தன் கனிந்த குரலில் பாசமொழி சேர்த்து பிள்ளைச் செல்வங்களுக்கு வாழ்த்தி அவர் விடைபெற்றபோது, நிர்வாகியின் உரை ஆரம்பிக்க இருந்தது. அதன் பின்னர் அது முற்றுமுழுதாக மாணவியரின் விழாவாக மாத்திரமே மாறிப்போகும்.
வந்த விருந்தினர்கள் அனைவரும் பார்வையாளர்களாக மட்டுமே மாறிப்போவர் என்பதில், அவனைப் பேச அழைக்க மைக்கின் அருகே சென்றாள் பிரமிளா.
“கடைசியாக எங்கள் கல்லூரியின் நிர்வாகி தன் உரையினை ஆற்ற இருக்கிறார். அதற்கு முதலில்…” என்றவள் சற்று நிதானித்துவிட்டு, “கொஞ்ச மாதங்களுக்கு முதல் இந்தக் கல்லூரி தன் வாழ்நாளில் சந்திக்காத இக்கட்டான சூழ்நிலை ஒன்றினைச் சந்தித்தது. அன்று, சில விரும்பத்தகாத நிகழ்வுகள், சில கசப்பான சம்பவங்கள், மனக்கசப்புகள் எல்லாம் நிகழ்ந்தேறின. அதற்கெல்லாம் என் தந்தையாரின் சார்பிலும் என் சார்பிலும் மாணவியர் எல்லோரிடமும் மன்னிப்பை வேண்டி நிற்கிறேன்.” என்றபோது எல்லோரும் மெல்லிய திடுக்கிடலுடன் அவளை நோக்கினர்.
இப்படி எல்லோரும் அமர்ந்திருக்கும் மேடையில் வைத்து மனைவி மன்னிப்பை வேண்டியது கௌசிகனுக்குப் பிடிக்கவில்லை. அவளை அரிக்கும் குற்றவுணர்ச்சியைக் கொஞ்சமாவது தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறாள் என்று விளங்கிற்று. நடப்பதைத் தடுக்கும் வகையற்றுப்போனதில் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான்.
அவள் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“கூடவே, எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தபோதும் மனம் தளராமல் எங்களுக்காகப் போராடிய உங்கள் எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் இதயம் நிறைந்த நன்றிகள். கடைசியாக, எது நடந்துவிடுமோ என்று அஞ்சி அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோமோ அது என்றைக்குமே நடக்காது என்றும், காலத்துக்கும் இந்தக் கல்லூரி அனைத்தையும் இலவசமாகவே மாணவியருக்கு வழங்கும் என்றும், மாணவியரின் நலனை மாத்திரமே கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் என்றும் என் கணவரும் இக்கல்லூரியின் நிர்வாகியுமாகிய திரு கௌசிகன் ராஜநாயகம் அவர்கள் உறுதியளித்திருக்கிறார் என்பதை, மாவட்ட நீதவான் அமர்ந்திருக்கும் இந்த மேடையில் அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியும் புளகாங்கிதமும் அடைகிறேன். இதை நான் சொல்வதைக் காட்டிலும் நிர்வாகத் தலைவர் என்கிற முறையில் அவரே உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால், திரு கௌசிகன் அவர்களைப் பேச வருமாறு பணிவன்புடன் அழைக்கிறேன்.” என்றுவிட்டு நல்லபிள்ளையாகச் சென்று தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
சில ஆறாத காயங்கள் உண்டாகிப்போயிருந்தாலும் எல்லாமே சுமூகமாக முடிந்து போயிருக்கிற இந்த நேரம், மகள் ஏன் இதனைத் திரும்ப ஆரம்பித்தாள் என்று சிந்தித்தாலும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தார் தனபாலசிங்கம்.
கௌசிகன், நாற்காலியிலிருந்து எழுவதற்கு முதல், ஒருமுறை மனைவியின் முகத்தைத் தனக்குள் நன்றாக உள்வாங்கினான். பின் எழுந்து வந்து எந்த மாற்றமும் இன்றிப் பிசிரற்ற குரலில் தன் உரையை ஆற்றினான்.
புதியதொரு எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் மாணவியர் எல்லோரும் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்திவிட்டு, எதிர்காலத்தில் என்ன வந்தாலும் எதிர்கொள்ளத் தயங்க வேண்டாம், துணிந்து நில்லுங்கள் என்றும் சொல்லிவிட்டு அப்படியே பிரமிளா சொன்னதையும் ஒப்புக்கொண்டான். கூடவே, இனி செல்லமுத்து நகைமாடமும் இந்தக் கல்லூரிக்கான பங்களிப்பைக் காலாகாலத்துக்கும் செய்யும் என்றும் வாக்களித்துவிட்டு வாழ்த்தி விடைபெற, கரகோசம் உயர்ந்து ஒலித்தது.
அதன்பிறகு நிகழ்ச்சி நிரலில் இருந்ததைப் போல, மாணவியரின் நாடகங்கள், நகைச்சுவை கலாட்டாக்கள், பாடல்கள், ஆடல்கள், மற்றைய கல்லூரியிலிருந்து வந்த மாணவ மாணவியரை மேடையேற்றி வம்பிழுப்பது, மத்தியான உணவு, புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என்று மிகவுமே சந்தோசமாகக் கழிந்த நிகழ்வு, பிரியாவிடைப் பாடல்களோடும் உரைகளோடும் கண்ணீரும் புன்னகையுமாக அடங்கிப் போயிற்று.
வீட்டுக்கு வந்ததும் ஏதாவது கேட்பான், கடுமையாகப் பேசுவான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ எதுவும் கேட்டுக்கொண்டான் இல்லை.
அதிசயமாக அன்று வீட்டிலிருந்த ராஜநாயகம் விடயமறிந்து, “ஒரு வார்த்தை சொல்லாமல் அறிவிக்க என்ன தைரியம்?” என்று கொதித்தபோது, “விடுங்கப்பா. நான் சொல்லாததை அவள் அறிவிக்க இல்லைதானே. பிறகு என்ன?” என்று, அவரின் வாயையும் அடைத்துவிட்டிருந்தான் அவன்.
“பிறகு என்னத்துக்கு அந்தப் பள்ளிக்கூடத்தைப் படாத பாடெல்லாம் பட்டு எங்கட வசமாக்கினது?” என்ற அவரின் முணுமுணுப்பை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
செல்வராணி என்ன என்று கேட்டபோது, மெல்லிய தயக்கம் உண்டானாலும் தான் செய்ததைச் சொன்னாள் பிரமிளா.
“அம்மாச்சி! அந்தப் பள்ளிக்கூடப் பிரச்சினைக்க உன்ர வாழ்க்கையும் சிக்கி இருக்கு. நீ கெட்டிக்காரிதான். ஆனா, எதிர்த்து நிக்கிறதுல மட்டும் அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டாத. உன்ர வாழ்க்கையை நல்லமாதிரி வாழுறதுலையும் காட்டு.” என்றுவிட்டுப் போனார் அவர்.
உதட்டைக் கடித்தபடி சற்று நின்றுவிட்டு, “மாமி!” என்று அழைத்தாள் பிரமிளா. சரக்கென்று திரும்பியவரின் விழிகளில் கண்ணீர்ப் பூக்கள் மலர்ந்துகொட்டின.
“காலத்துக்கும் உங்கட மூத்த மருமகள் நான்தான். என்ன நடந்தாலும் உங்கட மகன் என்னை விடமாட்டார். எனக்கும் அப்பிடி ஒரு எண்ணமில்லை. நீங்க கவலைப்படாதீங்க!” என்றுவிட்டு மாடியேறியவளை இமைக்க விரும்பாது உதட்டில் சிரிப்புடன் பார்த்திருந்தார் செல்வராணி.
அவருக்கு இதம் சேர்க்கும் வகையில் பேசிவிட்டு வந்த பிரமிளாவின் மனத்தில் மருந்துக்கும் நிம்மதி இல்லை.
இரண்டு நாட்கள் இன்னும் கூடுதலாக இப்படியே கடந்து போயின. அன்று ஞாயிற்றுக்கிழமை. கூடவே பிரதீபாவின் பிறந்தநாளும். இருபத்தியிரண்டாவது வயதைப் பூர்த்திச் செய்கிறவளுக்குக் கேக் வெட்டிக் கொண்டாடுவோம் என்று யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்திருந்தாள் பிரமிளா.
மொத்தக் குடும்பத்தையே அழைத்துக்கொண்டு தாயின் வீட்டுக்குப் புறப்பட்டாள். மோகனனுக்குத் தீபாவைப் பார்க்கிற துள்ளல். பிரத்தியேகமாகத் தன்னைக் கவனமெடுத்துத் தயார் செய்துகொண்டான். பார்த்த பிரமிளாவுக்கு எரிச்சல்தான் வந்தது.
தனபாலசிங்கமே தன் சம்மந்தியாருக்கு அழைத்து, குடும்பமாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டதால் அவளால் அவனைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.
யாழினிக்கு ஒரு கொண்டாட்டத்துக்குப் போகிற உற்சாகம். செல்வராணிக்கு எப்போதும் வீடும் கோயிலுமாக மாத்திரமே இருப்பதில் மாற்றமாக இருக்கும் என்கிற சந்தோசம்.
ராஜநாயகத்துக்கு முழுக் குடும்பமாகச் சம்மந்தி வீட்டுக்குப் போகிற பகட்டுச் சந்தோசம். கௌசிகன் மட்டும் வேலை இருந்ததில் அதை முடித்துக்கொண்டு அங்கேயே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான்.