தேநீர்க் கோப்பையை எடுக்கப்போன செல்வராணி அவளின் ஒற்றைக் கேள்வியில் நிலைகுலைந்து போனார். “அந்த உரிமை இந்த வீட்டில எனக்கு இருக்கு எண்டு நினைக்கிறியாம்மா?” என்று இயலாமையோடு அவளிடமே திருப்பிக் கேட்டார்.
சினம்தான் வந்தது அவளுக்கு. அடுத்தவர் தந்து நாம் பெற்றுக்கொள்வதா உரிமை? எனக்கானதை நானே எடுத்துக்கொள்வது! அதைச் செய்யாமல் விட்டுவிட்டு… ப்ச்!
மனதில் உண்டான எரிச்சலை அவரிடம் காட்டப் பிடிக்காமல் இதழ்களை அழுத்தி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
காயப்பட்டுப்போனார் செல்வராணி.
இத்தனை நாட்களும் ஒட்டி உறவாடா விட்டாலும் ஆரம்பத்தில் போன்று முகம் திருப்பிக்கொண்டதில்லை. அவரின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வாள். அவ்வப்போது முகம் பார்த்து மெல்லிய சிரிப்புடன் எதையாவது பகிரவும் செய்வாள். சின்ன சின்னப் பேச்சு வார்த்தைகள் கூட இயல்பாக நடக்கும். அவரின் சொல்லுக் கேட்க மறுக்கும் யாழினியைக் கூட அதட்டி அடக்கிவிடுவாள். முக்கியமாக மருமகள் மகளை நல்லவழியில் நெறிப்படுத்துவாள் என்கிற பெரும் நம்பிக்கையை உண்டாக்கியிருந்தாள். அப்படியானவளின் இன்றைய நேரடிக் கோபம் ஏன் என்று சிந்தித்தவருக்கு ஏதோ புரிவது போலிருந்தது.