“சரி அக்கா.” என்றவள் நினைவு வந்தவளாக, “அக்கா, நான் திருகோணமலை வந்த அண்டு(அன்று) பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவன். நான் கண்டனான். அப்ப வேற எதுக்கோ வந்திருக்கிறான் எண்டு நினைச்சன். இப்ப யோசிச்சா அண்டைக்கே என்னோட கதைக்க நினைச்சிருப்பான் போல. நீங்க நிண்டதுல பேசாம போயிருக்கலாம்.” என்று, தன் சந்தேகத்தையும் பகிர்ந்துகொண்டாள்.
அவள் சொன்ன எல்லாமே பிரமிளாவின் அடிவயிற்றைக் கலக்கிற்று. இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவளுக்குத் தைரியம் கொடுக்கிற விதமாகப் பேசினாள். கோபமாக எதையாவது சொல்லி அவனுக்குக் கோபமூட்ட வேண்டாம் என்றாள். தன்னிடம் சொன்னதை மோகனனிடம் சொல்லாதே என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
புகைப்படத்தை எடுத்து அவனோடு எடிட் செய்து அனுப்புகிற அளவுக்குப் போயிருக்கிறான் என்றால் இவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருப்பான். இவன்தான் என்னுடைய ஃபோட்டோவையும் போட்டானோ? சரக்கென்று மின்னல் வெட்டியதுபோல் ஓடியது அந்தச் சிந்தனை.
நிச்சயமாக அவனாகத்தான் இருக்க வேண்டும். அக்காவின் வழியிலேயே தங்கையையும் மடக்கப்போவதாகச் சொல்லியும் இருக்கிறானே! பிறகு என்ன?
அப்போது அங்கு வந்தார் செல்வராணி. அப்படியே கிடந்த முட்டை மாவைக் கவனித்துவிட்டு, “ஏனம்மா சாப்பிடேல்லை? சாப்பிட்டு முடி!” என்றார்.
அதற்குப் பதில் சொல்லாமல், “உங்கட பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்குடுத்து வளக்கவே இல்லையா நீங்க?” என்றாள் சூடான குரலில்.
தேநீர்க் கோப்பையை எடுக்கப்போன செல்வராணி அவளின் ஒற்றைக் கேள்வியில் நிலைகுலைந்து போனார். “அந்த உரிமை இந்த வீட்டில எனக்கு இருக்கு எண்டு நினைக்கிறியாம்மா?” என்று இயலாமையோடு அவளிடமே திருப்பிக் கேட்டார்.
சினம்தான் வந்தது அவளுக்கு. அடுத்தவர் தந்து நாம் பெற்றுக்கொள்வதா உரிமை? எனக்கானதை நானே எடுத்துக்கொள்வது! அதைச் செய்யாமல் விட்டுவிட்டு… ப்ச்!
மனதில் உண்டான எரிச்சலை அவரிடம் காட்டப் பிடிக்காமல் இதழ்களை அழுத்தி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
காயப்பட்டுப்போனார் செல்வராணி.
இத்தனை நாட்களும் ஒட்டி உறவாடா விட்டாலும் ஆரம்பத்தில் போன்று முகம் திருப்பிக்கொண்டதில்லை. அவரின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வாள். அவ்வப்போது முகம் பார்த்து மெல்லிய சிரிப்புடன் எதையாவது பகிரவும் செய்வாள். சின்ன சின்னப் பேச்சு வார்த்தைகள் கூட இயல்பாக நடக்கும். அவரின் சொல்லுக் கேட்க மறுக்கும் யாழினியைக் கூட அதட்டி அடக்கிவிடுவாள். முக்கியமாக மருமகள் மகளை நல்லவழியில் நெறிப்படுத்துவாள் என்கிற பெரும் நம்பிக்கையை உண்டாக்கியிருந்தாள். அப்படியானவளின் இன்றைய நேரடிக் கோபம் ஏன் என்று சிந்தித்தவருக்கு ஏதோ புரிவது போலிருந்தது.
சற்று முன்னரும் முட்டைமாவைச் சாப்பிட்டாளா என்று பார்க்க வந்தவர் காதில் தீபா என்கிற பெயர் விழுந்திருந்தது. தங்கையோடு கதைக்கிறாள் என்று ஊகித்து, கதைக்கட்டும், இடைஞ்சல் கொடுக்க வேண்டாம் என்று விலகிப்போயிருந்தார்.
இப்போது தீபா, அவளின் கேள்வி இரண்டையும் இணைத்துப் பார்த்து என்ன விடயம் என்று கண்டுபிடித்தார். இனியும் அவர் எதையும் சொல்லாமல் இருந்தால் அவள் எந்தக் காலத்திலும் அவரை மன்னிக்கமாட்டாள். கூடவே, தீபாவின் வாழ்வை மோகனனோடு இணைப்பதில் அவருக்கே உடன்பாடு இல்லாததில், “தீபா மோகனனைப் பற்றிச் சொன்னவளாமா?” என்றார் மெல்ல.
அதிர்ந்து நிமிர்ந்தாள் பிரமிளா. ஆக, இந்தப் பெண்மணிக்கும் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் பேசாமல் இருந்திருக்கிறார். மோகனனைப் பற்றி இவருக்குத் தெரியாமலா இருக்கும்?
“கோபப்படாத ஆச்சி. நானும் வேண்டாம் எண்டு சமாளிச்சுத்தான் பாத்தனான். ஆனா, இந்த வீட்டுல ஆராவது என்னை ஒரு மனுசியா மதிக்கிறவையா சொல்லு, நான் சொல்லுறதைக் கேக்க?” என்று கேட்டுவிட்டு, ஒன்றுவிடாமல் நடந்தவற்றை எல்லாம் பகிர்ந்துகொண்டார் செல்வராணி.
அன்னையிடம் சொல்லி ஒன்றும் நடக்கவில்லை என்றதும் தானே காரியத்தில் இறங்கியிருக்கிறான். அப்படியானவன் தீபாவை அடைவதற்காகத் தமையனிடம் போவதற்கும் தயங்கமாட்டான். அவனின் நினைவு வந்ததுமே அவளுக்குள் ஒரு நடுக்கமுண்டாயிற்று.
அவன் பொல்லாதவனாயிற்றே! தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிக்கொடியை நாட்டுவதற்காக எந்தளவு தூரத்துக்கும் இறங்கி அடிப்பானே!
அவனுக்கு முதல் அவள் முந்தியே ஆக வேண்டும்! ஆனால் என்ன செய்யப் போகிறாள்? யோசிக்க வேண்டும். சரியான பாதையில் காய் நகர்த்த வேண்டும். அதற்கு யாரின் இடைஞ்சலும் இல்லாத தனிமை வேண்டும்!
உள்ளே போக எழுந்தவள் நின்று, “உங்களக் கெஞ்சிக் கேக்கிறன், இத உங்கட பெரிய மகனிட்டச் சொல்லி, என்ர தங்கச்சியப் படுகுழிக்கத் தள்ளிப் போடாதீங்க!” என்றுவிட்டுப் போனாள்.
செல்வராணியின் விழிகளிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் உருண்டு விழுந்தது. அவர் மகனைப் படுகுழி என்கிறாள். கேட்டுக்கொண்டு நிற்கும் நிலை அவருக்கு.
அறைக்குள் புகுந்தவளுக்கு என்னவோ மூளையே மரத்துப்போய்விட்ட உணர்வு. என்ன செய்வேன், என்ன செய்வேன் என்று மனம் பரிதவித்துக்கொண்டே இருந்தது. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள். ஆழம் தெரிந்தாலும் காலை விடப் பயம் வந்துவிடுகிறதே! அவளின் கணவனின் ஆழமும் அழுத்தமும் தெரிந்தவளாயிற்றே அவள். அவனை நினைத்தாலே நெஞ்சு பதறியது!
கல்லூரி வேலைகள் எத்தனையோ இருந்தும் அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டுப் பால்கனியில் அந்தக் கரைக்கும் இந்தக் கரைக்குமாக நடந்தாள்.
என்ன சிந்தித்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பது புலப்படவே இல்லை. சினத்துடன் வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள். சற்று அறைக்குள்ளேயே நடந்தும் பார்த்தாள். மூளை பல கணக்குகளைப் போட்டுப் போட்டுப் பார்த்துச் சரிவராது என்று அழித்துக்கொண்டிருந்தது.
திடீர் என்று அறைக்குள் நுழைந்தான் கௌசிகன். திடுக்கிட்டுத் துள்ளித் திரும்பினாள் பிரமிளா.
“என்னடியப்பா? பேயக் கண்டமாதிரி முழிக்கிறாய்?” தற்போதைய நிலையில் தான் அப்படித்தான் அவளுக்குத் தெரிகிறோம் என்று தெரியாமல் சிரித்துக்கொண்டு கேட்டான் அவன்.
அவளிடம் பதில் இல்லாமல் போகவும் அவன் புருவங்கள் சுருங்கிற்று.
இமை தட்டாமல் தன்னையே பார்த்தவளின் கோலம் என்னவோ சரியில்லை என்று உணர்த்த வேகமாக அவளருகில் வந்தான். “பிரமி! ஏன் இப்பிடி நிக்கிறாய்? உடம்பு ஏதும் செய்யுதா? வயித்து வலி மாதிரி?” என்றான், அவளின் நெற்றி வியர்வையைத் துடைத்துவிட்டபடி.
அவனின் தொடுகையில் சற்றே தன்னிலை மீண்டு, இல்லை என்று தலையை மட்டும் அசைத்தாள் அவள்.
“பிறகு ஏன் இப்பிடி நிக்கிறாய்? வா வந்து இரு முதல்!” என்று அழைத்துச் சென்று கட்டிலில் வசதியாக அமரவைத்தான்.
இவன்… இவன் தன் தம்பிக்காக என்னவும் செய்வான். கல்லூரியைக் காட்டி மிரட்டலாம். அம்மா அப்பாவைக் கடத்தலாம். ஏன் தீபாவைக் கூடத் தூக்கிக்கொண்டு போய் மோகனனைக் கொண்டு தாலியைக் கட்டவைக்கவும் செய்வானே. அதன் பிறகு? கற்பனை கூடச் செய்யமுடியாமல் அடிவயிறு கலங்கிற்று. மனம் பதறியது. இல்லை… அப்படி எதுவும் நடக்க விட்டுவிடக் கூடாது.
தன்னையே விடாமல் வெறித்தவளின் பார்வையில் அவனுக்குள் கிலி உண்டாயிற்று. “என்ன பிரமி? என்ன செய்யுது. வாயத் திறந்து சொல்லன்!” பொறுமையாற்றுப் படபடத்தான்.
எட்டாம் மாதத்தைத் தொட்டுவிட்ட மனைவி. வேலை முடிந்து வந்தபோது பேயறைந்தவள் போன்று பயந்த முகமும் வியர்வையில் நனைந்த மேனியுமாக நின்றால் அவனும்தான் என்ன செய்வான்?
மனத்தின் குமுறலை, பயத்தை காட்டிக்கொடுத்துவிடாமல் இருக்க விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு, கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொண்டாள் பிரமிளா.
அவன் நடுங்கியே போனான்.
“விசரி! வாயைத் திறந்து சொல்லடி! என்ன செய்யுது? முதல் நீ என்னைப் பார்! பிரமி! என்னைப் பார்!” மயங்கிவிட்டாளோ என்று நடுங்கிக் கன்னத்தில் வேகமாகத் தட்டினான் அவன்.


