அத்தியாயம் 47
சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முகமெல்லாம் நிறைந்து வழிந்த பூரிப்புடன் விடைபெற்றுப் போன மகள், நெற்றியில் காயம், கன்னத்தில் விரல் தடம், அவமானக் கன்றலில் சிவந்து போயிருந்த முகமுமாக, நடு இரவில் வந்து கதவைத் தட்டினால் வயதான பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?
ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போன நிலை. தனபாலசிங்கத்துக்கு நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. சரிதாவுக்கு நெஞ்சு முழுக்கக் காந்தியது. பிள்ளைத்தாச்சிப் பெண்ணைக் கை நீட்டி அடித்திருக்கிறானே! இவனெல்லாம் என்ன மனிதன்!
செல்வராணிக்கு அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. சரிதாவின் ஒற்றைப் பார்வையே மண்ணுக்குள் புதைந்துபோக வைத்தது.
தீபாவை அழைத்து, மனச் சங்கடத்துடன் சுருக்கமாக நடந்ததைச் சொல்லி, “அக்காவக் கொஞ்சம் பாத்துக்கொள்ளம்மா!” என்றுவிட்டு, வந்த அவர்களின் பக்கத்துவீட்டுப் பெடியனின் ஆட்டோவிலேயே திரும்பினார்.
மாலையில் இன்முகமாக அவளுக்கு வாழ்த்திய மனிதன் இரவில் தமக்கையை எப்படி மாற்றிவிட்டிருக்கிறார் என்று தீபாவுக்கு மனம் எரிந்தது.
தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தமக்கையை உடை மாற்றி, உடம்பு கழுவ வைத்து, தொண்டை வறட்சிக்கு இதமாகச் சூடான பாலை அருந்தக் கொடுத்துப் படுக்க வைத்தாள்.
இவர்கள் மூவருக்கும் உறக்கம் போயிருந்தது.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து எல்லோரும் போனபின்னர், இப்படித் தமக்கே சொல்லாமல் மோதிரம் மாற்றவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டபோதுதான், தனக்கு நடந்தவற்றைப் பகிர்ந்திருந்தாள் தீபா.
அதிலேயே நடுங்கிப் போயிருந்தனர் பெற்றவர்கள். அப்படியிருக்கப் பெரியவளும் இப்படி வந்து நின்றால்?
நிச்சயம் செய்தாயிற்றுத்தானே இனிப் பயமில்லை என்று சரிதா சொன்னது தனபாலசிங்கத்தைச் சமாதானப்படுத்தவில்லை. அவனுக்கெல்லாம் நடந்த நிச்சயமோ, மோதிரம் மாற்றிக்கொண்டதோ ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணி, அவரின் மனம் கலங்கிற்று.
ஒரு மகளை அந்த வீட்டில் கொடுத்துவிட்டு அவள் நிம்மதியாக வாழ்கிறாளா இல்லையா என்பதே இன்னும் தெளிவில்லை. இதில் மற்றவளுமா என்று தனக்குள் மருகிக்கொண்டு இருக்கையில்தான் பெரியவள் இப்படி ஒரு கோலத்தில் வந்து நிற்கிறாள்.
சிலைபோல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த அப்பாவைப் பார்க்கையில் தீபாவுக்குக் கிலி உண்டாயிற்று. அங்கே திருகோணமலையில் இருக்கையில் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்தபோது, பள்ளிக்கூடம் போகாத அப்பா வீட்டிலேயே இருந்து பாதியாகிப் போயிருந்தார். உடலில் உற்சாகமில்லை, முகத்தில் வெளிச்சம் இல்லை, உடல் உபாதைகள் வேறு இப்போதெல்லாம் அவரை அதிகமாக வாட்டிக்கொண்டிருந்தது.
சிலையென மூலைக்கு ஒருவராக அமர்ந்திருந்த இருவரையும் வலுக்கட்டாயமாகப் படுக்க அனுப்பிவிட்டு விடியும் வரை விழித்தே கிடந்தாள்.
தன் வாழ்க்கையைக் காக்கப்போய்த் தமக்கை அனுபவித்த வலிகள் அவளை உறங்க விடவில்லை.
பழக்கதோசத்தில் எப்போதும்போலக் காலையில் எழுந்த பிரமிளா, யாரினதும் முகத்தையும் பார்க்காது கல்லூரிக்குத் தயாராகத் தொடங்கினாள். கணவனின் கையால் அடிவாங்கிக்கொண்டு வந்த அவமானம், பெற்றவர்களின் முகத்தைக் கூடப் பார்க்கவிடாமல் தடுத்தது.
நெஞ்சைக் கீறும் வலியுடன் எப்படி அவளைத் தேற்றுவது என்று தெரியாமல் அவளையே பார்த்திருந்தார் தனபாலசிங்கம். சரிதாவுக்குக் கண் முகமெல்லாம் வீங்கிப் போயிருந்த மகளைப் பார்க்கவே முடியவில்லை.
“இண்டைக்கும் ஏன் அம்மா பள்ளிக்கூடம் போறாய். ரெண்டு நாள் வீட்டில நில்லன்.” என்றார் தன் துக்கத்தை விழுங்கிக்கொண்டு.
“ஏஎல் பிள்ளைகளுக்கு எக்ஸாம் இருக்கம்மா.” நிமிர்ந்து பாராமல் சொல்லிவிட்டு ஆட்டோவில் புறப்பட்டிருந்தாள் அவள்.
அடுத்த நிமிடமே தீபாவும் புறப்பட்டாள்.
*****
நம்ப முடியாத அதிர்வில் சிலையென அமர்ந்திருந்தான் கௌசிகன். அவன் முன்னே இருந்த தீபாவின் கைப்பேசி, மின்னாமல் முழங்காமல் பல குண்டுகளைத் தலையில் இறக்கியிருந்தது. கூடவே, மனைவியின் கோபத்தில் இருந்த நியாயமும், தான் செய்த தவறின் ஆழமும் நெற்றியில் அறைந்தாற்போல் புரிந்தன.
அவள் சொல்ல வந்ததை ஒரு நிமிடம் பொறுமையாக நின்று கேட்டிருக்க நடந்ததை எல்லாம் தவிர்த்திருக்கலாமே! இனி என்ன சொல்லி அவளைச் சமாதானம் செய்வான்?
இதற்கெல்லாம் காரணம் அவனுக்குத் தம்பியாகப் பிறந்தவன். அவனைத் திருத்து திருத்து என்று சொன்னாளே. அவள் சொன்ன எதைத்தான் அவன் கேட்டான்?
ஆத்திரம் பாதி அழுகை மீதியாக அவனை முறைத்துக்கொண்டிருந்த தீபாவைப் பார்க்க முடியவில்லை. அவளைப் போட்டு என்ன பாடு படுத்தியிருக்கிறான். மனதளவில் எப்படித் துடித்திருப்பாள். அதுவும் அவன் எடிட் செய்து அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தபோது இரத்தம் கொதித்துப் போயிற்று!
காலையிலேயே அழைத்து, “உங்களைப் பாக்கோணும். எங்க வாறது?” என்று அதட்டலாகக் கேட்டவள், நேற்று நடந்ததற்குத் தன்னோடு சண்டை பிடிக்க வருகிறாள் என்று எண்ணி, தன்னுடைய ஹோட்டலுக்கு வரச் சொன்னவன் சத்தியமாகத் தன் தம்பியின் இப்படி ஒரு முகத்தை அறிந்துகொள்வோம் என்று நினைக்கவே இல்லை.
“நீயாவது முதலே என்னட்டச் சொல்லி இருக்கலாமே?” கனத்த குரலில் வினவினான். தெரிந்திருக்க எத்தனையோ விபரீதங்களைத் தடுத்திருப்பானே.
“சொல்லி? அக்காக்கு ரஜீவனக் கடத்தி மிரட்டின மாதிரி, எனக்கு அக்காவைக் காட்டி மிரட்டி உங்கட சைக்கோ தம்பிக்குக் கட்டிவைக்கவோ?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
பளார் என்று சாட்டையால் விளாசியதுபோல் இருந்தது கௌசிகனுக்கு. குட்டி மச்சாள் என்று அவன் மிகவுமே நேசிக்கும் சின்னவளின் மனத்தில் எவ்வளவு மோசமானவனாகத் தான் பதியப்பட்டிருக்கிறோம் என்பது மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கிற்று. இதுதானா அவன்? இதுதான் என்றது அவன் மனதும்!
“முதல் நீங்க என்ன பெரிய ஒழுங்கா, உங்களிட்ட வந்து இப்பிடி நடந்துபோச்சு எண்டு நான் சொல்ல? ஏதாவது ஒரு விசயத்தில நியாயமா நடந்து இருக்கிறீங்களா, இல்ல நேர்மையாத்தான் இருந்து இருக்கிறீங்களா?” அவளின் எந்தக் கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை.
பதில் சொல்கிற அவகாசத்தை அவள் வழங்கவும் இல்லை.
“நீங்க எல்லாம் என்ன அண்ணா? நான் திருகோணமலையில இருந்தாலும் எத்தின மணிக்கு எனக்குக் கம்பஸ் முடியும், என்ர ஃபிரெண்ட்ஸ் ஆரு? அவேன்ர ஊர் எது? அவே எப்பிடியான ஆக்கள், எந்தக் கடையில தேத்தண்ணி குடிப்பன், எப்ப எங்க போவன் எண்டுறது எல்லாம் என்ர அக்காக்குத் தெரியும். தங்கச்சில அவ்வளவு கவனம். ஆனா நீங்க? உங்கட தம்பின்ர குணம் தெரியாது, எங்க போறான் வாறான் தெரியாது, வெளில என்ன செய்றான் தெரியாது. ஆனா அவனைப் பற்றி ஒரு குறை சொன்னா மட்டும் உங்களுக்குக் கோபம் வந்திடும். உடன அடிச்சுப் போடுவீங்க. கேக்கவே கேவலமா இல்ல. நீங்க அடிச்சு வளத்திருந்தா நாங்க ஏன் அடிக்க வேண்டி வருது?” சினத்துடன் சீறியவளுக்கு அவன் முகம் பார்க்கவே பிடிக்கவில்லை.
“அது சரி! நீங்களே அப்பிடியான ஆள்தானே! அப்பிடியிருக்க உங்களுக்கு எப்பிடி உங்கட தம்பி செய்றது பிழையா தெரியும்?” விருட்டென்று எழுந்து, அவன் முன்னால் இருந்த தன்னுடைய கைப்பேசியை வெடுக்கென்று எடுத்துக்கொண்டு அவனிடம் சொல்லாமலேயே புறப்பட்டவள் நின்றாள்.
“அப்பாவை வீட்டில இருத்தி அவரை வருத்தக்காரனா மாத்திப் போட்டீங்க. அக்காவைக் கல்யாணம் எண்டுற பெயர்ல சித்திரவதை செய்து பைத்தியக்காரி மாதிரி ஆக்கிட்டிங்க. இன்னும் மிச்சமா இருக்கிறது நானும் அம்மாவும்தான். இப்பிடி ஒவ்வொருத்தரா கொடுமை செய்றதுக்கு மொத்தமா எதையாவது செய்து எங்களை ஒரேயடியா துலைச்சுக் கட்டிவிடுங்கோ! அதுக்குப் பிறகாவது நீங்களும் உங்கட தம்பியும் நிம்மதியா இருங்கோ!” விழிகள் கலங்கப் பொரிந்துவிட்டு வெளியேறினாள் அவள்.
மரத்துப்போன மனிதனாக நீண்ட நேரமாக அசைய மறுத்து அமர்ந்திருந்தான் கௌசிகன். அவளின் ஒவ்வொரு கேள்வியும் அவனை ஈட்டியாக மாறிக் குத்திக் கிழித்தன.
வார்த்தைகளால் கூட அவளை நோகடித்துவிட வேண்டாம் என்று நேற்று முழுக்க இதே ஹோட்டலில் தனித்துக் கிடந்துவிட்டுப் போனவன் அறைய நினைப்பானா?
அது அவனை மீறியே நடந்துவிட்ட ஒன்று. அதற்கென்று அவளை அவன் பைத்தியக்காரியாக மாற்றிவிட்டான் என்பதா? அவனின் அவள் அப்படியா ஆகிப்போனாள்? அதற்குமேல் அவளைப் பார்க்காமல், எப்படி இருக்கிறாள் என்று அறியாமல் முடியாது என்று ஆகிவிட, எழுந்து கல்லூரிக்குப் புறப்பட்டான்.
அவன் போனபோது வகுப்புகள் ஆரம்பித்திருந்தன. அவளின் டைம் டேபிள் அவனிடம் இருந்ததில் வேகமாக அதை எடுத்துப் பார்த்தான். இன்றைக்கு என்று அவளுக்கு, ‘ஃபிரீ பீரியட்’ ஒன்று கூட இல்லை. இடைவேளையின்போது வேண்டுமென்றால் பாக்கலாம். அந்த நேரம் எல்லோரும் இருப்பார்களே. அறைக்கு வரவழைப்போமா என்று நினைத்துவிட்டு அதையும் விட்டுவிட்டான். அவளுக்கு அதெல்லாம் பிடிப்பதில்லையே!