பிரமிளாவின் விழிகள் சொல்லமுடியாத பாவத்தைச் சுமந்து அவன் முகத்தில் நிலைத்ததே தவிர எந்தப் பதிலும் வரவில்லை.
அவன் புருவங்கள் சுருங்கிற்று. விழிகளில் கூர்மை ஏற அவளைப் பார்த்தான்.
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இருட்டமுதல் கேக்க வெட்டுவம்.” என்றபடி அங்கிருந்து நழுவினாள்.
யோசனையுடன் அவள் மீது படிந்தன அவன் விழிகள்.
இரண்டு என்கிற இரண்டு இலக்கங்களை ஒளிரச் செய்து, அதை ஊதியணைத்து, எல்லோரும் கைதட்டிப் பிறந்தநாள் பாட்டுப் பாட கேக்கை வெட்டினாள் தீபா. பெற்றவர்களுக்கு ஊட்டிவிட்டு, கூடப் பிறந்தவளுக்கும் கொடுத்து அந்த வரிசையில் அத்தானான அவனுக்கும் கொடுத்தாள்.
“பேபிக்கு எங்கட பரிசைக் குடு பிரமி!” என்றான் கௌசிகன்.
அதற்குமேல் பொறுமையற்று, “நீங்க வேணுமெண்டா கிழவனா இருக்கலாம். நான் ஒண்டும் பேபி இல்ல!” என்று சீறினாள் சின்னவள் சத்தமற்று.
‘இதுதானே நீ!’ அவன் கண்ணால் சிரிக்க, “என்ன சிரிப்பு? கேக்க வெட்டி எனக்குத் தரோணும் எண்டு தெரியாதா?” என்று, அவனையே அதட்டினாள் அவள்.
“வாயிலையோ?” நகைக்கும் குரலில் கேட்டபடி அவன் கேக்கை வெட்டினான்.
“அதையெல்லாம் என்ர அக்காவோட வச்சுக் கொள்ளுங்கோ! என்னோட இல்ல!” என்று பார்வையால் வெட்டிவிட்டு அவன் கையிலிருந்த கேக்கை தானே பிடுங்கித் தன் வாயில் போட்டுக்கொண்டவளைப் பார்த்துச் சத்தமின்றி நகைத்தான் அவன்.
தொடர்ந்து அவனின் குடும்பத்தார், வந்தவர்கள் என்று எல்லோரும் அவளோடு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். எல்லாமே நன்றாகப் போவது போலிருந்தாலும் அடிமனதில் கௌசிகனுக்கு என்னவோ இடறிக்கொண்டே இருந்தது. காரணம் பிரமிளாவின் பார்வை.
என்ன இருக்கிறது அவளின் மனத்துக்குள்? எதையாவது மறைக்கிறாளா? அப்படி என்ன மறைக்க இருக்கிறது? அதைக் கண்டு பிடிக்கிறவனாகச் சிந்தனை நிறைந்த விழிகளை அவளிடம் திருப்பினான்.
அவள் இயல்பாய் இல்லை என்று அப்படியே தெரிந்தது.
என்னதான் பிரச்சனை இவளுக்கு? இன்றைக்கு வீட்டுக்குப் போனபிறகு விடக் கூடாது! முடிவு கட்டிக்கொண்டான். அதன் பிறகுதான் அவனுக்கு விழாவில் மீண்டும் கவனத்தைச் செலுத்த முடிந்தது.
வந்திருந்தவர்களின் வரிசையில் தீபனின் குடும்பமும் புகைப்படத்துக்கு நின்றுவிட்டு விலக முயன்றபோது, “ஒரு நிமிசம் நில்லுங்கோ அங்கிள்!” என்று அவர்களைத் தடுத்துவிட்டுக் கௌசிகனிடம் வந்தாள் பிரமிளா.
அவன் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு மீண்டும் மேசை அருகே போனாள். “மாமா மாமி ஒரு நிமிசத்துக்கு வாங்கோ. அம்மா அப்பா நீங்களும் வாங்கோ.” என்று அவர்களையும் அழைத்தாள்.
“என்னம்மா என்ன விசயம்? சொல்லிப்போட்டுச் செய்யலாமே?” என்று சொன்னாலும் எழுந்து வந்தார் ராஜநாயகம்.
“சொல்லப்போறன் மாமா. சொல்லத்தான் கூப்பிட்டனான்.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, “தீபன் முன்னுக்கு வா!” என்று அவனையும் அழைத்தாள்.
அவன் வந்ததும், “இவனும் எங்கட தீபாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினம் மாமா. அதுவும் எப்ப தெரியுமா ஏஎல்(உயர்தரம்) கடைசி வருசம் படிக்கேக்கயே. அப்பாக்குச் சரியான கோபம். இந்த வயசில இதெல்லாம் தேவையோ எண்டு பேசிப்போட்டார். ரெண்டு பேரும் கதைக்கவோ சந்திக்கவோ கூடாது. படிப்பு முடிஞ்சு ஆளுக்கொரு உத்தியோகம் எடுத்த பிறகும் உங்களுக்கு இந்த விருப்பம் நீடிச்சு இருந்தா கட்டி வைக்கிறன் எண்டும் சொன்னவர். அதுதான் அவளைக் கொண்டுபோய்த் திருகோணமலையில படிக்க விட்டனாங்க. அப்பா சொன்ன சொல்லை ரெண்டுபேருமே இப்ப வரைக்கும் காப்பாற்றி இருக்கினம். இன்னும் ஆறு மாதத்தில ரெண்டு பேருக்கும் படிப்பு முடியப்போகுது. அதுதான், அவளின்ர பிறந்தநாள் பரிசா, சொன்ன சொல்லைக் காப்பாற்றினதுக்காகவும் ரெண்டு பேருக்கும் நிச்சய மோதிரம் மாத்தச் சொல்லுவம் எண்டு நினைச்சன். அதுவும் நீங்களும் இவரும் முன்னுக்கு நிண்டு இதைச் செய்யோணும் மாமா.”
இனிய குரலில் சொன்னவள் தன் கைப்பையில் இருந்த மோதிரப் பெட்டியை எடுத்துக் கணவனின் கையில் கொடுத்து, மோதிரங்களை மாமனாரிடம் கொடுக்கச் சொன்னாள்.
இத்தனை மாதங்களில் இதைப் பற்றி அவள் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது அவன் முகத்தை இறுக வைத்தது. அதை எல்லோர் முன்னும் காட்டாமல் மனைவியை ஒரு பார்வை பார்த்தான்.
அவள் அவன் விழிகளைச் சந்திக்காமல் தவிர்த்தாள். வேறு வழியற்று மோதிரங்களை எடுத்துத் தந்தையின் கையில் கொடுத்தான் கௌசிகன்.
“ரெண்டுபேரையும் ஆசிர்வாதம் செய்து குடுங்கோ மாமா. அவே போட்டுக்கொள்ளட்டும்!” என்றதும் ராஜநாயகத்தைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. மருமகள் தன் தங்கையின் திருமண நிச்சயத்தைத் தகப்பனார் இருக்கையில் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறாளே.
“முதலே சொல்லியிருக்க ஹோட்டல் எடுத்துப் பெருசா கொண்டாடியிருக்கலாம். நீ இப்ப வந்து சொல்லுறியேம்மா. அதுக்கு என்ன கல்யாணத்தை உங்களுக்குச் செய்த மாதிரியே செய்தா போச்சு!” கேள்வியும் அவரே பதிலும் அவரேயாக மோதிரங்களை எடுத்து இருவரிடமும் நீட்டினார்.
அதுவரை நடப்பதை நம்ப முடியாத அதிர்வில் பார்த்திருந்த பிரதீபா, “தாங்க்ஸ் அக்கா. நல்லா பயந்துபோய் இருந்தன்.” என்று உடைந்து அழுதாள்.
“நல்லது நடக்கேக்க ஏன் அழுறாய். மோதிரத்தை வாங்கித் தீபன்ர கையில போட்டுவிடு!” என்றாள் சிரித்துக்கொண்டு.
தீபனின் கண்களிலும் கசிவு. அன்றும் அவள்தான் அவர்களைக் காத்தது. இன்றும் அவள்தான் சேர்த்து வைத்திருக்கிறாள். அவள் தலையை அசைக்க ராஜநாயகத்தை வணங்கி மோதிரத்தைப் பெற்றுக்கொண்டு தனபாலசிங்கத்தினைப் பார்த்தான்.
அவருக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. சபையில் வைத்து எதைப் பேசவும் முடியவில்லை. என்னவோ எல்லாம் அவன் விட்ட வழி என்று எண்ணியபடி தலையை ஆமோதிப்பாக அசைத்தார். அவரிடமிருந்து அனுமதி கிடைத்துவிட்ட பூரிப்புடன் தன்னவளின் மென் விரல்களைப் பற்றி அணிவித்துவிட்டான் தீபன்.
பிரதீபாவின் கண்ணீருக்கு கட்டுப்பாடே இல்லாமல் போயிற்று. “நல்லது நடக்கேக்க அழாதையம்மா!” தன் அதிர்வை மறைத்துக்கொண்டு சொன்னார் செல்வராணி. அவருக்குச் சின்ன மகனை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்கியது.
அவன் விரல் பற்றிய நொடியில் தீபாவின் உணர்வுகளைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. தீபனின் நிலையும் அதேதான். என்ன செய்கிறோம் என்பதை மறந்து, கண்ணீரும் சிரிப்புமாக ஒற்றைக் கையால் அவளை அணைத்து, “அழாதையடி லூசி!” என்றான் அவன்.
பிரதீபா பிரதீபன் என்கிற அவர்களின் பெயர் ஒற்றுமைதான் டியூஷன் செண்டரில் நண்பர்களிடையே வம்புக்குச் சோடி சேர்க்க வைத்தது. ஆரம்பம் இருவரும் முறைத்துக்கொண்டு திரிந்தாலும் பின்னர் பின்னர் அவர்களுக்கே சிரிப்பாயிற்று.
அதுவும் ஒரு முறை கணித ஆசிரியர், “பிரதீபா!” என்று அழைத்துப் பிரதீபனின் பரீட்சைப் பேப்பரை அவளிடம் கொடுத்துவிட்டிருந்தார்.
“ஐயோ சேர்! இது என்ர இல்ல. பிரதீபன்ர!” என்று இவள் வேறு யோசிக்காமல் சத்தமாகச் சொல்லிவிட்டாள்.
அதன் பிறகு நண்பர்களின் விளையாட்டுக்கு அளவே இல்லாமல் போயிற்று.
அவர்களின் விடாத கேலி கிண்டலா அல்லது இயல்பிலேயே ஒருவர் மீது மற்றவருக்குப் பூத்துவிட்ட நேசமா தெரியாது. ஆனால் அது ஏதோ ஒரு புள்ளியில் காதலாக மலர்ந்து போயிற்று. சின்ன வயது என்பதில் பிரமிளாவிடம் படிக்க வந்த தீபன்தான் இருவரின் பெயரையும் எழுதி வைத்திருந்த கொப்பியை(நோட்புக்) பாதுகாக்கத் தெரியாமல் அவளிடம் கொடுத்திருந்தான்.
அது தனபாலசிங்கத்தின் காதுக்குப் போய்ப் பெரும் பிரிவு ஒன்றைச் சந்திக்க வைத்து, இன்றைக்கு மீண்டும் இணைத்துவிட்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கையில் அந்த இரு இளம் சிட்டுகளுக்கும் எல்லாமே கனவு போலிருந்தது.