அதில், “அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கெட்டித்தனமா நடந்ததா நினைப்புப் போல. அவளைத் தூக்கிக் காட்டுறன். இவ்வளவு நாளும் மனம் மாறுவாள், ஓம் எண்டு சொல்லுவாள், அவளா விரும்பி வாறவரைக்கும் பொறுமையா இருக்கோணும் எண்டு நினைச்சன். ஆனா அவள் எல்லாம் அந்த ரகம் இல்ல போல!” என்றவனின் பார்வை சொன்ன செய்தியில் சுருக்கென்று சினம் உண்டாயிற்று பிரமிளாவுக்கு.
இருந்தாலும் காயம்பட்டவன் சீறுகிறான் என்று எண்ணி அடக்கிக்கொண்டு, “போய்ப் பாக்கிற வேலையப் பார் மோகனன்!” என்றாள் நிதானமாக.
அவன் கேட்பதாக இல்லை. “அவளின்ர ஃபோட்டோவும் பேப்பர்ல வரும். இன்னும் மோசமா. பிறகு எப்பிடி அந்தத் தீபன் அவளைக் கட்டிப்பிடிக்கிறான் எண்டு நானும் பாக்கிறன்!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே பளார் என்று அறைந்திருந்தது அவளின் கரம்.
அவன் தன் தங்கையைப் பற்றிப் பேசிய வார்த்தைகளும் தப்பு. அண்ணியான அவளிடம் பேசிய முறையும் தப்பு!
அப்போதுதான் உள்ளே வந்த கௌசிகன், நொடி அதிர்ந்து நின்றாலும் விரைந்து வந்தான். “என்ர கண்ணுக்கு முன்னாலேயே அவனை நீ கை நீட்டி அடிப்பியா?” ஏற்கனவே அவள் மீதிருந்த கோபத்தோடு இதுவும் சேர்ந்துவிடச் சினத்துடன் அதட்டினான்.
இரண்டாவது முறையாக அவளிடம் அறை வாங்கியதே பெருத்த அவமானம். இதில் தமையனும் பார்த்துவிட்டதில் மிகவுமே கூனிக்குறுக்கிப் போனான் மோகனன்.
பிரமிளாவின் சினம் கணவனின் புறம் திரும்பிற்று!
“முதல், அவன் என்ன சொன்னவன் எண்டு கேளுங்கோ!”
“என்ன எண்டாலும் சொல்லி இருக்கட்டும். நீ அத என்னட்ட சொல்லியிருக்கோணும். நீ ஆரு அவனை அடிக்க?”
அந்தக் கேள்வியில் சினந்து எழுந்தாள் பிரமிளா.
“அவன் ஆரு என்ன கேவலப்படுத்த? என்ர ஃபோட்டோவை போட்டதே பிழை. இதுல…” என்றவளைப் பேசி முடிக்க விடாமல், “ஏய் என்னடி எப்ப பாத்தாலும் ஃபோட்டோ போட்டான் ஃபோட்டோ போட்டான் எண்டு நிக்கிறாய். அதுக்குப் பதிலாத்தானே உன்னக் கட்டி இருக்கு. இன்னும் என்ன வேணும் உனக்கு?” என்றான் அவன்.
அப்படியே நின்றுவிட்டாள் பிரமிளா. அகன்ற விழிகள் அசைய மறுத்தவைபோல் அவனிலேயே நிலைத்தன. ‘ஓ! அதற்காகத்தானா அவர்களின் திருமணம்? அவனோடான வாழ்க்கை, இந்தப் பிள்ளை எல்லா…மே அதனால்தானா?’
மாடியில் கேட்ட சத்தத்தில் யாழினியுடன் ஓடிவந்த செல்வராணி மகனின் வார்த்தைகளில், ‘ஐயோ!’ என்று நெஞ்சைப் பற்றிக்கொண்டார். என்ன வார்த்தை சொல்லிவிட்டான்.
கௌசிகனுக்கும் தான் வார்த்தையை விட்டுவிட்டது விட்டபிறகுதான் மண்டையில் உறைத்தது. அசையாத அவளின் பார்வை நெஞ்சை என்னவோ செய்தது. ‘இதுக்குத்தானே வீட்டுக்கே வராம நிண்டன்.’ மானசீகமாய் நெற்றியில் அறைந்துகொண்டான்.
விழியோரம் நீர்த்துளி சேர, “ஆக, தம்பி பூசின சேத்த அண்ணா கல்யாணம் கட்டிக் கழுவி இருக்கிறீங்க போல!” என்றாள் அவனிடம்.
அவன் பதில் சொல்லமுடியாமல் திகைத்தான். அவள் விழிகளில் மெல்லிய சீற்றம். “செய்த பிழைய நேராக்கப் பிடிக்காத ஒருத்தியக் கட்டி வாழுறீங்களோ?” வார்த்தைகளும் சூடாயின.
‘அப்பிடி இல்லையடி பிரமி…’ மனத்தால் பரிதவித்தவனுக்குத் தன் மனத்தைச் சொல்லும் வழிதான் தெரியாமல் போயிற்று!
“சொல்லுங்க! பிடிக்காத ஒருத்தியக் கட்டி எதுக்கு வாழ்ந்தீங்க? வாழ்க்கை தா எண்டு நான் கேட்டேனா? இல்ல வாழ வழியில்லாம நடுத்தெருவில நிண்டேனா? சரி, பாதிக்கப்பட்ட எனக்குக் கல்யாணம் பரிகாரம். ஓகே! தப்புச் செய்த அவனுக்கு என்ன தண்டனை? இன்னும் என்னவும் செய் எண்டுற பாராட்டோ? அப்ப, ஒரு பொம்பிளை உங்களுக்கு முன்னால வந்து நிமிந்து நிண்டுட(நின்றுவிட) கூடாது. நிண்டா கேவலப்படுத்தி மானபங்கம் செய்து குனிய வைப்பீங்க. பிறகு வாழ்க்கை குடுத்து பரிகாரமும் செய்வீங்க. அப்பிடியா?”
அவளைப் பார்த்து அவனுக்கே அச்சமாயிற்று.
செல்வராணிக்கு நடுங்கத் தொடங்கிற்று. வயிற்றுப் பிள்ளைக்காரிக்கு இந்தக் கட்டுப்பாடற்ற கோபம் நல்லதல்லவே. “அம்மாச்சி பிரமி..” என்று ஆரம்பிக்கையிலேயே, அவளின் கோபம் அவர் புறமாகத் திரும்பிற்று!
“இதுக்கெல்லாம் நீங்கதானே காரணம். இப்ப சந்தோசமா உங்களுக்கு? இதுதானா நீங்க எனக்குச் செய்த நல்லது? சொல்லுங்க!”
அவள் சொல்வது உண்மைதானே. அவளின் அத்தனை துன்பத்துக்கும் அவர்தானே காரணம்! துடித்துப்போனார் செல்வராணி.
அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ராஜநாயகம், ஓங்கி ஒலித்த அவளின் குரலில் முகத்தைச் சுளித்தார். “ச்சேச்சேச்சே! என்ன இது? வீடா இல்ல வேற எதுவுமே? இதுக்குத்தான் சொல்லுறது, வீட்டுப் பொம்பிளைகளை அடக்கி வைக்கப் பழக வேணும் எண்டு. இல்லாட்டி இப்பிடித்தான்!”
அவருக்கு இப்படிப் பெண்கள் குரல் உயர்த்துவது, எதிர்த்துப் பேசுவது, சண்டை பிடிப்பது எல்லாம் அறவே பிடிக்காது. அவர்தான் தெய்வம் என்று சொன்னால் போதும் சகலதையும் செய்து முடிப்பார். அப்படியானவருக்குத் தன் முன்னால் தன் மகன்களின் முன்னால் மருமகள் குரலை உயர்த்தியது பிடிக்கவேயில்லை.
“ஓமோம்! உங்கட வீட்டுப் பொம்பிளைகளை மட்டும் அடக்கி வீட்டுக்கையே அடைச்சு வைங்கோ. வீட்டு ஆம்பிளைகளைக் கண்டபாட்டுக்குத் திறந்து விடுங்கோ. அப்பதானே அடுத்த வீட்டுப் பொம்பிளைகள ஃபோட்டோ எடுக்கிறது, பேப்பர்ல போடுறது, கேவலப்படுத்துறது எண்டு நல்ல காரியம் எல்லாம் செய்யலாம்! அதுசரி! சொல்லிக்குடுத்து வழியனுப்பி வச்ச பெரிய மனுசனே நீங்கதானே. இன்னும் எத்தனை பொம்பிளைகளின்ர மானத்த வாங்க போறீங்க.” என்றவளின் கன்னத்தில் படு வேகமாகக் கௌசிகனின் கை இறங்கியிருந்தது.
“என்னடி? விட்டா கதைச்சுக்கொண்டே போறாய். வாயை மூடு இல்ல…” என்று உறுமியவனின் வார்த்தைகள் அவள் செவியில் விழவேயில்லை.
நெருப்புப் பறந்தது போலிருந்தது. தடுமாறி, சமநிலை இழந்து அறையின் கதவு நிலையில் முட்டியவளின் நெற்றியில் அதன் விளிம்பு நன்றாகவே தாக்கியது. வயிற்றைக் காப்பாற்றுவதில் தன்னிச்சையாய் முயன்றதில் தலை அடிபடுவதைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.
“ஐயோ அண்ணி!”
“என்ர கடவுளே! என்ன தம்பி செய்துபோட்டாய்!” அதுவரை நடப்பதை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த யாழினியும் செல்வராணியும் பதறிக்கொண்டு படிகளில் பாய்ந்து மேலே வந்தனர்.
சற்று நேரத்துக்கு அவளால் எதையும் உணரவே முடியவில்லை. தலை சுற்றியது, நிற்க முடியவில்லை, கைகால்கள் எல்லாம் சமநிலையை இழந்து நடுங்கிற்று. மயக்கம் வருகிறதோ என்கிற அளவில் பார்வையே மங்கிப் போயிற்று.
“அம்மாச்சி! இங்க பார். கண்ணைத் திற. பிரமி… என்ன தம்பி பாத்துக்கொண்டு நிக்கிறாய். பிள்ளையைக் கட்டிலுக்குக் கொண்டுபோவாம் வா!”
அவனும் பதறிப்போனான். இதை எதிர்பார்க்கவில்லையே. அப்பாவைப் பேசவும் கட்டுப்பாட்டை இழந்து அவனுடைய கை நீண்டிருந்தது. நெஞ்சு துடிக்க ஓரெட்டில் அவன் நெருங்கியதை அந்த நிலையிலும் உணர்ந்தவளின் உடல் இறுகிற்று. தன்னைப் பற்றியிருந்த யாழினியையும் செல்வராணியையுமே விலக்கி நிறுத்தினாள். அதில் அவளை நெருங்க முடியாமல் அப்படியே நின்றான் கௌசிகன்.
சுவரைப் பற்றித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள். நெற்றியில் உயிரே போவதுபோல் போல் விண் விண் என்று வலித்தது. அதைவிட வயிற்றில் குழந்தையோடு இருப்பவளை அவன் அறைந்தான் என்கிற நிஜம் நெஞ்சினில் ஈட்டியாகக் குத்தியது. இன்னுமே திடம்பெறாத கால்கள் நடுங்கின.
மீண்டும் அவசரமாக நெருங்கிய செல்வராணியையும் யாழினியையும் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினாள். நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். சில நொடிகள் இமைக்காமல் அவனையே பார்த்தாள்.
கௌசிகனின் நெஞ்சு துடித்தது. ‘அடிச்சது பிழைதான்.’ பதறினான். எப்போதும் புருவம் உயர்த்தியே பார்த்த பெண் இன்று கலங்கி நிற்பதை அவனாலேயே பார்க்க முடியவில்லை.
“கடவுளே ரெத்தம் வருது. யாழி ஓடிப்போய் மருந்து, துண்டு எல்லாம் எடுத்துக்கொண்டு வா!” என்று பதறிய செல்வராணியைப் பொருட்படுத்திக்கொள்ளவே இல்லை.
இனி இந்த வீட்டில் அவளுக்கு மரியாதை இல்லை! சேலைத் தலைப்பால் நெற்றியை அழுத்தித் துடைத்தாள். நடுங்கிய கால்களை மெல்ல அசைத்து அறைக்குள் நடந்து தன் கைப்பையினை எடுத்தாள். வெளியே வந்து படிகளில் இறங்கத் தொடங்க, பதறிப்போனார் செல்வராணி.
“அம்மாச்சி! கொஞ்சம் பொறுமையா இரம்மா. இப்பிடி சண்டை பிடிச்சுக்கொண்டு அதுவும் இந்த நிலமையோட போகக் கூடாதாச்சி. பிரமி சொல்லுறதைக் கொஞ்சம் கேளு பிள்ளை.” என்றவரின் பேச்சை அவள் காதிலேயே விழுத்தவில்லை.
அன்னையின் பேச்சில்தான் அவள் போகப்போகிறாள் என்பது அவன் புத்திக்கு உரைத்தது. அது கண்மண் தெரியாத கோபத்தைக் கிளப்பியது!
அவன் செய்தது பிழைதான். அதற்கென்று?
“இந்த வீட்டை விட்டுப் போனா திரும்ப வரக் கூடாது!” என்றான் இறுக்கமான குரலில்.
“வரமாட்டன்!” என்றுவிட்டு நடந்தாள் அவள்.
“கடவுளே! நடுச்சாமத்தில பிள்ளைத் தாச்சி பொம்பிளை தனியா போறதே.” என்றபடி அவளோடு கூடவே ஓடிப்போனார் செல்வராணி.