என்ன செய்வது என்று அவள் பாடம் நடத்தும் வகுப்பறையிலேயே கவனமாக இருந்தான். அவளோ பெல் அடித்த பிறகு வெளியே வந்து, நேராக அடுத்த வகுப்புக்குப் போவது தெரிந்தது. தூரத்தில் என்பதில் முகம் தெரியவில்லை. ஆனால், நடையில் வழமையான வேகம் இல்லை.
மூன்றாவது பாடவேளை முடிவதற்குப் பத்து நிமிடங்கள் இருக்கையில் அவள் வகுப்பை விட்டு வெளியே வருவது தெரிந்தது. பரபரப்புற்றுப் போனான் கௌசிகன். எங்குப் போகிறாள் என்று அவளையே பார்வையால் தொடர்ந்தான்.
புருவத்துக்கு மேலே பிளாஸ்டர் ஒட்டி இருந்தாள். அந்த இடத்தில் சற்றே நீலம் பாய்ந்திருந்தது. அவனுடைய விரல் தடங்கள் தெரியவில்லை. ஆனால், அவள் கொஞ்சமும் சரியில்லை என்று உணர்த்தும் முகம். இந்த நிலையில் இவளை யார் இங்கே வரச் சொன்னது? சுர் என்று கோபம் வந்தது அவனுக்கு.
மெல்ல நடந்து காண்டீனுக்குச் சென்று, ஒரு தேநீரை வாங்கிக்கொண்டு ஓரமாக அமர்ந்துகொண்டாள் பிரமிளா.
காலையிலேயே அவளுக்கு உடலும் மனமும் மிகவுமே வலித்தன. எழுந்துகொள்ளவே முடியவில்லை. தன்னை எண்ணித் தமக்குள் துடிக்கும் பெற்றவர்களை எதிர்கொள்ளப் பயந்துதான் புறப்பட்டு வந்திருந்தாள். இப்போது, மூன்றாவது பாடவேளையைக் கடத்தியதே பெரிது என்பதுபோல் உடல் தள்ளாடியது.
இதற்காகத்தானே இவ்வளவு நேரமும் காத்திருந்தான் கௌசிகன். வேகமாக அவளை நெருங்க, “என்ன மிஸ்? இண்டைக்கு உங்கட முகமே சரியில்லையே? வருத்தமா?” என்று கேட்டுக்கொண்டு அவளின் முன்னே வந்து அமர்ந்தான் சசிகரன்.
“ஓம் சேர். தலை சரியா வலிக்குது.”
ஒரு முறை அவள் முகத்தை மெல்லிய யோசனையோடு அளந்துவிட்டு, “நெத்தி காயத்தால போல. நீலம் வேற பாஞ்சு இருக்கு. நீங்க இண்டைக்கு லீவு எடுத்திருக்கலாம்.” என்றான் அவன்.
எப்படி நடந்தது, என்னாயிற்று என்று தூண்டித் துருவாமல் அவன் பேசியது மனத்திற்கு இதம் சேர்க்க, “வீட்டை நிண்டு என்ன செய்யச் சொல்லுறீங்க?” என்றாள் அவள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தவனுக்குச் சசிகரனின் மீதுதான் அத்தனை கோபமும் பாய்ந்தது.
அன்று காலையிலிருந்து அவளைத் தனியாகப் பிடிக்க அவன் காத்திருக்க, அதற்கு விடாமல் நந்தியாக வந்து அமர்ந்து கொண்டிருக்கிறான்.
அவனைக் கிளப்புவதற்காகவே இவளின் அருகிலேயே சென்று அமர்ந்தான். அவளின் உடல் விறைப்பது தெரிந்தது.
“ஹல்லோ சேர்!” என்று புன்னகைத்தான் சசிகரன்.
ஒரு தலை அசைப்பை மட்டுமே கொடுத்துவிட்டு அவளின் தேநீரை எடுத்துப் பருகியபடி, “இன்னொரு கப்புக்குச் சொல்லு!” என்று அவளை ஏவினான்.
சங்கடமான ஒரு சூழ்நிலையை நொடியில் உருவாக்கிவிட்டிருந்தான் கௌசிகன்.
அதைச் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல், “நீங்க கதைச்சுக்கொண்டு இருங்கோ. நான் வெளிக்கிடப்போறன்.” என்றபடி எழுந்துகொண்டான் சசிகரன்.
“முதல் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு போங்க சசி சேர்!” என்றாள் பிரமிளா.
என்ன செய்வது என்று தெரியாது கௌசிகனைப் பார்த்தான் சசிகரன். கணவன் மனைவிக்குள் என்னவோ சரியில்லை என்று விளங்கிற்று.
“குடிங்க. குடிச்சிட்டே போங்க!” தன் தேநீரைப் பருகியபடி சொன்னான் அவன்.
அதுவே, ஒரே மடக்கில் பருகிவிட்டுச் சசிகரனை அங்கிருந்து எழுந்துபோக வைத்தது.
அதுவரை முகத்தை எங்கோ வைத்துக்கொண்டு இருந்த பிரமிளா எழுந்துகொள்ள, கையைப் பற்றி அமரவைத்தான் கௌசிகன்.
சினத்துடன் சீறத் தொடங்குமுன், “நீ பேசாம இருந்தா நான் ஏன் இதையெல்லாம் செய்யப்போறன்.” என்றான் அவன்.
கண்டீன் காரரிடம் இன்னொரு தேனீருக்குச் சொன்னான். அவளிடம் திரும்பி, “உடம்பு சுடுகுது. மருந்து போட்டியா?” என்று, பற்றிய கையிலேயே அவளின் தேகத்தின் கணகணப்பை உணர்ந்து கேட்டான்.
“முதல் உன்னை ஆர் இண்டைக்கும் பள்ளிக்கூடத்துக்கு வரச் சொன்னது?” அருகில் பார்க்கையில் கண் மடல்கள் வீங்கி, முகமெல்லாம் சிவந்து, இன்னும் மோசமாகத் தெரிந்தவளின் முகத்தில் பார்வை இருக்க அதட்டினான்.
எதற்கும் பதில் சொல்லாமல் பிடிவாதத்துடன் அமர்ந்து இருந்தவளைப் பார்த்தான். ஒடிந்து விழுந்துவிடுவாள் போல் சோர்ந்து, களைத்து பார்க்கவே பரிதாபமாகக் காட்சியளித்தாள். நெஞ்சில் வலித்தது.
“கால் வீங்கி இருக்கா?” இதமான குரலில் வினவினான்.
“லீவுக்கு அப்ளை பண்ணுறன், வீட்ட போறியா?”
கண்டீன் ஐயா, தேநீரைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்.
“குடி!” என்றான்.
அவள் தொட்டும் பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
“குடி பிரமி!” என்றான் அழுத்தி.
அவன் சொன்னதற்காக அல்லாமல் அவளுக்கே அது தேவையாக இருந்ததில் பேசாமல் எடுத்து அருந்தினாள். அப்போதாவது மனத்துக்கும் உடம்புக்கும் சற்றேனும் தெம்பு கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்பும் சேர்ந்துகொண்டது.
இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. அருகருகே அமர்ந்திருந்த போதும் அவரவர் தேநீரில் கவனமாக இருந்தனர்.
தன் பக்கம் எந்த நியாயமும் இல்லாமல் அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று கௌசிகனுக்குப் புரியவே இல்லை. அதைவிட, முதல் கோணல் முற்றிலும் கோணலாக அவர்களின் வாழ்க்கையில் ஒரு படி ஏறிவிட்டோம் என்று நினைக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் பல படிகள் சறுக்கி விடுகிறதே ஏன் என்றும் புரிய வில்லை.
ஒவ்வொரு முறையும் தான் அவளை மிக மிக ஆழமாகக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறோம் என்பது மட்டும் மிக நன்றாக விளங்கிற்று!
நெஞ்சினுள் பாரமேற, அவன் தணிந்த குரலில் பேசினான்.
“அடிச்சிருக்கக் கூடாது. அது பிழைதான். அப்பாவை நீ கதைக்கவும் தான்… கோவத்துல ப்ச்! கோவிக்காத!” என்றான்.
பிரமிளாவுக்கு மளுக்கென்று நிறைந்த கண்ணீர் மேசையில் பட்டுச் சிதறியது. வேகமாக ஹாண்ட் பாக்கினுள் இருந்த கைக்குட்டையை எடுத்துத் துடைத்தாள். துடைக்கத் துடைக்கப் பெருகியது கண்ணீர்.
தவித்துப்போனான் கௌசிகன். அழுவது அவளின் இயல்பு இல்லையே! “ரமி பிளீஸ். அழாத!” அது கண்டீன். அங்கு வைத்து அணைத்தோ, கண்ணீரைத் துடைத்துவிட்டோ ஆறுதல் படுத்த முடியாத நிலை கொடுமையாய்த் தோன்றிற்று.
பிரமிளாவுக்குத் தாங்கொணா வலியில் நெஞ்சு துடித்தது. எப்போதும் அவன் குடும்பமா அவளா என்று வந்தால் குடும்பத்தைத்தான் தூக்கிப் பிடிப்பான்.
நேற்று அந்தக் குடும்பத்தின் முன்னேயே அறைந்து, அவள் அவனுக்குப் பொருட்டே இல்லை என்று காட்டிவிட்டான். கூடவே போன மானம் காக்கக் கட்டினேன் என்றவன் எதற்கு இங்கே வந்து சமாதானம் செய்கிறான்? அவளுக்குக் கண்ணீர் நிற்காமல் கொட்டியது.
“இது பள்ளிக்கூடம் பிரமி! சின்ன பிள்ளை மாதிரி என்ன இது?” அவள் அழுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த தன் நிலை கொடுத்த இயலாமையில் அதட்டினான்.
அதன்பிறகுதான் நிதானத்துக்கு வந்தாள் பிரமிளா. கண்ணைத் துடைத்து, முகத்தைச் சற்றே சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தவளின் கண், மூக்கு, முகம் எல்லாமே கொவ்வைப்பழம் போல் சிவந்திருந்தன.
எழுந்து முகம் கழுவப் போனாள்.
“காயம் கவனம். தண்ணி பட விடாத!” என்றான் அவன்.
பாத்ரூமில் முகம் கழுவிக்கொண்டு வந்தவள் ஹாண்ட் பாக்கினை எடுத்துக்கொண்டு போக முயல, கையைப் பற்றி, “வீட்டுக்கு வா!” என்றான் அவன்.
நொடியில் உச்சிக்கு ஏறிய சினத்துடன் கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டு தன் அடுத்த வகுப்பை நோக்கி நடந்தாள் அவள்.