‘பாப்பம். கண்டு பிடிக்கிறாளா எண்டு.’ அவன் போட்டுச் சில வினாடிகள்தான் கழிந்திருக்கும்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று வந்து விழுந்தது கேள்வி.
அடிப்பாவி! ஃபோன்லையே தவம் கிடப்பாள் போல. அவள் தன்னைக் கண்டுகொண்டாள் என்று மனம் துள்ள பதில் அனுப்பினான்.
“அதுல என்ன அர்த்தம் வருதோ அதுதான் அர்த்தம்.”
“அடி வாங்கப் போறீங்க. ஒழுங்கா பதிலைச் சொல்லுங்க. இங்க எனக்குக் கைகால் எல்லாம் நடுங்குது.”
‘அடியேய்! எனக்கு முழு உடம்பும் நடுங்குதடி.’ அவன் உதட்டின் மீது அழகான சிரிப்பொன்று ஏறி அமர்ந்துகொண்டது.
“ஏன் காய்ச்சலோ?” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
“பிளீஸ் ரஜீவன். என்னை அழ வச்சிடாதீங்கோ. நிறைய நாளா காத்திருக்கிறன். என்னவா இருந்தாலும் நேரா சொல்லுங்கோ!” என்று பறந்து வந்தது பதில்.
“என்னத்துக்கு அழோணும். இவ்வளவு நாளும் நம்பிக்கையா காத்திருந்தவளுக்கு என்ன சொல்லுறன் எண்டு விளங்க இல்லையோ?” கோபத்துடன் தட்டிவிட்டான்.
இத்தனை நாட்களாக ‘ஸ்டோரி’ என்று ஒன்று இருப்பதைத் திரும்பியே பாராதவன் பாடல் ஏற்றி விட்டிருக்கிறான். அவள் பேசினாலே பேசாமல் போகிறவன் அவளோடு சேட் செய்துகொண்டிருக்கிறான். பிறகும் எதற்கு இத்தனை கேள்விகள்?
“எனக்கு நீங்க வாயால சொல்லோணும்! இல்லாம நம்ப மாட்டன்!” இத்தனை நாட்களாக ஏங்கி ஏங்கிக் காத்திருந்த மனது அவனிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்த்தது.
“வாயால சொல்லோணும் எண்டா எனக்கு முன்னால வந்து நில்லு, சொல்லுறன்!” என்றுவிட்டுக் கைப்பேசியை மீண்டும் பொக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
‘விசரி! சும்மா பயந்து நாடுகிறாள். வாயால சொல்லோணுமாமே!’ என்ன செய்வாள்? மனம் அவளின் அடுத்தகட்ட நகர்வைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
‘அண்ணன்காரன் வாசல்லையே இருக்கிறான். அவனையும் தாண்டி வாறாளா பாப்பம்…’ அன்று காயப்பட்ட மனது இன்று மருந்து தேடிக்கொண்டிருந்தது.
எப்படித்தான் கண்டு பிடித்தாளோ! விழிகளை நாலாபுறமும் சுழற்றித் தேடியபடி அவன் நின்றிருந்த வாழைகள் இருந்த பக்கமாக வந்துகொண்டிருந்தாள் அவனின் தேவதை.
‘தைரியம்தான்.’ மனம் துள்ளிக்குதிக்க ஆசையோடு அவளையே பார்த்தான்.
அவனின் முன்னால் வந்து நின்று, “இப்ப சொல்லுங்க!” என்றாள், தன் மையிட்ட விழிகளை அவன் முகத்திலேயே பதித்து.
“என்ன சொல்லோணும்? உன்னப் பிடிச்சிருக்கு. என்ர அம்மாக்கு மருமகளா வந்து சேரு எண்டா? வாயால சொன்னா மட்டும் காணுமா? இல்ல…” என்று இழுத்தான்.
அப்படி அவன் சொன்ன வார்த்தைகளைக் காட்டிலும் சொல்லாமல் விழுங்கிய வார்த்தைகள் என்னென்னவோ இன்பக் கனவுகளை உருவாக்கிவிட, வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டவளின் கன்னங்கள் சூடாகிற்று.
இனி அவள் தன்னவள், தனக்குச் சொந்தமானவள் என்கிற உணர்வு அவளின் கன்னச் சிவப்பை உரிமையோடு ரசித்துவிடு என்று தூண்டினாலும், தன்னை அடக்கினான். சூழ்நிலையை மறந்து நிற்க முடியவில்லை. இனிமேல்தான் அவன் கவனமாக இருக்க வேண்டும். அவளையும் இருக்கச் சொல்ல வேண்டும்.
எனவே, தம்மை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “இங்க பார் யாழி. எனக்கும் உன்னப் பிடிச்சிருக்கு எண்டுறதோட எல்லாம் முடிஞ்சிட்டதா நினைக்காத. இனித்தான் எல்லாமே ஆரம்பம். நாங்க கவனமா இருக்கவேண்டிய காலமும் இனித்தான் வரப்போகுது. நான் கொட்டில் வீட்டில இருக்கிறவன். ஒரு தங்கச்சியும் அம்மாவும் பொறுப்பா இருக்கினம். அங்க கொண்டுபோய் மூண்டாவது ஆளா உன்னையும் இருத்தேலாது(இருத்த இயலாது). அதுக்கான வயசும் எங்களுக்கு இல்ல. உழைக்கோணும். நிறையச் சம்பாதிக்க வேணும். தங்கச்சியைக் கட்டிக்குடுக்கோணும். அதுக்கு எனக்கு நாலஞ்சு வருசமாவது வேணும். அப்பிடி எல்லாத்தையும் முடிச்சு நான் நல்ல நிலைக்கு வாறவரைக்கும் நீ காத்திருக்கோணும். அதுக்குப் பிறகுதான் உன்ர வீட்டுல வந்து உன்னக் கேப்பன். உனக்கும் படிக்கோணும்தானே? நல்லா படி. நல்ல உத்தியோகத்துக்குப் போ. அதை விட்டுட்டு அடிக்கடி ஃபோன்ல கதைச்சு, சேட் பண்ணி உன்ர வீட்டுல மாட்டுப்பட்டு, பெண் பாக்கினம் அது இது எண்டு நீ சொல்லக் கூடாது சரியா?” என்றான் அவன்.
‘அடப்பாவி! காதலச் சொன்ன நிமிசமே எவ்வளவைக் கதைக்கிறான்.’ என்று உள்ளே அரண்டாலும், அவன் சொன்னதற்கெல்லாம் தலையை தலையை ஆட்டினாள் அவள்.
தான் சம்மதித்துவிட்ட சந்தோசத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது. சிறு சிரிப்புடன், “போடி!” என்று தலையில் எட்டிக் குட்டினான்.
அவனை முறைத்துவிட்டு, “இவ்வளவு கேவலமா காதலை சொல்லுற ஆள நான் இண்டைக்குத்தான் பாக்கிறன். ஒரு செல்பியாவது எடுப்பமா?” என்றாள் கடுப்புடன்.
“ஏன்? உன்ர கொண்ணாக்கள் பாத்திட்டுத் திரும்பவும் என்னைக் கடத்திக்கொண்டு போய் மொத்துறதுக்கா? ஓடு!” என்று விரட்டினான் அவன்.
தமையன்களின் நினைவு வந்ததும் அவளுக்கும் சர்வமும் ஆடிப்போயிற்று. “ஒரு நாளைக்கு நான் உங்களக் கடத்திக்கொண்டு போய் மொத்துறனா இல்லையா பாருங்க!” என்றுவிட்டு ஓடியே போனாள்.
மனம் முழுக்க ஆசுவாசம். இத்தனை நாட்களாக இருந்த பாரம் இறங்கிய உணர்வு. அவளை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்த நிலையிலிருந்து மீண்டிருந்தான்.
புதிதாகப் பூத்துவிட்ட காதல் மனத்துக்கும் உடலுக்கும் மிகுந்த தெம்பைக் கொடுக்க, அவள் சென்று சிறிது நேரம் கடந்தபிறகு அவனும் சென்றான்.
“தம்பி எப்ப வாறன் எண்டு சொன்னவராம்மா? கேக் வெட்ட வேணும் எல்லோ?” என்று பிரமிளாவிடம் வந்து கேட்டார் தனபாலசிங்கம்.
அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். எனவே, “இப்ப வந்திருக்க வேணும் அப்பா. பொறுங்கோ, என்ன எண்டு கேக்கிறன்.” என்று, கைப்பேசியை எடுக்கையிலேயே அவனுடைய கார் வேலியோரமாக ஓரம் கட்டியது.
அதைக் கவனித்துவிட்டு, “அண்ணா வந்திட்டார் அண்ணி!” என்றாள் யாழினி. மருமகனிடம் நடந்தார் தனபாலசிங்கம்.
இங்கே, அவர்கள் வீட்டின் ஒரு பக்கத்து வெளிச் சுவரில் பெரிய கம்பளி ஒன்றை மாட்டி, ‘Happy Birthday Dheeba’ என்கிற எழுத்துக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதன் முன்னே மேசை போட்டு, விரிப்பின் மேலே கேக்கையும் வைத்தனர்.
கௌசிகனும் அத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை. எல்லோரிடமும் சிறு சிரிப்புடன் தலையசைத்துவிட்டு மனைவியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான். தன் கையில் இருந்த தங்கப் பேப்பரினால் ஒட்டப்பட்ட குட்டிப் பெட்டியை அவளின் கையில் திணித்தான். அவள் கேள்வியாகப் பார்க்க, ஒருமுறை கண்களை மூடித் திறந்தான்.
ஏதோ பரிசு என்று தெரிந்தது. ஆனால், அவளும் அவனோடு சென்று ஒரு மடிக்கணணியை வாங்கி இருந்தாளே. அத்தானாரின் தனிப்பட்ட பரிசு போலும்!
“தம்பி, டீ கொண்டுவரச் சொல்லவோ? குடிச்சிட்டு இருக்கலாம்.” என்றார் தனபாலசிங்கம்.
“இல்ல மாமா. கேக் வெட்டின பிறகே கேக்கோட குடிக்கிறன். இப்ப ஒண்டும் வேண்டாம்.” என்று அவருக்குப் பதிலிறுத்துவிட்டு, “அதுசரி எங்க பெர்த்டே பேபி?” என்று வேண்டுமென்றே சற்றே உரக்கக் கேட்டான்.
பார்வையால் அவனை வெட்டினாலும் பேசாமல் இருந்துகொண்டாள் பிரதீபா. ஆச்சரியமாகப் புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினான் அவன். இது அவள் இல்லையே?
“ஆள் என்ன மூட் அவுட்டோ?” மனைவியின் புறமாகக் குனிந்து மெல்ல விசாரித்தான்.