சாதாரணமாக இரண்டு குடும்பமும் சேர்ந்து சின்னதாகக் கொண்டாடப்போகிறார்களாக்கும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, அங்கே இருந்த திருநாவுக்கரசு குடும்பம், மதுமிதா குடும்பம், தீபனின் குடும்பம், ரஜீவனின் குடும்பம், கூடவே அவர்களின் அயலட்டை மனிதர்கள், பிரதீபாவின் நண்பர்கள் என்று பார்த்தபோது சற்றே வியப்பாகிற்று.
தன் கணவன் வீட்டினரோடு தாய்மையைச் சுமந்தபடி வந்த பிரமிளாவுக்கு எல்லோரிடமிருந்தும் மிகுந்த வரவேற்பு.
விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காகப் பலகாரங்களைப் பேப்பர் தட்டில் பகிர்ந்து வைத்துக்கொண்டிருந்த பிரதீபா தமக்கையின் குரலைக் கேட்டதுமே, “அம்மா, அக்கா வந்திட்டா!” என்று துள்ளிக்கொண்டு ஓடிவந்தாள்.
வந்தவள் கண்டது, நானும் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த மணிவயிறும், அதைப் பெரிதாகக் காட்டிய சேலையும், விகசித்த முகமும், அந்த முகம் முழுக்க நிறைந்திருந்த சிரிப்புமாக வேறொரு பரிமாணத்தில் பூரித்திருந்த தமைக்கையைத்தான்.
“அக்கா!” உள்ளமும் உடலும் நெகிழ்ந்துவிட ஓடிவந்து கட்டிக்கொண்டாள். “நல்ல வடி…வா இருக்கிறீங்க அக்கா!” அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, குனிந்து அவள் வயிற்றிலும் தன் உதட்டினை ஒற்றி எடுத்தாள் சின்னவள்.
பிரமிளாவின் பார்வை குறும்புடன் யாழினியை நோக்கிச் சிரித்தது. கண்ணுக்குப் புலப்படாத போட்டி ஒன்று தீபாவோடு யாழினிக்கு இருப்பதைப் பிரமிளா அறிவாளே!
யாழினிக்குச் சுறுசுறு என்று உள்ளே என்னவோ கருகியதுதான். சுற்றி இருந்த ஆட்களை எண்ணி அண்ணியாரை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பிரமிளா அடக்கமாட்டாமல் நகைக்கச் சரிதாவுக்கு அடிவயிறே கலங்கிற்று.
பின்னே, குத்துவிளக்குப் போன்று ஜொலிக்கும் இரண்டு பெண்கள். அதில் ஒருத்தி நிறைந்த வயிற்றுடன் இருக்கிறாள். மற்றவளோ எல்லோருக்கும் முன்னுக்கும் அழகாய் இருக்கிறாள் என்கிறாள். பெரியவள் வேறு பூத்துக் குலுங்கும் மலரைப் போலச் சிரிக்கிறாளே. சுற்றி இருந்த அத்தனை பேரின் கண்ணும் பட்டிருக்கும்.
‘இண்டைக்கு எல்லாரும் போனபிறகு ரெண்டு பேருக்கும் சுத்திப் போடோணும்.’ என்று அப்போதே எண்ணிக்கொண்டார்.
செல்வராணியும் அதை உணர்ந்திருக்க வேண்டும். “நீ கொஞ்சம் இதுல இரம்மா. தீபாச்செல்லம் அக்காக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவந்து குடு அம்மாச்சி. அங்கேயும் நேரம் போயிட்டுது எண்டு ஒண்டும் சாப்பிடக் குடிக்க இல்ல.” என்று சகோதரிகளை ஆளுக்கொரு திசையாகப் பிரித்துவிட்டார்.
எத்தனை மாதம்? என்ன பிள்ளை என்று தெரியுமா? ஏதாவது உடல் உபாதைகள் உண்டா? கணவர் எங்கே என்று கேள்விகள் பிரமிளாவைச் சூழ்ந்துகொள்ளச் சிரித்த முகமாக அவர்களோடு பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
செல்வராணி எந்தக் கூச்சமுமற்று சரிதாவுடன் சேர்ந்துகொண்டிருந்தார். சரிதா வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் கூடமாட உதவினார். கூடவே, “இண்டைக்கு எல்லாருக்கும் ஒருக்கா சுத்திப் போடோணும். எல்லாரின்ர கண்ணும் பட்டிருக்கும்.” என்றார் மற்றவர்களுக்குக் கேட்காத ரகசியக் குரலில்.
செல்வராணியை ஏற்றுக்கொள்ள சரிதாவுக்கு அது ஒன்றே போதுமாயிற்று. “ஓமோம்! நானும் அதைத்தான் நினைச்சனான். எல்லாரும் போகட்டும் செய்வம். இந்தப் பிள்ளைகளிட்டயும் சொல்லி வைக்கவேணும், ஆக்களுக்கு முன்னால கொஞ்சம் கவனமா இருக்கச் சொல்லி. எந்தக் கண் எப்பிடி எண்டு ஆருக்குத் தெரியும்.” என்றார் அவரிடம்.
அவ்வப்போது வீட்டினருக்கு உதவினாலும் தீபன் கேங்குடன் ஐக்கியமாகி இருந்தாள் யாழினி.
மாலைப்பொழுது என்பதில் சுகமான காற்றுத் தாலாட்டியது. முற்றத்தின் ஓரமாக இருந்த இரண்டு மாமர நிழலின் கீழே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் எல்லோரும் அமர்ந்திருந்து கலகலத்துக்கொண்டிருந்தனர். ராஜநாயகத்தை வாசலுக்கே வந்து வரவேற்று, ஆண்கள் வட்டமாக அமர்ந்திருந்த இடத்துக்கு அழைத்துப்போயிருந்தார் தனபாலசிங்கம். வேறு வழியற்று அவர்களோடு சென்று அமர்ந்துகொண்டிருந்தான் மோகனன்.
மாம்பழ வண்ணச் சோளிக்குச் சிவப்பில் முத்துகள் பதித்திருக்க, விரித்துவிட்ட அடர் கூந்தலும், பொருத்தமான முக அலங்காரமுமாகத் தேவதையெனப் பலகாரங்களைக் கொண்டுவந்து பரிமாறிய தீபாவை யாருமறியாமல் விழிகளால் விழுங்கினான் அவன்.
கவனித்துவிட்ட தீபாவுக்கு மிகுந்த அருவருப்பாயிற்று. ‘எரும! கண்ணத் திருப்படா!’ என்று முகத்துக்கு நேராகவே சொல்ல வாய் துடித்தாலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனுக்குக் கோபமூட்டிவிடாதே என்று அக்கா சொல்லியிருந்ததில் அடக்கிக்கொண்டாள்.
ஆனாலும் அதன் பிறகு தேவையற்று வெளியே வரவேயில்லை. யாழினியைக் கொண்டோ தன் தோழியரைக் கொண்டோ வந்திருந்தவர்களைக் கவனித்துக்கொண்டாள்.
அவள் கொடுத்த பால் தேநீரைக் கொண்டுவந்த யாழினிக்கு ரஜீவனைப் பார்த்ததும் கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று. சாயம்போன பழைய ஷர்ட் அல்லது டிஷர்ட்டோடு சரமோ ஜீன்ஸோ அவனின் வேலைக்கு ஏற்ப மாட்டிக்கொண்டு, தோற்றத்தில் மருந்துக்கும் அக்கறையற்று, முரடனைப் போல் திரிபவன், இன்றைக்குக் குளித்து, சேவ் செய்து, பளபளத்த கேசத்தோடு நல்ல ஆடைகள் அணிந்து நிற்கக் காணவும் விழிகளை அகற்றவே முடியவில்லை.
இரவு உணவு வெளியேதான் ஏற்பாடு செய்திருந்தார் தனபாலசிங்கம். அங்கே போய்ச் சாப்பிடுகிற தட்டுகள், பரிமாறுகிற பாத்திரங்கள், கரண்டி போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டுப் பிள்ளையாகச் சமையலறைக்கே கொண்டுவந்து வைத்துவிட்டு வந்தவனை எதேற்சையாக எதிர்கொண்ட யாழினி, “இண்டைக்கு நல்ல வடிவா இருக்கிறீங்க!” என்றுவிட்டு ஓடிப்போனாள்.
அப்படியே நின்றுவிட்டான் ரஜீவன். சத்தியமாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை யாருமே அவனை அழகன் என்றதுமில்லை, அவன் அப்படித் தன்னைத் தானே உணர்ந்ததும் இல்லை.
திடீரென்று அவனைச் சுற்றிப் பனிமழை பொழியும் இதமொன்று பரவிற்று. ஆவலுடன் அவள் போன திசையைப் பார்த்தான். அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு என்னவோ செய்துகொண்டிருந்தாள் அவள்.
வேகமாகத் தனிமையை நாடிச் சென்றான். மனம் அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து ரசித்து உள்வாங்கியது. கண்களில் வெட்கத்தைத் தேக்கி அவனைப் பார்த்தது, கையில் பிடித்திருந்த தட்டை உருட்டியது, அவனே எதிர்பாராத நொடி ஒன்றில் நீ அழகாயிருக்கிறாய் என்றுவிட்டுச் சிட்டாக ஓடிப்போனது என்று அந்தக் காட்சியே திரும்ப திரும்ப அவனுக்குள் ஒளிபரப்பாயிற்று.
அவன் வடிவாமா? வெட்கத்தில் முகம் சிவந்துவிட உதட்டைக் கடித்துக்கொண்டான். பிடறிக் கேசத்தை அளைந்துவிட்டுத் தலையைத் தட்டிக்கொண்டான்.
‘டேய் ரஜீவா! உன்னப் பைத்தியமா அலையவிடப்போறாடா கவனமா இரு!’ அவளுக்காக அலைந்தாலும் தகும் என்றே தோன்றிற்று!
‘அவளுக்கு நான் வடிவாமா?’ மீசையை முறுக்கிவிட்டான்.
‘எவ்வளவு தைரியமா அத்தனை பேர் இருந்தும் எல்லாரின்ர கண்ணிலையும் மண்ணைத் தூவிப்போட்டுச் சொல்லிப்போட்டுப் போறாள்.’ அவளின் வார்த்தைகள் அவனுக்குள் மீண்டும் மீண்டும் இனித்துக்கொண்டு இறங்கிற்று.
‘அவள்தான் பொம்மைக்குட்டி மாதிரி இருக்கிறாள். இதுல நான் வடிவாம்!’ வேகமாக அவனுடைய பொக்கெட்டுக்குள் இருந்த கைப்பேசியை எடுத்துப் புலனத்துக்கு(வாட்ஸ் அப்) ஓடினான். இன்று எந்தப் பாட்டையும் அவள் ஏற்றியிருக்கவில்லை.
ஆனால், அவனால் என்றும்போல் இன்று இருக்க முடியவில்லை. ‘இனி அவள்தான்!’ மனம் அழுத்திச் சொல்லி முடித்தது.
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் என்கிற பாடல் வரிகளை முதன் முதலாக அவனுடைய புலனத்தின் ஸ்டோரியில் ஏற்றிவிட்டான்.