ஏனோ மனம் தள்ளாடுதே 46 – 1

அந்த ஹொட்டல் கௌசிகனுக்கு மிகவுமே விசேடமானது. நொடித்துப்போயிருந்த சிறிய சாப்பாட்டுக் கடையை விலைக்கு வாங்கி, கட்டடத்தைப் புதுப்பித்து, உயர்தர உணவகமாக மாற்றியிருந்தான்.

ஐந்து வருட உழைப்பின் பெறுபேறு. மத்தியான உணவுக்காகத் தினமும் முன்னூறுக்கும் மேற்பட்டோர் வருகிற அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறான். இது எல்லாவற்றையும் விடச் சிறப்பானது, இதற்கான செலவைத் தந்தையிடமிருந்து கடனாகப் பெற்றுத் திருப்பிக்கொடுத்தது தான்.

‘உன்ர சொத்தில நீயே கடன் கேப்பியா தம்பி?’ என்று ராஜநாயகம் கேட்டபோதும் பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் விடவில்லை. என் உழைப்பு, என் சம்பாத்தியம், நான் சாதித்தேன் என்கிற வெற்றி தரும் போதை அவனுக்கு வேண்டுமாயிருந்தது.

செல்லமுத்து நகைமாடம் எப்படி இன்றுவரை அவனின் அப்பப்பாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு இலங்கை முழுவதிலும் தன் கரங்களை நீட்டிப் பரந்து விரிந்திருக்கிறதோ அப்படித் தன் பெயரும் நிலைக்க வேண்டும் என்கிற கனவு!

கூடவே, பிரமிளாவுக்கு மோதிரம் மாற்றி அவளைத் தன்னவளாக வரித்துக்கொண்ட இடமும் அதுவே என்பதில் இன்னுமே அதன்மீது பற்றுக்கொண்டிருந்தான்.

ஏன் என்று விளங்காதபோதும், அங்கே வந்தால் கூடவே அவளின் நினைவுகளும் ஓடிவந்து தொற்றிக்கொள்ளும். அவளின் கோபத்தை, நிமிர்வை, அவனைக் குட்டிய பொழுதுகளை எல்லாம் அசைபோட்டு ரசித்துக்கொள்வான்.

மேலே இருக்கிற இரண்டு மாடிகளையும் அட்டாச் பாத்ரூமுடன் கூடிய அறைகளாக்கி, உணவகம் விடுதி இரண்டுமாக மாற்றி, அதன் தரத்தை நட்சத்திர அளவில் உயர்த்த வேண்டும் என்பதுதான் அவனின் இலக்கு. அதுவும் அந்த உணவகத்திலிருந்து வருகிற வருமானத்திலிருந்து மாத்திரமே செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான்.

இன்று, இரவு பத்துமணியைக் கடந்தும் வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் அங்கேயே அடைந்துகிடந்தான். காரணம், மாலையில் மாமனார் வீட்டில் நடந்த விடயங்கள்!

அன்று, அவன் அவளுக்கு மாத்திரம் கொடுத்த வாக்கை, கல்லூரியில் வைத்துச் சபை முன்னிலையில் கொடுக்க வைத்த அவளின் புத்தி சாதுர்யம், எப்போதும்போல் அவனை ஆட்கொண்டதே ஒழிய கோபத்தை வரவழைக்கவில்லை. அந்தக் கல்லூரிக்காக அவள் இதைக்கூடச் செய்யாவிட்டால் தான் ஆச்சரியம்.

கொக்குக்கு ஒன்றே மதியாக நல்லதொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து, அது அமைந்தபோது பயன்படுத்திக்கொண்டு விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு ஏதாவது சொல்லுவானோ, கோபப்படுவானோ என்று அவள் தன் முகத்தை முகத்தைப் பார்த்தது சிரிப்பைத்தான் மூட்டிற்று.

பொல்லாதவள். செய்வதை எல்லாம் செய்வது, பிறகு அவனுக்குப் பயந்தவள் போல் காட்டிக்கொள்வது. கேஸை வாபஸ் வாங்கி அவனை வெற்றிவாகை சூடவைத்தாலும் வென்றது என்னவோ அவள்தான் என்பதை உணர்ந்தே இருந்தான்.

அது வேறு. ஆனால் இன்று நடந்தது? அது மிகுந்த கோபத்தை வரவழைத்திருந்தது.

எல்லோரின் முன் வைத்தும் காட்டிக்கொள்ளாமல் தீபனுக்கும் தீபாவுக்கும் தன் அன்பையும் வாழ்த்தையும் சொல்லிவிட்டு, “பல்கலைக்கழகப் படிப்பு முடியிற வரைக்கும் மாமாட்ட குடுத்த வாக்கைத் தொடந்து காப்பாத்தோணும்!” என்று தானும் அறிவுறுத்திவிட்டு, மாமனாரின் மனம் கோணிவிடக் கூடாது என்று வேகமாக உணவையும் முடித்துக்கொண்டு, வேலை என்று வந்துவிட்டான்.

வந்தவனுக்கு வேலை ஓடவே இல்லை. ஏன் இப்படி நடந்தாள் என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது.

கல்வியைக் கண்ணாகப் போற்றுகிறவள் படித்து முடிக்காத தங்கைக்கு நிச்சயம் செய்திருக்கிறாள்.

தன் தந்தையை உயிராக நேசிக்கிறவள் அவன் தந்தையைத் தலைமையேற்க வைத்து நிச்சயம் செய்வித்திருக்கிறாள்.

ரகசியமாக வைத்திருந்து சபையில் பகிரங்கப் படுத்தியிருக்கிறாள்.

எல்லாமே ஒன்றுக்கொன்று முரணாக நின்று இடித்தன. இதில், இப்படி ஒன்று நடக்கப் போவதற்கான எந்தச் சிறு சந்தேகமும் அவனுக்கு எழவே இல்லை.

‘மடிக்கணனி அவளுக்கு விருப்பம் வாங்குவோமா?’ என்று கேட்டு, அவனுடனேயே வந்து வாங்கியவள், மோதிரங்கள் வாங்கிய விசயத்தை ஏன் மறைத்தாள்?

தனபாலசிங்கத்தின் அதிர்ந்த முகமும் சரிதாவின் பதட்ட முகமும் இது அவர்களுக்கும் தெரியாது என்று சொல்லிற்று. ஏன் நிச்சயம் செய்யப்பட்ட பெண் தீபாவுக்கே தெரியாது என்று, எதிர்பாராத சந்தோச அதிர்ச்சியில் வழிந்த அவளின் கண்ணீர் உணர்த்தியது. அந்தளவு ரகசியம் காத்துச் சபையில் வைத்து ஒளிபரப்ப வேண்டிய காரணம் என்ன?

அவளைப் பார்த்தால் நிச்சயம் கோபப்பட்டுவிடுவோம் என்று தெரியும். வார்த்தைகளை விட்டுக் காயப்படுத்திவிடுவோமோ என்று பயந்துதான் இங்கே ஓடிவந்துவிட்டான். தன்னைச் சற்றேனும் நிலைப்படுத்த நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தவன், நேரம் இரவு பதினொன்றைத் தொடவும் வேறு வழியற்று வீட்டுக்குப் புறப்பட்டான்.

*****

மோகனனால் தன் தோல்வியைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கண் முன்னாலேயே அல்லவா அவனுடைய காதலுக்குச் சமாதி கட்டியாகிவிட்டது! ஆத்திரம்! அளவு கடந்த ஆத்திரம்!

அவனின் தமையன் மட்டும் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அவனுக்குள் உண்டான மூர்க்கத்தில் ருத்திர தாண்டவம் ஆடி, அந்தக் குடும்பத்தையே சித்திரவதை செய்திருப்பான். அது முடியாமல் போன கொதிப்பில், வெறி வந்தவன் போன்று வண்டியை விரட்டிக்கொண்டு வந்தவன், சுட்டிபுரம் அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தான்.

அப்படி ஒரு வலி! இதுவரை கடவுளைத் தேடியிராதவன் அன்னையின் காலடியில் வந்து அழுதுகொண்டிருந்தான். அவன் பற்றியிருக்க வேண்டிய விரல்கள், அவனுடைய கண்களோடு கலந்திருக்க வேண்டிய விழிகள் இன்று இன்னொருவன் வசமாயிற்று.

அந்தத் தீபன் தீபாவை அணைத்ததை நினைக்கிற ஒவ்வொரு கணத்திலும் அவன் கண்கள் சிவந்தது. எவ்வளவு தைரியமடா உனக்கு! அவள் எனக்குச் சொந்தம்! அவளை நீ தொடுவியா? தொட்ட கையை வெட்டி வீசினால் என்ன? முதலில் அவளைச் சொந்தமாக்குறன். பிறகு அந்தக் கையை அவனுக்கே இல்லாமல் ஆக்குறன்!

நிச்சயமாம்! பெரிய நிச்சயம்! ஒருமுறை அவர்களோடு மோதிப் படு மோசமாகத் தோற்ற பிறகும் திட்டம் போட்டு அவனை வீழ்த்திய பிரமிளாவுக்கு மீண்டும் தக்க பாடம் படிப்பிக்காமல் விட்டால் எப்படி?

வீடு வந்தவன் தமையனின் கார் இன்னும் வந்திருக்கவில்லை என்று கண்டதும் விறுவிறு என்று மேலே வந்து, தமையனின் அறைக் கதவைத் தட்டினான்.

சற்று முன்னர்தான் பிரமிளாவும் மாமா மாமி, யாழினியோடு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள். கணவனை எண்ணி உள்ளுக்குள் நடுங்கினாலும் மனம் முழுக்கச் சந்தோச அயர்ச்சி. சேலையைக் கழற்றுவோம் என்று நினைக்கத் தீபன் அழைத்து நன்றி சொன்னான்.

அவன் வைக்க இங்கே கதவு தட்டும் சத்தம் கேட்டது. செல்வராணி வரமாட்டார். யாழினி அண்ணி என்றுகொண்டுதான் வருவாள். யார் என்று புருவம் சுருக்கியபடி வந்து திறந்தாள்.

நின்றது மோகனன். அதுவும் கண்கள் இரத்தமெனச் சிவந்து, கலைந்த தலை, கடினப்பட்டிருந்த முகம், கசங்கிய ஷர்ட் என்று அவன் தோற்றமே அவளை அச்சுறுத்தியது.

அவள் உணர்ந்தது சரியே என்பதுபோல், “என்ன? கெட்டித்தனமா நிச்சயத்த முடிச்சாச்சு எண்டு நினைப்பா?” என்றான் அவன். “என்னைத் தாண்டி எப்பிடிக் கல்யாணம் நடக்குது எண்டு நானும் பாக்கிறன்!”

அவள் ஒன்றும் பேசவில்லை. காரியம் சாதித்தாயிற்று. வாயால் வீண் வீரியம் காட்டி அவனை இன்னுமே கோபமூட்டி என்ன வரப்போகிறது?

ஆனால், அவனால் அமைதியடையவே முடியவில்லை. அதுவும் அவளை பார்க்க பார்க்கப் பறிபோன தன் காதல் கண்முன்னே வந்து, அவன் நெஞ்சைப் பற்றி எரிய வைத்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock