அவளால் வகுப்பு எடுக்க முடியவில்லை. உடல் கொதித்துக்கொண்டு வருவதை அவளே உணர்ந்தாள். வயிற்றில் இருக்கிற குழந்தை வேறு ஒருவித அசௌகரியத்தை உணர்த்த நெஞ்சு படபடவென்று வந்தது.
இனி முடியாது என்று தெரிந்துவிட, தீபாவை வரச் சொல்லிவிட்டு விடுப்பை எடுத்துக்கொண்டு வாசலுக்கு நடந்தாள்.
அவளைக் கவனிப்பதைத் தவிர அவனுக்கு வேறு என்ன வேலை? “எங்க வெளிக்கிட்டாய்?” என்றுகொண்டு அடுத்த நொடியே அவளருகில் வந்து நின்றான்.
தீபா வருகிறவரை கூட நிற்க முடியாமல் தேகம் நடுங்குவது போலிருந்தது அவளுக்கு. அவனுக்குப் பதில் சொல்லாமல் கல்லூரியின் வெளி வாசலை அலங்கரிக்க என்று அலை வடிவில் அமைக்கப் பட்டிருந்த குந்தினில் சென்று அமர்ந்துகொண்டாள்.
இவள் வாயைத் திறக்கமாட்டாள் என்று புரிந்து போயிற்று அவனுக்கு. “நில்லு, கார் எடுத்துக்கொண்டு வாறன்.” என்று அவன் திரும்ப, “தீபா வருவாள்!” என்றாள் மொட்டையாக.
அருகிலேயே கல்லு மாதிரி அவன் இருக்கிறான். இதில் தீபாவைக் கூப்பிட்டாளாம். அவளை முறைத்துவிட்டு வேகமாகச் சென்று காரைக் கொண்டுவந்தான்.
“ஏறு பிரமி!” என்று கார் கதவைத் திறந்துவிட்டான்.
“நீங்க போங்க, தீபா வருவாள்.” கல்லூரி வாசலில் வைத்து வீண் விவாதத்தை விரும்பாமல் பதிலிறுத்தாள்.
“உன்ன விட்டுட்டு நான் எங்க போக. ஏறு!” என்று அவன் சொன்ன நொடியே அவளின் விழிகள் சீற்றத்துடன் அவனிடம் திரும்பின.
‘போனா வராத’ என்றவன் என்னை விட்டுட்டு எங்குப் போவானாம்? அவளின் உதட்டோரம் வெறுப்புடன் வளைந்தது.
அந்த நிலையிலும் தன்னை எரிக்கும் அந்த விழிகளில் தான் சறுக்குவது அவனுக்குத் தெரிந்தது. “அது நீ வெளிக்கிட்ட கோபத்தில சொன்னது.” என்றான் சிறு சிரிப்புடன்.
அதற்குள் தீபா வந்து சேர்ந்திருந்தாள். அவன் முறைக்க முறைக்க அவளோடு புறப்பட்டாள் பிரமிளா.
வேறு வழியற்று தீபாவின் ஸ்கூட்டியை பின் தொடர்ந்தது அவனது கார்.
“அத்தானும் வாறார் அக்கா.” தங்களைத்தான் அவனுடைய கார் பின் தொடர்கிறது என்று உறுதியானதும் சொன்னாள் தீபா.
“வந்தா வரட்டும். நீ கவனமா ரோட்டைப் பாத்து போ.”
“நீங்க கார்லயே வந்திருக்கலாம்.” இந்த நேரத்தில் கோபத்தைக் காட்டிலும் அக்காவின் நலனே முக்கியமாகப் பட்டது அவளுக்கு. இருவரை கூட ஏற்றி ஓட்டுவாள் தீபா. ஆனால், அக்கா குழந்தையோடு இருக்கிறாள், அவளைக் கவனமாகக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்கிற எண்ணமே மெல்லிய பயத்தை உண்டாக்கிற்று.
ஒன்றும் சொல்லவில்லை பிரமிளா. வைத்தியசாலையில் பிரமிளா உள்ளே சென்றுவிட, “நீ போ. அவளை நான் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றான், வேகமாகக் காரை நிறுத்திவிட்டு வந்த கௌசிகன்.
“தேவை இல்ல. என்ர அக்காவை நானே பாப்பன். நீங்க போங்கோ. போய் உங்கட தொம்பியத் தூக்கி வச்சுக் கொஞ்சுங்கோ! வந்திட்டார் நல்லவர் மாதிரி நடிச்சுக்கொண்டு!” வெடுக்கென்று மொழிந்துவிட்டு உள்ளே நடந்தவளின் கையை எட்டிப் பற்றி நிறுத்தினான் அவன்.
“அவன் செய்த எல்லாத்துக்கும் நான் உன்னட்ட மன்னிப்புக் கேக்கிறன். கோவிக்காத. உன்ர அத்தான் பாவம் எல்லா.”
இதை எதிர்பார்க்கவில்லை தீபா. விழிகள் கலங்கிப் போயிற்று. அத்தான் அவளிடம் மன்னிப்புக் கேட்பதா? முதலில், அந்த இடத்தில் அவர் இருப்பதா?
பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது. அவனோடு சமாதானம் ஆகவும் பிடிக்கவில்லை. பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.
வளர்ந்த குழந்தையாகத் தெரிந்தவளை அன்புடன் நோக்கி, “அந்தளவுக்கு உன்னப் போட்டுப் படுத்தி இருக்கிறான் அவன். அப்பவும் அசராம கெட்டிக்காரியா அவனை ஹாண்டில் பண்ணின எங்கட தீபா, இப்ப என்னத்துக்குக் கண் கலங்குறாளாம்?” என்று சீண்டினான் அவன்.
அவளுக்குப் பட்டென்று கோவம் வந்தது. “உங்கட தம்பி பெரிய கொம்பன் பாருங்க. அவனுக்கு நான் பயப்பிட. கன்னத்தில நாலு போட்டுப் போடா எண்டு துரத்தி விட்டிருப்பன். நான் ஏதாவது செய்ய, என்னில இருக்கிற கோவத்துல உங்கட வீட்டில இருக்கிற அக்காக்கு அவனோ நீங்களோ ஏதும் செய்து போடுவீங்க எண்டுறதாலதான் பேசாம இருந்தனான்.” என்றவளின் பேச்சில் மீண்டும் பலமாக அடிவாங்கினான் கௌசிகன்.
“என்னவோ பெரிய பாசமான ஆள் மாதிரி கதைக்கிறீங்க. அக்காவைக் கைநீட்டி அடிச்ச ஆள்தானே நீங்க. நீங்க அடிச்சதுல அக்காவுக்கோ குட்டி பேபிக்கோ ஏதும் நடந்திருந்தா நீங்களா எங்களுக்குத் திருப்பித் தருவீங்க. எனக்குப் போக விருப்பமில்லை. ஆனா, ஸ்கூட்டில கூட்டிக்கொண்டு போக உண்மையாவே பயமா இருக்கு. நான் கூட்டிக்கொண்டு போய் என்ர அக்காக்கும் பேபிக்கும் ஏதும் நடந்தாலும் எண்டுதான் விட்டுட்டுப் போறன். கவனமா கொண்டுவந்து வீட்டை விடவேணும். இல்லையோ நடக்கிறதே வேற!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனாள் அவள்.
கௌசிகனின் முகம் அப்படியே இரத்தப்பசை இழந்து போயிற்று. அவர்களை மிகவுமே காயப்படுத்திவிட்டோம் என்று புரிந்துகொண்டவன் ஒரு நெடிய மூச்சுடன் மனைவியிடம் விரைந்தான்.
அதற்குள் அவள் வைத்தியரிடம் சென்றிருந்தாள். கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவனிடம், “என்ன மிஸ்டர் கௌசிகன். வைஃப் மயங்கிக் கதவில மோதுர வரைக்கும் விட்டுட்டு இருந்திருக்கிறீங்களே? நல்ல காலம் வயித்தில ஒண்டும் படேல்ல.” என்றார் அவர்.
உண்மையை மறைத்துத் தன்னைக் காட்டிக் கொடுக்காதவளை ஒருமுறை பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் அவளருகில் சென்று அமர்ந்துகொண்டான்.
“உடம்பு சூடா இருக்கு டொக்டர். ஆள் பாக்கவே சரியில்ல. ஒரு கம்ப்ளீட் செக்கப் செய்தா என்ன?” என்று அவனே கேட்டான்.
அவசியம் இல்லை என்றார் அவர். “வாற கிழமை எப்பிடியும் வருவீங்கதானே. அப்ப பாக்கலாம். ஆளுக்குக் கொஞ்சம் ஓய்வு குடுங்கோ. இப்ப எக்ஸாம் டைம் என்ன? அந்த டென்க்ஷனும் இருக்கும். மற்றும்படி ஆரோக்கியமாத்தான் இருக்கிறா. உடம்பு சுடுறதுக்கு இந்தக் காயம்தான் காரணமா இருக்கும்.” என்று, அதற்கு வலிநிவாரணியும் எழுதிக்கொடுத்து அவர்களை அனுப்பிவைத்தார் அவர்.