அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்?
“என்னம்மா? என்ன எண்டு சொல்லன். சொன்னாத்தானே எனக்கும் தெரியும்!” என்றவன், ஏதிலிருந்தோ அவளைக் காக்கிறவனாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவன் கைகளிலும் மெல்லிய நடுக்கம். அவள் மீதான கணவனின் பயமும் பதட்டமும் ஏதோ ஒரு வகையில் ஆறுதலைக் கொடுக்க, “ஒண்டுமில்ல…” என்று மெல்ல முணுமுணுத்தாள் பிரமிளா.
அவனுக்குக் கோபம் வந்தது. இரத்தப்பசையே இழந்து போயிருக்கிறது முகம். ஒன்றுமில்லையாம்! “பொய் சொல்லாத!” என்று அதட்டினான்.
“….”
இவள் என்ன வாயைத் திறக்கிறாளே இல்லை! அவள் முகத்தை நன்றாக ஆராய்ந்தான். களைப்பும் அயர்வும் மாத்திரமே தெரிந்தன.
“மாமா மாமி சுகமா இருக்கினமா?”
“ம்ம்…”
“தீபா?”
அவனுடைய வாயில் தங்கையின் பெயரைக் கேட்டதற்கே அவளுக்குத் தூக்கிப்போட்டது.
“அவளுக்கு என்ன?”
“ஒண்டுமில்ல. அவளுக்கு ஒண்டுமில்ல!” அவளின் பதற்றத்தில் அவன் விழிகளில் கூர்மை ஏறிற்று. அந்தக் கண்கள் அவளின் நெஞ்சையே அலசுவது போலிருக்க மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.
“உன்ன நம்பேலாது. நீ ஆளே சரியில்ல.” என்று அவன் தன் கைப்பேசியை எடுக்க வெடுக்கென்று அதைப் பறித்துக்கொண்டு முறைத்தாள்.
“அவளுக்கு நீங்க எண்டாலே பயம். சும்மா இருங்க. உண்மையாவே அவளுக்கு ஒண்டும் இல்லை. எனக்கு… எனக்கு லேசா தலையைச் சுத்தினது. அதுதான் பயந்திட்டன். பிள்ளை பிறக்கிறதைப் பற்றி ஒரு வீடியோவும் பாத்தது…” பொய் சொல்கிறோம் என்பதில் குரல் உள்ளே போயிற்று அவளுக்கு.
“அதுக்கு இப்பிடித்தான் நீயும் பயப்பிட்டு என்னையும் பயப்படுத்துவியா டீச்சரம்மா?” வார்த்தைகள் அதட்டினாலும் அதற்கு மாறாக அவன் குரல் கனிந்து குலைந்து போயிற்று.
முதல் பிரவசம். நாளும் நெருங்கிக்கொண்டு இருக்கிறதே. அதை எண்ணிப் பயந்திருக்கிறாள். தைரியமூட்டுகிறவனாகத் தன் அணைப்பை இறுக்கினான்.
“உங்களுக்கு என்ன? பெத்து எடுக்கப்போறது நான்தானே.” பிள்ளைப்பேறினைப் பற்றிய மெல்லிய கலக்கம் அவளுக்குள்ளும் இருந்ததில் இப்போது பதில் வந்தது.
“அதுக்கு? கண்ணுல நெருப்புப் பறக்க என்னோட மல்லுக்கட்டின என்ர பிரமிக்கு இதெல்லாம் ஒரு விசயமா?” என்று கேட்டான் அவன்.
அவளுக்கு என்றால் அவள் ஏன் கலங்கப் போகிறாள்? மனது மீண்டும் கலங்கிவிட, “என்ர ஃபோட்டோவை ஆர் போட்டது?” என்றாள் அவனையே நேராகப் பார்த்து.
சட்டென்று அவனிடம் ஒரு கவனம் வந்து அமர்ந்தது. “இப்ப என்னத்துக்கு அதைப் பற்றிக் கதைக்கிறாய்?”
அவள் விடவில்லை. “மோகனனா?” என்றாள்.
பதில் சொல்லாமல் அவன் எழுந்துகொள்ளப்போனான். கரம் பற்றித் தடுத்தாள் அவள்.
“இப்பவும் உங்களுக்கு என்னட்டச் சொல்லேலாது என்ன?” நெஞ்சினோரம் சிறு வலியொன்று தாக்கக் கேட்டாள்.
ஒருநொடி அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிப் பின் சமாளித்து, “பழசை எல்லாம் தூக்கிப்போடாம நீ என்னத்துக்கு அதையெல்லாம் நினைவு வச்சிருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
செய்தது தவறில்லையாம். நினைவு வைத்திருப்பது தவறாம். அவனுடைய நியாயங்கள் எப்போதுமே இப்படித்தானே!
“அந்தப் பேப்பரை தூக்கிக் குப்பையில போட்ட மாதிரி நடந்த விசயத்தையும் அண்டைக்கே தூக்கிப் போட்டுட்டன். எதிர்பாராம தடுமாறி விழுந்த ஒரு பெண்ணைப் ஃபோட்டோ எடுத்துப் பேப்பர்ல போட்டவன்தான் வெக்கப்படோணும். வேதனைப்படோணும். மறக்க முடியாம நெஞ்சுக்கையே வச்சுக் குமைய வேணும். நான் இல்ல! அந்தத் தெளிவு எனக்கு இருக்கு. ஆனா, ஏன் நீங்க இந்தப் பாடு பட்டு மறைக்கிறீங்க? உங்கட குணம் கெட்ட தம்பின்ர மானத்தைக் காக்கவா?”
சாட்டையடி போன்ற கூர்மையான கேள்வியில் அவன் முகம் இறுகியது. விழிகளில் கோபம் ஏறியது. “உனக்கு அவனைக் குறை சொல்லாம இருக்கேலாதா? எப்ப பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கொண்டு!” என்றவன் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.
அவள் அவனிடம் வாதாடியதற்குக் காரணம், செய்தது மோகனனா என்று அறிந்து கொள்வதற்கன்று. அவன்தான் என்று அவளே கண்டு பிடித்துவிட்டாளே. ஆனால், அவளா அவனின் தம்பியா என்று வந்தால், கணவன் யாருக்காக நிற்பான் என்று அறியவேண்டி இருந்தது.
அன்றைக்கு அவள் அவனுக்கு யாரோ. அதனால் தம்பிக்காக நின்றான். ஆனால் இன்றைக்கு? அவனிடம் மாற்றம் உண்டாகி இருக்கிறதா, மனைவிக்காகவும் யோசிப்பானா என்று அறியவேண்டி இருந்தது.
இல்லை என்று நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறான் அவன்.
மனைவி தன்னைச் சோதிக்கிறாள் என்று அறியாமலேயே அவளின் சோதனையில் படு மோசமாகத் தோற்றுப் போயிருந்தான் கௌசிகன்.
அன்று இரவு, வழமைபோல் நெருங்கிப் படுத்த கணவனின் கரத்தை விலக்கிவிட்டு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் பிரமிளா. ஒருகணம் உதட்டைக் கடித்தவன் அதற்குமேல் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.


